Sunday, 11 January 2026

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா...

 




கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா...


கோயில்களில் இப்பாசுரம் ஓதப்படும் திருநாளன்று, நெய் வளமுடன் இனிய சர்க்கரைப் பொங்கலைச் செய்து நிவேதித்து பகிர்வது, காலந்தோறும் கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒரு பரம்பரைச் சம்பிரதாயமாகும். அத்தகைய மங்கல நிகழ்வை எவ்வாறு கொண்டாடுகிறோம் என்பதை, இங்கு கோபியர்கள் தாமே பகவானிடம் எடுத்துரைக்கின்றனர்.



முன்னரான “வையத்து வாழ்வீர்கள்” என்ற பாசுரத்தில்,
“நெய்யுண்ணோம், பாலுண்ணோம், மையிட்டு எழுதோம், மலரிட்டு நாம் முடியோம்” என்று சிறுமியர்கள் எடுத்துக் கொண்ட கடும் தபோநிஷ்டையை நாம் நினைவுகூரலாம். அந்தச் சபதத்தின் பூர்த்தியாக, இப்பாசுரத்தில் அவர்கள் வேண்டிய அனைத்தும் நிறைவேறிய மகிழ்ச்சியில் பாடுகின்றனர். அதாவது, பாசுரத்தின் தொடக்கத்தில் கூறப்பட்ட தவநிலைக்கு எதிர்மறையான—ஆனால் உண்மையில் அதன் நிறைவாக விளங்கும்—ஒரு நிலையைக் காட்டுகிறது இப்பாடல்.



முந்தைய பாசுரத்தில் விரதத்திற்குத் தேவையான உபகரணங்களையெல்லாம் கோபியர்கள் விவரித்தனர். இப்பாசுரத்தில், அந்த விரதத்தின் பலனைச் சுட்டிக்காட்டுகின்றனர். தெய்வீக தம்பதிகளான எம்பெருமான் மற்றும் பிராட்டியால் அருளப்பட்ட மனமகிழ் ஆடைகளும் ஆபரணங்களும் அணிந்து, பரமாத்மாவுடன் ஒருங்கிணைந்து அருகருகே அமர்ந்து, அமிர்தோபமான அன்னத்தைப் பரிமாறிக் கொண்டு, அதிலே கலந்த நெய் முழங்கையோரம் வழியப் பங்குபெறுவதே அந்த விரதத்தின் பலன் என அவர்கள் விளக்குகின்றனர்.



கோவிந்த நாம சங்கீர்த்தனத்தின் மஹிமை: 

கோவிந்த நாம சங்கீர்த்தனம் - கோவிந்தா, கோவிந்தா, கோவிந்தா!” என்று இப்பாசுரத்தில் தொடங்கும் கோவிந்த நாம சங்கீர்த்தனம், 28-வது பாசுரத்தில், “குறைவொன்றுமில்லாத கோவிந்தா உன் தன்னோடு” என்று ஒரு முறை ஒலித்து, 29-வது பாசுரத்தில்,“இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா”
என்று பரிபூரணமாக நிறைவடைகிறது.



“கூடாரை வெல்லும் சீர்” – சீலமும் சௌரியமும்: “கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா” என்பது மிக ஆழமான பொருள் கொண்ட வாக்கியம்.


எம்பெருமான் அனைவரையும் வெல்வது குணத்தினாலே.
கூடுவாரை—அதாவது தன்னை அணுகி நிற்பவர்களை—சீலத்தினாலே வெல்வான்.
கூடாதாரை—அதாவது எதிராக நிற்பவர்களை—சௌரியத்தினாலே (வீரத்தினாலே) வெல்வான்.



ஆறாயிரப்படி உரை, “சௌரியம் அம்பிற்கு இலக்காகும்; சீலம் அழகிற்கு இலக்காகும்” என்று கூறுகிறது. மேலும், “அம்பிற்கு இலக்கானார்க்கு மருந்திட்டு ஆற்றலாம்” என்பதன் மூலம், எதிரியாக இருப்பவர்களுக்கும் கூட இறைவன் அருமருந்தாக இருப்பான் என்ற அர்த்தத்தைத் தருகிறது.


கோவிந்தன் பசுக்களைப் பாதுகாப்பது போலவே, பக்தர்களையும் பராமரிப்பான். கன்றுகளை அவன் இன்னும் அதிக கவனத்தோடு காப்பான். அதுபோலவே, அவனடியில் அடைக்கலம் புகும் அறியாத சிறுமியர்களையும் எந்தக் குறையும் இல்லாமல் பாதுகாக்கிறான்.



“கூடார்” யார்? – நால்வகைப் பிரிவு

“பகைவரை வெல்லும் சிறப்புடையவனே” என்று சொல்லும்போது, “பகைவர் என்றால் யார்?” என்ற கேள்வி எழலாம். இங்கு கூடார் என்போர் ஒரே வகையினர் அல்ல. அவர்கள் நால்வகை:

  • பரமனை அறியாதவர்கள்
  • அறிந்தும் பயத்தால் அணுகாதவர்கள்
  • அறிந்தும் விபரீத குதர்க்கங்களால் குழம்பியவர்கள்
  • அறிந்தும் பரமனை ஏற்காமல் விரோதம் பாராட்டுபவர்கள்


இவர்களனைவரையும் தத்தம் நிலைக்கு ஏற்ப வெல்வதே எம்பெருமானின் சீலச் சிறப்பு.



கண்ணனே பரிசு

சிறுமியருக்குக் கிடைத்த பரிசு—கண்ணன் தானே! அவன் வருவான் என்று ஊரே எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவன், முந்தைய பாசுரத்தில் சொன்னபடியே, அழகிய விளக்கு, அரையர்கள் பாட்டு, கொடி, மேற்கட்டி, பறை ஆகிய அனைத்தையும் பரிசாக வழங்கினான். அதோடு நின்றுவிடாமல், கோவிந்தனாக இருந்து அவர்களைத் தானே பராமரிக்கிறான்.


“ஊரே வியந்து எங்களைப் புகழ்கிறது” என்று கோபியர்கள் கூறுகின்றனர். மிக முக்கியமாக, இந்தப் பகுதியில் ஆண்டாள், “இதைக் கொடு, அதைக் கொடு” என்று எதையும் குறிப்பாகக் கேட்கவில்லை! “நான் உனக்குச் சூடிக் கொடுத்த மாலைகளுக்கு இணையான சம்மானம் வேண்டும்” என்று சுட்டிக்காட்டுகிறாள் போலிருக்கிறது.



அந்த உயர்ந்த சம்மானம்—கண்ணனே!



நாடு புகழும் பரிசுகள்

கண்ணன் நாடு புகழும் பரிசுகளை அளிப்பதில் வல்லவன்.
சுதாமாவிடம்—அவன் கேட்காதபோதும்—அவன் வழங்கிய பரிசு உலகறிந்ததல்லவா? திரௌபதியின் மானத்தைக் காத்ததும்,
பஞ்சபாண்டவர்களுக்கு யுத்த வெற்றியை அருளியதும், எல்லாம் அதே கருணையின் வெளிப்பாடே.



இதையே துக்காராம் மஹராஜ், “பதீத மீ பாபி…” என்ற அபங்கத்தில் உருக்கத்தோடு பாடுகிறார்—
“சுதாமாவின் தரித்திரத்தை ஒழித்தாய்;
திரௌபதியின் மானத்தை காத்தாய்;
ப்ரஹ்லாதனின் வாக்கை உண்மையாக்கினாய்;
அப்படியே இந்தப் பாவியையும் கரையேற்றுவாய்!” என்று.



அலங்காரமும் அனுபவமும்

“சூடகமே, தோள்வளையே, தோடே, செவிப் பூவே, பாடகமே”
என்று சொல்லப்படும் நகைகளும், அதன் பின் அழகிய ஆடைகளும்— இவையனைத்தையும் சிறுமிகளுக்குப் பரிவோடு அணிவிப்பது கண்ணனும் நப்பின்னைப் பிராட்டியும் தான் என உரையாசிரியர்கள் கூறுகின்றனர். சிறுமிகள் சரியாக அணியமாட்டார்கள் என்ற கவலையால்!



“என்றனைய பல கலனும் யாம் அணிவோம்” என்று கோபியர்கள் கூறுவதில், பெண்டிர்க்குரிய இயல்பான அலங்கார ஆசையும்,
நீலமேக வண்ணனுக்கேற்ற அழகுடன் தன்னைச் சீரமைக்க விரும்பும் ஆண்டாளின் உள்ளமும் பளிச்சிடுகிறது.


நாச்சியார் திருமொழியிலேயே ஆண்டாள், 
காறை பூணும் கண்ணாடிகாணும்* தன் கையில் வளைகுலுக்கும்*
கூறையுடுக்கும் அயர்க்கும்* தன் கொவ்வைச் செவ்வாய்திருத்தும்*
தேறித்தேறிநின்று ஆயிரம்பேர்த்* தேவன்திறம்பிதற்றும்*
மாறில் மாமணிவண்ணன்மேல்* இவள் மாலுறுகின்றாளே.*

தன்னை அலங்கரித்துக் கொண்டு கண்ணாடிக் கிணற்றில் தன் வடிவழகைக் காணும் ஆசையை வெளிப்படுத்தியிருப்பதை நினைவுகூரலாம்.



நெய் வழியும் விருந்து – அனுபவ ரஸம்

பின்னர் விருந்து. பாற்சோறும், முழங்கையோரம் வரை நெய் வழியும் சோறும். அதை உண்ண முடியாமல் சிறுவர் சிறுமியர் திணறுவது போல.

ஒரு பக்தர் பட்டரிடம், “இவ்வளவு நெய்யை எப்படிச் சாப்பிட முடியும்?” என்று கேட்டபோது,


“அவர்கள் சாப்பிட்டார்கள் என்று யார் சொன்னார்கள்?”
என்று பட்டர் பதிலளித்தாராம். "கண்ணனைப் பார்த்த பரவசத்தில், அவர்கள் தங்களை மறந்துவிட்டார்கள்" 


ஆண்டாள் எங்கும் “உண்டார்கள்” என்று சொல்லவில்லை—அதுவே நுண்ணிய ரஹசியம்.


பெரியாழ்வாருடன் ஒற்றுமை

இப்பாசுரத்திற்கு இணையான கருத்துடன் பெரியாழ்வார் தனது திருப்பல்லாண்டில் பாடியிருப்பதைப் பாருங்கள்—தந்தை, மகள் உள்ளங்களில் எத்தனை ஒற்றுமை!


நெய்யிடை நல்லதோர் சோறும்* நியதமும் அத்தாணிச் சேவகமும்*
கையடைக் காயும் கழுத்துக்குப் பூணொடு * காதுக்குக் குண்டலமும்*
மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்து *என்னை வெள்ளுயிராக்க வல்ல*
பையுடை நாகப் பகைக்கொடியானுக்குப்* பல்லாண்டு கூறுவனே.


இறுதி தத்துவம்

மேலும், பகவத் சேவை செய்யும் ஒரே விருப்பத்தில் கண்ணனை சரண் புகுந்த கோபியர்க்கு, சிற்றின்பங்களான புத்தாடை உடுப்பதிலும், அக்கார அடிசிலை முழங்கையில் நெய் வழிய உண்ணுவதிலும் அப்படி என்ன ஆசை என்ற கேள்வி எழலாம். அவை எல்லாம் பாவை நோன்பு நிறைவடைவதற்கான குறியீடுகள் மட்டுமே. கோபியரின் விருப்பம் கண்ணனோடு கூடியிருந்து குளிர்தல் மட்டுமே! இதிலும், அடியவருடன் சேர்ந்து பகவத் அனுபவத்தில் திளைத்தல் என்ற வைணவக் கோட்பாடு கோதை நாச்சியாரால வலியுறுத்தப்படுகிறது.


இன்னொரு விதத்தில் நோக்கினால், அவை எல்லாமே பரமன் தந்தது என்பதால் அவற்றை உள்ளார்ந்த மகிழ்ச்சியோடு சுகிப்பதில் தவறொன்றும் கிடையாது. கோபியரின் நோன்பு பரமன் திருவருளால் சுபமாக நிறைவடையும் நிலைக்கு வந்து விட்டது.


கோபியர்களுக்கு ஆடை, நகை, உணவு—all are symbols.
உண்மையான விருப்பம்—கண்ணனோடு கூடியிருந்து குளிர்தல்.
அடியவர்களுடன் சேர்ந்து பகவத் அனுபவத்தில் திளைத்தல்—இதுவே வைணவத்தின் உச்ச கோட்பாடு.


நோன்பு நோற்கும் முன், (2-வது பாசுரத்தில்) 'நெய்யுண்ணோம் பாலுண்ணோம் மலரிட்டு நாம் முடியோம்' என்ற கோபியர் இப்போது நோன்பு பூர்த்தியாகி விட்டதால் 'பாற்சோறு மூட நெய் பெய்து' செய்த அக்கார அடிசிலை உண்போம் என்கின்றனர் !!!


'பறை' என்பது பொதுவாக பகவத் கைங்கர்யத்தைக் குறிக்கும்


கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா - அடியார்களை மட்டுமன்றி, தன்னுடைய கல்யாண (சௌர்யம், சௌசில்யம், சௌந்தர்யம் ...) குணங்களால் ஆகாதவரைக் கூட பரந்தாமன் தன் வசப்படுத்தி ஆட்கொள்வான் என்பதை குறிப்பில் உணர்த்துகிறது.


சூடகம் - காப்பு; தோள்வளை - திரு இலச்சினை (ஒரு வைணவனின் சங்கு-சக்கர சின்னத்தைக் குறிப்பதாக உள்ளர்த்தம்)


தோடு - திருமந்திரம் (பிரணவாதார வடிவைக் குறிப்பதால், ஞானம் என்ற உள்ளர்த்தமுண்டு)


செவிப்பூ - த்வயம் (பக்தியைக் குறிப்பது)


பாடகம் - சரம சுலோகம் (காலில் அணியும் அணிகலனைக் குறிப்பதால், சரணாகதியைக் குறிப்பதாகவும் சொல்லலாம்)


பல்கலன் - ஒரு வைணவனுக்குரிய ஞானம், பக்தி மற்றும் வைராக்கியம் (தோடு / செவிப்பூ / பாடகம் என்ற மூன்றும் சேர்த்து!) என்ற குணங்களைக் குறிப்பதாம்.


ஆடை - அடியவர் பரமனுக்கு உரிமையானவர் என்பதை உணர்த்துவதாம்.


பாற்சோறு - பகவத் சேவை (கைங்கர்யம்) என்று உள்ளர்த்தம்


மூடநெய் பெய்து - ஆத்மார்த்தமாக, அகந்தையின்றி செய்யப்படும் (பகவத் சேவை)


கூடியிருந்து குளிர்தல் - (கோபியர்) மோட்ச சித்தியை அடைதல்




“கூடாரை” என்று தொடங்கும் பாடல், “கூடியிருந்து குளிர்ந்தோம்”
என்று நிறைவடைவது அதற்கே சான்று.


பக்தர்கள் சேர்ந்து இருந்தாலே— பசி இல்லை, பிரிவு இல்லை.
அந்தச் சேர்க்கை தரும் ஆனந்தமே, ஆண்டாளின் தெவிட்டாத பாடலின் மையம்.


Saturday, 10 January 2026

மாலே மணிவண்ணா...




மாலே மணிவண்ணா... 


வைஷ்ணவ உரையாசிரியர்களை வாசிப்பது எளிதானது அல்ல. வடமொழிப் பயிற்சி இல்லையெனில், அவர்கள் எடுத்துரைப்பது என்ன என்பதைக் grasp செய்வதே பெரும்பாலும் கடினமாகிறது. இதற்கு மேலாக, இன்னொரு உள்மனத் தடையும் எழுகிறது—“சொன்னதையே மீண்டும் மீண்டும் அலங்கரித்து சொல்கிறார்களோ?” என்ற சந்தேகம். மதநூல்களுக்கு உரை எழுதுவது, கிழிந்த துணியை மேலும் மேலும் சித்தரிப்பது போன்றது என்று எங்கோ படித்த ஞாபகம். ஆசை தீர வாழ்ந்தவருமில்லை; அழுக்கு தீரக் குளித்தவருமில்லை—சபை நாகரிகம் கருதி, அந்த உவமையின் முதல் பாதியை இங்கே மாற்றி விட்டேன்.



ஆனால் பகவானை அனுபவித்தவர்கள் உரை உரைக்கும் போதும் இப்படித்தான். அவ்வனுபவம் எளிதில் திருப்தி தருவதல்ல. “மன்சில் சே பெஹதர் லக்னே லகே ஹை யே ராஸ்தே…” என்று ஒரு இந்திப் பாடல் சொல்வதுபோல்—சேரும் இடத்தைவிட, பயணமே இனிமை. பகவான் அனுபவமும் அத்தகையதே; அடையும் தருணத்தைவிட, அடைவதற்கான நடைபாதையே ஆனந்தம் தருவது.



ஆண்டாள், “மாலே மணிவண்ணா” பாசுரத்தில், “மேலையார் சொல்வனகள்” என்று தெளிவாகச் சுட்டுகிறாள். அதாவது, இறைவனை நினைத்தல், போற்றுதல், அவன் திருவடிகளை அடைய முயற்சித்தல்—இவை அனைத்தும் அவளுடைய மூதாதையர் வகுத்துத் தந்த வழிகளே; புதிதாக உருவாக்கிய நடைமுறை அல்ல.



பறை’யை வேண்டி நீ இடைவிடாது உரைக்கிறாய்; அதே வேளையில், உன் உண்மையான நோக்கம் என்னுடன் ஐக்கியம் பெறுதலே என்றும் சொல்கிறாயே—அப்படியானால், நான் உனக்குக் கொடுக்க வேண்டியது என்ன? எவ்வாறு கொடுக்க வேண்டும்?’ என்று கிருஷ்ணன் வினவினான்.



அதற்கு ஆண்டாள் தெளிவாக மறுமொழிகிறாள்: ‘மழை பொழிந்து உலகம் செழிக்கவேண்டும் என்பதற்காக, ஆயர்குல மூப்பர்கள் எங்களை ஒரு விரதம் அனுஷ்டிக்க ஆணையிட்டார்கள்; அதுவே வெளிப்படையான குறிக்கோள். ஆனால் உள்ளார்ந்த நோக்கம்—உமது திருவடிகளின் தரிசன இன்பம். இத்தகைய அரிய வாய்ப்பை எமக்குக் கொடுத்த மூப்பர்களின் நன்மைக்காகவும், அதே நேரத்தில் உமது திவ்ய ஸ்வரூபத்தை அனுபவிக்கவும், இந்த விரதத்தை அனுஷ்டிக்க நாங்கள் உறுதி கொண்டோம்.’



புராதன மரபுப்படி, இவ்விரதம் “மார்கழி நோன்பு” என அழைக்கப்படுகிறது. அதற்குத் தேவையானவை—திவ்ய சங்குகள், அகலமான பறை வாத்தியங்கள், பல்லாண்டு பாடும் கோஷ்டிகள், மங்கள தீபங்கள், கொடிகள், பனித்துளி தடுக்கும் விதானங்களும் குடைகளும். ‘இவையனைத்தையும் எமக்கு அருளிச் செய்ய வேண்டும்’ என்று, இவ்வாசுரத்தில் ஆண்டாள் பணிவுடன் விண்ணப்பிக்கின்றாள்.



அடியார்களை உன்மேல் மயக்கங்கொள்ளச் செய்த மாலனே! நீலமணி வண்ணம் கொண்ட கண்ணனே! எங்கள் குலப்பெரியோர் காலந்தோறும் கடைப்பிடித்து வந்த வழிமுறையின் பேரிலே, நாங்களும் இந்த மார்கழி நீராடலை மேற்கொள்கிறோம். எங்கள் நோன்பிற்குத் தேவையான—பால் போன்ற நிறமுடைய, உலகமெங்கும் அதிர்வை எழுப்பவல்ல, உன் இடக்கையில் திகழும் பாஞ்சஜன்யத்தை ஒத்த வெண்சங்குகளையும்; அகலமான பறை வாத்தியங்களையும்; பல்லாண்டு பாடுவாரையும்; அழகிய தீபங்களையும்; கொடியையும்; விதானத் துணியையும்—ஆலிலையில் துயில்பவனே! கருணை கூர்ந்து எங்களுக்கு அளிப்பாயாக!



நாராயணன், பரமன், தேவாதி தேவன், நெடுமால் என்று உயர்ந்த அடைமொழிகளால் அழைக்கப்பட்ட அவனையே, இங்கே “மாலே” என்று எளிமையுடன் அழைக்கிறார்கள். இது அவர்களுக்கும் அவனுக்கும் ஏற்பட்ட நெருக்கத்தைக் காட்டுகிறது. பகவான் சர்வசுலபன்—எளிதில் அணுகக்கூடியவன். “நீங்கள்” என்று இருந்த அழைப்பு, நெருக்கம் வந்தபின் “நீ” ஆக மாறுவது போல, “நெடுமால்” இங்கே “மால்” ஆகிறான். அதேசமயம், மால் என்ற சொல்லே அவனுடைய பரத்துவத்தையும் சுட்டுகிறது—அவனே பரம்பொருள்.



கோபியர், கிருஷ்ணனிடம் நோன்பிற்காக ஆறு பொருள்களை யாசிக்கின்றனர்: உன் பாஞ்சஜன்யத்தைப் போல ஒலிக்கும் சங்கைக் கொடு; இடி போல் முழங்கும் பறையைக் கொடு; உன் நாமத்தைப் பாடும் அரையரைப் கொடு; தீபத்தைக் கொடு; கொடியைக் கொடு; நிழல் தரும் விதானத்தையும் கொடு—என்று.


ஏன் இவ்வாறு ஆறு பொருள்களை யாசிக்கின்றனர்?

  1. சங்கநாதம், நோன்புக்குப் பகைவர்களை அச்சுறுத்தி விலகச் செய்யும்.

  2. நோன்புக்கான புறப்பாட்டை அறிவிக்க பறை அவசியம்.

  3. புறப்படும்போது எதிர் நின்று காப்பிட பல்லாண்டு பாடுபவர்கள் தேவை.

  4. அதிகாலை வேளை என்பதால், முகம் காண மங்கள தீபம் வேண்டும்.

  5. தொலைவில் இருப்பவர்களுக்கு அறிவிக்க உயர்த்திப் பிடிக்கும் கொடி வேண்டும்.

  6. தலையில் பனி விழாமல் தடுக்க விதானத் துணி வேண்டும்.



இவ்வாறாக, அவர்கள் கேட்டவை அனைத்தும் சிறியவையே—அவை அனைத்தும் கண்ணனுடன் சேர்வதற்காக மேற்கொண்ட நோன்பிற்கான துணைச் சாதனங்களே.



“இவையெல்லாம் தரவேண்டும் என்று எந்த சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது?” என்று கண்ணன் கேட்கிறானாம். அதற்கு, “நாஸ்திகரைப் போல பேசாதே; ஆளறிந்து வார்த்தை சொல்” என்று சிறுமிகள் பதிலளித்ததாக ஆறாயிரப்படி சொல்கிறது. “வியாசர் சொன்னார், மனு சொன்னார்” என்று ஞானிகள் உரைப்பதையே ஆதாரமாகக் கொள்வது உனக்குத் தெரியாததா? அதுபோல, நாங்கள் கேட்பவை அனைத்தும் எங்கள் பெரியவர்கள் எங்களுக்குச் சொல்லிக் கொடுத்தவையே” என்கிறார்கள்.



அதற்கு கண்ணன், “நீங்கள் கேட்பவற்றை கொடுக்கும் சக்தி எனக்கிருக்கிறதா என்பதே ஐயம்” என்றானாம். உடனே சிறுமிகள்—“உன்னால் முடியாதது எது? ஓர் ஆலிலையில் படுத்துக் கொண்டு, உலகங்களை வயிற்றில் வைத்துக் காத்தவன் நீ இல்லையா? உன்னால் முடியாதது ஒன்றுமில்லை. நீ அருள் செய்தால் எல்லாம் நடக்கும்; செய்யாவிட்டால், எங்கள் மேல் உனக்கு இரக்கம் இல்லை என்றே சொல்ல வேண்டியிருக்கும்” என்கிறார்கள்.



இதையே நாச்சியார் திருமொழி
“என்றும் உன்றனுக்கு எங்கள் மேல் இரக்கம் எழாதது”
என்று உரக்கச் சொல்லுகிறது.


இது 26வது பாசுரம். உபநிடதங்கள், சர்வேஸ்வரனை 26வது தத்வமாகக் கூறுகின்றன. முதல் 24 தத்வங்கள் சரீரம் சம்பந்தப்பட்டவை. 25வது தத்வம் ஜீவாத்மா. அதாவது, ஜீவாத்மாவானது, 24 படிகளைக் (மோட்ச சித்திக்கு தடையாக இருக்கின்ற 24 சரீரத் தத்வங்களை வென்று) கடந்து, பரமாத்மாவை அடைய வேண்டியிருப்பதை உட்கருத்தாகக் கொண்டுள்ளதாகப் பெரியோர் கூறுவர்.

"மார்கழி நீராடுவான்* மேலையார் செய்வனகள்" என்று கண்ணனிடம் கோபியர் கூறும்போது, தாங்கள் மார்கழி நோன்பிருப்பதற்குக் காரணம், தாங்கள் கற்றறிந்தது வாயிலாக அல்ல என்றும், தங்கள் முன்னோர்களின் பழக்க வழக்கங்களை கடைபிடிப்பதை கடமையாகவும், பெருமையாகவும் கருதுவதால் மட்டுமே என்றும் குறிப்பில் உணர்த்துகின்றனர். ஆண்டாள் பாரம்பரியப் பெருமைகளைக் கட்டிக் காப்பதுவும், சான்றோரின் பழக்க வழக்கங்களை கடைபிடிப்பதுவும் அவசியம் என்று வலியுறுத்துகிறார் !


இப்பாசுரத்தில், பெருமானிடம் கோபியர் ஆறு பொருட்களை வேண்டுகின்றனர். இவை, ஆராதனையில் வரும் ஆறு ஆசனங்களை குறிப்பில் உணர்த்துவதாக அபினவ தேசிகன் சுவாமிகள் கூறுவார்.

(i) சங்கு - பிரணவ நாதம் ஏற்படுத்துவதால் மந்த்ராஸானத்தைக் குறிக்கிறது
(ii) பறை - ஸ்நானாஸனம் (திருமஞ்சனம்) நடக்கும்போது வாத்திய கோஷம் சேர்வதால்
(iii) பல்லாண்டு பாடுவோர் - அலங்காராசனம் போது சொல்லப்படும் வேத மந்திரங்களையும், அருளிச் செயல்களையும் பல்லாண்டு பாடுவதாகக் கொள்ளலாம்
(iv) கோலவிளக்கு - தீபத்தை ஏற்றுவது, பெருமாளுக்கு நைவேத்யம் (போஜ்யாஸனம்) செய்வதற்கு ஒப்பானது
(v) கொடி - புனர் மந்த்ராஸனத்தின் போது, கருடன் (கொடி) மீது பவனி வர பெருமாளின் விருப்பம் கேட்கப்படுகிறது.
(vi) விதானம் - பர்யாங்காஸனத்தின் போது, விதானத்துணி, பெருமானின் (அவர் ஓய்வெடுக்க வேண்டி) திருப்படுக்கையின் மீது விரிக்கப்படுகிறது.
மார்கழி நீராடுவான் - சரணாகதி நிலையைக் குறிக்கிறது
போல்வன சங்கங்கள் - வெண்சங்கின் பிரணவ நாதம் தூய்மையான ஞானத்தைக் குறிக்கிறது.
கோல விளக்கே - பெருமானின் பேரில் உள்ள ஆழ்ந்த விசுவாசத்தைக் குறிக்கிறது
கொடியே -- "காற்றில் அலையும் கொடியைப் போன்று, கதியற்று இருக்கும் நாங்கள் (கோபியர்) உன் அருள் வேண்டி வந்துள்ளோம்" என்பதை உள்ளர்த்தமாகக் கொண்டுள்ளது !




Friday, 9 January 2026

ஒருத்தி மகனாய் பிறந்து…

 

ஒருத்தி மகனாய் பிறந்து…


கண்ணபிரானின் திருநாமம் முதன்முதலில் ஒலித்துத் தோன்றுவது சாந்தோக்ய உபநிஷத்தில். அங்கே அவன் தேவகியின் புதல்வன் எனக் குறிப்பிடப்படுகிறான். பாணினியின் அஷ்டாத்யாயி, வாசுதேவ–கிருஷ்ண வழிபாடு நிலவியதைச் சுட்டுகிறது. பதஞ்சலி, தமது உரையில் கம்சனை கண்ணன் வதைத்த வீரத்தை நினைவூட்டுகிறார். மகாபாரதத்தில் நமக்குத் தெரிந்த கண்ணனும், பகவத்கீதையில் உபதேசம் அருளிய பரமகுருவான கிருஷ்ணனும் ஒன்றே. மகாபாரதத்திற்குப் பின்வந்த விஷ்ணு புராணம், ஹரிவம்சம் முதலான புராணங்கள் அவனது லீலைகளை விரித்துரைக்கின்றன.



சில ஆய்வாளர்கள், ஒருகாலத்தில் பழங்குடி மக்களின் தெய்வமாக இருந்த கண்ணன், காலப்போக்கில் விஷ்ணுவின் அவதாரமாக இந்து சமயத்தின் மைய தெய்வமாக உயர்ந்தான் எனக் கருதுகின்றனர். உண்மையில், இன்றைய பெருந்தெய்வங்கள் பலவும், ஆதியில் எளிய மக்களின் ஆராதனைத் தெய்வங்களாகவே இருந்திருக்கின்றன.



கண்ணன் கோபியருடன் ஆடிய ராசக்ரீடை சமஸ்கிருத இலக்கியங்களில் மட்டுமன்றி, ஹரிவம்சத்திலும் தெளிவாகக் கூறப்படுகிறது. இளங்கோ அடிகள், பாலசரிதத்தில் சொல்லப்படும் குரவையை ஆய்ச்சியர்கள் நடனமாக ஆடிக் காட்டுவதாக மிகத் தெளிவாகக் கூறுகிறார்:

“ஆயர் பாடியில், எருமன்றத்து,
மாயவனுடன் தம்முன் ஆடிய
பால சரிதை நாடகங்களில்,
வேல் நெடுங்கண் பிஞ்ஞையோடு ஆடிய
குரவை ஆடுதும் யாம்”
என்று சிலப்பதிகாரம் உரைக்கிறது.



இங்கே கண்ணபிரானின் அவதாரத்தைப் பேசும் சூழலில், ஸ்ரீகிருஷ்ணரின் பிறப்புக்கும் இயேசு கிறிஸ்துவின் பிறப்புக்கும் இடையே காணப்படும் சில ஒற்றுமைகளும் கவனிக்கத்தக்கவை. இருவரும் தெய்வீக அவதாரங்களாகவும், மனிதகுலத்தை உய்விக்கும் ரட்சகர்களாகவும் கருதப்படுகின்றனர்.


கண்ணனுக்குக் கம்சன், கிறிஸ்துவுக்குக் ஹேரோத்—இருவருமே கொடுங்கோலர்கள். தம் உயிருக்கு ஆபத்து விளையும் என்ற தீர்க்கதரிசன அச்சத்தால், ஆண் குழந்தைகளை அழிக்க ஆணையிட்டனர். இதனால் இருவருமே மறைக்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் வளர்க்கப்பட்டனர். அரண்மனையில் அல்ல; கண்ணன் சிறைச்சாலையில், கிறிஸ்து கொட்டகை/குகையில்—எளிய சூழலிலேயே பிறந்தனர். அவர்களின் பிறப்புகள் தீர்க்கதரிசனங்களாலும், அதிசயங்களாலும் ஒளிவட்டம் பெற்றன. இருவரும் அன்பும் தியாகமும் நிறைந்த வாழ்விற்கு மனிதகுலத்தை வழிநடத்திய தெய்வீக உபதேசகர்களே.


முந்தைய பாசுரத்தில் ஆண்டாள் அருளிய மங்களாசாசனத்தைச் செவிமடுத்த கண்ணபிரான், சிரித்தபடியே வினவுகிறான்: “பறை கேட்டு வந்ததாகச் சொல்லிக் கொண்டு, அதே சமயம் எம்மையே மங்களமாக ஆசீர்வதிப்பதாகப் பாடுகிறீர்கள்; இதில் ஒரு முரண் இல்லையோ?”


அதற்கு ஆண்டாள், உள்ளார்ந்த உண்மையை வெளிப்படுத்தி,
“பறை கேட்கும் விண்ணப்பம் வெளிப்புறம் மட்டும்; நாங்கள் வந்தது உம்மையே வேண்டி, உம்மையே அடைவதற்கே” என்று தெளிவுபடுத்துகிறாள்.


அப்போது எம்பெருமான், “அப்படியானால், உங்கள் வேண்டுதலை நிறைவேற்ற இடையூறுகள் இருக்கலாம்” எனச் சொல்ல, ஆண்டாள் அசையாமல் பதிலளிக்கிறாள்: “எண்ணிலடங்கா பெரும் தடைகளை நீக்கிய உமக்கு, இப்போது எஞ்சியிருக்கும் சிறு தடைகள் எவ்வளவு? அவற்றையும் நீக்கி எங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவதே உமது இயல்பு” என்று உறுதியுடன் விண்ணப்பிக்கிறாள்.



இப்பாசுரம் கண்ணனின் அவதார காலச் சூழலையும் நினைவூட்டுகிறது. கம்சனின் சகோதரி தேவகிக்கும், வாசுதேவருக்கும் மகனாக அவன் அவதரித்தான். கம்சன் இருவரையும் சிறையில் அடைத்திருந்தபோதும், கண்ணன் பிறந்த அதே நொடியிலே சிறைக் கதவுகள் தாமே திறந்து, வாசுதேவர் குழந்தையை எடுத்துக் கொண்டு வ்ரஜபூமி நோக்கிச் செல்ல வழி அமைந்தது. அங்கே நந்தகோபனும் யசோதையும் அவனைத் தம் மகனாக ஏற்று வளர்த்தனர். கம்சன் அனுப்பிய அசுரர்கள் யாவரையும் தன் லீலையால் முறியடித்தவன் கண்ணபிரான்.



“ஒருத்தி மகனாய் பிறந்து” என்ற சொல்லால், ஆண்டாள் தேவகியைப் பெயரிட்டு அழைக்கவில்லை. அவள் ஒருத்தி—அவளைப் போல இன்னொருத்தி இல்லை என்பதாலே. ஆண்டாள் தேவகியை “ஒருத்தி” என்று பெயரின்றி அழைக்கிறாள். காரணம் உண்டு. பரமனைப் பெற்றெடுத்தவளாயினும், அவனைப் பிரிய வேண்டிய துன்பத்தை அனுபவித்த உத்தமத் தாய் அவள். தன் ஆறு குழந்தைகளை அண்ணன் கம்சன் கொன்ற கொடூரத்தைக் கண்ணால் கண்டவள்.



யசோதை—அவளைவிடப் பெருமைமிக்க தாய். கண்ணனைத் தாலாட்டி, வளர்த்து, அவன் பாலலீலைகளை அனுபவித்த பாக்கியம் பெற்றவள். அவன் வாயில் ஏழுலகையும் கண்டவள். அத்தகைய யசோதையும் “ஒருத்தி”யே!



ஜீவாத்மாக்கள் கர்மவசத்தால் பிறக்கின்றன. பரமன் மட்டும், தன் அடியவர்களை மீட்கவே பிறப்பெடுக்கிறான். மனிதரின் பிறப்பு அவரை பரமனிடமிருந்து விலக்குகிறது; பரமனின் பிறப்பு மனிதரை அவனுக்கு அருகில் கொண்டு வருகிறது.


உபநிஷதம் கூறும் “அஜாயமானோ பஹுதா விஜாயதே”—பிறப்பற்றவன் பல பிறப்புகள் எடுப்பான்—என்பதன் சாட்சியே இந்த அவதாரம். தேவகி, பிறந்த கணமே தன் தெய்வக் குழந்தையைப் பிரிய வேண்டியவள். அவளது தியாகமும் பக்தியும் அளப்பரியது.



அதேபோல், யசோதை—கண்ணனை வளர்த்து, அவன் பாலலீலைகளை அனுபவித்த புண்ணியவதி. அவள் கண்டது விஸ்வரூபம்; அவள் வாயிலே கண்டது வையம் ஏழு. பெரியாழ்வார், யசோதையின் அச்சம், அன்பு, தவிப்பு—allவற்றையும் பாசுரங்களில் உயிரோடு நிறுத்துகிறார். அதனால் தான் யசோதையும் “ஒருத்தி”.



பரமன் மறைந்து வளர்ந்தது அவன் சித்தம். கம்சனை அழிக்கும் காலம் வரும்வரை, ஆய்ப்பாடியில் ஆயராக வாழ அவனே தீர்மானித்தான். இதிலே அவனது சௌலப்யமும் வாத்சல்யமும் வெளிப்படுகிறது.



கண்ணன் கோகுலத்தில் வளர்கிறான் என்ற செய்தியே கம்சனைத் தீயாய் எரியச் செய்தது. அதனாலே ஆண்டாள் ஒரே சொல்லில்—“தரிக்கிலானாகி”—அவனது துயரைச் சொல்கிறாள். தேவகி–வாசுதேவருக்கு அபயம்; கம்சனுக்கோ பயமே உணவானது. அவன் செய்த தீமைகளுக்கான கர்மபலன் அதுவே.



இறுதியாக, கோபியர், “உன்னையே உன்னிடம் வேண்டி நிற்கிறோம். உனக்கும், உன் மார்பில் குடியிருக்கும் பிராட்டிக்கும் எந்நாளும் கைங்கர்யம் செய்வதே எங்கள் செல்வம்” என்று விண்ணப்பிக்கிறார்கள். “உன்னை அருத்தித்து வந்தோம்” என்பதில், நாங்கள்–நீ என்ற வேற்றுமையே கரைந்து, நீயே நாங்கள் என்ற பரமநிலை வெளிப்படுகிறது.


யமுனை வழிவிட்டு விலகிய அந்த கரிய இரவையும், “தூயப் பெருநீர் யமுனைத் துறைவனை” என்று கோதை நாச்சியார் ஏன் அழைத்தாள் என்பதையும் இப்பாசுரம் நினைவூட்டுகிறது.



கண்ணன் பிறந்த அந்த கரிய இரவில், வசுதேவர் அந்த தெய்வக் குழந்தையை ஒரு கூடையிலிட்டு கோகுலத்திற்கு எடுத்துச் சென்றபோது, யமுனை நதியாள் விலகி வழி விட்டு கண்ணனின் அருளுக்கு உகந்தவள் ஆனாள் ! கோதை நாச்சியார், 5-வது பாசுரத்தில், "தூயப் பெருநீர் யமுனைத் துறைவனை" என்று மாயனை விளிப்பது இதனால் தானோ !


இப்பாசுரத்தில், ஆண்டாள் தேவகியையும், யசோதையையும், பெயரிட்டுக் கூறாமல், 'ஒருத்தி' என்றே குறிப்பிட்டுள்ளார். 'ஒருத்தி' என்பது இங்கே மரியாதைக்குரியதே.


'ஓரிரவில்' என்பது சம்சார பந்தமான இருட்டை உள்ளர்த்தமாக குறிக்கிறது !


'ஒருத்தி மகனாய் பிறந்து' காயத்ரி மந்த்ரத்தையும், 'ஒருத்தி மகனாய் வளர' மூல மந்த்ரத்தையும் குறிப்பில் உணர்த்துவதாக பெருக்காரணை சுவாமிகள் கூறுவார் !


'ஒளித்து வளர' என்பதற்கு இரண்டு உள்ளர்த்தங்கள் கூறப்படுகின்றன.
(i) கண்ணன், பகவத் பெருமைகளை வெளிக்காட்டாமல், ஆயர்களோடு ஆயராக வளர்ந்தது
(ii) அடியார் சிற்றின்ப எண்ணங்களை கைவிட்டு பரந்தாமனை சிந்தையில் நிறுத்த வேண்டியது



தரிக்காலானாகி - சம்சார பந்தத்தை கைவிட்டு



தான் தீங்கு நினைந்த கருத்தைப் பிழைப்பித்து - நமது தீவினைகளை எண்ணி மருகி, அப்பாவ பலன்களிலிருந்து விடுபட அப்பரமனைப் பற்றுவதே உபாயம் என்றுணர்ந்து



உன்னை அருத்தித்து வந்தோம் - பரமபதம் சேர உன்னை நாடி வந்துள்ளோம்



திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி - கண்ணனுக்கு கைங்கர்யம் செய்வதற்கு முன், அப்பரமனின் மார்பில் குடியிருக்கும் தாயாரை முதலில் போற்றி வணங்க வேண்டியதை வலியுறுத்துவதாகக் கொள்ளலாம். 'திருத்தக்க செல்வம்' என்பதற்கு திருவை (திருமகளை) உடைமையால் வந்த செல்வம் என்றும், திருவும் விரும்பத்தக்க செல்வம் (அதனால் தான் திருமார்பன்!) என்றும் கூட பொருள்படும் !



வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து - உலகப்பற்றை உதறி, பரிபூர்ண ஆனந்த நிலையை அடைவதை உள்ளர்த்தமாகக் குறிக்கிறது.



இதல்லவோ நயத்திற்கெல்லாம் நயம், பக்திக்கும் தத்துவத்துக்கும் பாலமாய் நிற்கும் ஆண்டாள் அருளிசெய்த பேருரு!


Wednesday, 7 January 2026

அன்றிவ் வுலகம் அளந்தாய்!

 

அன்றிவ் வுலகம் அளந்தாய்!






பழந்தமிழ் இலக்கியங்கள், எம்பெருமானின் திருவிளையாடல்களையும் அவதார ரகசியங்களையும் இயல்பாகவே தம்முள் ஏந்திக் கொண்டுள்ளன. அதற்கு எடுத்துக்காட்டாக, “வண் புனல் தொழுநை வார் மணல் அகன்துறை / அண்டர் மகளிர் தண் கழை உடீஇயர் / மரம் செல மிதித்த மாஅல் போல” என்று அகநானூறு உரைக்கிறது. யமுனைத் தீரத்திலே ஆய்ச்சியர் மரத்தழை கட்டிக் கொள்ள, கிளையை வளைத்து உதவிய மாஅலின் (கண்ணனின்) எளிமையும் சௌலப்யமும் இங்கு சித்தரிக்கப்படுகிறது. அதேபோல், “மேவார் விடுத்தந்த கூந்தற் குதிரையை / வாய் பகுத்து இட்டு புடைத்த ஞான்று இன்னன்கொல் / மாயோன்” என்று கலித்தொகை, கம்சனால் அனுப்பப்பட்ட கேசி அசுரனை கண்ணன் அழித்த வீரச்செயலைக் குறிக்கிறது. மேலும், “மல்லர் மறம் சாய்த்த மால் போல” எனும் குறிப்பும், அவனது பராக்ரமத்தைக் கூறாமல் விடுவதில்லை. 




சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சியர் குரவை, அங்கே, “மூவுலகும் ஈரடியான்… தொல்லிலங்கை கட்டழித்த சேவகன்” என்று, திரிவிக்ரம அவதாரமும், இலங்கை அழித்த ராமாவதாரமும் ஒருங்கே நினைவூட்டப்படுகின்றன. “கன்று குணிலா கனி உதிர்த்த மாயவன்” என்று வத்சாசுர வதமும் சுட்டப்படுகிறது. மணிமேகலையும், “மாமணி வண்ணனும் தம்முனும் பிஞ்ஞையும் ஆடிய குரவை” என்று, கண்ணன்–பலராமன்–நப்பின்னை இணைந்து ஆடிய தெய்வீகக் குரவையைப் பேசுகிறது. இத்தகைய பழந்தமிழ் பக்தி மரபில் வந்தவளே ஆண்டாள்.



முந்தைய பாசுரத்தில் ஆண்டாள் அருளிசெய்த விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்ட கண்ணபிரான், நப்பின்னை பிராட்டியர்க்கு நெருக்கமான கோபிகைகளை நீண்ட நேரம் காத்திருக்கச் செய்ததைக் கருதி, தன்னிடமே சிறு வருத்தம் கொண்டு, திருக்கிடையிலிருந்தபடியே அவர்களை ஆற்றுவிக்கிறான்.



ஆனால், அவனது திருநடையின் அழகை அனுபவிக்க விழையும் ஆண்டாள், இப்பாசுரத்தில், “இனி இங்கே கிடந்து அருள வேண்டாம்; எழுந்தருளி, மரியாதை நிறைந்த நடை கொண்டு, திருவாசல் மண்டபம் புகுந்து, சிம்மாசனத்தில் கம்பீரமாக அமர்ந்து, எங்கள் வருகையின் நோக்கத்தை விசாரித்தருள வேண்டும்” என்று பணிவுடன் வேண்டுகிறாள்.



கருணையே வடிவாகக் கொண்ட எம்பெருமான்; அதிலும், இக்கோபிகைகளுக்குத் தாயாராக நப்பின்னை பிராட்டியின் அபாரமான புருஷகாரம் துணை நிற்கும் போது, இச்சரணாகதர்களின் விண்ணப்பத்தை ஏற்க தாமதம் செய்வதற்கு எம்பெருமானால் இயலுமோ?



கோபிகைகள் கண்ணன் மீது கொண்ட வாத்சல்யமும் பரமபக்தியும், அவர்கள் “பல்லாண்டு” பாடுவதில் வெளிப்படுகின்றன. ஆண்டாள் பெரியாழ்வார் பெற்ற பெண்பிள்ளை அல்லவா? அதனால் தான், தந்தையின் பல்லாண்டு போலவே, துயிலெழுந்து மணிமண்டபத்தில் சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் கண்ணனுக்கு மங்களாசாசனம் செய்கிறாள்.



பரமனுக்கு அடியவர் பல்லாண்டு பாடவேண்டிய அவசியம் என்ன ? அவனே சர்வலோக ரட்சகன். அவனுக்கு எல்லா மங்களமும் உண்டாக வேண்டுமென்று (சிறியரான) அடியவர் பாடுவது எதனால் ? அது சரியா ? என்ற கேள்விகளுக்கு ஒரே பதில். அடியவருக்கு பரமன் மீதுள்ள பேரன்பின் வெளிப்பாடே இந்த பல்லாண்டு பாடுதல். வைணவத்திலுள்ள சிறப்பே இந்த மங்களாசாசனம் தான். சிறியவரும் பெரியோரை "இன்னுமோர் நூற்றாண்டு இரும்" என்று வாழ்த்தலாம்!



அன்று இரண்டடியால் உலகை அளந்தாய். இன்று எங்களுக்காக பல அடிகள் எடுத்து வைத்து நடக்கிறாய். ‘பிராட்டிமார் பூத்தொடுமாபோலே கூசிப் பிடிக்கும் திருவடிகளைக் கொண்டு காடுமோடையையும் அகப்பட என்கை’ என்று மூவாயிரப்படி சொல்கிறது. அதாவது பூப்போன்று பிராட்டியர் அணுகும் கால்களதாம் உலகை அளக்கும் வலிமை வாய்ந்த கால்கள். இதைத்தான் சிலப்பதிகாரமும் மூவுலகும் ஈரடியாய் தாவிய அடிகள்தாம் சிவக்க சிவக்க காட்டிற்கு ராமாவதாரத்தில் நடந்தன என்று சொல்கிறது. ஆண்டாளின் தந்தை பெரியாழ்வார் உன் செவ்வடி செவ்வித் திருக்காப்பு என்று பாடியது போல சிறுமியர் அவன் அடி போற்றுகிறார்கள்.



திரிவிக்ரம அவதாரத்தின் மீது ஆண்டாளுக்கு உள்ள பிரேமை நாம் அறிந்ததே. மூன்றடி மண் கேட்ட பரமனின் திருவடியைப் போற்றியே இப்பாசுரம் தொடங்குகிறது. உலகமெங்கும் நிறைந்த அவன் திருவடிநிழலே சரணாகதிக்கான ஒரே புகலிடம் என்பதைக், பாசுரத்தின் முதலடியிலேயே உணர்த்துகிறாள் சூடிக் கொடுத்த நாச்சியார்!



சகடாசுரனை உதைத்ததும், வத்சாசுரனை கன்று வடிவில் சுழற்றி எறிந்ததும்—அவ்வேளையில் கண்ணன் நின்ற கோலத்தில் தாமரைப் பாதமும் கழலும் பளிச்சென்று தோன்ற, கழல் போற்றப்பட்டது.



கோவர்த்தனத்தை குடையாக ஏந்தி ஆயர்களைக் காத்தபோது, இந்திரனை அழிக்காமல் பொறுத்த அவன் பெருந்தன்மையை, “குணம் போற்றி” என்று ஆண்டாள் புகழ்கிறாள். அந்தக் காட்சியை பெரியாழ்வார் பத்து பாசுரங்களில் மங்களாசாசனம் செய்தார்.



பகைவரை அழிக்கவும், அடியவரைக் காக்கவும், பரமனின் ஆயுதங்கள் போற்றப்படுகின்றன. “படை போர் புக்கு முழங்கும் அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே” என்ற விஷ்ணுசித்தரின் பல்லாண்டு நினைவுக்கு வருகிறது. இவ்வாறு, ஒவ்வொரு போற்றுதலும் ஆழ்ந்த பொருளுடன் நிறைந்துள்ளது.



கூர்வேல் கொடுந்தொழிலன் கொடுந்தொழிலன் நந்தகோபன் மகன் என்பதாலேயே, கண்ணனுக்கு வேல் (வென்று பகை கெடுக்கும் நின் கையில்வேல் போற்றி) உளதாயிற்று.



கோபியர்கள் மாயக் கண்ணனை, "அடி போற்றி, திறல் போற்றி, புகழ் போற்றி, கழல் போற்றி, குணம் போற்றி, வேல் போற்றி" என்று ஆறு வகையாய் (தங்கள் நாவால்) மங்களாசாசனம் செய்து அறுசுவை பெறுகின்றனர் ! இப்பாசுரத்தில் பரமனுக்கு ஆறு முறை மங்களாசாசனம் (போற்றி) செய்யப்படுகிறது. அவை பரமனின் ஆறு (ஞானம், வலிமை, செல்வம், வீர்யம், பொலிவு, செயல்திறன்) கல்யாண குணங்களைக் குறிப்பில் உணர்த்துவதாம்.



"என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்" என்பது, அடியார்களான கோபியர், பரமபதத்தில் பகவத் கைங்கர்யம் செய்ய வேண்டுவதை மட்டுமே விழைவதை உள்ளர்த்தமாகக் கொண்டுள்ளது!



"வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி" என்பது மோட்ச சித்தியை அடைவதற்குத் தடையாக இருப்பனவற்றை பரந்தாமனின் கூரிய சங்கல்பம் உடைத்தெறியும் என்பதை உட்கருத்தாக வலியுறுத்துகிறது!



"குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி" என்று கோபியர் பாடும்போது, பரமபதத்தில் ஸ்ரீவைகுந்தனாக, அனைத்துலகங்களையும் ரட்சிக்கும் சர்வேஸ்வரனாக, வெண்கொற்றக் குடையின் கீழ் எழுந்தருளியிருக்கும், பரந்தாமனின் கல்யாண குணங்கள் போற்றப்பட்டுள்ளன.




"கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி" என்பது, பாவ-புண்ய பலன்களிலிருந்து அடியார்களை மீட்க வல்ல, பரந்தாமனின் வலிமை வாய்ந்த தண்டத்தைப் போற்றும் உட்குறிப்பாகும் !



"பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி" என்பது, புலன்கள் நாடும் சிற்றின்பங்களுக்கு வேண்டி அலை பாயும் மனத்தை, பரந்தாமனைப் பற்றுவதன் மூலம் அமைதிபடுத்தி நல்வழிக்கு இட்டுச் செல்லும் உபாயத்தை உட்கருத்தாக வலியுறுத்துகிறது.



'சென்றங்குத் தென் இலங்கை செற்றாய் திறல் போற்றி' என்பது, எங்கும் நீக்கமற நிறைந்த அந்தர்யாமியாகவும், ஆச்சார்யனாகவும் இருக்கும் அம்மாயப்பிரானை, அவன் திருவடிப் பதம் அடைவதற்கு தடைக்கற்களாக இருக்கும் கர்வம், பற்று போன்றவற்றை விட்டொழிக்கத் தேவையான வலிமையான விவேகத்தை தந்தருளுமாறு கோபியர் வேண்டுவதைக் குறிக்கின்றது !



"அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி" --- உலகங்களைப் படைத்து ரட்சிப்பதால் பரந்தாமனே பரந்த இவ்வண்டத்தின் நாயகன், அவன் திருவடிகளே காப்பு !



முத்தாய்ப்பாக, “இனி எந்நாளும் உனக்கே சேவை செய்வதே எங்கள் வேண்டுதல்; வேறு எதுவும் தேவையில்லை; எங்கள் மீது மனம் இரங்காதோ?” என்று கோபிகைகள் இறைஞ்சுவதாக ஆண்டாள் பாடும்போது, கருணை வடிவான எம்பெருமான் இனியும் அருள் வழங்காமல் இருக்க இயலுமோ?



இதுவே ஆத்மார்த்தமான பல்லாண்டு; இதுவே உண்மையான சரணாகதி; இதுவே வைணவ பக்தியின் உயிர்நாதம்.



மாரி மலை முழைஞ்சில்...

 

மாரி மலை முழைஞ்சில்...


தமிழ் இலக்கியப் பரம்பரையில் மிருக உவமைகளில் புலியைவிடச் சிங்கமே அதிகமாகப் போற்றப்பட்டு வந்திருக்கிறது. வீரத்திற்கும், கம்பீரத்திற்கும், அரசத் தன்மைக்கும் அடையாளமாகச் சிங்கமே கவிஞர்களின் மனதை அதிகம் கவர்ந்தது. அந்த மரபில் ஆண்டாள் தனிச்சிறப்பு பெற்றவள். இப்பாசுரத்தில் அவள் சிங்கத்திற்கே நாலரை அடிகளை ஒதுக்கி, அதன் முழு இயல்பையும் கண்ணனுக்கான உவமையாக விரித்து நிறுத்துகிறாள்.


ஆண்டாள் உண்மையில் சிங்கத்தை நேரில் கண்டிருக்க முடியுமா என்ற கேள்வி இயல்பாக எழுகிறது. அவள் வாழ்ந்த ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைகளின் அருகாமையில் அமைந்த பகுதி. அங்குள்ள காடுகள் அடர்ந்த வனங்கள்; புலிகள் வாழும் நிலப்பரப்பே அது. சிங்கங்கள் இயல்பாக வாழ்வது விரிந்த புல்வெளிகளும், அரிதான மரங்களும் கொண்ட சமவெளிப் பகுதிகளில் (marshland forests that are not dense). மேலும் புலியும் சிங்கமும் ஒரே நிலப்பரப்பில் இணைந்து வாழ்வதில்லை என்பதும் அறியப்பட்டதே. ஆகையால் ஆண்டாள் இயற்கைச் சூழலில் சிங்கத்தை கண்டிருக்க வாய்ப்பு மிகக் குறைவு. அதேபோல், சிங்கம் மழைக்காலத்தில் உறங்கிக் கிடக்கும் என்றும், வேட்டையாடாமல் நீண்ட நாட்கள் வாழும் என்றும் சொல்வது அறிவியல் அடிப்படையில் பொருந்தாது. சிங்கம் உறங்கினாலும் அது முழுமையான நித்திரை அல்ல; “Lions do not hibernate” என்பதே இயற்கை உண்மை.


ஆனால் இவை எல்லாம் இங்கு முக்கியமல்ல. இப்பாசுரம் இயற்கை வர்ணனை அல்ல; இது தத்துவ உவமை. கோபியர் பாடும் இப்பாடல், கிருஷ்ண சிம்மத்தின் கம்பீரத்தை, அவனது பரத்துவத்தையும், அரசரசத் தன்மையையும் வெளிப்படுத்தும் ஒரு ஆன்மிக வர்ணனை.


சூடிக் கொடுத்த நாச்சியார், மாயக்கண்ணன் துயிலெழுவதை, குகையிலிருந்து விழித்தெழும் சிங்கத்தின் எழுச்சியுடன் ஒப்பிட்டு, உவமையின் உச்சியைத் தொடுகிறாள். இதை லக்ஷ்மி நரசிம்ம மூர்த்தியை உள்ளார்ந்து கொண்டு ஆண்டாள் பாடிய பாசுரம் என்று ஸ்ரீமட உரையாசிரியர்கள் விளக்குவர்.


மழைக்காலத்தில் மலைக் குகையைத் தன் இருப்பிடமாகக் கொண்டு, மன்னிக் கிடந்து உறங்கும் அந்தச் சீரிய சிங்கம், தூக்கம் கலைந்து, தீப்பொறி பறக்கச் சிவந்த விழிகளைத் திறந்து, மணமிகு பிடறி மயிர் அலைபாய நாற்புறமும் உடலை அசைத்து, நெட்டுயிர்த்து, பின்னர் கம்பீரமாக நிமிர்ந்து கர்ஜித்து, குகையைவிட்டு வெளியேறுவது போல — காயாம்பூ நிறமுடைய மாயக்கண்ணனே! நீயும் உன் திருமாளிகையை விட்டு இங்ஙனே எழுந்தருள வேண்டும் என்கிறார்கள் கோபியர்.


‘வர்ஷா காலம் அரசர்கள் படைவீடு விட்டுப் புறப்படாதது போல, சிம்ஹமும் மழைக்காலத்தில் குகையைவிட்டு வெளியே வராது’ என்று வியாக்யானம் கூறுகிறது. ஆனால் இங்கு கண்ணன் சாதாரண சிம்ஹம் அல்ல; அவன் கிருஷ்ண சிம்ஹம்.


ஆண்டாள் முன்னமே அவனை “யசோதை இளஞ்சிங்கம்” என்று குறிப்பிடுகிறாள். இங்கு அவன் மிருகராஜன் மட்டுமல்ல; அரசர்களுக்கெல்லாம் அரசன். அவன் கட்டிலின் கீழ் உலகின் அரசர்கள் காத்திருக்கின்றனர் என்று முந்தைய பாசுரமே சொல்லிவிட்டது. உரையாசிரியர்கள் கண்ணனுடைய நடையை சதுர்க்கதி என்று வர்ணிக்கிறார்கள் — காளையின் விறு, யானையின் மதிப்பு, புலியின் சினம், சிங்கத்தின் தேஜஸ் ஆகிய நான்கும் ஒருங்கே கூடிய நடை.


“கடற்கரையில் வார்த்தை” என்று ஸ்ரீராமனையும், “தேர்தட்டில் வார்த்தை” என்று கண்ணனையும் சொல்லுவர். இங்கு கோபியர் கேட்பது சிம்மாசன வார்த்தை. பள்ளியறையில் சொல்லும் சொல் மாற்றப்படலாம். ஆனால் அரசவையில், சிம்மாசனத்தில் அமர்ந்து அரசன் அளிக்கும் வாக்கு உலகம் அறிந்ததாகவும் மாற்றமறாததாகவும் இருக்கும். அதனால்தான், “நீ சிம்மாசனத்தில் அமர்ந்து பேச வேண்டும்” என்று சிறுமியர்கள் வலியுறுத்துகிறார்கள்.


அந்தச் சிம்மாசனம் கோப்புடையது — பேரருமை கொண்டது. பரமபதத்தில் உள்ள தர்மாதிபீடத்திற்கே ஒப்பானது. தர்மம், அதர்மம், ஞானம், அஞ்ஞானம், வைராக்கியம், வைராக்கியமின்மை, பொருள், பொருளின்மை என எட்டு கால்களைக் கொண்ட ஆசனம் அது. அதில் அமர்ந்து தான் பகவான் அடியவர்களின் குறை நிறைகளை ஆராய்ந்து அருள் செய்ய வேண்டும்.


“மன்னிக் கிடந்துறங்கும்” என்ற சொல்லுக்கு ‘நிலைகொண்டு உறங்குதல்’ என்பது நேரடியான பொருள். ஆனால் ‘மன்னி’ என்ற சொல்லுக்கு அகந்தை, கோபம், துக்கம், செருக்கு என்ற பல பொருள்களும் உண்டு. இங்கு அது அச்சமற்ற கம்பீர நிலையைக் குறிக்கிறது. சிங்கம் உறங்கும்போதும் உடலை ஒடுங்கச் செய்யாது; யாரும் தன்னை நெருங்க முடியாது என்ற தன்னம்பிக்கையுடன் குகையில் படுத்திருக்கும். அதுவே “சீரிய சிங்கம்”.


மற்றொரு விதமாக, ‘மன்னி’ என்பது நீக்கமற நிறைந்து வியாபித்தல் என்றும் பொருள் கொள்ளலாம்.


இந்தப் பாசுரத்தில், அந்தக் கிருஷ்ண சிம்ஹத்தை, அவன் பெருமைக்குரிய சிம்மாசனத்தில் அமரச் செய்து, தங்கள் தேவைகளையும் குறைகளையும் கேட்டு ஆராய்ந்து அருள் செய்யுமாறு ஆண்டாள் வேண்டுகிறாள். விழித்தெழும் பரமனின் கம்பீரமும், அவன் வீறு நடையும், இதைவிடச் சிறப்பாக வர்ணிக்க இயலுமா என்பது ஐயமே.


கண்ணனின் ஆளுமை, வலிமை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தான் ஆண்டாள் அவனைச் சிங்கத்துடன் ஒப்பிடுகிறாள். அவன் மென்மை, அழகு, கருணை ஆகியவற்றைச் சொல்லும்போது, “பூவை பூவண்ணா” என்று விளிக்கிறாள். இதுவே கோதை நாச்சியாரின் கவிநயம்.


“இங்ஙனே போந்தருளி” என்பது கண்ணனின் கம்பீர நடையைச் சுட்டுகிறது. அவன் கிடந்த அழகை கோபியர் பார்த்துவிட்டார்கள்; இனி அவன் நடையழகை அனுபவிக்க வேண்டாமா? அதனால்தான் அவனை அவன் திருமாளிகையிலிருந்து நடந்து அரசவை மண்டபத்திற்கு வருமாறு வேண்டுகிறார்கள். பக்தர்கள் மண்டபத்தில் கூடியிருக்க, பரமனும் அங்கேயே எழுந்தருள வேண்டுமே!


மேலும், விடியலில் எழுந்து, நோன்பு காத்து, திருநாமங்களைப் பாடி, ஒவ்வொருவரையும் எழுப்பி, காவலரின் அனுமதி பெற்று, நந்தகோபர், யசோதை, நப்பின்னைப் பிராட்டியை எழுப்பி, இறுதியில் கண்ணனிடம் வந்து நிற்பது — இதன் மூலம் ஆண்டாள் ஒன்றை நுட்பமாக உணர்த்துகிறாள். சரணாகதி என்பது வெறுமனே “எல்லாம் அவன் செயல்” என்று அமர்ந்து விடுவது அல்ல; அதற்கு சுயமுயற்சியும், பக்தியுடனான உழைப்பும் அவசியம் என்பதே அந்த உள்கருத்து.



கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா...

  கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா... கோயில்களில் இப்பாசுரம் ஓதப்படும் திருநாளன்று, நெய் வளமுடன் இனிய சர்க்கரைப் பொங்கலைச் செய்து நிவேதித்து ப...