Friday, 6 March 2026

மௌன அழைப்பு

 

Translation of Hindi poem, "Maun Nimantran" by Sumitranandan Pant....


மௌன அழைப்பு




நிலவொளி நிசியில் உலகமெலாம்

நிம்மதியாய் நின்று மெய் மறக்கும் வேளை,

மழலையாய் கனவுகள் வந்து

மனிதரின் விழிகளில் மலரும் நேரம்—


  நட்சத்திர மேவிய வானத்திலிருந்து

  மௌனமாய் என்னை அழைப்பது யார்?


கருமேகக் கடல்கள் வானில் திரண்டு

கர்ஜனையாய் முழங்கி எழும் நேரம்,

மின்னலின் தீவெள்ளி சிரித்து

முழு இருளைச் சிதைக்கும் வேளை—


  அந்த ஒளிக் கீற்றிலிருந்து 

  என்னை சுட்டிக்காட்டியது யார்?


வசந்தம் வந்து பூமி முழுதும்

வானொலி போல பாடும் வேளை,

மலர்கள் சிரித்து இதழ் திறந்து

மணமாய் உலகை நிரப்பும் நேரம்—


  அந்த வாச மலரிலிருந்து

  மௌனச் செய்தி தருவது யார்?


பொங்கும் அலைகள் சிரித்து எழுந்து

பெருங்கடலில் பாடும் வேளை,

நுரைமுடி சூடி நீருலகம்

நடுங்கி நிமிர்ந்து விளையாடும் நேரம்—


  அந்த அலையின் இதயத்திலிருந்து

  என்னை அழைக்கும் அது யார்?


விடியற்கால பொன்னொளியில்

விண்மீன் துயிலும் கணம் முடியும்,

பறவைகள் கூட்டமாய் பாடி

விண்ணையும் மண்ணையும் இணைக்கும் நேரம்—


  உறங்கிய என் இமைகளை

  திறக்கச் சொல்வது யார்?


இருளின் ஆழ் நிசியில் கூட

உலகமெலாம் உறங்கும் வேளை,

மின்மினிப் பூச்சிகள் ஒளி தந்து

மெல்லிய பாதை காட்டும் நேரம்—


  அந்த சிறு ஒளிக்குள் கூட

  என்னை நடத்துவது யார்?


நாளெலாம் உழைத்துப் போராடி

நானொரு சோர்ந்த உடலாய் வீழ்ந்தால்,

ஆன்மா மட்டும் விழித்திருக்கும்

அமைதியின் ஆழ் இரவினில்—


  கனவின் மௌன நாட்டிலே

  என்னை நடத்துவது யார்?


ஒளிமயமானவரே! உம்மை அறியேன்—

ஆனால் உம் அருள் எனக்குண்டு!

குழந்தையென என்னைக் காத்து

வாழ்க்கை வழியில் நடத்துகின்றாய்!


  இன்பத் துன்பம் சேர்ந்த எல்லா வேளையும்

  என் தோளில் கை வைக்கும் தோழா—

  நீயே என் உள்ளம் அறிந்த இறைவன்!

No comments:

Post a Comment

India needs innovation, not dependence – Say No to Starlink

India needs innovation, not dependence – Say No to Starlink Does India really need Elon Musk's Starlink, or does it need to strengthen w...