பாரதி சின்னப்பயல்
எட்டையபுர அரசவைத் தலைமைப் புலவராக இருந்த காந்திமதிநாதருக்கு பாரதி மேல கொஞ்சம் கோபம், பொறாமை. அதனால அவரை அவமானப்படுத்த வேண்டும் என்றெண்ணி 'பாரதி சின்னப்பயல்' என்று ஈற்றடி தந்து உடனே ஒரு வெண்பா பாடல் இயற்றச் சவால் விடுத்தார். பாரதி அதற்கு உடனே பாடல் ஒன்றை எழிதினார். அப்பாடல் இதோ:
"ஆண்டில் இளையவனென் றந்தோ அகந்தையினால்
ஈண்டிங் கிகழ்ந்தென்னை ஏளனஞ்செய் – மாண்பற்ற
காரிருள்போ லுள்ளத்தான் காந்திமதி நாதனைப்
பாரதி சின்னப் பயல்."
அதாவது, தன்னை விட வயதில் இளையவன் நான் என்று அந்த அகந்தையினால் என்னை இகழ்ந்து ஏளனம் செய்த, பெருமை அற்ற, கருமையான இருள் போன்ற உள்ளம் கொண்ட காந்திமதி நாதனைப் பார், மிகவும் சின்னப் பயல் என்று பொருள் தருகின்ற பாடல் அது. (பாரதி சின்னப் பயல் = பார் அதி சின்னப் பயல்).
இந்தக் கதை நாமெல்லோரும் அறிந்ததே. அண்ணல் அறியாத (வெகுவாக அறியாத) ஒன்று இதோ...
காந்திமதிநாதன் மிகவும் வருத்தமுற்று பாரதியிடம் தன் வருத்தத்தைத் தெரிவிக்க, பாரதி பாட்டை கொஞ்சம் மாத்திப் பாடுறார் இப்படி:
"ஆண்டில் இளையவனென் றைய அருமையினால்
ஈண்டின்றென் றன்னைநீ யேந்தினையால் – மாண்புற்ற
காரதுபோ லுள்ளத்தான் காந்திமதி நாதற்குப்
பாரதி சின்னப் பயல்."
வயதில் இளையோன் என்று அன்போடு என்னை நேசிக்கும் மண்புமிகு காந்திமதி நாதனின் முன் பாரதி சின்னப் பயல் என்று பொருள் வரும்படி பாடலை மாற்றியமைத்தார். கார் அது போல உள்ளத்தான் - மழை மேகம் போல கருணை மிக்க உள்ளம் கொண்டவன். இங்க பாரதி, தன்னையே சின்னப் பயல் ன்னு சொல்லிக்கொள்கிறார். சபையிலிருந்தோர் பாரதியின் பண்பினைப் போற்றினர்.
இந்த நிகழ்வு நடைபெறும் போது பாரதிக்கு வயது 14. இதுவே அவரின் இளமையில் புலமைக்கு ஓர் சான்று. புலமை மட்டுமல்ல அவரது மாண்பிற்கும் ஓர் உதாரணம்.
No comments:
Post a Comment