Monday, 11 December 2023

பாரதியும் பெண்ணுரிமையும்








நான் பாரதியின் ஆய்வாளன் அல்லன், அவரது கவிதை தொகுப்புகளை கரைத்து குடித்தவனும் அல்லன் - ஆம், அவரது படைப்புகளை, இரசித்து படிப்பவன், சுவைப்பவன். அவ்வளவே. அவரை பற்றி எழுத எனக்கு தகுதியும் இல்லை.



மகாகவி சுப்பிரமணிய பாரதியார் கட்டுரை, கவிதை, சிறுகதை, வசனகவிதை என பல்வேறு இலக்கிய படைப்புக்களை படைத்தவர். இருந்தாலும் அவர், "நமக்கு தொழில் கவிதை" என்று இறுமாப்பு கொண்டிருந்தார். அவர் இந்தியாவின் விடிவெள்ளி. விடுதலை உணர்வையும், விழிப்புணர்வையும் மக்களிடையே பரவச் செய்த மகான். உரைநடையில் பத்து பக்கங்களில் சொல்லி விளக்கக்கூடிய விஷயங்களை ஒரே வரியில் கவிதையாய் கூறி வலிமையாய் நாட்டு மக்களின் உள்ளத்தில் வலியுறுத்தமுடியும் என்று நம்பியவர், செய்தும் காட்டியவர். நாட்டுப்பற்று, மொழிப்பற்று, தேசிய உணர்வு ,மனிதநேயம் ஆகியவற்றை தம் கருப்பொருளாகக் கொண்டு பாடல்கள் பாடியவர். 



பெண் என்பவள் ‘பேசும் தெய்வம்’ என்பதை வலியுறுத்தும் விதமாக அன்னை காளியை ஆயிரம் இடங்களில் சுட்டுகிறார். அதுமட்டுமல்லாமல் புதுமைப்பெண், பெண்மை, விடுதலைக்கும்மி போன்ற பல்வேறு தலைப்புகளில் பெண்மையைப் போற்றியும் உள்ளார். புதுமை பெண்கள் பற்றிய கவிதைகளில் காணப்படும், "சரி நிகர் சமானமாக வாழ்வம் இந்நாட்டிலே...." "பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம், எட்டும் அறிவினில் ஆணுக்கே பெண் இளைப்பில்லை காண்...." என்பன மறக்க முடியாதவை.



சமுதாயத்தில் பெண் என்பவள் ஒரு அங்கம். ஆனால் சமுதாய கோட்பாடுகள், இன்றளவும் பெண் என்பவள் பிறந்தது முதல் யாரையேனும் சார்ந்து, அண்டி வாழ வேண்டி உள்ளது என்ற நிலையை உருவாக்கியுள்ளது. இளமைப்பருவத்தில் பெற்றோரையும், திருமணம் முடித்து பின் கணவனையும், அதற்குப்பின் தன்னுடைய மகனையும் சார்ந்து வாழ வேண்டிய நிலை உள்ளது அல்லது அப்படி ஒரு தோற்றத்தை உருவாக்கியுள்ளது. பாரதியாரின் பெண்விடுதலை பற்றி கூறும் கருத்துக்கள் ஆண் ஆதிக்கச் சமூகத்திற்கு பாடமாக அமைந்துள்ளது எனில் மிகையாகது.




பெண் என்பவள் அழகானவள், மென்மைளானவள், இன்பம் தரக்கூடியவள், பொறுமையில் பூமாதேவி, ஐயத்திற்குரியவள் என்ற கருத்து நிலவி அந்த கால கட்டத்தில் இருந்தது. இப்போதும் கூட சில இடங்களில் இதை பார்க்க நேரிடலாம். பெண்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் வீடுதிரும்பும் வரை பல்வேறு விதமான இன்னல்களுக்கு ஆளாகவேண்டி உள்ளது.



“பெண் என்பவள்  தெய்வம்...’’என்பதைத் தம் கவிதைகளில் சுட்டிக்காட்டி, “எங்கெங்குகாணினும் சக்தியடா…” என்று சக்தியின் உருவகமாகப் பெண்னைப் பார்க்கிறார்.



அறிவு நிரம்பப் பெற்றவர்கள் பெண்கள். ஆண்களின் அடிமைத்தனத்தினால் தான் பாமரர் முதல் படித்தவர் வரை அடிமை வாழ்வு எய்தும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். உண்ணும் உணவில் இருந்து உடுத்தும் உடையில் கூட கட்டுப்பாடுகளைச் சந்திக்க வேண்டிய சூழலில் சில பெண்கள் இன்னும் வாழ்வை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் உள்ளனர். பெண்ணின் மனதை காயப்படுத்தும் செயல் புரிபவர்களைக் கண்ட முண்டாசுக் கவிஞர்,



“அறிவு கொண்ட மனித உயிர்களை அடிமையாக்க முயல்பவர்கள் பித்தராம்”. என்று தம் பாடலில் குறிப்பிட்டுள்ள பாரதி, மனைவியையும் தாயையும் மதிக்க வேண்டும் என்னும் கருத்தை,



“மண்ணுக்குள் எவ்வுயிரும் தெய்வமன்றால் மனையாளும் தெய்வமன்றோ மதிகெட்டீரே
தாயைப் போல பிள்ளையென்று முன்னோர் வாக்கின் படி பெண்மை அடிமையுற்றால் மக்களெல்லாம் அடிமையுறல் வியப்பன்றோ”



என்று விளக்குகிறார். இதன் மூலம் ஒருவர் பண்பும், ஆத்மீகமும் மற்றவர்களால் உருவாகின்றன என்ற கருத்தை உணர்த்தியுள்ளார். பெண் எப்படிப்பட்டவளாக இருக்க வேண்டும் என்பதனை,


“ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவிலோங்கி இவ்வையம் தழைத்தோங்குமாம்
பேணு நல்லறத்தோடிங்குப் பெண்ணுருப் போந்து நிற்பது தாய் சிவசக்தியாம்
நாணமும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம் ஞான நல்லறம் வீர சுதந்திரம்
பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாகும்”. என்கிறரர்.
மேலும்,
“நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
நிமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால் செம்மை மாதர் திறம்புவதில்லையாம்
அமிழ்ந்து பேரிருள் அறியாமையில் அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம் உதய கன்னி உரைப்பது கேட்டீரோ”. என்கிறார்.



சமுதாயத்தில் ஒரு பெண் நல்லமுறையில் வாழவேண்டும் எனில் எதிர்த்து நிற்கும் துணிவு தன்னம்பிக்கை, முயற்சி ,ஊக்கம் , வைராக்கியம் போன்ற உயர்ந்த இலட்சியங்களைக் கைக் கொள்பவர்களாக இருக்க வேண்டும். தவறினைச் சுட்டிக்காட்டி எடுத்துரைக்கும் மனோதிடம் உள்ள பெண்களினால் கவலையின்றி வாழ முடியும் என்றும் அவளே மிகச்சிறந்த பெண் என்றும் கூறுகிறார்.



“பெண்மை வாழ்க வென்று கூத்திடுவோமடா, பெண்மை வெல்க என்று கூத்திடுவோமடா” என்று கூறிவிட்டு ஆண்களுக்கு சாட்டையடி கொடுக்கும் விதமாக,
“பெண்ணறத்தனை ஆண்மக்கள் வீரந்தான் பேணுமாயின் பிறகொரு தாழ்வில்லை
கண்ணைக் காக்கும் இமை மிரண்டின்மை போலவே”
“உயிரைக் காக்கும் உயிரினைச் சேர்ந்திடும் உயிரினுக்குயிராய் இன்பமாகிவிடும்
உயிரினும் இந்தப் பெண்மை இனிதடா”. என்கிறார்.



பெண் விடுதலை பற்றிப்பேசும் போது அடிமை வாழ்வு வாழ்ந்த பெண்களின் அவல நிலையை எண்ணி வருந்துகிறார். படிப்பறிவு இல்லாத நிலை திருமண வாழ்வின் அவலநிலை சமுதாய உரிமை ஆகியவற்றிறைப் பற்றியும் கூறியிருக்கிறார். கல்வி கற்க முடியாத நிலையையும் விருப்பமில்லா திருமண வாழ்வையும் நினைத்துக் குமுறும் முண்டாசு கவிஞர்,

“ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமை என்று எண்ணி இருந்தவர் மாய்ந்துவிட்டார்
வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப்போம் என்ற விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்”



என்பதனையும், பெண் தன்னை விட படிப்பில் சிறந்தவளாக ஆளுமைமிக்க பெண்ணாக இருப்பதைக் கண்டு குமுறும் ஆண்களுக்காகவே எழுதப்பட்ட வரியாக அமைந்துள்ளது. மேலும் திருமணத்தில் பெண்களின் ஒப்புதலைக் கேட்க வேண்டும் என்பதனைச் சுட்டிக்காட்டும் கவிஞர்,

“நல்ல விலை கொண்டு நாயை விற்பார் அந்த நாயிடம் யோசனை கேட்பதுண்டோ?
கொல்லத் துணிவின்றி நம்மையும் அந்நிலை கூட்டி வைத்தார் பழி சுட்டிவிட்டார்”
என்கிறார்.


பெற்றோர்கள் பெண்களுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டால் கடமை முடிந்துவிடுகிறது என்று வரன்களை நன்கு விசாரிக்காமல் திருமணம் செய்து வைத்துவிட்டு மீளாத்துன்பத்தில் மாட்டிக்கொள்கின்றனர். ஆண்டாண்டு காலமாக அடிமைப்பட்டுகிடக்கும் பெண்களுக்கு விடுதலைப் பெற்றுதரப் பாடுபட்டவர் இந்தியாவில் ஏராளம், இல்லாளின் மாண்பைப் போற்றிவந்த வள்ளுவர் ‘பெண்ணிற் பெருந்தக யாவுள?’ எனக் கேட்பதிலிருந்து பெண்ணின் பெருமையை அறிந்து கொள்ளமுடிகிறது.


எல்லாத்துறைகளிலும் கனிமாக உயர்ந்து நிற்கின்ற பெண்களின் பெருமையை அன்றே பாரதி கோடிட்டு காட்டிச் சென்றுள்ளார்....

2 comments:

Divya Pasuram - Vaaranamaayiram - Musical analysis

  Approximately 19 years ago, with chosen verses from Manickavasagam's Thiruvasagam, Raja released an album. Then i wondered how about a...