பாரதியின் ஞானப் பாடல்கள்
பாரதி ஒரு தன்னுணர்வு கவிஞன். இன்று நாம் FBயில் ஒரு பதிவிட்ட பின் பல பேர்களை டேக் செய்கிறோம். லைக்கும் கமெண்டும் வரவில்லையென்றால் சோர்வடைகிறோம். நம்முடைய பதிவு நன்றாக இல்லாவிடினும், யாரவது அதை சொன்னால் கோபம் கொள்கிறோம். ஆனால் பாரதியோ அப்படியல்ல. "எமக்கு தொழில் கவிதை" என்றான். இருந்தும் அவனுடைய கவிதைகளை யார் படிக்கின்றார்கள் என்று கூட அறிய வாய்ப்பற்று போனான். feedback அல்லது பின்னூட்டம் பற்றிய கவலைகள் இல்லாது கவிதை புனைவதையே தொழிலெனக் கொண்டவன். பாராட்டையும் ஏசல்களையும் மறப்போம், யாராவது படிக்கிறார்களா என்று கூட தெரியாத போதும் கவிதை பாடுவதை அவன் நிறுத்தவில்லை. அவனது கவிதைகளை படிக்க படிக்க ஞானம் நம்முள் ஊற்றெடுக்கிறது. ஒவ்வொரு முறையும் புதிய பொருளை உணரும் வண்ணம் அவனது கவிதைகள் புனையப்பெற்றன. அவநதய ஞானப் பாடல்கள் பற்றி கொஞ்சம் பேசுவோம். (அலச என்னிடம் அறிவில்லை).
பாரதி ஒரு பன்முகக் கவிஞன். நாட்டுப் பற்று, மொழி்ப் பற்று, சமயப் பற்று இவற்றிற்கு விரோதமி்ல்லாத வகையில் அனைத்து உலக மக்களையும் அனைத்து மொழிகளையும், அனைத்துச் சமயங்களையும் நேசிக்கும் பண்பு, சொல் புதிது, பொருள் புதிதாய் கவிதை இசைத்தல், பெண் விடுதலை, சமூக நீதிக்குப் போராட்டம் இப்படிப் பல முகங்கள் உண்டு அவருக்கு. பல முகம் கொண்ட பாரதியின் உண்மை முகம் எது? எந்த முகத்தின் அடிப்படையில் மற்ற முகங்கள் அமைந்துள்ளன? வேதங்களின் மீது அவன் கொண்டிருந்த மரியாதை தான் அவனது உண்மையான முகம். அவன் சீர்திருத்தவாதி தான், புரட்சி பேசியவன் தான் அண்ணலும், பழைமையான தனது குல வித்தையாகிய வேதத்தினிடம் மிகுந்த மரியாதை கொண்டவன் என்பது நிதர்சனமான உண்மை.
ரிக் வேதத்தில் வரும் ஒரு புகழ் பெற்ற வசனம், “ஏகம் ஸத் விப்ரா பஹுதா வதந்தி” என்பது. “ஒன்றே மெய்ப் பொருள், அதனை ரிஷிகள் பலவிதமாய்ச் சொல்லினர்,” என்று பாரதி அதை மொழி பெயர்க்கிறார். கீதையில் கண்ணன் கூறுகிறான், “யார் யார் என்னை எந்தெந்த வடிவில் வழிபடுகிறார்களோ அவரவரை அந்தந்த நம்பிக்கையில் நான் நிலைக்கச் செய்கிறேன்.” இவற்றை நன்கு உள்வாங்கிக் கொண்ட பாரதி தன் எழுத்துகளில் வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் இக் கருத்தை வலியுறுத்தத் தவறவில்லை.
“நான் வணங்குவது மட்டுமே கடவுள், மற்ற சமயத்தவர் வணங்குவது பேய், பேய் வழிபாடு செய்வோரைத் திருத்துவது அல்லது அழிப்பது என் கடவுளுக்கு உகப்பானது,” என்போருக்கு பாரதி அறிவுறுத்துகிறார் -
"வேடம்பல் கோடியோ ருண்மைக்குள வென்று வேதம் புகன்றிடுமே- ஆங்கோர்
வேடத்தை நீருண்மையென்று கொள்வீரென்றவ் வேதமறியாதே
நாமம் பல்கோடி ஓர் உண்மைக்கு உள என்று நான்மறை கூறிடுமே- ஆங்கோர்
நாமத்தை நீருண்மை என்று கொள்வீரென்று அந்நான்மறை கண்டிலதே..."
வெவ்வேறு பெயர்களில் வழிபடப்படுபவை வெவ்வேறு தெய்வங்கள் அல்ல. அவை அனைத்தும் ஒரு தெய்வத்தின் வெவ்வேறு வேடங்களே. இதை உணர்த்தும் வேத வசனம், “ப்ர-ஞானம் ப்ரம்ம” (அறிவே கடவுள்) என்பதைப் பாரதி மிக எளிமையாக வெளிப்படுத்துகிறார்.
“ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடிஅலையும் அறிவிலிகாள் - பல்
லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுண்டாமெனல் கேளீரோ”
வேதம் புகழ்ந்த பாரதி அத்வைத சித்தாந்தத்தை அசையாது பின்பற்றினான். “தமிழா, தெய்வத்தை நம்பு. அஞ்சாதே, வேதங்களை. அவற்றின் பொருளைத் தெரிந்து கொண்டு பின் நம்பு. புராணங்களைக் கேட்டுப் பயனடைந்து கொள். புராணங்களை வேதங்களாக நினைத்து மடமைகள் பேசி விலங்குகள் போல நடந்து கொள்ளாதே” என்று அறிவுறுத்திய பாரதி பிரகலாதன் கதைக்குப் புதிய பொருள் தருகிறார்.
ஈசாவாஸ்ய உபநிடதம் கூறும் ‘…எல்லாமே இறைவன் தான்’ (ஈசாவாஸ்யம் இதம் ஸர்வம்) என்ற கருத்தை அதில் காண்கிறார்.
“சொல்லடா ஹரி என்ற கடவுள் எங்கே சொல்லென்று இரணியனும் உறுமிக் கேட்க
நல்லதொருமகன் சொல்வான் தூணிலுள்ளான் நாராயணன் துரும்பிலுள்ளான்
வல்லமைசேர் கடவுளில்லாப் பொருளொன்றில்லை
மகாசக்தி இல்லாத வஸ்து இல்லை
அல்லலில்லை அல்லலில்லை அனைத்துமே தெய்வமென்றால் அல்லலுண்டோ
“கேளப்பா சீடனே கழுதை ஒன்றை கீழான பன்றியினைத் தேளைக் கண்டு
தாளைப் பார்த்திருகரமும் சிரமேற் கூப்பி சங்கர சங்கர என்று பணிதல் வேண்டும்
கூளத்தினை மலத்தினையும் வணங்கல் வேண்டும்
கூடி நின்ற பொருனனைத்தின் கூட்டம் தெய்வம் மீளத்தான்
இதை மட்டும் விரித்துச் சொல்வேன் விண் மட்டும் தெய்வமன்று மண்ணுமஃதே”
யஜுர் வேதத்தின் ருத்ரம் சொல்வது போல் எல்லாமே ருத்ரனின் வடிவம் தான். இந்தக் கருத்தைப் பாரதி பின்வருமாறு பாடினார்.
சுத்த அறிவே சிவமென்றுரைத்தார் மேலோர்;
சுத்த மண்ணும் சிவமென்றே உரைக்கும் வேதம்;
வித்தகனாம் குரு சிவமென்றுரைத்தார் மேலோர்,
வித்தையிலாப் புலையனுமஃதென்னும் வேதம்;
உயிர்களெல்லாம் தெய்வமன்றிப் பிறவொன்றில்லை;
ஊர்வனவும் பறப்பனவும் நேரே தெய்வம்;
பயிலுமுயிர் வகைமட்டுமன்றி யிங்குப் பார்க்கின்ற பொருளெல்லாம் தெய்வம் கண்டீர்;
வெயிலளிக்கும் இரவி, மதி, விண்மீன், மேகம் மேலுமிங்குப்
பலபலவாம் தோற்றங் கொண்டேஇயலுகின்ற ஜடப்பொருள்கள் அனைத்தும் தெய்வம்; எழுதுகோல் தெய்வமிந்த எழுத்தும் தெய்வம்
இதைத்தான் உண்மையோ பொய்யோ என்ற கவிதையில் சொல்கிறார் (நிற்பதுவே நடப்பதுவே என்ற பாடலே அது...)
"சோலையிலே மரங்களெல்லாம் தோன்றுவதோர் விதையிலென்றால்,
சோலை பொய்யமோ, அதை சொல்லோடு சேர்ப்பாரோ...
காண்பதெல்லாம் மறையுமென்றால், மறைவதேல்லாம் காண்பமன்றோ?
வீண்படு பொய்யிலே நித்தம் விதி தொடர்ந்திடுமோ?
காண்பதுவே உறுதி கண்டோம் காண்பதல்லால் உறுதியில்லை,
காண்பது சக்தியாம் இந்த காட்சி நித்தியமாம்.."
அழகு தெய்வம் என்ற மற்றுமோர் பாடலில் (மங்கையதோர் நிலவினிலே கனவினிது கண்டேன்....), அவர் சக்தியை கேட்கிறார்,
"யோகந்தான் சிறந்ததுவோ, தவம் பெரிதோ? என்றேன், யோகமே தவம், தவமே யோகமென உரைத்தாள்
ஏகமோ பொருளன்றி இரண்டாமோ? என்றேன், "இரண்டுமாம், ஒன்றுமாம், யாவுமாம் என்றாள்"
ஏகம் என்றால் ஒன்று என்று பொருள். அத்வைதம் என்றல் இரண்டு அல்ல என்று பொருள். இரண்டு அல்ல என்றால் ஒன்று என்றும் கொள்ளலாம், மூன்று, நான்கு என்று கூட கொள்ளலாம். பாரதி ஏகமோ இரண்டுமோ என்று த்வைதம், அத்வதாம் பற்றி கேட்கிறார். சக்தியோ, இரண்டுமாம், ஒன்றுமாம், யாவுமாம் என்ன்றாள் என்று கூறி எல்லாமே சக்தி மாயம் என்கிறார். மேலும்,
"காலத்தில் விதி மதியை கடந்திடுமோ என்றேன், காலமே மதியினுக்கோர் கருவியும் என்றாள்
ஞாலத்தில் நண்ணியது நல்குமோ என்றேன், நாளிலே ஒன்றிரண்டு பலித்திடும் என்றாள்
ஏலத்தில் விடாவதுண்டோ எண்ணத்தை என்றேன், எண்ணினால் எண்ணியது நண்ணுங்காண் என்றாள்
மூலத்தை சொல்லவோ வேண்டாவோ என்றேன், மகத்திலருள் காட்டினாள் மொகமது தீர்த்தேன்.."
எத்தனை அழகாய் பெரிய தத்துவங்களை எளிமையாக அவரால் கூற முடிகிறது. படிக்க படிக்க ஆர்வம் மேலோங்குகிறது. ஒவ்வொரு புரை படிக்கும் போதும் புது புது அர்த்தங்கள் புலப்படுகின்றது.
No comments:
Post a Comment