இந்த பாடல் மனதை தொடும் பாடல். மனதை மிகவும் பாதிக்கும் பாடல். வலியே சுகம். சுகமே வலி.
படம் வெளிவந்த புதிதில் இந்த பாடலை இரசிக்கும் அளவுக்கு அணைக்கு அறிவில்லை. பின்னாட்களில் இந்த பாடல் என்னைக் கவர்ந்தாலும் இதன் நுணுக்கங்களை அனுபவித்து இரசிக்கும் திறன் வெகு நாட்களுக்கு பிறகே கிட்டியது. படம் ரோசப்பூ ரவிக்கைக்கரி. பாடகர் வாணி ஜெயராம். பாடல்: என்னுள்ளில் எங்கோ எங்கும் கீதம் ஏன் கேட்கிறது...?
தனிமை மிகவும் கொடுமை. தான் விரும்பிய வாழ்க்கை துணை வேண்டி, அது கிடைக்காதபோது, தன்னை வசீகரிக்கக்கூடிய வகையில் ஒருவனைகாணும் போது மனதில் எழும் உணர்ச்சிக்கலவைகளை இசைக்கோர்வைகளாக தந்திருப்பார் இராஜா.
பாடல் ஒரு துந்தனாவுடன் (ஒற்றை தந்தியில் வாசிக்கப் படும் கம்பி வாத்தியம் - இதை ஏக்-தாரா என்று சொல்வார்) தொடங்குகிறது, பாடலின் சந்தர்ப்பம் மிக அவசியம். நகரத்தில் வளர்ந்த பெண், ஒரு கிராம வாசியை மணந்து கிராமத்தில் வாழ ஆரம்பிக்கிறாள். ஒரு நகர வாசியை கண்டு அவன் பால் ஈர்க்கப்படுகிறாள். எல்லை மீறும் தருணம், தடுமாற்றம், குழப்பம்... இந்த தடுமாற்றத்தை ஒற்றை தந்தி வாத்தியத்தின் மூலம், "மெல்ல மெல்ல இரண்டும் கெட்டான் நிலையிலிருந்து வெளிவருகிறாள்..." என்பதை வெளிப்படுத்திகிறார் இசை படைத்தவர்.
ஆர்பீஜியோ என்று சொல்லக்கூடிய ஒற்றை ஸ்வர வரிசைகளுடன் தந்தி இசை துவங்குகிறது. வயலின்கள் பின்னாலே தொடர, (படத்தில் பைக்கின் வேகம் கூட கூட) வயலின்களின் வேகமும் கூடுகிறது. லீட் கிட்டார் மற்றும் சந்தூர் வாத்தியம் கொஞ்சம் எட்டிப்பார்க்கையில், புல்லாங்குழல் (tetrachord - சரோட், வயலின், ஏக்தாரா, சித்தார்), கம்பி வாத்தியங்களின் ஆர்பீஜியோக்களோடு ஒன்றி ஒரு நல்ல மெலடிக்கு வழிகாட்டி நமக்கு ஓர் இசை விருந்தளிக்க விழைகிறது. தந்தி வாத்தியங்களின் சரங்கள் சவால் செய்யப்படாமல் செல்கின்றன, பின்னர் புல்லாங்குழல் பதிவேட்டின் உயர் இறுதியில் வந்து தனிமையில் விளையாடுகிறது, இது தில்ருபாவின் (வட நாட்டு வயலின் என்று கூட சொல்லலாம்) பதிலுக்கு வழிவகுக்கிறது,.
பாடலின் இசை தர்மவதியின் சேய் இராகமான மதுவந்தி இராகத்தை அடிப்படையாகக் கொண்டாலும், தர்மவதியின் ஆளுமை இதில் குறையவே இல்லை. தந்தி வாத்தியங்கள் மற்றும் லீட் கிட்டார்கள் திறம்பட பயன்படுத்துவது, பல்லவியிலேயே எல்லா வகையான மகிழ்ச்சிகரமான மாயைகளுக்கும் வழிவகுக்கிறது. இப்போது தான் பாடலே ஆரம்பிக்கின்றது. அது வரை தாள வாத்தியங்கள் மௌனம் சாதித்திருக்கும். தபலா மெல்ல நடையை துவக்குகிறார்.
முதல் இடை இசை. தந்தி வாத்தியங்களின் சரவெடி. வயலின், சந்தூர் இவைகளின் வினா-விடை தர்க்கம். கிராமத்தின் எல்லை வரை வண்டியில் வந்தாகிவிட்டது. "உங்களுக்கு ஆட்சேபனை இல்லைன்னா..." என்றவுடன், பயம் துளிர் விட்டு, அந்த வேற்று மனிதனை தழுவ கையை கொண்டு போகிறாள். அப்போது நெருப்பு தெறிக்கும் இசை தபலாவின் ஒற்றை தாளத்துடன் ஆரம்பிக்கிறது. தந்தி வாத்தியங்கள் வயலினும் சந்தூரும் சரம் சரமாய் ஒன்றோடு ஒன்று ஒற்றுமையுடன், அலங்காரத்துடன், சொற்றொடருடன் விளையாடிக்கொண்டே crescendo என்று சொல்லப்படும் பிறை வடிவில் மேலிருந்து சறுக்கி அதே வேகத்தில் மறுபடியும் மேலே ஏறுவதற்கு ஸ்வரக்கட்டமைப்பு பிரமாதம். ‘ஸ க ம ப க ப ம ப க" என்றும் பஞ்சமத்திலிருந்து காந்தாரத்திற்கு சறுக்கியவாறு வரும் சந்தூரின் கமகம் அடடா... அற்புதம். குழல் இங்கு சேர்ந்து வேறு விதமான விடை தருகிறது. சரணத்தில் ‘என் மனம் கங்கையில்...’ என்று ஆரம்பித்து ஒரு ஆலாபனை......இதை bridging என்று சொல்லப்படும். அதாவது வார்த்தைகள் இல்லாத இல்லாத இடத்தை வெறும் ஆலாபனையால் நிரப்பும் யுக்தி - அலாதி.
அழகான இடம் இருக்கு.. ஆட்சேபனை இல்லேன்னா... இப்படி படி படியாய் படி தாண்டுவதை - மகிழ்ச்சி, பயம், தயக்கம், தடுமாற்றம், ஆர்வம் - இப்படி பட்ட உணர்ச்சிக்கலவையில் சிக்கிய கதாநாயகியின் மன உளைச்சலை இசை நமக்கு சொல்கிறது.
சிக்கலான பாடல், உணர்ச்சிக்குவிப்பை வெளிப்படுத்தவேண்டும், மேலும் கீழுமாய் ஸ்வரஸ்தானங்கள் (octaves), பாடல் பாடுபரிடமிருந்து நிறைய வேலை வாங்குகிறது, பாடகரும் அதை அனாயாசமாக குறைவின்றி செய்து முடிக்கிறார். தயக்கம், உற்சாகம், பயம், கொந்தளிப்பு, காதல், காமம், படபடப்பு, துடிதுடிப்பு, மகிழ்ச்சி, தடுமாற்றம், ஆர்வம், குற்ற உணர்ச்சி - இப்படி பட்ட உணர்ச்சிக்கலவையில் சிக்கிய கதாநாயகியின் மன உளைச்சலை இசையால் சொன்னாலும் அதை இன்னமும் மெருகேற்றுவது வாணியம்மாவின் குரல். சிக்கலான பாடல், உணர்ச்சிக்குவிப்பை வெளிப்படுத்தவேண்டும், மேலும் கீழுமாய் ஸ்வரஸ்தானங்கள் (octaves), பாடல் பாடுபரிடமிருந்து நிறைய வேலை வாங்குகிறது, பாடகரும் அதை அனாயாசமாக குறைவின்றி செய்து முடிக்கிறார்.
இரண்டாவது இடையிசையில், கீபோர்ட், ஓபோ மற்றும் புல்லாங்குழலுக்கும் இடையிலான உரையாடல், தந்தி வாத்தியங்களின் இசைமஞ்சத்தின் மீது அமைவது அழகு என்றால், ஷட்ஜமத்திலிருந்து, நிஷாதத்திற்கு வருவது ஒரு அற்புதம். இதில் இன்னொரு அற்புதம் - கிரஹபேதம். (3:05 - 3:15) தர்மவதி இராகத்தை இரஷப ஸ்வரத்தில் ஆதாரமாய் கொண்டு பாடினால் அது சக்ரவாஹம் ஆகும். மூன்றாவது முறை குழல் கேள்வி கேட்கும் போது ஸ்ருதி மாறி சக்ரவாஹத்தில் ஒலிக்கும். அதாவது, நாயகி தடம் புரண்டு போவதை இதன் மூலம் சொல்கிறார் ராஜா. (Transpose என்று சொல்லக்கூடிய ஒரு பிரயோகம்). இங்கிருந்து மறுபடியும் கொஞ்சமும் பிறழாமல் தர்மவதிக்கு வருவது - என்னென்று சொல்வது? இப்போது சித்தார் எங்கிருந்தோ வந்து சந்தூருடன் கூடி குலவி இந்த இடை இசையை ஓர் இறுக்கமான உச்சத்திற்கு கொண்டு செல்வது ராஜாவின் கைவண்ணம். இது முடியும் பொது அந்த பெண் தன்னை பூரணமாக அவனிடம் ஒப்படைக்க தயாராகிவிடுகிறாள்.
இந்த படம் ஒரு period படம். கதையின் கால கட்டத்திற்கு ஏற்ப பமைந்த இசை. பாடலின் செழுமை என்பது திரைப்படத்தின் பின்னணிக்கு முரணானது, விலை மதிப்பில்லாத பாடல். Luxury in composition என்று கூட சொல்லலாம்.
இந்த படம் ஒரு period படம். கதையின் கால கட்டத்திற்கு ஏற்ப பமைந்த இசை. பாடலின் செழுமை என்பது திரைப்படத்தின் பின்னணிக்கு முரணானது, விலை மதிப்பில்லாத பாடல். Luxury in composition என்று கூட சொல்லலாம்.
இளையராஜாவின் மற்ற தர்மாவதி இராகத்தில் இசையப்பெற்ற பாடல் விக்ரம் படத்தின் மீண்டும் மீண்டும் வா, அதை பற்றி பின்னர் பார்க்கலாம். தர்மவதி ஒரு ப்ரதி மத்தியம இராகம். சுத்த மத்தியம இராகத்தில் இதன் இணை கௌரிமனோஹரி. இதில் வரும் ஒரு பாடல், "பொன் வானம் பன்னீர் தூவுது இந்நேரம்..." இரண்டையும் ஒரு நாள் அலசுவோம் உங்களுக்கு விருப்பமிருந்தால்..
No comments:
Post a Comment