Wednesday, 8 November 2023

ஆனந்த ராகம்

 

ஆனந்த ராகம்



1981 - 12 வயது பிராயம். இரவு நேரங்களில் வண்ணக்ச்சுடர் எனும் நிகழ்ச்சியினை தொடர்ந்து வரும் விளம்பர தாரர்கள் அளிக்கும் நிகழ்ச்சி. புதிதாய் வெளியி வரும் திரைப்படங்களின் விளம்பரம். அப்பொழுது இந்த பாட்டை கேட்டவாறே தூங்குவது ஒரு இன்பம். அப்போது இந்த பாடலுக்குள் இவ்வளவு விஷயங்கள் இருந்ததை கவனிக்கும் அறிவு இல்லாது போனது. இந்த பாடல் ஒரு "இசையமைப்பின் அற்புதமாக" வகையறுக்க முடியாது, ஆனால், எளிய விஷயங்களை நன்றாக வழங்கினால், எப்படி ஒரு பிரமிக்கவைக்கும் படைப்பாக அதை மாற்றமுடியும் என்பதற்கான ஒரு எடுத்துக்காட்டு தான் இந்த பாடல். இந்தப்பாடலின் முன்னிசையே ஒரு பிரம்மாண்டம் எனலாம். எதுத்த எடுப்பிலியே வேகம் உச்சத்தை தொடும்.


ராஜா, செபாஸ்டியன் பாக் இசையால் மிகவும் ஈர்க்கப்பட்டவர். பாக்கின் இசை அறிவார்ந்தமானது, ஒன்றுடன் ஒன்று மெல்லிசை வரிகளால் மூடப்பட்டிருக்கும், மேலும் சில சமயங்களில், முதலாவது முறை கேட்கும் போது, கேட்பதே சவாலாக இருக்கும். 100வது முறை கேட்கும்போது கூட, நீங்கள் இன்னும் புதிதாய் அதில் சில நுணுக்கங்கள் புதைந்திருப்பதை கண்டெடுப்பீர்கள். ராஜாவின் இசை கூட அப்படியே. சாய்கோவ்ஸ்கியை பொறுத்தவரை "ஸ்டைல்" (பாணி) என்ற வார்த்தையின் கட்டத்துக்குள் வரமாட்டார். அவரது இசையை கேட்கும்போது அவர் ஒரு கதையைப் பற்றி பேசுவது போல் தெரியும், மேலும் இந்த கதைகள் ஒரு நல்ல கதையைப் போல எல்லா இடங்களிலும் துள்ளி குதிக்கும். இந்தப்பாடலில் ஒரு வரி வரும் - "இந்த மனம் எங்கெங்கோ சென்று வரும்...." இந்த வரி தான் இந்தப்பாடலின் இசைஅமைப்பிற்கான உயிர் மூச்சு, முதுகெலும்பு எனலாம். இசை கூற்றுக்கள் - ஸ்வரக்கோர்வைகள், எங்கெங்கோ செல்வதோடு மட்டுமல்லாது நம்மையும் எங்கெங்கோ கொண்டு செல்லும். கர்நாடக சங்கீதம், மேற்கத்திய இசை, நாட்டுப்புறம் என எல்லாவற்றையும் ஒரு கலவையாய் வழங்கியிருப்பர் ராஜா. எங்கெங்கெல்லாமோ செல்வார். பாப்போம்.


சைக்கோவ்ஸ்கியின் ஸ்வான்லேக் எனும் பாலே இசையும், பீத்தோவனின் ஐந்தாவது ஸிம்போனி (C மைனரில்) யும் கலந்து அதில் ஈர்க்கப்பட்டு இசையப்பெற்றதே இந்த முன்னிசை. சிம்மேந்திரமத்தியம இராகத்தில் இசையை பெற்ற பாடல். இந்த ராகம், கமபீரம், த்யானம், ஆளுமை, ஆகிய உணர்வுகளை வெளிப்படுத்தும் இராகம். இந்த இராகம், கீரவாணி இராகத்தின் பிரதிமதியம இணையான இராகமாகும். ஆகையால், ஹார்மனிக்கும் உகந்த இராகம் இது. ஸ்வரங்களை அடுக்கடுக்காக அமைத்துக்கொண்டே போகலாம், சளைக்கவே சளைக்காது.


வாலிப வயது. எதிர் பாலினத்தின் மீதான ஈர்ப்பு மிகவும் சுறுசுறுப்பாக உள்ளது. இந்த வயதில், அளவுகடந்த சக்தி, வேகம்,ஆற்றல், உற்சாகம், இன்பம், சந்தோஷம், மற்றும் என்ன இல்லை? ஒருவர் தானே அனுபவிக்கும் வரை மற்றவர்களின் பேச்சைக் கேட்காத வயது இது. எல்லா செயல்களையும் முடிவுகளையும் உணர்ச்சிகள் முறியடிக்கும். உணர்ச்சிகள் கொப்பளிக்கும் வயது அது. முன்னிசை இதைத்தான் விளக்குகிறது. உணர்ச்சிகள் வெளிப்படும் போது, தந்தி வாத்தியங்களின் கூட்டிசை ஒரு பேரிடியுடன் தொடங்குகிறது. மலையிலிருந்து புறப்படும் ஒரு சுனையானது கீழே விழுந்து, ஒரு ஓடையாய் பாய்ந்து செல்லும், தன கறைகளை உடைத்துக்கொண்டும், கற்களை உருட்டிக்கொண்டும், மரம் செடிகளை பெயர்த்தெடுத்து தன்னோடு அழைத்துக்கொண்டும், காடு கழனிகளை வளப்படுத்திக்கொண்டும் ஓடுவது போல், தங்கு தடையின்றி, முன்னிசை சக்கை போடு போடுகிறது. 27 வினாடிகள், இசையின் மூலம் உணர்ச்சிகள் வெடித்து சிதறும் நிகழ்ச்சி...


பத்து வினாடிகள் தந்தி வாத்தியங்களின் ஓட்டம் அட்டகாசம், சிறிது சலிப்படைந்தாற்போல் உணர்ந்ததும், புல்லாங்குழல் உற்சாகப்படுத்த வரும். நான்கு வினாடிகள் கழித்து மணியோசை...அடுத்த 13 வினாடிகள், தந்தி வாத்தியங்கள், குழல், மற்றும் மணியோசை தத்தம் வழியில் இசை பயணம் கொண்டு, நமக்கு ஒரு பஞ்சாம்ருத கலவையாய் இனிப்பூட்டும்....


திஸ்ர நடையில், சிம்மேந்திரமத்தியமத்தில், தார ஸ்தாயியில், காந்தாரத்தில் கா..ரிஸ.நி ... என்று துவங்குகிறது பாடல். இதுகாறும் தாள வாத்தியங்கள் மௌனித்திருந்தது. பாட ஆரம்பித்ததும், டிரம்ஸ் (rim மற்றும் stick, -hi-hat) பின்பலமாய் ஒலிக்கும். தந்தி வாத்தியங்கள் சன்னமாக தேவதைகிளின் நாட்டியமாய்... "ஆயிரம்..." என்று பாடியதும், குழல் பின்னணியில் (lead flute) பதபமகரிஸ் என்று பதில் கொடுப்பது சுகம். "கேட்கும் காலம்..." என்று பாடும் பொது, பதநீத, தநீஸநீ, என்று அலங்கார பாணியில் அடுக்கடுக்காய் ஸ்வரங்கள்.. உடனே, "ஆயிரம்... ஆசைகள்..." என்று பாடும் பொது, பதபமகரிஸ் என்று சங்கதி.... ஸ்ரிகரி, ரிகமக, கமபம, மபதப, தநிசரி கா..ரிஸ் ...ஸ்வரங்கள் அடுக்கடுக்காய் பாடி தாரஸ்தாயியில் பாட ஏதுவாய் தநிஸ்ரி... என்ற ஸ்வரங்களை கோர்த்து (இதை மேற்கத்திய இசையில் bridging என்பர்) அதிர்ச்சி அளித்துள்ளார்.


முதலாம் இடையிசை: ஓபோ (Oboe) என்று சொல்லக்கூடிய இரட்டை நாணல் புல்லாங்குழல் (மரகாற்றுகருவி) ஓளியுடன் துவங்கும் இடையிசை. இதன் பின்னணியில், சிந்தசைஸர் மூலம் மணியோசை மற்றும் தாள வாத்தியம் அருமை. 74ம் வினாடியில் தந்தி வாத்தியங்கள் (செல்லோ மற்றும் வயலின்கள்) இப்போது உரையாட ஆரம்பிக்கும். 77ம் வினாடியில் ஷெனாய் கூட்டு சேரும். பத்து வினாடிகள் கழித்து தபலாவும், டோலக்கும் தாளம் போடும், (இது வரை இவை இருப்பை சொன்னதில்லை). 6 வினாடிக்கு பின், ஷெனாயும், தாள வாத்தியங்களும் காணாமல் பொய் செல்லோவும் வயலின்களும் கூட்டிசைக்கும்.


இரண்டாம் இடையிசை: 152ம் வினாடி முதல் துவங்கும். அதே இசைக்கருவிகள் தாம். ஆனால், பின்னால் வரும் சரணத்தில் ஒரு வரி, "இந்த மனம் எங்கெங்கோ சென்று வரும்..." என்று கங்கை அமரன் எழுதிருந்ததால், இசையும் எங்கெங்கேயோ செல்லும். சுமார் 8 வினாடிகள் கழித்து தந்தி வாத்தியங்கள் பின் வாங்க, ஓபோ தனது சாம்ராஜ்யத்தை ஆரம்பிக்கும். இப்போது, சிம்மேந்திரமத்தியமத்தை விட்டுவிட்டு எங்கோ போய்விடுவார் இசை அமைப்பாளர். 16 வினாடிகள் தாம். scale மாறாது மேற்கத்திய பாணியை கைவிடாது அதே சமயம், கேட்பவர் மனம் கோணாது (இராகம் மாறும், ஸ்ருதி மாறும்) ஒரு தடையற்ற மாற்றம்... ஆஹா அற்புதம். 178ம் வினாடி மறுபடியும் சிம்மேந்திரமத்தியமம்... அலாதி.


கர்நாடக ஸங்கீதம், நாட்டுப்புற வாடை, மேற்கத்திய பாணி என்று ஒரு கலவையை அளித்திருப்பார். ஒரு வகை திசையிலிருந்து மற்றோர் வகைக்கு தாண்டுவது தெரியாது தாண்டிய விதம் அற்புதம். இசை அறியாதவர்கள் பல்வேறு இடங்களை பார்த்த பரவசம் அடைவார்கள். இசை நுணுக்கம் அறிந்தவர்கள் இந்த தடையற்ற மாற்றத்தை கொண்டாடுவார்கள். இன்னும் நிறைய சொல்லலாம், ஆனால் பொறுமை இல்லை....
என்னே ஒரு அற்புதம்.... ஆனந்த ராகமே....ராஜாவின் ராகமே.....


No comments:

Post a Comment

Divya Pasuram - Vaaranamaayiram - Musical analysis

  Approximately 19 years ago, with chosen verses from Manickavasagam's Thiruvasagam, Raja released an album. Then i wondered how about a...