வங்கக்கடல் கடைந்த!
திருப்பாவை முழுவதும் பாவை நோன்பின் அனுஷ்டானமாக, ஆய்க்குலத்தில் அவதரித்த சிறுமியர் சிலர் உறுதியுடன் சங்கல்பம் செய்து, முதலில் பரமாத்மாவை சரணடைந்து அவன் திருக்குணங்களையும் திருப்புகழையும் பாடுகின்றார்கள். அதன்பின், ஒருவரொருவராக அல்லாது, சமூகவாய்ந்த பாகவத ஸங்கமாகத் தோழிகளை எழுப்பி ஒன்றுகூடுகின்றார்கள்.
அவ்வாறு தோழிகளுடன் கூடிச் சென்றபின், நந்தகோபன், யசோதை, நப்பின்னை பிராட்டி முதலியோரை எழுப்பி, அவர்களது அனுக்ரஹத்துடன் நந்தகுமாரனாகிய கண்ணனை எழுப்புகின்றார்கள். எழுந்த கண்ணனிடம், “எங்களுக்கு பறை அருளவேண்டும்; அதனுடன் நோன்புக்குரிய சன்மானங்களையும் தந்தருள வேண்டும்” என்று வேண்டுகின்றார்கள்.
ஆனால் அவன் அருளை வழங்கத் தொடங்கியவுடன், “பறை ஒன்றே எங்களுக்குப் போதுமானது அல்ல; எப்போதும் உன்னோடு நிரந்தர சம்பந்தத்தில் நிலைபெற வேண்டும்; உனக்கு எந்த விதமான கவனச்சிதறலும் இல்லாமல் நிரந்தர கைங்கர்யம் செய்ய வேண்டும்; அதுபோலவே, எங்களில்லாமல் நீயும் இருக்க இயலாது என்பதையும் நாங்கள் அறிவோம்” என்று தங்களது பரமப்ராப்தி அபிலாஷையை வெளிப்படுத்துகின்றார்கள்.
இவ்வாறான இக் கிருஷ்ண லீலாநாடகத்தைப் போல அமைந்த திருப்பாவையின் இறுதிப் பாசுரம், இதனைப் படித்து, கேட்டுப் பாடி, அனுபவிப்பவர்களுக்கு உண்டாகும் பலனை எடுத்துரைக்கும் பலசுருதிப் பாசுரமாகும். மேலும், இதில் ஆண்டாள் தேவியின் திருநாமமும், பெரியாழ்வாரின் திருநாமமும் வெளிப்படையாகச் சொல்லப்படுவதால், இப்பாசுரம் “திருநாமப் பாசுரம்” என வைஷ்ணவ சம்பிரதாயத்தில் அழைக்கப்படுகிறது.
இவ்விதமாக, காவிய மரபிற்கேற்ப இறுதி பாசுரத்தில் கோதாதேவி தம் திருநாமத்தையும், தம் குலப்பிறப்பையும், தாம் அருளிச் செய்த இப்பணியின் தன்மையையும் சுருக்கமாக வெளிப்படுத்துகின்றாள். மேலும், இப்பாசுரம் முழுவதையும் அனுசந்திப்பதால் கிடைக்கும் பரம பயனையும் இச்சரம பாசுரம் விளக்குகிறது. அதாவது, இத்திருப்பாவையை எளிமையாக அனுசந்திப்பவர்களும் கூட, இவ்வுலகத்திலும் மறுவுலகத்திலும், கருணைமிகு எம்பெருமானும் அவன் திருக்காருண்ய சக்தியான ஸ்ரீமஹாலக்ஷ்மீ தேவியும் பரிபூரண அனுக்ரஹத்தைப் பொழிவார்கள் என்பதே இதன் தாத்பரியம்.
இத்திருப்பாவையை முறையாகக் கற்றோ, பக்தியுடன் பாராயணம் செய்பவர்க்கு, தாமே கோபிகையாக இருந்து நோன்பினை அனுஷ்டித்ததற்குச் சமமான பலன் உண்டாகும் என்றும் வ்யாக்யானகாரர்கள் விளக்குவர். இவ்விஷயத்தில் பட்டர் ஸ்வாமி அடிக்கடி உபதேசித்த உவமையொன்று உண்டு: பசுவானது உயிரற்ற புல்லால் நிரப்பப்பட்ட கன்றின்மீதும் தன் உயிருள்ள கன்றின்மீது காட்டும் அதே கருணையுடன் பாலைச் சொரியும்; அதுபோலவே, ஆண்டாள் தேவியின் அனுகாரத்தைக் கைக்கொள்ளும் சக்தியும், கோபிகைகளின் அனுஷ்டானத்தை முறையாகச் செய்யும் ஆற்றலும் நமக்கில்லையாயினும், பரமாத்மா தன் கருணையை நம்மீதும் சமமாகப் பொழிவான் என்பதே இப்பாசுரத்தின் அநுபவ ரகசியமாகும். (தூ மாஜி மாவுலி... என்ற அபங்கத்தில் துக்காராம் மகாராஜ் இதையே சொல்கிறார்.
“வங்கக் கடல் கடைந்த மாதவனை”: இங்கு கோதாதேவி, தேவர்கள் அமுதம் பெறும் பொருட்டு பாற்கடலைக் கடைந்த நிகழ்வை நினைவூட்டுகிறாள். அந்தச் சமயத்தில் பாற்கடலிலிருந்து ஸ்ரீமஹாலக்ஷ்மி பிராட்டி அவதரித்து, எம்பெருமானால் நித்யபத்னியாக ஏற்றுக்கொள்ளப்பட்டாள். பரமன் வங்கக்கடலை கடைந்தது தேவர்களுக்கு அமுதம் எடுத்துத் தர மட்டுமல்ல, தனக்குரியவளான திருமகளையும் மீட்டெடுத்து தன் திருமார்பில் தரித்துக் கொள்ளவும் தான். வெளிப்படையாக அது பாற்கடல் கடைதலாகத் தோன்றினாலும், உள் பொருளாக அது பக்தி என்னும் மத்துகோலால் மனம் என்னும் கடலைக் கடைந்து, பிரேமபக்தி மற்றும் கைங்கர்யானந்தம் என்னும் அமுதத்தைப் பெறுதலே ஆகும்.
அக்கடலில் தோன்றும் கப்பல்கள், ஸம்ஸார சாகரத்தில் அலைக்கழிக்கப்படும் ஜீவர்களைச் சுட்டுகின்றன. அந்தக் கரை கடக்க, பரமாத்மாவே நாவிகனாக வேண்டுமென்பதையும் இது உணர்த்துகிறது. “பாற்கடலில் கப்பல்கள் ஏன்?” எனில், அவை ச்வேதத்வீப வாசிகளின் பயணத்திற்காக இருந்திருக்கலாம்; அல்லது கடைதலின் போது எழுந்த மலைகளும் அலைகளும் கப்பல்களைப் போல் தோன்றியிருக்கலாம்.
அன்றைக்கு தேவர்களின் பொருட்டு இவ்வளவு பெரும் காரியத்தைச் செய்த எம்பெருமான், தம் அந்தரங்க பக்தர்களான நம்முடைய அபிலாஷையை ஏன் நிறைவேற்றமாட்டான்? அன்றைய கடைதல் தெய்வீக தாயை அடைவதற்கான ஒரு பாவனை; இன்றைய நோன்பு, கோபிகைகள் அவனுடைய திவ்ய கைங்கர்யத்தை அடைவதற்கான ஒரு பாவனை. அந்தக் கடைதலின் பயன் “மாதவன்” ஆகுதல்; அதுபோல இந்நோன்பின் பயன் அவனுடைய நித்திய சேவையை அடைவதே. ஜீவர்கள் எம்பெருமானை அடைய தெய்வீக தாயின் புருஷகாரமே அத்தியாவசியம்; ஆகையால் அவள் எப்போதும் எம்பெருமானுடன் இருப்பதே நமக்கு மிகப்பெரிய வரமாகும்.
“கேசவனை”: பரமபதநாடிப்பாடியில் (இரண்டாம் பாசுரத்தில்) எம்பெருமானின் திருவடியில் தொடங்கிய கோபிகைகள், இங்கே அவன் திருமுடிவரைப் போற்றி நிறைவுசெய்கின்றார்கள். அவனுடைய திவ்ய கேசம், அவன் பிராட்டிகளாலும் ரசிக்கப்படும் அழகுடையது. பாற்கடல் கடைந்தபோது அவன் கேசக்குழல் அசைந்த காட்சி தெய்வீக தரிசனமாக இருந்தது. கேசி என்ற அசுரனை அழித்ததன் மூலம் நம் தடைகளையும் நீக்க வல்லவன் என்பதை “கேசவன்” என்னும் நாமம் உணர்த்துகிறது. மேலும், பிரம்மா–ருத்ராதிகளுக்கும் மேற்பட்ட பரத்துவத்தையும் இந்நாமம் சுட்டுகிறது.
கேசவா மாதவா என்பது சொல்நடை. ஆனால் இங்கு மாதவனை, கேசவனை என்று சொல்லி, மாதவனை முதலில் சொல்கிறார் கோதாபிராட்டி. திருப்பாற்கடலை மந்தாரமலையினை அச்சாகவும், வாசுகி பாம்பினைக் கயிறாகவும் கொண்டு கடைந்தனர். அப்போது மந்தாரமலை கீழ்நோக்கி இறங்கப் பெருமாள் கூர்ம (ஆமை) அவதாரம் எடுத்து உதவினார் .
அப்படி தேவர்களும் அசுரர்களும் கடைந்த போது அதிலிருந்து பல பொருட்கள் வெளிவந்தது. ஆலகாலம் விஷம், கற்பக விருட்சம், ஐராவதம், உச்சைசிரவஸ் (இந்திரனுடைய யானை, குதிரை) பாரிஜாத மரம், தன்வந்தரி, அமிர்தம் வந்தது. இன்னொரு முக்கியமானவர் வந்தார் அவர் - மஹாலக்ஷ்மி. அவர் வந்தவுடன், விஷ்ணு மஹாலக்ஷ்மியை தமது மார்பில்(ஸ்ரீ வக்ஷஸ்தலம்) அணைத்துக் கொண்டார். ஆகா அவர் மாதவன் ஆகிறார்.
நீங்களே பார்த்திருப்பீர்கள். வீட்டு வேலையை ஆரம்பிக்கும் முன் பெண்கள் கூந்தலை இழுத்து முடிந்து டைட்டாக கொண்டை போட்டுப்பார்கள். நம் விஷ்ணுவும் அதே போல மந்தார மலையைத் தாங்க செல்லும் முன், “மை வண்ணம் நறு குஞ்சி குழல் தாழ” என்று திருமங்கை ஆழ்வார் அனுபவிக்கும் கூந்தலை நன்றாக முடிந்துகொண்டு சென்றார். தாம் செய்துகொண்டிருந்த காரியத்தில் ஈடுபட்டிருந்ததால் கேசம் கலைந்தது கூட தெறியாதிருந்தார். மஹாலக்ஷ்மியை மார்பில் அணைத்தவுடன் கேசத்தை முடிந்தார்.. எனவே மாதவனுக்கு பிறகு கேசவன்...
“திங்கள் திருமுகத்து செயிழையார் சென்று இறைஞ்சி”: கோபிகைகளின் திருமுகம், எம்பெருமானின் சங்கதியால் பூர்ணசந்திரனைப் போல ஒளிவிடுகிறது. அவர்கள் அழகிய ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளனர்; ஏனெனில் 27-ஆம் பாசுரத்தின்படி, அவை நப்பின்னை பிராட்டியாலும் ஸ்ரீகிருஷ்ணனாலும் அருளப்பட்டவை. இவ்வாறு பரமப்ரீதியுடன், அன்பும் பக்தியுமாகக் கண்ணனை அணுகி வணங்குகின்றார்கள். திருப்பாவை ஆரம்பத்தில் “கதிர் மதியம் போல் முகத்தான்” என்று உவமை சொன்ன ஆண்டாள் இதில் ”திங்கள் திருமுகத்து” என்கிறார். இந்த ஒரு பாசுரம் தவிர, திருப்பாவையில் எங்குமே ”திருமுகத்து” என்ற பிரயோகம் கிடையாது. லட்சுமி மார்பில் வந்த பிறகு உவமையும் கிடையாது. பெருமாளின் முகம் திங்கள் ‘திரு’ முகத்தானது.
“அங்கப் பறை கொண்ட ஆற்றை”: அங்கே அவர்கள் தம் இலக்கை—பறை என்று சொல்லப்படும் நித்திய கைங்கர்யத்தை—எவ்வாறு அடைந்தார்கள் என்பதைக் குறிப்பதாகும்.
“அணி புதுவை பைங்கமலத் தண் தெரியல் பட்டர்பிரான் கோதை”: இங்கே “பட்டர்பிரான்” என்பது விஷ்ணுசித்தர் எனப்படும் பெரியாழ்வாரைக் குறிக்கும். பாண்டியராஜ சபையில் வைணவ பரத்துவத்தை நிலைநாட்டியதாலும், ஸ்ரீவில்லிபுத்தூரில் வடபத்திரசாயி கிருஷ்ணனுக்குத் தினமும் மாலைகள் செய்த கைங்கர்யத்தாலும் அவர் இப்பெயரைப் பெற்றார். குளிர்ந்த, புதிய தாமரைமாலையால் அலங்கரித்தல், அவரது கைங்கர்யத்தின் சின்னமாகும்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஒரு அதிசய தலம்—அங்கே பரமாத்மா, தெய்வீக தாய் (ஆண்டாள்), ஜீவாத்மா (கருடாழ்வார்) மூவரும் ஒரே மேடையில் தரிசனம் தரும் பெருமை உடையது.
“கோதை சொன்ன”: கோபிகைகளின் மன வேதனைகளையும் பரவசங்களையும் அனுபவித்து நிறைவு பெற்ற ஆண்டாள் அருளிச்செய்த பாடல்கள் என்பதால், இவை குற்றமற்றவை. வேதங்கள் ஸ்வயம்பூவாகத் தோன்றினாலும், திருப்பாவை கோதையின் திருநாவிலிருந்து தோன்றியதால், அனுபவ ரீதியில் வேதங்களுக்கும் மேலான சிறப்பை அடைகிறது. க்ஷீராப்திநாதனைவிட ஸ்ரீகிருஷ்ணன் பரமபுருஷன் என்பதும் இவ்வழி உணர்த்தப்படுகிறது.
“சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே”: எவ்வாறு உலகத் தாய் ஆண்டாளாக அவதரித்தாளோ, அவ்வாறு உபநிஷத்துக்கள் திருப்பாவையாக அவதரித்தன. “மாலை” என்பது இப்பிரபந்தத்தின் சௌந்தரியத்தையும் ஸ்தோத்திரத் தன்மையையும் குறிக்கும். கண்ணன் கோதைக்கு ஒரு மலரையே தந்தான்; ஆனால் கோதை அவனுக்கு முப்பது பாடல்களைக் கொண்ட மாலையை அளித்தாள். மாலையில் ஒரு மணி இழந்தாலும் அழகு கெடும் போல, ஒரு பாசுரம் கூட விடுபட்டால் திருப்பாவையின் ரசம் குறையும். பொருளறியாமலே ஒருமுகச்சித்தத்துடன் ஓதினாலும் கூட, எம்பெருமானின் அருள் கிடைக்கும் என கோதை உறுதிப்படுத்துகிறாள்.
இது தனிமையில் அல்ல, சங்கமாக அனுபவிக்க வேண்டியது. கடினமான சம்ஸ்கிருதத்தில் அல்ல; எளிய, செம்மையான தமிழில், முப்பது பாசுரங்களாக அருளப்பட்டது.
“இங்கிப் பரிசுரைப்பார் ஈரிரண்டு மால் வரை தோள் செங்கண் திருமுகத்து”: இன்றும் ஆண்டாள் பாசுரங்களை ஓதுவோர், நான்கு மலைபோன்ற தோள்களும், செந்நிற கண்களும், அழகிய திருமுகமும் உடைய எம்பெருமானின் திருவருளைப் பெறுவார்கள். பக்தர்களுடன் பரவசம் கொண்டபோது அவன் தோள்கள் பெருகுவது போல விரிகின்றன. கிருஷ்ணாவதாரத்தில் பகைவர்கள் அவனை இரு கைகளுடன் கண்டனர்; ஆனால் கோபிகைகள், அர்ஜுனன் போன்ற அந்தரங்க பக்தர்கள் அவனை நால்கைகளுடன் அனுபவித்தனர். அவன் செங்கண்கள் ஆனந்த நிறைவின் அடையாளம். "ஈரிரண்டு மால்வரைத்தோள்" என்று ஆண்டாள் சொன்னதில் ஒரு சுவை இருக்கிறது! அதாவது, திருப்பாவையைத் தப்பாமல் உரைக்கும் அடியவரை, இரு கைகள் போதாது என்று பரந்தாமன் தனது நான்கு கைகளால் அரவணைப்பானாம்!
“செல்வத் திருமாலால்”: எம்பெருமானின் செல்வம் உபய விபூதிகளாகிய லீலாவிபூதி, நித்யவிபூதி. மேலும் அவன் செல்வத்தின் தேவியான மகாலக்ஷ்மியின் நாதன்; அவளுக்கே அவன் செல்வமாக இருப்பவன். அது போலவே, "திருமுகத்துச் செல்வத்திருமாலால்" என்று சொல்லும்போது, திரு(மகளின்) சம்பந்தத்தாலேயே பரமன் செல்வத் திருமால் ஆகிறான் என்பதை உணர்க! ஆக, திருப்பாவை ஓதும் அடியவர் லட்சுமி கடாட்சம் பெற்று இன்புறுவர்.
“எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர்”: இவ்வுலகிலும் மறுவுலகிலும், எங்கும் எப்போதும் எம்பெருமானின் திருவருளைப் பெற்று, நித்தியானந்தத்தை அனுபவிப்பார்கள்.
ஸ்ரீகிருஷ்ணன்–ஆண்டாள் திவ்ய ஐக்யத்தை மனக்கண்ணால் அனுபவிப்பதே நமக்குக் கிடைக்கும் பேரின்பம். அதனாலேயே, இந்நாளில் ஆண்டாள்–ரங்கநாதன் (கிருஷ்ணன்) திருக்கல்யாணம் அனைத்துத் திவ்யதேசங்களிலும் பாரம்பரியமாகக் கொண்டாடப்படுகிறது.
ஸ்ரீமஹாவிஷ்ணு, பாற்கடலைக் கடைந்தபோது, அக்கடலில் இருந்த கப்பல்களுக்கு எவ்வித அசைவோ, சலனமோ உண்டாகாதபடி அதி அதிசயமான முறையில் கடைதலை நிகழ்த்தினான். மந்தார மலை மத்துகோலாகவும், வாசுகி நாகம் கயிறாகவும் இருந்து, தன் பரமசக்தியால் கடைதலை நிறைவேற்றி, ஸ்ரீமஹாலக்ஷ்மி பிராட்டியைத் தன் நித்யபத்னியாக அடைந்தான்.
அதேபோல, இப்போது எம்பெருமான் “ஸம்ஸார சாகரம்” எனப்படும் வாழ்க்கைக் கடலைத் தன் அபார கருணையால் கடைந்துள்ளான். இதில் சேதனனான ஜீவனின் சரீரத்திற்கு எவ்விதக் கிளர்ச்சியும், துன்பமும் ஏற்படாதபடி, தன் ஸங்கல்பத்தையே மத்துகோலாகவும், தன் திருவருளையே கயிறாகவும் கொண்டு, ஸ்ரீமஹாலக்ஷ்மியைவிடவும் அரிய பொருளான ஜீவாத்மாவையே தன் அடைவாகப் பெற்றான். இது எம்பெருமானின் ஜீவகருணையின் உச்சநிலையை வெளிப்படுத்துகிறது.
அவ்வாறு, ஞானம், பக்தி, வைராக்யம் ஆகியவற்றால் ஒளிவிடும் முகங்களை உடைய எம்பெருமானின் பக்தர்கள், அளவிலா பிரேமையால் அவன் திருச்சந்நிதிக்கே சென்று, வெளிப்படையாக “பறை” வேண்டியவர்களாக இருந்தாலும், உண்மையில் சுயநலமற்ற நித்திய கைங்கர்யமே தங்களது புருஷார்த்தம் என அடைந்தார்கள். கோபிகைகள் எம்பெருமானை அணுகி, தங்கள் அபிலாஷையை எவ்வாறு நிறைவேற்றிக் கொண்டார்கள் என்பதனை, ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்த விஷ்ணுசித்தரின் புதல்வியான ஸ்ரீ ஆண்டாள், மிக இனிமையாகப் பாடி அருளினார்.
இந்தத் திருப்பாவை, சங்கமாகப் பாடத்தக்கதுமான, காலத்தால் அழியாத பெருமை கொண்ட, தமிழ்ச் செய்யுள்களால் ஆன மாலையாகிய பிரபந்தமாகும். இதிலுள்ள முப்பது பாசுரங்களையும் ஒன்றையும் விடாது ஓதுவோர், இவ்வுலகத்திலும் மறுவுலகத்திலும், செங்கண்களும், அழகிய திருமுகமும், நாலு மலைபோன்ற தோள்களும் உடைய, ஸ்ரீமஹாலக்ஷ்மி நாதனான ஸ்ரீகிருஷ்ணனின் திருவருளால் நித்தியானந்தத்தைப் பெறுவார்கள்.
திருப்பாவை மார்கழி மாதத்தில் மட்டும் அல்ல; ஒரு ஸ்ரீவைஷ்ணவனின் வாழ்நாள் முழுவதும் தினமும் ஓதப்படவும், தியானிக்கப்படவும் வேண்டிய திவ்ய பிரபந்தமாகும். ஸ்ரீவைஷ்ணவ சம்பிரதாயத்தின் மகா ஆசார்யரான ஸ்வாமி ராமானுஜர், சிறுமியான ஆண்டாள் அருளிச்செய்த இத்தெய்வீகப் பணியில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். அதனால் அவர் “கோயில் அண்ணன்” என்றும், “திருப்பாவை ஜீயர்” என்றும் அன்புடன் அழைக்கப்பட்டார்.
இதனால், திருப்பாவை என்பது பாடலாக மட்டுமல்ல; ஜீவனை எம்பெருமானிடம் ஒப்படைக்கும் பரமோபதேசமாகும் என்பதே வைஷ்ணவ வ்யாக்யானத்தின் சாரமாகும்.
.jpeg)
No comments:
Post a Comment