முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று...
ஆதியில், மனுஷன் தன் சொந்த உருவத்தைத் தண்ணீரில் கண்டுகொள்ளுதல், லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பேயே நிகழ்ந்திருக்கும். உலோகங்களைப் பயன்படுத்திய காலத்திலேயே, சுத்தமான உலோகங்களிலும் அவன் தன்னைப் பார்த்துக்கொண்டிருக்கலாம். உலோகக் கண்ணாடிகள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே துருக்கியில் இருந்தன; கண்ணாடியின் ஒருபக்கம் உலோகதரத்தைத் தடவி பிரதிபலிக்கும் முறை 1700 ஆண்டுகளுக்கு முன்னேத் தெரிந்தது; எளிய மக்களுக்கான கண்ணாடி லைபிக் என்னும் ஜெர்மன் வேதியலால் 1835இல் கண்டுபிடிக்கப்பட்டது. ஆண்டாளின் சிறுமியர் கேட்பது தட்டொளி. உலோகக் கண்ணாடி.
திருப்பாவையில், இதுவே நப்பின்னை பிராட்டியை துயிலெழுப்பும் கடைசிப் பாசுரம். ஆனால் கண்ணன் தெளிவாய்த் துயில் விலகுவது இன்னும் இரு பாசுரங்கள் ஆகும். கோதை நாச்சியார், பரமனை இரு தடவைத் துயிலெழ வேண்டி அழைக்கிறாள் – "கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்" என, "வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்" என – சரணடைவதே முதன்மை என்பதை முன்னிறுத்தி.
கோபிகையர் நப்பின்னையின் செயல்களை, அவளுடைய ஸ்வரூபத்துக்கும் ஸ்வபாவத்துக்கும் ஏற்றதல்ல எனக் குற்றம் சாட்டியபொழுது, நப்பின்னை, மௌனமே தன் ஆபரணமாகக் கொண்டு, ஸ்ரீகிருஷ்ணனிடம் உரையாட ஏற்ற காலத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தாள். அந்நிலையில், நப்பின்னை மனவருத்தம் கொண்டிருக்கிறாள் என எண்ணிய கோபிகையர், அவளின் மனநிலையை உணராமல், ஸ்ரீகிருஷ்ணனையே எழுப்பினால் எல்லாம் நன்னடையாகும் என்று கருதி, அவனை எழுப்புவதற்காக அவனுடைய குணமஹிமைகளைப் பாடத் தொடங்கினார்கள்.
ஆனால் ஸ்ரீகிருஷ்ணனும் மௌனமே ஏந்தி இருந்தான். அதைக் கண்ட கோபிகையர், “நப்பின்னையை நாம் கண்டித்ததினால் ஸ்ரீகிருஷ்ணனே நம்மேல் கோபம் கொண்டிருக்கிறானோ?” என எண்ணினர். அப்படியானால், அவன் கோபத்தைத் தணிக்க வேண்டும் என்ற நன்னோக்கில், நப்பின்னையின் பெருமைகளையும், அவளுடைய உயர்ந்த குணங்களையும் புகழ்ந்து பாடுவதன் மூலம், ஸ்ரீகிருஷ்ணனை சமாதானப்படுத்த விரும்பினார்கள்.
இதற்கு முந்தைய பாசுரத்தில் பகவான் ரக்ஷகத்வத்துக்கும், பிராட்டியின் புருஷகாரத்துக்கும் அவர்களுக்குள்ளேயே போட்டி ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தடுத்துக் கொண்டிருப்பது தத்துவமன்று என்று துவங்கிய ஆண்டாள் இந்த பாசுரத்தில் அதன் தொடர்ச்சியாக அந்த திவ்ய மிதுனமான தம்பதிகளை போற்றி மங்களாசாசனம் செய்கிறாள்.
இங்கே இந்த திவ்ய தம்பதிகளுக்குள் போட்டியென்றெல்லாம் சொல்வது நமக்கு தத்துவத்தை விளக்கவதற்காகத்தான் – ஒரே ப்ரஹ்மம் – நிர்விசேஷமாக சின் மாத்ரமாக – அத்வதீயமாக ஒன்றாகவே இருக்கிறது – அதுவும் நிர்குணமாக இருக்கிறது என்று சொல்வது ப்ரஹ்மத்தின் குணங்களைச் சொல்லுகிற அனேக வேத வாக்யங்களை தள்ளி வைப்பது போல் ஆகும். அது தத்துவம் அன்று. பகவானும் பிராட்டியும் திவ்ய மிதுனமாக – இரட்டையாகவே இணை பிரியாமல் இருக்கிறார்கள். வேதம் பகவானின் அனந்தமான கல்யாண குணங்களைச் சொல்லுகிறது. இப்படி குண சம்ருத்தி உள்ள ப்ரஹ்மத்திடம் குணக்லேசம் உடைய நாம் எப்படி சென்று சேர்வது? அதற்குத்தான் பிராட்டி புருஷகாரம் – சிபாரிசு செய்கிறாள்.
இப்படி இரண்டு பேர்கள் இருப்பதால் உடனே நம் மனதில் ஐயம் எழ வாய்ப்பிருக்கிறது – இரண்டு பேர் என்றால், அதில் யார் பெரியவர்? ஒருவர் செய்யும் செயலை மற்றவர் தடுப்பரோ? என்றெல்லாம் தோன்றக்கூடும். அது தத்துவமன்று என்கிறாள் ஆண்டாள்.
பகவானுக்கு செப்பமுடையவன்! திறலுடையவன்! என்றெல்லாம் அவன் வீர பல பராக்ரம ப்ரக்யாதிகளை சொல்கிற ஆண்டாள், பிராட்டியைச் சொல்லும்போது, மென்முலையாள், செவ்வாய் சிறுமருங்குல் நப்பின்னை நங்காய்! என்று அவள் ஸ்த்ரீத்வ பூர்த்தியை சொல்கிறாள். பகவானே ஸ்ருஷ்டி – ஸ்திதி – ஸம்ஹார வ்யாபாரங்களை எடுத்துக் கொண்டிருக்கிறான். பிராட்டி அதில் அவனோடு சேர்ந்து அவனுக்கு உற்ற துணையாகவும் அவனுக்கு சந்தோஷத்தை – பூர்த்தியை தரக்கூடியவளாகவும் இருக்கிறாள் என்பதை இங்கே சுத்தாந்த சித்தாந்தமாக ஸ்தாபனம் செய்கிறாள்.
"தேவர் கூட்டத்தையும், அவர்களூக்குத் தலைவர்களாக விளங்கும் முப்பத்துமூன்று தேவர்களையும், இடர்கள் நெருங்குவதற்கு முன்னமே, அவர்கள் அச்சத்தை விலக்கி, காத்தருளும் நாயகனே கண்ணா! கண் விழிப்பாயாக! எடுத்த காரியத்தை நிறைவுறச் செய்பவனே! குற்றமில்லாதவனே! மிக்க வலிமை பொருந்தியவனே! எங்கும் நிறைந்தவனே! பகைவருக்கு துன்பங்களைக் கொடுப்பவனே! உறக்கம் விட்டு எழுவாயாக! கவிழ்த்த செப்பைப் போன்ற மென்மையான மார்பகங்களையும், சிவந்த உதடுகளைக் கொண்ட வாயையும், மெல்லிய இடையையும் உடைய நப்பின்னை பிராட்டியே! திருமகளைப் போன்றவளே! துயில் விட்டெழுவாய்! எங்கள் நோன்புக்குத் தேவையான ஆலவட்டத்தையும்(விசிறியையும்) கண்ணாடியையும் வழங்கி, உன் கணவனான கண்ணனையும் எங்களுடன் அனுப்பி, நாங்கள் நோன்பு நீராட வழி செய்வாயாக!"
அடுத்தபடியாக, பிராட்டியை மிகவும் போற்றிப் பாடி (ஒரு தடவையே) அவளைத் துயிலெழ வேண்டி (செப்பன்ன மென்முலை செவ்வாய் சிறுமருங்குல் நப்பின்னை நங்காய்! திருவே! துயிலெழாய்), சென்ற பாசுரத்தில் நப்பின்னையை சற்று கடிந்து சொன்னதற்கு (நீ உன் மணாளனை எத்தனை போதும் துயிலெழ வொட்டாய் காண்!) பரிகாரம் செய்து விடுகிறார் ஆண்டாள்!
“உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணவாளனை இப்போதே எம்மை நீராட்டேலோ ரெம்பாவாய்…”என்று பாடி, கோபியரது உய்வுக்கு புருஷகாரம் செய்யும்படி (பரிந்துரைக்குமாறு) நப்பின்னையிடம் ஆண்டாள் விண்ணப்பிக்கிறாள்!
“உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை இப்போதே எம்மை நீராட்டு” என்கிற இந்த வாக்கியத்திற்கு, பூர்வாசார்யர்கள், “உக்கமும் தந்து, தட்டொளியும் தந்து, உன் மணாளனையும் தந்து” என்று விசேஷமான அர்த்தத்தைச் சொல்கிறார்கள். இது சாதாரணமான மனித உறவாக இருந்தால், “எங்கள் கணவனை எங்களுக்குக் கொடு” என்று மனைவியரே கேட்க முடியாத நிலையில், ஒரே கணவனைப் பற்றி ஐந்து லட்சம் கோபிகைகள் ஒன்றுகூடி வந்து கேட்க இயலுமா? இது லௌகீக சம்பந்தம் அல்ல; முழுக்க முழுக்க தெய்வீக சம்பந்தம்.
பகவான் அத்தகைய பரிபூரண ப்ரஹ்மம். எல்லோருக்கும் துளி துளியாக எடுத்துக் கொடுத்தாலும், அவன் குறையாமல் நிற்கும் அப்பழுக்கற்ற முழுமை. தசரத மகாராஜன், “ராமனைத் தந்தேன்” என்று விஸ்வாமித்திரரிடம் எவ்வித தயக்கமும் இன்றி ஒப்படைத்தது போல, “உன் மணாளனை எங்களிடம் எடுத்துக் கொடுத்து விடு” என்று கோபிகைகள் வேண்டுகிறார்கள். இதன் மூலம், பகவானின் மீது பிராட்டிக்கு உள்ள அசாதாரணமான உரிமையும் அதிகாரமும் இங்கே தெளிவாக எடுத்துக் காட்டப்படுகிறது.
அசேதனங்களைப் போலவே, பகவானையும் பக்தர்களிடம் சேர்த்துவைக்கக் கூடியவள் அவளே. உக்கம் என்பது விசிறி; தட்டொளி என்பது முகம் பார்க்கும் கண்ணாடி. உக்கம் கைங்கர்யத்திற்குரியது; தட்டொளி ஸ்வரூபத்தை வெளிப்படுத்துவது. அதாவது, கைங்கர்ய ஞானமும் ஸ்வரூப ஞானமும் பிராட்டியின் திருவருளால் பெற்றே ப்ரஹ்மத்தை அடைய முடியும். அதுவே மோக்ஷம். அத்தகைய மோக்ஷத்தை அருள வேண்டி, மஹாலக்ஷ்மியான நப்பின்னையிடமே கோபிகைகள் பிரார்த்திக்கிறார்கள்.
வைஷ்ணவ சம்பிரதாயப்படி, திருமகளும் மற்ற ஜீவாத்மாக்களைப் போல பரமாத்மனாகிய நாராயணனைச் சார்ந்தவளே என்றாலும், அவளின்றி பரமன் பரிபூரணனாக வெளிப்படுவதில்லை என்ற உன்னத தத்துவத்தை ஆண்டாள் இப்பாசுரத்தில் மிக அழகாகச் சொல்கிறாள். பிராட்டியின் முன்னிலையில் மட்டுமே ஜீவாத்மாக்களுக்கு முக்தி சாத்தியமாகிறது. இப்பாசுரத்தில், பரமன் பக்தர்களை பேணும் பாங்கும், பகைவரை அழிக்கும் வீரியமும் ஒன்றாகப் பாடப்பட்டுள்ளன. இவ்விரண்டும் வெளிப்பட வேண்டுமெனில் இரண்டு குணங்கள் அவசியம்:
செப்பம் மற்றும் திறல். செப்பம் என்பது குறையற்ற, அப்பழுக்கற்ற பூரண தன்மை (Perfection). திறல் என்பது எங்கும் நிறைந்து அனைத்தையும் சரியாக அளந்து ஒழுங்குபடுத்தும் ஆற்றல். இதே கருத்தை நம்மாழ்வாரும், “செய்குந்தா வருந்தீமை உன்னடியார்க்குத் தீர்த்து அசுரர்க்குத் தீமைகள் செய்குந்தா” என்று தமது பாசுரத்தில் உறுதிப்படுத்துகிறார்.
இங்கு கோபிகைகள், “முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று” என்று தேவர்களை ஏன் குறிப்பிடுகிறார்கள்? அதன் உள் நோக்கம்: “தேவர்களுக்கு அமுதம் வேண்டும், தேவலோக பதவி வேண்டும், பலம் வேண்டும்; ஆனால் எங்களுக்கோ உன்னைத் தவிர வேறு எதுவும் வேண்டாம்” என்பதும், “உன் அருளால் தேவர்கள் சாகாவரம் பெற்றனர்; ஆனால் நாங்களோ, உன் திருவருளையே நாடி இப்பூவுலகில் தவித்துக் கொண்டிருக்கிறோம். எங்கள் துயரை நீக்குவாயாக” என்பதும் தான்.
இவ்வாறு, கோபிகைகளின் உள்ளக் குரல், பக்தியின் பரிபூரண நிலையை இங்கு ஆழமாக வெளிப்படுத்துகிறது.
முப்பத்து மூவர் - தேவர் கூட்டத்துக்கு தலைவர்கள் 33 பேர், 8 வசுக்கள், 11 ருத்ரர்கள், 12 ஆதித்யர்கள், 2 அஸ்வினி தேவர்கள்
முன் சென்று - தீவினைகள் நோக்கி நாங்கள் செல்வதற்கு முன்பாகவே, இன்னல்கள் ஏற்படுவதற்கு முன்பாகவே
கப்பம் தவிர்க்கும் கலியே - அச்சங்களை விலக்கி அபயமளிக்கும் பரமன்
செப்பமுடையாய் - நேர்மையான சொரூபம் கொண்டவன், வலிமை மிக்கவன்
திறலுடையாய் - எங்கும் நிறைந்த பரம்பொருள், சாதுரியம் மிக்கவன், உலக ரட்சகன்
செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா - அனைவரையும் சமமாக பாவிப்பவனாக இருந்தாலும், அடியவருக்குத் துன்பம் தரும் பகைவர்களின் செருக்கை அழிப்பவன். தீயவர் தன் மீது கொள்ளும் பகைமையைக் கண்டு பரமன் ஒருபோதும் கோபம் கொள்வதில்லை!
விமலன் - இதனுடன் சேர்த்து மொத்தம் 4 சொற்கள் உள்ளன: அமலன், விமலன், நிமலன், நிர்மலன்.
அமலன் - நம் தீவினைகளை அழிப்பவன்
விமலன் - அஞ்ஞானம் நெருங்க முடியாதவன்
நிமலன் - பகைவர்களுக்கு அச்சத்தைத் தருபவன்
நிர்மலன் - தன்னிடம் சரணடைந்தவரின் குறைகளை ஆராயத தன்மை கொண்டவன்!
செப்பன்ன மென்முலை செவ்வாய் சிறுமருங்குல் - திருமகளின் சௌந்தர்யமான (அனைத்து
அழகையும் தன்னுள் கொண்ட) தோற்றத்தைப் போற்றுவதாம்.
நப்பின்னை நங்காய் திருவே - சொல்லிச்சொல்லாத சௌந்தர்யங்கள் எல்லாவற்றிலும் பூர்த்தியானவளே! நங்காய்! அழகு அவளாலே, குணங்கள் அவளாலே, மேன்மை அவளாலே, நீர்மை அவளாலே, அப்படி திருவுக்கு நிகரானவளே! திருவே!
உக்கமும் தட்டொளியும் தந்து - அகங்கார மமகாரங்களை நீக்கி மெய்ஞானத்தை அருளி
இப்போதே எம்மை நீராட்டேலோரெம்பாவாய் - உடனே எங்களுக்கு மோட்ச சித்தியை அருள வேண்டும் என்று அடியவர் கட்டளையிடுகின்றனர்! "நீராட்ட" என்பது பரமனுடன் ஒன்றறக் கலப்பதையே உள்ளர்த்தமாக கொண்டிருக்கிறது

No comments:
Post a Comment