குத்து விளக்கெரிய!
தமிழ் இலக்கிய மரபில் பெண்களின் பருவநிலைகள் நுண்ணிய வகையில் வகுக்கப்பட்டுள்ளன. பேதை முதல் பேரிளம்பெண் வரை பருவங்கள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட வயதுக்கும், உளநிலைக்கும் உட்பட்டவை. சிலப்பதிகாரம், கண்ணகி திருமணமான வேளையில் அவளுடைய வயதைத் துல்லியமாகச் சுட்டுகிறது. அதுபோலவே, ஆண்டாள் ஸ்ரீரங்கநாதனுடன் ஐக்கியம் பெற்றபோது அவள் பதினைந்து வயதே ஆனவள் என்பதும் மரபில் கூறப்படுகிறது. ஆகையால், திருப்பாவையில் தோன்றும் ஆயர் சிறுமியர், மங்கைப் பருவத்தின் தொடக்கத்திலும் அல்லது அதற்கு முன்புமான வயதினரே எனக் கொள்ளுதல் பொருந்தும்.
நப்பின்னை பிராட்டி திருமணமானவளாக வர்ணிக்கப்படுவதால், அவள் மடந்தைப் பருவத்தில் இருப்பவள் என்ற ஊகம் வியாக்யானத்திற்கு இடமளிக்கிறது.
ஆயர் குடில்களில் குத்துவிளக்குகள் எரிவது இயல்பே. ஆனால் தந்தத்தால் செய்யப்பட்ட கோட்டுக்கால் கட்டிலும், மெத்தென்ற பஞ்சசயனமும், அச்சூழலில் இருப்பதற்கான சாத்தியம் குறைவு. ஆகையால், நப்பின்னையின் படுக்கைச் சிறப்பை நேரடியாக எடுத்துக்கொள்ளாமல், அவள் திருவிடத்தில் காணப்படும் தெய்வீக வைபவத்தை உணர்த்தும் உவமையாகக் கொள்ளுதல் வியாக்யான ரீதியாகச் சிறந்தது. ('பஞ்சசயனம்' என்பது அன்னத்தின் தூரிகை, இலவம்பஞ்சு, பூக்கள், கோரைப்புல், மயில் தூரிகை ஆகிய ஐவகை பொருட்களால் செய்யப்பட்ட மெத்தை என்பது நேரடியான பொருள்.)
நப்பின்னை கதவைத் திறந்த பின்பே சிறுமியர் உள்ளே வந்திருப்பர் என்றால், கண்ணன் அவள் மார்பில் சாய்ந்து உறங்கிய நிலையை அவர்கள் எவ்வாறு கண்டனர் என்ற சந்தேகம் எழுகிறது. அதற்கு, “உள்ளே நுழைந்தவுடன், படுக்கையின் நிலையும், மலர்கள் சிதறிக் கிடந்த தோற்றத்தையும் கண்டு, இவ்வாறு அவர் உறங்கியிருப்பார்” என்று அவர்கள் கற்பனை செய்து பாடியதாகக் கொள்ளலாம் என்று உரையாசிரியர்கள் விளக்குகின்றனர்.
“நாற்புறமும் குத்துவிளக்குகள் எரிய” எனும் தொடக்கம், வெளிப்படையாக அறையின் அழகைச் சுட்டினாலும், உள் பொருளில் அது ஞான ஒளியையும், ஆச்சார்ய உபதேசத்தையும் உணர்த்துகிறது. ஐந்து முகங்களையுடைய குத்துவிளக்கு, பரமனின் ஐந்து நிலைகளையும் குறிக்கிறது என்ற உள்ளுரையும் சொல்லப்படுகிறது.
“பஞ்சசயனம்” என்பதும் வெளிப்படையாக மென்மையான படுக்கையைச் சுட்டினாலும், உள் பொருளில் பரமார்த்த சித்தாந்தங்களை உணர்த்தும் சொல். பரமாத்ம நிலை, ஜீவ நிலை, சாதன மார்க்கம், பந்தக வினைகள், முக்தி அனுபவம்—இவை ஐந்தும் இதில் குறிக்கப்படுகின்றன.
கோபியர், முன்னர் ஒரு பாசுரத்தில் கண்ணனை மட்டும் எழுப்ப முயன்றனர்; அடுத்ததில் பிராட்டியை மட்டும் துயிலெழுப்பப் பாடினர். இரண்டிலும் பயன் ஏற்படவில்லை. ஆகையால் இப்பாசுரத்தில், “மலர்மார்பா” என்றும் “மைத்தடங்கண்ணினாய்” என்றும், பரமனையும் பிராட்டியையும் ஒன்றாகக் கூட்டித் துயிலெழுப்ப முனைகிறார்கள். வைணவ சித்தாந்தத்தில், பகவான் மற்றும் பிராட்டி இருவரின் திருவுள்ளம் சேர்ந்தால்தான் ஜீவனுக்கு முக்தி என்பது இங்கு உள்ளுரையாக விளங்குகிறது. பிராட்டியின் பரிந்துரை—புருஷகாரம்—அத்தியாவசியம் என்பதே இதன் தத்துவப் பொருள்.
இருப்பினும், இவ்வளவு விண்ணப்பங்களுக்குப் பிறகும் கதவு திறக்காததற்குக் காரணம், தெய்வ தம்பதிகள் இருவரும் “யார் முதலில் சென்று அருள்புரிவது” என்ற அன்பு போட்டியில் தாமதிப்பதே என வியாக்யானம் ரசத்துடன் கூறுகிறது.
சில உரையாசிரியர்கள், நப்பின்னை கதவைத் திறக்க முயன்றபோது, கண்ணன் அவளை இழுத்து தடுத்து, “உன் அடியார்களை நீயே பார்த்துக் கொள்; என் அடியார்களை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்ற திருவுள்ளத்துடன் நடந்துகொண்டான் என்கிறார்கள். ஆனால் அந்த இழுப்பில், இருவரும் படுக்கையில் விழ, நப்பின்னையின் நெருக்கம் கண்ணனுக்கு வெளி உலகை மறக்கச் செய்தது. பிராட்டியும் அவன் அணைப்பை விட்டு விலக விரும்பவில்லை. இதனால், கோபியர் மீண்டும் நப்பின்னையை நினைவூட்டிப் பாட வேண்டியதாகிறது. பிராட்டியை உணர்த்தும் பாசுரமே, பரமனையும் உணர்த்தும் பாசுரமாக அமைந்தது.
“நப்பின்னை கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா” என்ற சொற்பிரயோகத்தில், பிராட்டியின் தாய்மைக் கருணையும், பரமனின் கருணை வடிவமும் ஒருசேர சுட்டப்படுகின்றன. ‘கொங்கை’ என்ற சொல்லின் வாயிலாக, பிராட்டி தன் கருணையால் பக்தரைப் பேணும் இயல்பு குறிப்பாக உணர்த்தப்படுகிறது. பரமனிடம் ஆலோசிக்காமலலேயே பிராட்டி பக்தர்களுக்கு அருள் பாலிப்பாள். ஆனால் பெரும்பாவம் செய்தவர்களைக் கூட, பரமனிடம் ஆலோசிக்காமல், ஒருபோதும் பிராட்டி தண்டிக்க மாட்டாள். அப்பேர்ப்பட்ட கருணை மாதா அவள். "மலையப்பா! உன் மார்பில் ஏதும் தர நிற்கும் கருணைக் கடல் அன்னை" என்று ராஜாஜி போற்றிய தாய் அவள்! பராசர பட்டர் மிகவும் உகந்த பாசுரம் இது. இந்த பாசுரத்தின் அடிப்படையில் தான், திருப்பாவைக்கு அவர் எழுதிய வடமொழித் தனியனான “நீளா துங்க ஸ்தநகிரி தடீஸுப்த முத் போத்ய க்ருஷ்ணம்” என்பது அமைந்தது, என்பது குறிப்பிட வேண்டியது.
இவ்வாறு, வெளிப்படையான பொருளில் விரசம் இல்லாதவாறும், தத்துவார்த்தத்தில் குழப்பமின்றியும், மேலிடக் கிடைக்கும் அர்த்தத்திலேயே ஆழமான உண்மைகளை உணர்த்தக் கூடிய இடத்தை ஆண்டாள் விட்டுச் சென்றிருக்கிறாள். அதுவே அவளது கூர்மையான கவிதைச் சக்தி.
குத்துவிளக்கெரிய - ஆச்சார்ய உபதேசத்தை குறிப்பில் உணர்த்துகிறது. இன்னொரு விதத்தில் (சம்சார இருளை விலக்க வல்ல)ஒளிரும் ஞானத்தைச் சொல்வதாம். குத்து விளக்கின் 5 முகங்கள், பரமனின் 5 நிலைகளை, அதாவது, பரத்துவ (வைகுண்ட நிலை), வியூக (வாசுதேவ, சங்கர்ஷண, பிரத்யும்ன, அனிருத்த என்று நான்கு வகைப்படும்), விபவ (அவதார நிலைகள்), அர்ச்ச (கோயில்களில் வழிபடப்படும் வடிவம்) மற்றும் அந்தர்யாமி (எல்லா உயிர்களிலும் உள் உறைபவனாக) குறிப்பதாகவும் உள்ளுரை உண்டு.
இன்னொரு விதத்தில் "குத்து விளக்கெரிய" என்பது தனது ஒளியால் தானே மிளிர்ந்து கொண்டு, அதே சமயத்தில் அடியவருக்கும் பரமனின் திருவடிவத்தை வெளிச்சமிட்டுக் காட்டும் கருணை வடிவான திருமகளை குறிப்பில் உணர்த்துவதாம்!!
அன்னங்கராச்சார் சுவாமிகள் "குத்து விளக்கு" (பல இடங்களுக்கும் எடுத்துச் செல்லப்படத் தக்கது என்பதால்!) என்பது எம்பெருமானாரை (ராமானுஜரை) குறிப்பதாக உரை எழுதியிருக்கிறார். தோரண விளக்கு (ஒரே இடத்தில் இருப்பதால்!) என்பது அவரது குருவான திருக்கோட்டியூர் நம்பியைக் குறிப்பதாம்.
ஒரு குத்து விளக்கில ஆண்டாள் எவ்வளவு விஷயங்களை வைத்திருக்கிறாள் பாருங்கள் :-)
கோட்டுக்கால் கட்டில் - கட்டிலின் நான்கு கால்கள் தர்ம(கடமை), அர்த்த(செல்வம்), காம(ஆசை), மோட்சம்(முக்தி) என்ற 4 சம்சார ஆதார நிலைகளை உணர்த்துவதாக உள்ளுரையாம்.
இன்னொரு விதத்தில், இவை "நான்" என்ற அகந்தையின் 4 நிலைகளை (நானே செய்பவன், நானே அனுபவிப்பவன், நானே ஞானமிக்கவன், நானே பக்தன்) உணர்த்துவதாம். பரமன் இவற்றுக்கு மேல் இருப்பவன்! "நான்" என்று கூற தகுதி உடையவன் பரமன் ஒருவனே, பகவத்கீதையில் அர்ஜுனனுக்கு உபதேசம் அருளியபடி!
மெத்தென்ற பஞ்சசயனத்தின் மேலேறி - பஞ்சசயனம் பஞ்ச பூதங்களை (அ) ஐவகை உயிர்களை (தேவ, மானுட, மிருக, தாவர, ஜட) குறிப்பதாக உட்கருத்தாம். பரமன் இவற்றுக்கெல்லாம் மேல் உள்ளான் என்பதை "மேலேறி" என்பது உணர்த்துகிறது!
கொத்தலர் பூ - பரமனையும், பிராட்டியையும் சுற்றிக் குழுமியுள்ள தேவர்கள், முனிவர்கள், அடியவர் கூட்டத்தைக் குறிக்கிறது.
மலர் மார்பா - பரமனின் கருணை வடிவைக் குறிக்கிறது.
வாய் திறவாய் - திருவருளுக்காக தொழுது நிற்கிறோம், எங்கள் சரணாகதியை ஏற்றுக் கொள்வாய்! நம்மாழ்வாரின் திருவாய்மொழி வாக்கியத்தை "தொண்டரோர்க்கருளிச் சோதிவாய் திறந்து* உன் தாமரைக் கண்களால் நோக்காய்*" நினைவு கூர்க!
மைத்தடங்கண்ணினாய் - கிருஷ்ண பக்தியில் (மை) உருகி நிற்கும் உத்தம அடியவரைக் குறிக்கிறது.
நீ உன் மணாளனை - ஆச்சார்யனை (குருவை) குறிப்பில் சொல்வதாம்.
எத்தனை போதும் துயிலெழ வொட்டாய் - எங்கள் அஞ்ஞான இருளை விலக்க வல்ல குருவின் உபதேசத்தை அடியவர் நாங்கள் பெற தடையாக இருத்தல் கூடாது!
எத்தனையேலும் பிரிவாற்ற கில்லாயால் தத்துவம் அன்று - பரமனை விட்டு பிரியாத நிலை வேண்டும் வேண்டும் அடியவர் மனநிலையை குறிப்பில் உணர்த்துவதாம்! அதுவே பேரின்பம் (தத்துவம்). மீண்டும் சம்சார பந்தத்தில் சிக்கிக் கொள்வது தத்துவமன்று!!!
"அடியோமோடும் நின்னோடும் பிரிவின்றி ஆயிரம் பல்லாண்டு" என்று விஷ்ணுசித்தர் பாடியதை நினைவு கூர்க
தகவேலோ - பரமனின் முழுமையான அருளின்றி, மேற்கூறியது (முக்தி) நடைபெறாது.
மேலும், இங்கு "நப்பின்னை கொங்கைமேல் வைத்துக் கிடந்த மலர் மார்பா" என்ற கோதை நாச்சியார் வாக்கியம், "அகலகில்லேன் இறையுமென்று அலர்மேல் மங்கை உறைமார்பா" என்ற நம்மழ்வரின் பாசுர வரியை நினைவூட்டுகிறது தானே!
தத்துவம் = தத் + த்வம் = பரமன் + பிராட்டி எனும்போது, திருமாலும் திருமகளும் பிரிக்கமுடியாதவர் என்பது விளங்குகிறது.
சூடிக் கொடுத்த நாச்சியார் திருவடிகளே சரணம்!
.jpeg)
No comments:
Post a Comment