Monday, 5 January 2026

அங்கண்மா ஞாலத்து!

 

அங்கண்மா ஞாலத்து!...




உலகம் விரிந்தது; அழகினால் நிறைந்தது; அனுபவ இன்பங்களால் மனதை மயக்கும் தன்மை உடையது. அத்தகைய உலகத்தில், ஒருவன் எவ்வளவு அனுபவித்தாலும், எவ்வளவு செல்வங்களைத் தனக்கென்று சேர்த்தாலும், அவையெல்லாம் இறுதியில் வாழ்க்கையின் பரம லட்சியமாக மாறுவதில்லை. மனித வாழ்வின் உண்மையான குறிக்கோள், தன்னைத் தானே அறிதல் என்பதே. இன்றைய காலத்து மானுட சிந்தனைகள் எடுத்துரைக்கும் மாஸ்லோவின் தேவைக் கும்பகமும் (Maslow's pyramid - Hierarchy of Needs) கூட, இதே உண்மையையே வேறொரு சொல்லாட்சியில் வலியுறுத்துகிறது.


இந்த தன்னறிதல் என்னும் தத்துவத்தைத்தான் ஆண்டாள், “அங்கண்மா ஞாலத்து” எனத் தொடங்கும் பாசுரத்தில், அகங்கார நிவ்ருத்தியாக விளக்குகின்றாள். உலகை ஆளும் பேரரசர்களாக இருந்தாலும், அவர்களிடத்தில் வேரூன்றியிருக்கும் அபிமானமும், தற்பெருமையும் அழிந்தாலே உண்மையான தன்னறிதல் பிறக்கும் என்பதை அவள் பாடலின் மூலம் உணர்த்துகிறாள்.



அப்படியெனில், தன்னை அறிதல் என்பது எவ்வாறு நிகழ்கிறது? இதற்குத் தெளிவான விடையை நம்மாழ்வார் அருளிசெய்கிறார்: “யானே என்னை அறியகிலாதே யானே என் தனதே என்று இருந்தேன்; யானே நீ, என் உடைமையும் நீயே…” என்று அவர் சொல்வதைக் கொண்டு, “யானே நீ” என்பதற்கு அஹம் பிரம்மாஸ்மி என்ற அத்வைதப் பொருள் கொள்ளக் கூடாது என்று ஆசார்யர்கள் உறுதியாக விளக்குகின்றனர். இவ்வாறு பொருள் கொள்ளுவது, பாடலைப் பிரித்து மட்டும் வாசிப்பவர்களின் தவறான பார்வை. “யானே நீ” என்பதன் உண்மைச் சாரம் — நான் உனக்குச் சொந்தமானவன்; என்னுடையதென நான் கருதுவது அனைத்தும் உன்னுடையதே; நீ என்னுள் ஆத்மாந்தர்யாமியாக இருந்து என்னை நடத்துகின்றாய் — என்பதே. இதுவே வைணவ சித்தாந்தம் வலியுறுத்தும் சேஷத்வ ஞானம்.



அப்படியானால், இறையடியை அடைவதுதான் தன்னறிதலின் ஒரே வழியா? மக்களுக்குச் சேவை செய்வதும் தன்னறிதலின் ஒரு வடிவமல்லவா? — நிச்சயமாக என்கிறார் என் தந்தை. “கடல்வண்ணன் பூதங்கள்” அனைத்தும் ஒருநாள் தங்களை அறிந்தே தீரும்; அது அவனுடைய திருவுள்ளத்தின் நியதி. நம்மாழ்வார், “என்னைத் தன்னாக்கி என்னால் தன்னை இன் கவி பாடிய ஈசன்” என்று சொன்னபடி, ஜீவனுள் புகுந்து, அவன் வாயாகத் தன்னையேப் பாட வைத்தவன் பரமன்.



முன்னைய பாசுரத்தில், ஆண்டாள், பகவானுடைய திருவாசலில் வந்து நிற்கும் பகைவர்கள்கூட, தமது ஆணவம், அகந்தை முதலியவற்றை இழந்து, வலிமை சுருங்கி, தாழ்ந்து நிற்பதை உபதேசமாகக் காட்டினாள். ஈச்வர சன்னிதியில் நிற்கும் பொழுது, தன்னாட்சி, தன்னலம் எனப்படும் அகங்காரங்கள் அழிவதே இயல்பு என்பதைக் காட்டும் வ்யாக்யானம் அது.



இப்பாசுரத்தில், அதைவிட மேலான தத்துவமான அனன்யார்ஹ சேஷத்வம் — தமக்கு வேறு எந்தச் சரணமும் இல்லை; ஸ்ரீமன் நாராயணனே ஒரே ஆதாரம் — என்பதை ஆண்டாள் ஆணித்தரமாக நிறுவுகிறாள். பிற தேவதைகள், பிற ஆதாரங்கள் என்பவற்றில் சிறிதும் சாராமை கொண்டு, முழுமையாகப் பகவானிடமே சரணடைந்து, அவனுக்கே சேஷபூதராக இருப்பதே ஜீவனுடைய ஸ்வரூபம் என்கிறாள். இதுவே உண்மையான பக்தியும், கைங்கர்யமும்.




“அங்கண்மா ஞாலத்தரசர் அபிமான பங்கமாய் வந்து” எனப் பாடும்போது, உலகை ஆண்ட மன்னர்களும், தங்களைத் தாங்கிக் கொண்டிருந்த அபிமானங்கள் சிதைந்து, உன் திருப்பள்ளிக்கட்டிலின் அருகே பணிவுடன் கூடிநிற்கும் காட்சியை ஆண்டாள் மனக்கண்களில் வரைவதுபோல் உணர்த்துகிறாள். அது மகாபாரத யுத்தத்திற்கு முன், கண்ணன் துயிலெழக் காத்திருந்த பாண்டவர்கள்–கௌரவர்கள் நினைவைக் கொண்டு வருகிறது.



ஆனால் தேவர்களும், மன்னர்களும் தேவைக்காக வந்தார்கள்; கோபியரோ, வழியே கண்ணன் தான். அவர்களுக்கு வேண்டியது அவனது “செந்தாமரைக் கடைக்கண்” பார்வை. அந்த அருள் பார்வை, அவர்களிடம் மிச்சமிருக்கும் அஞ்ஞானத்தையும், உலக பந்தங்களையும், பாவங்களையும் முழுதாய் அழிக்கும் சக்தி உடையது.




“சாபம் இழிந்தேலோர்” என்கிறாள் கோதை. ஆய்ப்பாடியில் கண்ணனோடு வாழ்ந்த கோபியருக்கு என்ன சாபம்? — தன்னிலை உணர்ந்த பின், அவனைப் பிரிந்திருப்பதே சாபம். அந்தச் சாபத்திலிருந்து விடுவித்து, தம்மை அவனுடன் ஒன்றச் சேர்க்க வேண்டும் என்ற துடிப்பே இப்பாசுரத்தின் உயிர். “கிங்கிணி வாய் செய்த தாமரைப்பூப் போலே செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ?” என்ன ஒரு அனுபவ ஒப்புமை! இதே ரசத்தில் தான் திருப்பாணாழ்வாரும், “கரியவாகி… அப்பெரியவாய கண்கள் என்னை பேதைமை செய்தனவே” என்று அரங்கனைத் தரிசித்த கணத்தில் தன்னை மறந்து உருகினார்.




“சிறுச்சிறிதே” என்று சொல்லுவதிலும் ஆண்டாளின் அன்பும் கவலையும் ஒன்றாகப் புலப்படுகிறது. மெதுவாக விழித்தெழும் கண்ணனை அதிக நேரம் ரசிக்க வேண்டும் என்பதும், அவனுக்கு எந்த அசௌகரியமும் ஏற்படக்கூடாது என்பதுமான இரட்டை உணர்வு அதில் ஒளிந்திருக்கிறது.




பரமனின் திருக்கண்கள் அழகின் சிகரம் மட்டுமல்ல; அவை அடியார்கள்மேல் அருள் பொழியும் திரு அவயவங்கள். அதனால் தான், ஆழ்வார்கள் அனைவருமே அவன் சிவந்த அழகிய கண்களின் காதலர்களாக இருந்தனர்.




இவ்வாறு, ஆச்சார்ய உபதேசங்களை கடந்து, நப்பின்னை பிராட்டியின் புருஷகாரத்தைப் பெற்று, அடியார் கூட்டத்தோடு ஒன்றாகச் சரண் புகுந்த கோபியர், முக்தியின் கடைநிலையில் நிற்கிறார்கள். அடியாரோடு சேர்ந்து சரணடைதல் என்பது வைணவத்தின் உயரிய கோட்பாடு.



“அபிமான பங்கம்” என்பது அகங்கார நாசமே. பெருக்காரணை சுவாமிகள் கூறும் எட்டு அபிமானங்களிலிருந்து விடுபட்டவரே பரமனுக்குத் தகுந்த அடியார். இந்தப் பாசுரம், தத்துவ வரிசையில் 22வது தத்துவமான அகங்கார நிவ்ருத்தியையே மையமாகக் கொண்டது.




அபிமான பங்கமாய் வந்து - மாந்தரிடம் எட்டு வகையான மாயைகள் அல்லது குற்றங்கள் (அபிமானங்கள்) இருப்பதாக பெருக்காரணை சுவாமிகள் கூறுவார்:
1. உடலும் ஆத்மாவும் ஒன்றே என்பது
2. நம்மால் சுதந்திரமாக செயல்பட முடியும் என்பது
3. பரமனை விடுத்து வேறு ஒருவருக்கு நாம் கீழ்பணிந்தவர் என்ற எண்ணம்
4. நம்மைக் காக்க/உய்வு தர ஸ்ரீமன் நாராயணனைத் தவிர வேறு அனுகூலர்களாலும் (நற்சுற்றம்) முடியும் என்ற எண்ணம்
5. சரணாகதி மற்றும் பக்தி என்ற வழிகளைத் தவிர்த்து வேறு வழிகளில் முக்தி பெற முடியும் என்ற மாயை.
6. (அழியக் கூடிய) சிற்றின்ப சுகங்களின் மீது ஆசைப்படுவது
7. நம் சக்தியே நம்மைச் செலுத்துகிறது என்ற மாயை
8. அடியவருக்கு உரிய மரியாதை தராமல் இருப்பது



மேற்கூறிய எட்டிலிருந்து விடுபட்டு நிற்பவரே, பரமனுக்கு உகந்த அடியார்க்கு அடியார் ஆவர். இந்த (22வது) பாசுரம் அபிமான பங்கத்தை பற்றிப் பேசுகிறது. தத்வங்களின் வரிசையில் அகங்காரம் என்பது 22வது தத்வம் என்பது குறிப்பிடவேண்டியது.



“திங்களும் ஆதித்யனும் எழுந்தாற்போல்” என்ற உவமை, பரமனின் கருணையும் வீரியமும் ஒன்றாக விளங்கும் தன்மையைச் சுட்டுகிறது. இதையே ஆண்டாள் “செப்பமுடையாய், திறலுடையாய்” என்று வேறொரு பாசுரத்தில் போற்றுகிறாள். முதல் பாசுரத்தில் வரும், "கதிர்மதியம் போல் முகத்தான்" என்ற பதமும் பரமனின் இந்த இருநிலைத் தன்மையையே குறிக்கிறது! நம்மாழ்வாரும், “உளனென இலனென…” என்று அவனது இருநிலைத் தன்மையை விளக்குகிறார்.


அங்கண் இரண்டும் கொண்டு நோக்குதியேல்” — இது பரிபூர்ண அருளான விஷ்ணு கடாட்சம். ஒரு கண் ஞானத்தைப் பெருக்க, மற்றொரு கண் அஞ்ஞானத்தை அழிக்க.



அடுத்த பாசுரத்தில் (மாரி மலை முழைஞ்சில்) கண்ணன் விழித்தெழ, கோபியர் அவனை உடனே சிம்மாசனத்தில் (கோப்புடைய சீரிய சிங்காசனத்திலிருந்து யாம் வந்த காரியம் ஆராய்ந்து!) ஏற்றி விடுகிறார்கள்.




இறுதியாக, வைணவப் பெருந்தகைகள் கூறுவது: திருப்பாவையின் 22வது பாசுரத்தை தினமும் பக்தியுடன் ஓதுவோரின் பாவங்கள் அனைத்தும், பரமனின் திருவருளால் கரைந்து போகும்.



No comments:

Post a Comment

மாரி மலை முழைஞ்சில்...

  மாரி மலை முழைஞ்சில்... தமிழ் இலக்கியப் பரம்பரையில் மிருக உவமைகளில் புலியைவிடச் சிங்கமே அதிகமாகப் போற்றப்பட்டு வந்திருக்கிறது. வீரத்திற்கும...