Monday, 12 January 2026

கறவைகள் பின் சென்று!

 




கறவைகள் பின் சென்று!


ஆழ்வார்கள் அனைவரும் ஒரு விஷயத்தில் மிகத் தெளிவாக இருந்தார்கள். வடமொழி வேதங்களிலும் உபநிஷத்துகளிலும் சொல்லப்படும் பரம்பொருளே, தமிழ்ப் பாசுரங்களில் புகழப்படும் பெருமாள் என்பதில் அவர்களுக்கு எவ்வித சந்தேகமும் இல்லை.


அதனை நம்மாழ்வார் தெளிவாகச் சொல்கிறார்: 
“இல்லை நுணுக்கங்கள் ஏயிதனில்
பிறிதென்னும் வண்ணம்
தொல்லைநன் நூலில்
சொன்ன உருவும் அருவும் நீயே” -- என்று.


அதாவது, மிகப் பழமையான வேதங்களில்கூட, உன்னைவிட நுண்ணியதும் உயர்ந்ததுமாக வேறொன்றில்லை என்று சொல்லப்பட்டுள்ளது. அந்த வேதங்கள் கூறும் உருவமும், அதே வேதங்கள் சுட்டும் அருவமும், இரண்டும் நீயே என்பதே இதன் பொருள். ஆனால் நம்மாழ்வார், உபநிஷத்துக்களில்  சொல்லப்படும் “நேதி, நேதி” என்று கைப்பற்ற முடியாத, நெருங்க முடியாத
ஒரு தத்துவமாக மட்டும் பகவானைக் காணவில்லை. அதனால்தான் அடுத்த இரு அடிகளில், “அல்லித் துழாயலங் கலணி மார்பா, என் அச்சுதனே வல்லதோர் வண்ணம் சொன்னால், அதுவே உனக்காம் வண்ணமே” என்று உரைக்கிறார்.


“மார்பில் தாமரையும் துளசியும் அணிந்தவனே! நாங்கள் உன்னை எந்த வடிவில் எப்படி வர்ணித்தாலும், அந்த வடிவமே உனக்குரிய வடிவமாகிறது” என்று அவன் ஸௌலப்யத்தையும்,
எளிமையையும் அழகாக எடுத்துரைக்கிறார்.


ஆழ்வார்களின் இந்தத் திருப்பாசுரங்களை ஒன்று சேர்த்து பிரபந்தமாக தொகுத்தவர்கள், இவை தமிழ் வேதம் என்பதிலும் மிக உறுதியாக இருந்தார்கள். அதனால்தான் இவை திராவிட வேதம், திராவிட உபநிஷத்துக்கள் என்று அழைக்கப்பட்டன. மேலும் வைஷ்ணவ மரபில், வேதங்களை விடவும் பகவானுக்கு இந்தத் தமிழ்ப் பாசுரங்களே மிகவும் உகந்தவை என்று நம்பப்பட்டது. ஆழ்வார்கள் சொன்ன இந்த உண்மைகளை பின்னர் வந்த வைஷ்ணவ ஆசார்யர்கள் இவ்வாறு விளக்கினார்கள்: "கீதையில் கூறப்படும் கர்மம், ஞானம், பக்தி என்ற மூன்று மார்க்கங்களும் பகவானை அடைய உதவினாலும், அவை முழுமையான வழி அல்ல. முழுமையான, ஒரே உபாயம்; பிரபத்தி, அதாவது முழு சரணாகதி மட்டுமே. அதுவே பகவானிடம் ஜீவனை நேரடியாக கொண்டு சேர்க்கும் வழி.


இந்தப் பிரபத்திக்காக நீ உயர்ந்த சாதியில் பிறந்திருக்க வேண்டிய அவசியமில்லை. பெரிய வித்வத்தும் இருக்க வேண்டியதில்லை. மாறாக, அவை சில சமயம் அகங்காரமாக மாறி தடையாகவும் இருக்கக்கூடும். கீதையில் பெரும்பாலும் இறைவனுக்கும் அவனை அடைய விரும்பும் ஒரு தனிப்பட்ட ஜீவனுக்கும் இடையிலான உறவையே விளக்கப்படுகிறது. ஆனால் ஆழ்வார்கள், “கூட்டமாகவும் பகவானை அடையலாம்” என்று சொல்லுகிறார்கள்.


தொண்டக் குலம், கடல்வண்ணனை வழிபடும் பக்தர் குழாம் என்று கூட்டுச் சரணாகதியை அவர்கள் முன்வைக்கிறார்கள். அந்த உச்சநிலையையே ஆண்டாள் நமக்கு காட்டுகிறாள். ஆயர் குலச் சிறுமிகள், தனித்தனியாக பகவானை அடைய விரும்பவில்லை. குழாமாகவே அவனை நாடுகிறார்கள். அவர்கள் கல்வியறிவு இல்லாதவர்கள். ஆனால் “எங்களுடன் மட்டுமே அவன் நெருக்கமாக இருப்பான்” என்ற அசைக்க முடியாத நம்பிக்கை அவர்களுக்குண்டு. அந்த நம்பிக்கையே அவர்களின் யோகமும், அவர்களின் சாதனையும், அவர்களின் செல்வமும் ஆகிறது.


மூப்பினோரின் நலனுக்காக வேண்டிய பறையை அருளியபின் கோதாதேவி, தங்கள் உள்ளார்ந்த பெருவிருப்பமான புருஷார்த்தத்தையே வேண்டப் போகிறாள் என்று கண்ணபிரான் நன்கு அறிந்திருந்தான். ஆகையால், “நீங்கள் அடைய விரும்பும் இலக்கைச் சேர ஏதேனும் சாதன–அனுஷ்டானம் உண்டோ?” என்று அவன் கேட்டான்.


அதற்கு இப்பாசுரத்தில் கோதாதேவி தெளிவாக அறிவிக்கிறாள் — நாங்கள் முற்றிலும் அஞ்ஞானிகள்; எங்களால் எதையும் சாதிக்க இயலாதவர்கள். எங்களிடம் உள்ள ஒரே நல்வினை, ஒரே செல்வம், ஒரே சார்பு— நீயே, கண்ணா! எங்கள் குறைபாடுகளையும் வெறுமைகளையும் நிரப்பக் கூடிய பூரணனும் சக்திமானும் நீயே என்பதே எங்கள் நிலை.



இந்தப் பாசுரத்தில் கோதாதேவி, கண்ணபிரானே “உபாயம்” (பிராபகம்) என்று பிரகடனம் செய்கிறாள்; அடுத்த பாசுரத்தில் அவனே “உபேயம்” (பிராப்யம்) என்றும் உரைக்கிறாள். இந்த எளிய ஆய்ப்பெண்கள் ஞான மார்க்கத்தையும் கர்ம மார்க்கத்தையும் பக்தி யோகத்தையும் கூட பின்பற்றவில்லை. அவர்கள் செய்தது ஒன்றே— முழுமையான சரணாகதி (பிரபத்தி). பிரபன்னன் என்றால் தன் தகுதியின்மையையும், அறிவின்மையையும், முக்தியைத் தனக்குத் தானே செய்துகொள்ள இயலாத அசக்தியையும் உணர்ந்தவன். ஒருமுறை கண்ணபிரானிடமே முழு நம்பிக்கையுடன் தன்னை ஒப்படைத்துவிட்டால், அந்த வீழ்ந்த ஜீவனை ரட்சிப்பது பகவானின் கடமை ஆகிறது.



இந்தப் பாசுரம் உபாயத்தையே விளக்குகிறது. அதாவது நம்மை நேரடியாக இலக்கிற்குக் கொண்டு சேர்க்கும் சாதனத்தை விளக்குகிறது. அந்த உபாயம் வேறு எதுவுமல்ல; ஸ்வயம் பகவானே. அவனுடைய மகிமையும் கருணையும் எங்கள் தாழ்மையையும்அசுத்தத்தையும் எண்ணிக்கையற்ற மடங்கு மீறியவை. பகவானின் அனுக்ரஹம் முழுமையாக அவனுடைய இச்சைக்கு அடங்கியது.



நல்ல கர்மங்களோ, ஞானமோ, பக்தியோ, அல்லது சரணாகதியே கூட அந்த அனுக்ரஹத்தை வற்புறுத்த முடியாது. உபாயம் பகவானே என்றாலும், அந்த அனுக்ரஹத்தை பெறத் தகுதி அடைய
நாம் செய்ய வேண்டியது உண்டு. அகிஞ்சன்யம்: “என்னிடத்தில் ஒன்றும் இல்லை” என்ற உணர்வு. (நமஸ்தே என்று நாம் சொல்வதின் பொருளும் இதுவே. என்னுடையது எதுவும் இல்லை). 



அநன்யகதித்வம்  “நீ தவிர வேறு வழியில்லை” என்ற தெளிவு. ஸ்ரீமன் நாராயணனிடமே ஒரே சார்பு என்ற உறுதியான நிலை. நம்முக்கும் அவனுக்கும் உள்ள பிரிக்கமுடியாத சம்பந்தத்தை உணர்ந்தபின், அவனுடைய அளவற்ற நன்மையையும் கருணையையும் தியானித்து, நம்முடைய பலஹீனத்தையும் பாபங்களையும் நினைந்து, கடந்த தவறுகளுக்காக தாழ்மையுடன் மன்னிப்புக் கோரி, அவனுடைய திருவடிகளில் அடைக்கலம் வேண்டுவதே இந்த உபாயத்தின் சாரம்.



பசுக்களை மேய்த்து, காடு சென்று, அங்கு ஒன்று கூடி உண்டு உடல் வளர்ப்பவர்களும், ஞானமிலாத சொற்ப அறிவு படைத்தவர்களும் ஆன நாங்கள், எங்கள் (ஆயர்) குலத்தவனாக உன்னைப் பெற்றடைய பெரும் புண்ணியத்தைச் செய்துள்ளோம். யாதொரு குறையும் இல்லாத 'கோவிந்தன்' என்னும் பெயரினைக் கொண்ட கண்ணபிரானே! உன்னுடன் நாங்கள் கொண்டுள்ள உறவை யாராலும் எக்காலத்திலும் பிரிக்க முடியாது. அற்ப அறிவுடைய, சூதுவாது தெரியாத சிறுமியரான நாங்கள், உன்னிடம் கொண்டுள்ள மிகுந்த அன்பினால் உன்னை (நாராயணன், மாயன், மாதவன் போன்ற பெயர்களிட்டு) ஒருமையில் அழைத்தமைக்கு கோபித்துக் கொள்ளாமல், நாங்கள் வேண்டி வந்த பொருட்களை நீ தந்தருள்வாயாக !



கண்ணனுக்குத் தர தங்களிடம் ஏதும் இல்லை என்ற தங்கள் "கை முதல் இல்லா" தன்மையை கோபியர் "கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்துண்போம்" என்று முதலடியிலேயே சொல்லி விடுகின்றனர்! ஒரு விதத்தில் ஆண்டாள் நாச்சியாரின் ஆற்றாமை இப்பாசுரத்தில் இழையோடுகிறது. "இறைவா" என்ற (முதன்முறையாக ஆண்டாள் பயன்படுத்தும்) சொல்லாட்சியைக் கவனிக்கவும்! "இன்னும் என்ன செய்தால் என்னை ஏற்றுக் கொள்வாய்?" என்று கண்ணனிடம் வேண்டுகிறாள்!



கறவைகள் பின் சென்று கானஞ் சேர்ந்துண்போம்” என்று ஆய்ப்பெண்கள் சொல்வதிலே அவர்களின் வழி முழுவதும் வெளிப்படுகிறது. உயர்சாதியினர், குருக்களின் பின்னால் சென்று
சாஸ்திரங்களை நாடி, அறிவைத் தேடுவார்கள். ஆனால் நாங்களோ பசுக்கள் எங்கே சென்று எதைத் தேடி உண்கின்றனவோ, அவைகளின் பின்னாலே சென்று கிடைத்ததை ஏற்றுக் கொள்வோம். எங்களுக்கு திருப்பதி, திருவரங்கம் போன்ற திவ்யதேசப் பயணம் இல்லை. எங்கள் வழி காடு. அங்கே நீராட சௌகரியமுண்டா? ஆசௌசம் இல்லாமல் ஆராதிக்க இயலுமா?



இப்படிப்பட்ட எளிய வாழ்க்கையே எங்களுடைய நிலை என்று அவர்கள் தாழ்மையுடன் அறிவிக்கிறார்கள்.



“அறிவொன்றுமில்லாதோம்” என்று சொல்வது தன்னைத் தாழ்த்திக் கூறுவது அல்ல. எது சரி, எது தவறு, எது பாவம், எது புண்ணியம் என்று தேர்ந்தெடுக்கக் கூடிய விவேக அறிவு எங்களிடம் இல்லை என்பதே பொருள். உபாய சூன்யம்; அதுவே எங்கள் ஒரே சொத்து. வழி என்ன, எப்படிச் செல்ல வேண்டும், எதைப் பிடிக்க வேண்டும் என்பதே தெரியாதவர்கள். இதைத்தான் நம்மாழ்வார், “நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவும் இலேன்” என்று சொன்னார்.



இந்த அறிவின்மையே பகவானுக்கு உகந்ததாகிறது. ஏனெனில் அறிவு குறைந்த இடத்தில்தான் அஹங்காரம் இல்லை. ஆனால் எங்கள் குலம் செய்த ஒரே பெரிய புண்ணியம் என்னவென்றால்—
நீ எங்கள் குலத்தில் பிறந்தாய். அது மட்டும் அல்ல; நீ பிறந்ததினாலே இந்த குலம் முழுவதும் வீடு பெறுகிறது. உயர்கிறது. உய்யப்படுகிறது. “உய்ய இவ்வாயர் குலத்தினில் தோன்றிய ஒண்சுடர் ஆயர் கொழுந்தே” என்று பெரியாழ்வார் பரவசமாகச் சொன்னார்.


ஆறாயிரப்படி சொல்கிறது: “நீ ஸூக்ருதமாய் நின்று இக்குலத்தை எடுக்கைக்கு ஆண் பெண் சட்டி பானை என்றுண்டோ?” அதாவது, உன்னுடைய இச்சை. நீயே எங்களைத் தேர்ந்தெடுத்தாய். எங்களிடம் தகுதி தேடியதில்லை.


“குறைவொன்றுமில்லாத கோவிந்தா!” என்று அழைக்கிறார்கள். உண்மையில் உலகின் எல்லாக் குறைகளும் எங்களிடமே இருக்கின்றன. ஆனால் உலகின் எல்லா நிறைவும் உன்னிடமே இருக்கிறது. அப்படியிருக்க குறை உன்னிடம் எப்படி இடம் பெறும்? 


“உன்றன்னோடு உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது” என்பது இந்தப் பாசுரத்தின் அச்சாணி. அதேபோல் முழு வைஷ்ணவ தத்துவத்தின் அச்சாணியும் இதுவே. உனக்கும் எங்களுக்கும் இடையே உள்ள உறவை யாராலும் அறுக்க முடியாது. எங்களால் முடியாது. உன்னாலும் நிச்சயமாக முடியாது. உன்னையும் எங்களையும் பிணைத்திருக்கும் இந்த உறவு அறுக்க முடியாத கயிறு.


“நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் நாரணனே! நீ என்னை அன்றி இலை” என்று திருமழிசை ஆழ்வார் உறுதியாகச் சொன்னது இதற்காகத்தான். ஆய்ப்பெண்கள் இறுதியில் ஒரு வேண்டுகோளை வைக்கிறார்கள். எங்கள் சொற்கள் அறிவின்மையாலும், சிறுபிள்ளைத்தனத்தாலும், அன்பின் மிகுதியாலும் வந்தவை. அதனால் அவற்றை குற்றமாக எடுத்துக் கொள்ளாதே என்று பணிவுடன் கேட்கிறார்கள்.


“பித்தர் சொன்னவும் பேதையர் சொன்னவும் பத்தர் சொன்னவும் பன்னப் பெருபவோ?” என்று கம்பன் சொல்வது போல. இங்கே “சிறுபேர்” என்றால் நாராயணன் என்ற நாமம். அவனுக்கு கோவிந்தா! கோபாலா! என்று அழைத்தால்தான் மிகவும் பிடிக்குமாம். அவைகள்தாம் அவனுக்குப் பெரும் பேர்கள். பிராமணர் வழக்கில் தவறுதலாக “நாராயணா” என்று அழைத்துவிட்டால், “அதற்காக எங்கள்மீது சீற்றம் கொள்ளாதே” என்று அந்த ஆய்ப்பெண்கள் அன்போடும் பயத்தோடும் பிரார்த்திக்கிறார்கள்.



No comments:

Post a Comment

கறவைகள் பின் சென்று!

  கறவைகள் பின் சென்று! ஆழ்வார்கள் அனைவரும் ஒரு விஷயத்தில் மிகத் தெளிவாக இருந்தார்கள். வடமொழி வேதங்களிலும் உபநிஷத்துகளிலும் சொல்லப்படும் பரம்...