கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா...
கோயில்களில் இப்பாசுரம் ஓதப்படும் திருநாளன்று, நெய் வளமுடன் இனிய சர்க்கரைப் பொங்கலைச் செய்து நிவேதித்து பகிர்வது, காலந்தோறும் கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒரு பரம்பரைச் சம்பிரதாயமாகும். அத்தகைய மங்கல நிகழ்வை எவ்வாறு கொண்டாடுகிறோம் என்பதை, இங்கு கோபியர்கள் தாமே பகவானிடம் எடுத்துரைக்கின்றனர்.
முன்னரான “வையத்து வாழ்வீர்கள்” என்ற பாசுரத்தில்,
“நெய்யுண்ணோம், பாலுண்ணோம், மையிட்டு எழுதோம், மலரிட்டு நாம் முடியோம்” என்று சிறுமியர்கள் எடுத்துக் கொண்ட கடும் தபோநிஷ்டையை நாம் நினைவுகூரலாம். அந்தச் சபதத்தின் பூர்த்தியாக, இப்பாசுரத்தில் அவர்கள் வேண்டிய அனைத்தும் நிறைவேறிய மகிழ்ச்சியில் பாடுகின்றனர். அதாவது, பாசுரத்தின் தொடக்கத்தில் கூறப்பட்ட தவநிலைக்கு எதிர்மறையான—ஆனால் உண்மையில் அதன் நிறைவாக விளங்கும்—ஒரு நிலையைக் காட்டுகிறது இப்பாடல்.
முந்தைய பாசுரத்தில் விரதத்திற்குத் தேவையான உபகரணங்களையெல்லாம் கோபியர்கள் விவரித்தனர். இப்பாசுரத்தில், அந்த விரதத்தின் பலனைச் சுட்டிக்காட்டுகின்றனர். தெய்வீக தம்பதிகளான எம்பெருமான் மற்றும் பிராட்டியால் அருளப்பட்ட மனமகிழ் ஆடைகளும் ஆபரணங்களும் அணிந்து, பரமாத்மாவுடன் ஒருங்கிணைந்து அருகருகே அமர்ந்து, அமிர்தோபமான அன்னத்தைப் பரிமாறிக் கொண்டு, அதிலே கலந்த நெய் முழங்கையோரம் வழியப் பங்குபெறுவதே அந்த விரதத்தின் பலன் என அவர்கள் விளக்குகின்றனர்.
கோவிந்த நாம சங்கீர்த்தனத்தின் மஹிமை:
“கோவிந்த நாம சங்கீர்த்தனம் - கோவிந்தா, கோவிந்தா, கோவிந்தா!” என்று இப்பாசுரத்தில் தொடங்கும் கோவிந்த நாம சங்கீர்த்தனம், 28-வது பாசுரத்தில், “குறைவொன்றுமில்லாத கோவிந்தா உன் தன்னோடு” என்று ஒரு முறை ஒலித்து, 29-வது பாசுரத்தில்,“இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா”
என்று பரிபூரணமாக நிறைவடைகிறது.
“கூடாரை வெல்லும் சீர்” – சீலமும் சௌரியமும்: “கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா” என்பது மிக ஆழமான பொருள் கொண்ட வாக்கியம்.
எம்பெருமான் அனைவரையும் வெல்வது குணத்தினாலே.
கூடுவாரை—அதாவது தன்னை அணுகி நிற்பவர்களை—சீலத்தினாலே வெல்வான்.
கூடாதாரை—அதாவது எதிராக நிற்பவர்களை—சௌரியத்தினாலே (வீரத்தினாலே) வெல்வான்.
ஆறாயிரப்படி உரை, “சௌரியம் அம்பிற்கு இலக்காகும்; சீலம் அழகிற்கு இலக்காகும்” என்று கூறுகிறது. மேலும், “அம்பிற்கு இலக்கானார்க்கு மருந்திட்டு ஆற்றலாம்” என்பதன் மூலம், எதிரியாக இருப்பவர்களுக்கும் கூட இறைவன் அருமருந்தாக இருப்பான் என்ற அர்த்தத்தைத் தருகிறது.
கோவிந்தன் பசுக்களைப் பாதுகாப்பது போலவே, பக்தர்களையும் பராமரிப்பான். கன்றுகளை அவன் இன்னும் அதிக கவனத்தோடு காப்பான். அதுபோலவே, அவனடியில் அடைக்கலம் புகும் அறியாத சிறுமியர்களையும் எந்தக் குறையும் இல்லாமல் பாதுகாக்கிறான்.
“கூடார்” யார்? – நால்வகைப் பிரிவு
“பகைவரை வெல்லும் சிறப்புடையவனே” என்று சொல்லும்போது, “பகைவர் என்றால் யார்?” என்ற கேள்வி எழலாம். இங்கு கூடார் என்போர் ஒரே வகையினர் அல்ல. அவர்கள் நால்வகை:
- பரமனை அறியாதவர்கள்
- அறிந்தும் பயத்தால் அணுகாதவர்கள்
- அறிந்தும் விபரீத குதர்க்கங்களால் குழம்பியவர்கள்
- அறிந்தும் பரமனை ஏற்காமல் விரோதம் பாராட்டுபவர்கள்
இவர்களனைவரையும் தத்தம் நிலைக்கு ஏற்ப வெல்வதே எம்பெருமானின் சீலச் சிறப்பு.
கண்ணனே பரிசு
சிறுமியருக்குக் கிடைத்த பரிசு—கண்ணன் தானே! அவன் வருவான் என்று ஊரே எதிர்பார்க்கவில்லை. ஆனால் அவன், முந்தைய பாசுரத்தில் சொன்னபடியே, அழகிய விளக்கு, அரையர்கள் பாட்டு, கொடி, மேற்கட்டி, பறை ஆகிய அனைத்தையும் பரிசாக வழங்கினான். அதோடு நின்றுவிடாமல், கோவிந்தனாக இருந்து அவர்களைத் தானே பராமரிக்கிறான்.
“ஊரே வியந்து எங்களைப் புகழ்கிறது” என்று கோபியர்கள் கூறுகின்றனர். மிக முக்கியமாக, இந்தப் பகுதியில் ஆண்டாள், “இதைக் கொடு, அதைக் கொடு” என்று எதையும் குறிப்பாகக் கேட்கவில்லை! “நான் உனக்குச் சூடிக் கொடுத்த மாலைகளுக்கு இணையான சம்மானம் வேண்டும்” என்று சுட்டிக்காட்டுகிறாள் போலிருக்கிறது.
அந்த உயர்ந்த சம்மானம்—கண்ணனே!
நாடு புகழும் பரிசுகள்
கண்ணன் நாடு புகழும் பரிசுகளை அளிப்பதில் வல்லவன்.
சுதாமாவிடம்—அவன் கேட்காதபோதும்—அவன் வழங்கிய பரிசு உலகறிந்ததல்லவா? திரௌபதியின் மானத்தைக் காத்ததும்,
பஞ்சபாண்டவர்களுக்கு யுத்த வெற்றியை அருளியதும், எல்லாம் அதே கருணையின் வெளிப்பாடே.
இதையே துக்காராம் மஹராஜ், “பதீத மீ பாபி…” என்ற அபங்கத்தில் உருக்கத்தோடு பாடுகிறார்—
“சுதாமாவின் தரித்திரத்தை ஒழித்தாய்;
திரௌபதியின் மானத்தை காத்தாய்;
ப்ரஹ்லாதனின் வாக்கை உண்மையாக்கினாய்;
அப்படியே இந்தப் பாவியையும் கரையேற்றுவாய்!” என்று.
அலங்காரமும் அனுபவமும்
“சூடகமே, தோள்வளையே, தோடே, செவிப் பூவே, பாடகமே”
என்று சொல்லப்படும் நகைகளும், அதன் பின் அழகிய ஆடைகளும்— இவையனைத்தையும் சிறுமிகளுக்குப் பரிவோடு அணிவிப்பது கண்ணனும் நப்பின்னைப் பிராட்டியும் தான் என உரையாசிரியர்கள் கூறுகின்றனர். சிறுமிகள் சரியாக அணியமாட்டார்கள் என்ற கவலையால்!
“என்றனைய பல கலனும் யாம் அணிவோம்” என்று கோபியர்கள் கூறுவதில், பெண்டிர்க்குரிய இயல்பான அலங்கார ஆசையும்,
நீலமேக வண்ணனுக்கேற்ற அழகுடன் தன்னைச் சீரமைக்க விரும்பும் ஆண்டாளின் உள்ளமும் பளிச்சிடுகிறது.
நாச்சியார் திருமொழியிலேயே ஆண்டாள்,
காறை பூணும் கண்ணாடிகாணும்* தன் கையில் வளைகுலுக்கும்*
கூறையுடுக்கும் அயர்க்கும்* தன் கொவ்வைச் செவ்வாய்திருத்தும்*
தேறித்தேறிநின்று ஆயிரம்பேர்த்* தேவன்திறம்பிதற்றும்*
மாறில் மாமணிவண்ணன்மேல்* இவள் மாலுறுகின்றாளே.*
தன்னை அலங்கரித்துக் கொண்டு கண்ணாடிக் கிணற்றில் தன் வடிவழகைக் காணும் ஆசையை வெளிப்படுத்தியிருப்பதை நினைவுகூரலாம்.
நெய் வழியும் விருந்து – அனுபவ ரஸம்
பின்னர் விருந்து. பாற்சோறும், முழங்கையோரம் வரை நெய் வழியும் சோறும். அதை உண்ண முடியாமல் சிறுவர் சிறுமியர் திணறுவது போல.
ஒரு பக்தர் பட்டரிடம், “இவ்வளவு நெய்யை எப்படிச் சாப்பிட முடியும்?” என்று கேட்டபோது,
“அவர்கள் சாப்பிட்டார்கள் என்று யார் சொன்னார்கள்?”
என்று பட்டர் பதிலளித்தாராம். "கண்ணனைப் பார்த்த பரவசத்தில், அவர்கள் தங்களை மறந்துவிட்டார்கள்"
ஆண்டாள் எங்கும் “உண்டார்கள்” என்று சொல்லவில்லை—அதுவே நுண்ணிய ரஹசியம்.
பெரியாழ்வாருடன் ஒற்றுமை
இப்பாசுரத்திற்கு இணையான கருத்துடன் பெரியாழ்வார் தனது திருப்பல்லாண்டில் பாடியிருப்பதைப் பாருங்கள்—தந்தை, மகள் உள்ளங்களில் எத்தனை ஒற்றுமை!
நெய்யிடை நல்லதோர் சோறும்* நியதமும் அத்தாணிச் சேவகமும்*
கையடைக் காயும் கழுத்துக்குப் பூணொடு * காதுக்குக் குண்டலமும்*
மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்து *என்னை வெள்ளுயிராக்க வல்ல*
பையுடை நாகப் பகைக்கொடியானுக்குப்* பல்லாண்டு கூறுவனே.
இறுதி தத்துவம்
மேலும், பகவத் சேவை செய்யும் ஒரே விருப்பத்தில் கண்ணனை சரண் புகுந்த கோபியர்க்கு, சிற்றின்பங்களான புத்தாடை உடுப்பதிலும், அக்கார அடிசிலை முழங்கையில் நெய் வழிய உண்ணுவதிலும் அப்படி என்ன ஆசை என்ற கேள்வி எழலாம். அவை எல்லாம் பாவை நோன்பு நிறைவடைவதற்கான குறியீடுகள் மட்டுமே. கோபியரின் விருப்பம் கண்ணனோடு கூடியிருந்து குளிர்தல் மட்டுமே! இதிலும், அடியவருடன் சேர்ந்து பகவத் அனுபவத்தில் திளைத்தல் என்ற வைணவக் கோட்பாடு கோதை நாச்சியாரால வலியுறுத்தப்படுகிறது.
இன்னொரு விதத்தில் நோக்கினால், அவை எல்லாமே பரமன் தந்தது என்பதால் அவற்றை உள்ளார்ந்த மகிழ்ச்சியோடு சுகிப்பதில் தவறொன்றும் கிடையாது. கோபியரின் நோன்பு பரமன் திருவருளால் சுபமாக நிறைவடையும் நிலைக்கு வந்து விட்டது.
கோபியர்களுக்கு ஆடை, நகை, உணவு—all are symbols.
உண்மையான விருப்பம்—கண்ணனோடு கூடியிருந்து குளிர்தல்.
அடியவர்களுடன் சேர்ந்து பகவத் அனுபவத்தில் திளைத்தல்—இதுவே வைணவத்தின் உச்ச கோட்பாடு.
நோன்பு நோற்கும் முன், (2-வது பாசுரத்தில்) 'நெய்யுண்ணோம் பாலுண்ணோம் மலரிட்டு நாம் முடியோம்' என்ற கோபியர் இப்போது நோன்பு பூர்த்தியாகி விட்டதால் 'பாற்சோறு மூட நெய் பெய்து' செய்த அக்கார அடிசிலை உண்போம் என்கின்றனர் !!!
'பறை' என்பது பொதுவாக பகவத் கைங்கர்யத்தைக் குறிக்கும்
கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா - அடியார்களை மட்டுமன்றி, தன்னுடைய கல்யாண (சௌர்யம், சௌசில்யம், சௌந்தர்யம் ...) குணங்களால் ஆகாதவரைக் கூட பரந்தாமன் தன் வசப்படுத்தி ஆட்கொள்வான் என்பதை குறிப்பில் உணர்த்துகிறது.
சூடகம் - காப்பு; தோள்வளை - திரு இலச்சினை (ஒரு வைணவனின் சங்கு-சக்கர சின்னத்தைக் குறிப்பதாக உள்ளர்த்தம்)
தோடு - திருமந்திரம் (பிரணவாதார வடிவைக் குறிப்பதால், ஞானம் என்ற உள்ளர்த்தமுண்டு)
செவிப்பூ - த்வயம் (பக்தியைக் குறிப்பது)
பாடகம் - சரம சுலோகம் (காலில் அணியும் அணிகலனைக் குறிப்பதால், சரணாகதியைக் குறிப்பதாகவும் சொல்லலாம்)
பல்கலன் - ஒரு வைணவனுக்குரிய ஞானம், பக்தி மற்றும் வைராக்கியம் (தோடு / செவிப்பூ / பாடகம் என்ற மூன்றும் சேர்த்து!) என்ற குணங்களைக் குறிப்பதாம்.
ஆடை - அடியவர் பரமனுக்கு உரிமையானவர் என்பதை உணர்த்துவதாம்.
பாற்சோறு - பகவத் சேவை (கைங்கர்யம்) என்று உள்ளர்த்தம்
மூடநெய் பெய்து - ஆத்மார்த்தமாக, அகந்தையின்றி செய்யப்படும் (பகவத் சேவை)
கூடியிருந்து குளிர்தல் - (கோபியர்) மோட்ச சித்தியை அடைதல்
“கூடாரை” என்று தொடங்கும் பாடல், “கூடியிருந்து குளிர்ந்தோம்”
என்று நிறைவடைவது அதற்கே சான்று.
பக்தர்கள் சேர்ந்து இருந்தாலே— பசி இல்லை, பிரிவு இல்லை.
அந்தச் சேர்க்கை தரும் ஆனந்தமே, ஆண்டாளின் தெவிட்டாத பாடலின் மையம்.
No comments:
Post a Comment