அன்றிவ் வுலகம் அளந்தாய்!
பழந்தமிழ் இலக்கியங்கள், எம்பெருமானின் திருவிளையாடல்களையும் அவதார ரகசியங்களையும் இயல்பாகவே தம்முள் ஏந்திக் கொண்டுள்ளன. அதற்கு எடுத்துக்காட்டாக, “வண் புனல் தொழுநை வார் மணல் அகன்துறை / அண்டர் மகளிர் தண் கழை உடீஇயர் / மரம் செல மிதித்த மாஅல் போல” என்று அகநானூறு உரைக்கிறது. யமுனைத் தீரத்திலே ஆய்ச்சியர் மரத்தழை கட்டிக் கொள்ள, கிளையை வளைத்து உதவிய மாஅலின் (கண்ணனின்) எளிமையும் சௌலப்யமும் இங்கு சித்தரிக்கப்படுகிறது. அதேபோல், “மேவார் விடுத்தந்த கூந்தற் குதிரையை / வாய் பகுத்து இட்டு புடைத்த ஞான்று இன்னன்கொல் / மாயோன்” என்று கலித்தொகை, கம்சனால் அனுப்பப்பட்ட கேசி அசுரனை கண்ணன் அழித்த வீரச்செயலைக் குறிக்கிறது. மேலும், “மல்லர் மறம் சாய்த்த மால் போல” எனும் குறிப்பும், அவனது பராக்ரமத்தைக் கூறாமல் விடுவதில்லை.
சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சியர் குரவை, அங்கே, “மூவுலகும் ஈரடியான்… தொல்லிலங்கை கட்டழித்த சேவகன்” என்று, திரிவிக்ரம அவதாரமும், இலங்கை அழித்த ராமாவதாரமும் ஒருங்கே நினைவூட்டப்படுகின்றன. “கன்று குணிலா கனி உதிர்த்த மாயவன்” என்று வத்சாசுர வதமும் சுட்டப்படுகிறது. மணிமேகலையும், “மாமணி வண்ணனும் தம்முனும் பிஞ்ஞையும் ஆடிய குரவை” என்று, கண்ணன்–பலராமன்–நப்பின்னை இணைந்து ஆடிய தெய்வீகக் குரவையைப் பேசுகிறது. இத்தகைய பழந்தமிழ் பக்தி மரபில் வந்தவளே ஆண்டாள்.
முந்தைய பாசுரத்தில் ஆண்டாள் அருளிசெய்த விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்ட கண்ணபிரான், நப்பின்னை பிராட்டியர்க்கு நெருக்கமான கோபிகைகளை நீண்ட நேரம் காத்திருக்கச் செய்ததைக் கருதி, தன்னிடமே சிறு வருத்தம் கொண்டு, திருக்கிடையிலிருந்தபடியே அவர்களை ஆற்றுவிக்கிறான்.
ஆனால், அவனது திருநடையின் அழகை அனுபவிக்க விழையும் ஆண்டாள், இப்பாசுரத்தில், “இனி இங்கே கிடந்து அருள வேண்டாம்; எழுந்தருளி, மரியாதை நிறைந்த நடை கொண்டு, திருவாசல் மண்டபம் புகுந்து, சிம்மாசனத்தில் கம்பீரமாக அமர்ந்து, எங்கள் வருகையின் நோக்கத்தை விசாரித்தருள வேண்டும்” என்று பணிவுடன் வேண்டுகிறாள்.
கருணையே வடிவாகக் கொண்ட எம்பெருமான்; அதிலும், இக்கோபிகைகளுக்குத் தாயாராக நப்பின்னை பிராட்டியின் அபாரமான புருஷகாரம் துணை நிற்கும் போது, இச்சரணாகதர்களின் விண்ணப்பத்தை ஏற்க தாமதம் செய்வதற்கு எம்பெருமானால் இயலுமோ?
கோபிகைகள் கண்ணன் மீது கொண்ட வாத்சல்யமும் பரமபக்தியும், அவர்கள் “பல்லாண்டு” பாடுவதில் வெளிப்படுகின்றன. ஆண்டாள் பெரியாழ்வார் பெற்ற பெண்பிள்ளை அல்லவா? அதனால் தான், தந்தையின் பல்லாண்டு போலவே, துயிலெழுந்து மணிமண்டபத்தில் சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் கண்ணனுக்கு மங்களாசாசனம் செய்கிறாள்.
பரமனுக்கு அடியவர் பல்லாண்டு பாடவேண்டிய அவசியம் என்ன ? அவனே சர்வலோக ரட்சகன். அவனுக்கு எல்லா மங்களமும் உண்டாக வேண்டுமென்று (சிறியரான) அடியவர் பாடுவது எதனால் ? அது சரியா ? என்ற கேள்விகளுக்கு ஒரே பதில். அடியவருக்கு பரமன் மீதுள்ள பேரன்பின் வெளிப்பாடே இந்த பல்லாண்டு பாடுதல். வைணவத்திலுள்ள சிறப்பே இந்த மங்களாசாசனம் தான். சிறியவரும் பெரியோரை "இன்னுமோர் நூற்றாண்டு இரும்" என்று வாழ்த்தலாம்!
அன்று இரண்டடியால் உலகை அளந்தாய். இன்று எங்களுக்காக பல அடிகள் எடுத்து வைத்து நடக்கிறாய். ‘பிராட்டிமார் பூத்தொடுமாபோலே கூசிப் பிடிக்கும் திருவடிகளைக் கொண்டு காடுமோடையையும் அகப்பட என்கை’ என்று மூவாயிரப்படி சொல்கிறது. அதாவது பூப்போன்று பிராட்டியர் அணுகும் கால்களதாம் உலகை அளக்கும் வலிமை வாய்ந்த கால்கள். இதைத்தான் சிலப்பதிகாரமும் மூவுலகும் ஈரடியாய் தாவிய அடிகள்தாம் சிவக்க சிவக்க காட்டிற்கு ராமாவதாரத்தில் நடந்தன என்று சொல்கிறது. ஆண்டாளின் தந்தை பெரியாழ்வார் உன் செவ்வடி செவ்வித் திருக்காப்பு என்று பாடியது போல சிறுமியர் அவன் அடி போற்றுகிறார்கள்.
திரிவிக்ரம அவதாரத்தின் மீது ஆண்டாளுக்கு உள்ள பிரேமை நாம் அறிந்ததே. மூன்றடி மண் கேட்ட பரமனின் திருவடியைப் போற்றியே இப்பாசுரம் தொடங்குகிறது. உலகமெங்கும் நிறைந்த அவன் திருவடிநிழலே சரணாகதிக்கான ஒரே புகலிடம் என்பதைக், பாசுரத்தின் முதலடியிலேயே உணர்த்துகிறாள் சூடிக் கொடுத்த நாச்சியார்!
சகடாசுரனை உதைத்ததும், வத்சாசுரனை கன்று வடிவில் சுழற்றி எறிந்ததும்—அவ்வேளையில் கண்ணன் நின்ற கோலத்தில் தாமரைப் பாதமும் கழலும் பளிச்சென்று தோன்ற, கழல் போற்றப்பட்டது.
கோவர்த்தனத்தை குடையாக ஏந்தி ஆயர்களைக் காத்தபோது, இந்திரனை அழிக்காமல் பொறுத்த அவன் பெருந்தன்மையை, “குணம் போற்றி” என்று ஆண்டாள் புகழ்கிறாள். அந்தக் காட்சியை பெரியாழ்வார் பத்து பாசுரங்களில் மங்களாசாசனம் செய்தார்.
பகைவரை அழிக்கவும், அடியவரைக் காக்கவும், பரமனின் ஆயுதங்கள் போற்றப்படுகின்றன. “படை போர் புக்கு முழங்கும் அப்பாஞ்சசன்னியமும் பல்லாண்டே” என்ற விஷ்ணுசித்தரின் பல்லாண்டு நினைவுக்கு வருகிறது. இவ்வாறு, ஒவ்வொரு போற்றுதலும் ஆழ்ந்த பொருளுடன் நிறைந்துள்ளது.
கூர்வேல் கொடுந்தொழிலன் கொடுந்தொழிலன் நந்தகோபன் மகன் என்பதாலேயே, கண்ணனுக்கு வேல் (வென்று பகை கெடுக்கும் நின் கையில்வேல் போற்றி) உளதாயிற்று.
கோபியர்கள் மாயக் கண்ணனை, "அடி போற்றி, திறல் போற்றி, புகழ் போற்றி, கழல் போற்றி, குணம் போற்றி, வேல் போற்றி" என்று ஆறு வகையாய் (தங்கள் நாவால்) மங்களாசாசனம் செய்து அறுசுவை பெறுகின்றனர் ! இப்பாசுரத்தில் பரமனுக்கு ஆறு முறை மங்களாசாசனம் (போற்றி) செய்யப்படுகிறது. அவை பரமனின் ஆறு (ஞானம், வலிமை, செல்வம், வீர்யம், பொலிவு, செயல்திறன்) கல்யாண குணங்களைக் குறிப்பில் உணர்த்துவதாம்.
"என்றென்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்" என்பது, அடியார்களான கோபியர், பரமபதத்தில் பகவத் கைங்கர்யம் செய்ய வேண்டுவதை மட்டுமே விழைவதை உள்ளர்த்தமாகக் கொண்டுள்ளது!
"வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி" என்பது மோட்ச சித்தியை அடைவதற்குத் தடையாக இருப்பனவற்றை பரந்தாமனின் கூரிய சங்கல்பம் உடைத்தெறியும் என்பதை உட்கருத்தாக வலியுறுத்துகிறது!
"குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி" என்று கோபியர் பாடும்போது, பரமபதத்தில் ஸ்ரீவைகுந்தனாக, அனைத்துலகங்களையும் ரட்சிக்கும் சர்வேஸ்வரனாக, வெண்கொற்றக் குடையின் கீழ் எழுந்தருளியிருக்கும், பரந்தாமனின் கல்யாண குணங்கள் போற்றப்பட்டுள்ளன.
"கன்று குணிலா எறிந்தாய் கழல் போற்றி" என்பது, பாவ-புண்ய பலன்களிலிருந்து அடியார்களை மீட்க வல்ல, பரந்தாமனின் வலிமை வாய்ந்த தண்டத்தைப் போற்றும் உட்குறிப்பாகும் !
"பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி" என்பது, புலன்கள் நாடும் சிற்றின்பங்களுக்கு வேண்டி அலை பாயும் மனத்தை, பரந்தாமனைப் பற்றுவதன் மூலம் அமைதிபடுத்தி நல்வழிக்கு இட்டுச் செல்லும் உபாயத்தை உட்கருத்தாக வலியுறுத்துகிறது.
'சென்றங்குத் தென் இலங்கை செற்றாய் திறல் போற்றி' என்பது, எங்கும் நீக்கமற நிறைந்த அந்தர்யாமியாகவும், ஆச்சார்யனாகவும் இருக்கும் அம்மாயப்பிரானை, அவன் திருவடிப் பதம் அடைவதற்கு தடைக்கற்களாக இருக்கும் கர்வம், பற்று போன்றவற்றை விட்டொழிக்கத் தேவையான வலிமையான விவேகத்தை தந்தருளுமாறு கோபியர் வேண்டுவதைக் குறிக்கின்றது !
"அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி" --- உலகங்களைப் படைத்து ரட்சிப்பதால் பரந்தாமனே பரந்த இவ்வண்டத்தின் நாயகன், அவன் திருவடிகளே காப்பு !
முத்தாய்ப்பாக, “இனி எந்நாளும் உனக்கே சேவை செய்வதே எங்கள் வேண்டுதல்; வேறு எதுவும் தேவையில்லை; எங்கள் மீது மனம் இரங்காதோ?” என்று கோபிகைகள் இறைஞ்சுவதாக ஆண்டாள் பாடும்போது, கருணை வடிவான எம்பெருமான் இனியும் அருள் வழங்காமல் இருக்க இயலுமோ?
இதுவே ஆத்மார்த்தமான பல்லாண்டு; இதுவே உண்மையான சரணாகதி; இதுவே வைணவ பக்தியின் உயிர்நாதம்.
.jpeg)
No comments:
Post a Comment