Sunday, 4 January 2026

ஏற்ற கலங்கள்

 ஏற்ற கலங்கள்...




வைஷ்ணவனுக்கு, ஆச்சாரியன் இல்லாமல் ஆண்டாளைப் படிப்பது என்பது, செய்யத்தகாத காரியம். ஆச்சாரியன் இன்றிப் படிப்பது, ஆண்டாளுக்குச் செய்யும் அநாதரம் ஆகும். கம்பன், சீதாதேவியை அலங்கரிக்கும் தோழியர்களைப் பற்றி “அமிழ்தினைச் சுவை செய்தென்ன, அழகினுக்கு அழகு செய்தார்” என்று கூறினான். அந்த அழகு இயல்பாகவே இருந்தாலும், அலங்காரம் செய்யாமல் விட்டுவிடவில்லை. அதுபோலவே, ஆண்டாள் பாசுரம் தன்னிச்சையான தெய்வீக அழகைக் கொண்டதாயினும், அதற்கு உரை செய்வது ‘அழகிற்கு அழகு சேர்ப்பது’ ஆகும்.



விபீஷணனை விடப் பெரிய பக்தன் யார் இருக்க முடியும்? அவனே அரக்கர்கள் அளவற்ற பெருந்தவம் செய்தவர்கள் என்று அகத்துள் வியந்து நிற்கிறான். “பெருந்தவம் இயற்றினோர்க்கும் பேர்வு அரும் பிறவி நோய்க்கு மருந்து என நின்றான் தானே…” என்று கம்பன் சொல்லும் போது, விபீஷணன் உள்ளம் கொள்ளும் ஆச்சரியம் வெளிப்படுகிறது. அருந்தவம் உடையவர்களாகிய அரக்கர்களையும் கண்டு, அவர்களுக்குக் கூட அருளளிக்க வல்லவன் எம்பெருமான் என்று அவன் நினைக்கிறான். இதே உணர்வுதான் ஆண்டாளின் ‘ஏற்ற கலங்கள்’ பாசுரத்திலும் பிரதிபலிக்கிறது. “ஆற்றாது வந்து அடிபணியும் மாற்றாருக்கு அவன் புரியும் அருளை எங்களுக்குக் கொடு” என்று ஆயர்பாடிச் சிறுமியர் வேண்டுவது, விபீஷணன் மனநிலையையே நினைவூட்டுகிறது. அருந்தவம் உடையவர்களுக்கு அளிக்கப்படும் அருளை, தங்களுக்கும் அளிக்க வேண்டும் என்ற சரணாகதி உணர்வே அதில் நிறைந்து காணப்படுகிறது.



இதற்கு முந்தைய ‘முப்பத்து மூவர்’ பாசுரத்தில், பகவானையும் பிராட்டியையும் சேர்த்தே எழுப்பினார்கள். இப்பாசுரத்தில், பிராட்டி தானும் எழுந்திருந்து, கோபியர்களுடன் இணைந்து பகவானை எழுப்புவதாக உரை சொல்வர். அல்லது, இப்பாசுரத்திலும் பகவான்–பிராட்டி இருவரையும் இணைத்தே பாடுவதாகவும் கூறுவர். பக்தர்களிடமிருந்து எம்பெருமான் விலகியிருப்பது என்பது நினைத்துக் கூடப் பார்க்க இயலாதது. கோபியர் கண்முன்னே கண்ணனை அனுபவித்து, அந்த அனுபவ ரஸத்தில் பாடுகிறார்கள் என்பதைக் கவனித்தால், இப்பாசுரத்தின் ஆழம் நன்கு விளங்கும். ஆச்சாரியனையும் பிராட்டியையும் சரணடைந்து, அவர்களின் பரிபூர்ண அனுகிரகம் பெற்ற பின்னரே, ஒரு வைஷ்ணவனுக்குப் பரமனின் திருவுள்ளம் கிட்டி, முக்தி கைகூடும். அந்த நுட்பமான தத்துவமே இப்பாசுரத்தில் பக்தனின் சரணாகதி நிலையாகப் போற்றப்படுகிறது.



சுரந்த பாலை ஏந்திய குடங்கள் பொங்கி வழிய, தவறாது பால் சுரக்கும் பெரும்பசுக்கள் நிறைந்த நந்தகோபனின் திருமகனே! தூக்கக் கலக்கத்திலிருந்து விடுபட்டு எழுந்திருப்பாயாக! வலிமையும் கருணையும் ஒருசேரக் கொண்டவனே! பூமியில் அவதரித்த ஒளிமிக்க வடிவத்தையுடையவனே! உன் வலிமையைப் பார்த்த மாத்திரத்தில் தங்கள் வலிமையை இழந்து, உன் திருவாசலையே கதியாகக் கொண்டு, உன் திருவடிகளில் சரணடையும் பகைவர்களைப் போல, உன்னைப் போற்றித் துதி பாடியவண்ணம் நாங்கள் வந்துள்ளோம். அருள்புரிவாயாக!



இப்பாசுரத்தில் கண்ணனை எழுப்ப கோபியருடன் நப்பின்னையும் இணைகிறாள். பரமனை எழுப்பி, கோபியரின் வேண்டுதலை அவனிடம் எடுத்துச் சொல்ல ஏற்ற தருணத்தையே தாம் எதிர்பார்த்துக் காத்திருந்ததாக நப்பின்னை விளக்குகிறாள். இதைக் கேட்ட கோபியர் பேருவகை கொண்டு, இன்னும் முனைப்புடன் “ஊற்றம் உடையாய்! பெரியாய்! உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்!” என்று கண்ணனைப் போற்றிப் பாடுகின்றனர். ஆயர்குலத்தில் ஒருவனாக வாழ்ந்தாலும், அவன் பரம்பொருள் தன்மை இப்பாசுரத்தில் தெளிவாக வெளிப்படுகிறது.



அன்னங்கராச்சார் சுவாமிகள், இந்தப் பாசுரத்தின் உட்கரு ஆச்சாரிய–சிஷ்ய உறவின் மேன்மையைப் போற்றுவதாகக் கூறுவார். ஆச்சாரியனுக்குத் திரு எம்பெருமானாரையும், உத்தம சீடர்களுக்குக் கூரத்தாழ்வான், முதலியாண்டான், எம்பார் முதலியோரை உதாரணமாகச் சொல்வார்.



“மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்” என்ற சொற்றொடர், சீடர்கள் தங்கள் பகவத்–பாகவத அனுபவங்களையும் ஞானத்தையும், ஆச்சாரிய உபதேசத்திற்குச் சற்றும் மாறாது உலகிற்கு அளிக்கும் தன்மையை உணர்த்துகிறது. பால் சொரியும் என்பதில் பாலின் வெண்மை போல ஞானத்தின் தூய்மை குறிக்கப்படுகிறது. பசுக்கள் என்பது ஆச்சாரியனையும் சீடனையும் ஒருசேரக் குறிக்கும். ஒரு நல்ல சீடன் தான் பின்னர் ஆச்சாரியனாகிறான். இப்பாசுரத்தில் நான்கு ஆச்சாரிய–சிஷ்ய தலைமுறைகள் குறிப்பாகச் சுட்டிக்காட்டப்படுகின்றன.



பகவான், பக்தியில் சிறியவன்–பெரியவன், புதியவன்–பழையவன் என்ற வேறுபாடுகளைப் பார்ப்பதில்லை. யார் கொண்டாலும் குறைவின்றி உள்ளத்தில் நிறைந்து விடுகிறான். அவனை நினைக்காதவர்களையும் கூட அவன் காக்கிறான். இந்த அளவிலான வள்ளன்மையை எண்ணி முடிக்க இயலாது. அதற்கு உதாரணமாகப் பசுக்களை ஆண்டாள் எடுத்துக்காட்டுகிறாள். உன் வீட்டு பசுக்களுக்கே இத்தகைய குணம் இருக்க, அவற்றின் உரிமையாளரின் மகனான நீ எங்களில் ஒருவனல்லவா? என்று அவனது விபவ அவதார மாயையில் திளைக்கிறாள்.



அடுத்தடுத்த வரிகளில், அந்த அவதார மாயையைத் தாண்டி, அவன் அருளாலேயே இவர்களுக்கு ஸ்வரூப ஞானம் மலர்கிறது. “ஊற்றம் உடையாய்!” என்று சொல்லி, சிறிதும் அயராது உலக வியாபாரத்தை நடத்தும் அவனது ஊக்கத்தை வியந்து போற்றுகிறாள். ஜீவர்களைப் படைத்து, காத்து, அவர்களுக்கு புலன்களையும் இன்பங்களையும் அளிப்பதில் அவன் காட்டும் உற்சாகத்தை நினைத்து ஆச்சரியப்படுகிறாள். விபீஷண சரணாகதியில், எதிர்ப்புகளைக் கடந்து அவனை ரக்ஷித்த எம்பெருமானின் உறுதி நினைவிற்கு வருகிறது.



“பெரியாய்!” என்ற சொல்லில், வேதங்களை ஆண்டாள் நினைக்கிறாள். வேதம் அனந்தம்; அவனும் அனந்தன். வேதம் அனாதி; அவனும் அப்படியே. வேதமே அவனது சுவாசம் என்றாலும், அதற்கும் மேலான பெருமையுடையவன் என்று இங்கே புகழ்கிறாள். பூர்வாசார்யர்கள், இப்பெருமையையும் அதற்கேற்ற அவன் சுலபத்தன்மையையும் சேர்த்தே பலவிதமாக விளக்குகின்றனர்.


ஊற்றமுடையாய் - தன்னிடம் சரணடைந்தவரின் குற்றம் குறைகளை ஆராயாத பெருமாளின் திருக்குணம் உணர்த்தப்படுகிறது

பெரியாய் - தயையும் வலிமையும் ஒரு சேர அமைந்த தயாநிதியும், பராக்கிரமசாலியும் ஆவான் பரமன். அடியவரை ரட்சிக்க இவ்விரண்டும் அவசியமில்லையா!

உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே - பகவான் இப்பூவுலகில் எடுத்த அவதாரங்களையும், தோற்ற நிலைகளையும் குறிக்கிறது.

ஊற்றம் உடையாய்! பெரியாய்! உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே! - இவ்வாக்கியத்தில் உள்ள 5 பதங்களுக்கு அபினவ தேசிகன் சுவாமிகள் அழகான விளக்கம் அளித்துள்ளார்.

ஊற்றம் உடையாய்! - பர(த்துவ) வாசுதேவனாக, அவனது (உலகம் மற்றும் உயிர்கள்) படைக்கும் தொழிலை போற்றும் உட்குறிப்பாம்.

பெரியாய்! - பரமனது 4 வியூகத் தோற்ற நிலைகளை குறிக்கிறது.

உலகினில் - ஸ்ரீராமன், கிருஷணன் என்று பரமன் எடுத்த பூவுலக (விபவ அவதாரங்களைச் சொல்கிறது. தோற்றமாய் நின்ற - இப்பூலவுலகில் உள்ள வைணவ திவ்ய தேசங்களில், பரமன் அர்ச்சாவதார (கோயில்களில் வழிபடப்படும் வடிவம்) நாயகனாக அருள் பாலிப்பதைக் குறிக்கிறது.

சுடரே! - பரமன் ஒளி வடிவில் அந்தர்யாமியாக(எல்லா உயிர்களிலும் உள் உறைபவனாக) ஜீவாத்மாக்களில் இருப்பதைக் குறிக்கிறது!

மாற்றார் வலி தொலைந்து - அடியவர் அகந்தை, உலகப்பற்று, பொறாமை, தீய நட்பு என்று அனைத்தையும் துறந்து

உன் வாசற்கண் ஆற்றாது வந்து உன்னடி பணியும் - உன் கல்யாண குணங்களால் கவரப்பட்டு, நீயே (பரமனே) உபாயமும் (வழி) உபேயமும் (முக்தி) என்று உணர்ந்து, வேறு கதியின்றி உன் திருவடிகளில் சரண் புகுந்தோம்

போற்றியாம் வந்தோம் - பல்லாண்டு பாடுவதை / மங்களாசாசனம் செய்வதைக் குறிப்பதாம்.

இப்பாசுரத்தின்படி, பரமனின் திருவடி நிழலுக்கு வெகு அருகில் கோபியர் வந்து விட்டனர்!

No comments:

Post a Comment

ஏற்ற கலங்கள்

  ஏற்ற கலங்கள்... வைஷ்ணவனுக்கு, ஆச்சாரியன் இல்லாமல் ஆண்டாளைப் படிப்பது என்பது, செய்யத்தகாத காரியம். ஆச்சாரியன் இன்றிப் படிப்பது, ஆண்டாளுக்கு...