மாரி மலை முழைஞ்சில்...
தமிழ் இலக்கியப் பரம்பரையில் மிருக உவமைகளில் புலியைவிடச் சிங்கமே அதிகமாகப் போற்றப்பட்டு வந்திருக்கிறது. வீரத்திற்கும், கம்பீரத்திற்கும், அரசத் தன்மைக்கும் அடையாளமாகச் சிங்கமே கவிஞர்களின் மனதை அதிகம் கவர்ந்தது. அந்த மரபில் ஆண்டாள் தனிச்சிறப்பு பெற்றவள். இப்பாசுரத்தில் அவள் சிங்கத்திற்கே நாலரை அடிகளை ஒதுக்கி, அதன் முழு இயல்பையும் கண்ணனுக்கான உவமையாக விரித்து நிறுத்துகிறாள்.
ஆண்டாள் உண்மையில் சிங்கத்தை நேரில் கண்டிருக்க முடியுமா என்ற கேள்வி இயல்பாக எழுகிறது. அவள் வாழ்ந்த ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைகளின் அருகாமையில் அமைந்த பகுதி. அங்குள்ள காடுகள் அடர்ந்த வனங்கள்; புலிகள் வாழும் நிலப்பரப்பே அது. சிங்கங்கள் இயல்பாக வாழ்வது விரிந்த புல்வெளிகளும், அரிதான மரங்களும் கொண்ட சமவெளிப் பகுதிகளில் (marshland forests that are not dense). மேலும் புலியும் சிங்கமும் ஒரே நிலப்பரப்பில் இணைந்து வாழ்வதில்லை என்பதும் அறியப்பட்டதே. ஆகையால் ஆண்டாள் இயற்கைச் சூழலில் சிங்கத்தை கண்டிருக்க வாய்ப்பு மிகக் குறைவு. அதேபோல், சிங்கம் மழைக்காலத்தில் உறங்கிக் கிடக்கும் என்றும், வேட்டையாடாமல் நீண்ட நாட்கள் வாழும் என்றும் சொல்வது அறிவியல் அடிப்படையில் பொருந்தாது. சிங்கம் உறங்கினாலும் அது முழுமையான நித்திரை அல்ல; “Lions do not hibernate” என்பதே இயற்கை உண்மை.
ஆனால் இவை எல்லாம் இங்கு முக்கியமல்ல. இப்பாசுரம் இயற்கை வர்ணனை அல்ல; இது தத்துவ உவமை. கோபியர் பாடும் இப்பாடல், கிருஷ்ண சிம்மத்தின் கம்பீரத்தை, அவனது பரத்துவத்தையும், அரசரசத் தன்மையையும் வெளிப்படுத்தும் ஒரு ஆன்மிக வர்ணனை.
சூடிக் கொடுத்த நாச்சியார், மாயக்கண்ணன் துயிலெழுவதை, குகையிலிருந்து விழித்தெழும் சிங்கத்தின் எழுச்சியுடன் ஒப்பிட்டு, உவமையின் உச்சியைத் தொடுகிறாள். இதை லக்ஷ்மி நரசிம்ம மூர்த்தியை உள்ளார்ந்து கொண்டு ஆண்டாள் பாடிய பாசுரம் என்று ஸ்ரீமட உரையாசிரியர்கள் விளக்குவர்.
மழைக்காலத்தில் மலைக் குகையைத் தன் இருப்பிடமாகக் கொண்டு, மன்னிக் கிடந்து உறங்கும் அந்தச் சீரிய சிங்கம், தூக்கம் கலைந்து, தீப்பொறி பறக்கச் சிவந்த விழிகளைத் திறந்து, மணமிகு பிடறி மயிர் அலைபாய நாற்புறமும் உடலை அசைத்து, நெட்டுயிர்த்து, பின்னர் கம்பீரமாக நிமிர்ந்து கர்ஜித்து, குகையைவிட்டு வெளியேறுவது போல — காயாம்பூ நிறமுடைய மாயக்கண்ணனே! நீயும் உன் திருமாளிகையை விட்டு இங்ஙனே எழுந்தருள வேண்டும் என்கிறார்கள் கோபியர்.
‘வர்ஷா காலம் அரசர்கள் படைவீடு விட்டுப் புறப்படாதது போல, சிம்ஹமும் மழைக்காலத்தில் குகையைவிட்டு வெளியே வராது’ என்று வியாக்யானம் கூறுகிறது. ஆனால் இங்கு கண்ணன் சாதாரண சிம்ஹம் அல்ல; அவன் கிருஷ்ண சிம்ஹம்.
ஆண்டாள் முன்னமே அவனை “யசோதை இளஞ்சிங்கம்” என்று குறிப்பிடுகிறாள். இங்கு அவன் மிருகராஜன் மட்டுமல்ல; அரசர்களுக்கெல்லாம் அரசன். அவன் கட்டிலின் கீழ் உலகின் அரசர்கள் காத்திருக்கின்றனர் என்று முந்தைய பாசுரமே சொல்லிவிட்டது. உரையாசிரியர்கள் கண்ணனுடைய நடையை சதுர்க்கதி என்று வர்ணிக்கிறார்கள் — காளையின் விறு, யானையின் மதிப்பு, புலியின் சினம், சிங்கத்தின் தேஜஸ் ஆகிய நான்கும் ஒருங்கே கூடிய நடை.
“கடற்கரையில் வார்த்தை” என்று ஸ்ரீராமனையும், “தேர்தட்டில் வார்த்தை” என்று கண்ணனையும் சொல்லுவர். இங்கு கோபியர் கேட்பது சிம்மாசன வார்த்தை. பள்ளியறையில் சொல்லும் சொல் மாற்றப்படலாம். ஆனால் அரசவையில், சிம்மாசனத்தில் அமர்ந்து அரசன் அளிக்கும் வாக்கு உலகம் அறிந்ததாகவும் மாற்றமறாததாகவும் இருக்கும். அதனால்தான், “நீ சிம்மாசனத்தில் அமர்ந்து பேச வேண்டும்” என்று சிறுமியர்கள் வலியுறுத்துகிறார்கள்.
அந்தச் சிம்மாசனம் கோப்புடையது — பேரருமை கொண்டது. பரமபதத்தில் உள்ள தர்மாதிபீடத்திற்கே ஒப்பானது. தர்மம், அதர்மம், ஞானம், அஞ்ஞானம், வைராக்கியம், வைராக்கியமின்மை, பொருள், பொருளின்மை என எட்டு கால்களைக் கொண்ட ஆசனம் அது. அதில் அமர்ந்து தான் பகவான் அடியவர்களின் குறை நிறைகளை ஆராய்ந்து அருள் செய்ய வேண்டும்.
“மன்னிக் கிடந்துறங்கும்” என்ற சொல்லுக்கு ‘நிலைகொண்டு உறங்குதல்’ என்பது நேரடியான பொருள். ஆனால் ‘மன்னி’ என்ற சொல்லுக்கு அகந்தை, கோபம், துக்கம், செருக்கு என்ற பல பொருள்களும் உண்டு. இங்கு அது அச்சமற்ற கம்பீர நிலையைக் குறிக்கிறது. சிங்கம் உறங்கும்போதும் உடலை ஒடுங்கச் செய்யாது; யாரும் தன்னை நெருங்க முடியாது என்ற தன்னம்பிக்கையுடன் குகையில் படுத்திருக்கும். அதுவே “சீரிய சிங்கம்”.
மற்றொரு விதமாக, ‘மன்னி’ என்பது நீக்கமற நிறைந்து வியாபித்தல் என்றும் பொருள் கொள்ளலாம்.
இந்தப் பாசுரத்தில், அந்தக் கிருஷ்ண சிம்ஹத்தை, அவன் பெருமைக்குரிய சிம்மாசனத்தில் அமரச் செய்து, தங்கள் தேவைகளையும் குறைகளையும் கேட்டு ஆராய்ந்து அருள் செய்யுமாறு ஆண்டாள் வேண்டுகிறாள். விழித்தெழும் பரமனின் கம்பீரமும், அவன் வீறு நடையும், இதைவிடச் சிறப்பாக வர்ணிக்க இயலுமா என்பது ஐயமே.
கண்ணனின் ஆளுமை, வலிமை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு தான் ஆண்டாள் அவனைச் சிங்கத்துடன் ஒப்பிடுகிறாள். அவன் மென்மை, அழகு, கருணை ஆகியவற்றைச் சொல்லும்போது, “பூவை பூவண்ணா” என்று விளிக்கிறாள். இதுவே கோதை நாச்சியாரின் கவிநயம்.
“இங்ஙனே போந்தருளி” என்பது கண்ணனின் கம்பீர நடையைச் சுட்டுகிறது. அவன் கிடந்த அழகை கோபியர் பார்த்துவிட்டார்கள்; இனி அவன் நடையழகை அனுபவிக்க வேண்டாமா? அதனால்தான் அவனை அவன் திருமாளிகையிலிருந்து நடந்து அரசவை மண்டபத்திற்கு வருமாறு வேண்டுகிறார்கள். பக்தர்கள் மண்டபத்தில் கூடியிருக்க, பரமனும் அங்கேயே எழுந்தருள வேண்டுமே!
மேலும், விடியலில் எழுந்து, நோன்பு காத்து, திருநாமங்களைப் பாடி, ஒவ்வொருவரையும் எழுப்பி, காவலரின் அனுமதி பெற்று, நந்தகோபர், யசோதை, நப்பின்னைப் பிராட்டியை எழுப்பி, இறுதியில் கண்ணனிடம் வந்து நிற்பது — இதன் மூலம் ஆண்டாள் ஒன்றை நுட்பமாக உணர்த்துகிறாள். சரணாகதி என்பது வெறுமனே “எல்லாம் அவன் செயல்” என்று அமர்ந்து விடுவது அல்ல; அதற்கு சுயமுயற்சியும், பக்தியுடனான உழைப்பும் அவசியம் என்பதே அந்த உள்கருத்து.

No comments:
Post a Comment