Saturday, 10 January 2026

மாலே மணிவண்ணா...




மாலே மணிவண்ணா... 


வைஷ்ணவ உரையாசிரியர்களை வாசிப்பது எளிதானது அல்ல. வடமொழிப் பயிற்சி இல்லையெனில், அவர்கள் எடுத்துரைப்பது என்ன என்பதைக் grasp செய்வதே பெரும்பாலும் கடினமாகிறது. இதற்கு மேலாக, இன்னொரு உள்மனத் தடையும் எழுகிறது—“சொன்னதையே மீண்டும் மீண்டும் அலங்கரித்து சொல்கிறார்களோ?” என்ற சந்தேகம். மதநூல்களுக்கு உரை எழுதுவது, கிழிந்த துணியை மேலும் மேலும் சித்தரிப்பது போன்றது என்று எங்கோ படித்த ஞாபகம். ஆசை தீர வாழ்ந்தவருமில்லை; அழுக்கு தீரக் குளித்தவருமில்லை—சபை நாகரிகம் கருதி, அந்த உவமையின் முதல் பாதியை இங்கே மாற்றி விட்டேன்.



ஆனால் பகவானை அனுபவித்தவர்கள் உரை உரைக்கும் போதும் இப்படித்தான். அவ்வனுபவம் எளிதில் திருப்தி தருவதல்ல. “மன்சில் சே பெஹதர் லக்னே லகே ஹை யே ராஸ்தே…” என்று ஒரு இந்திப் பாடல் சொல்வதுபோல்—சேரும் இடத்தைவிட, பயணமே இனிமை. பகவான் அனுபவமும் அத்தகையதே; அடையும் தருணத்தைவிட, அடைவதற்கான நடைபாதையே ஆனந்தம் தருவது.



ஆண்டாள், “மாலே மணிவண்ணா” பாசுரத்தில், “மேலையார் சொல்வனகள்” என்று தெளிவாகச் சுட்டுகிறாள். அதாவது, இறைவனை நினைத்தல், போற்றுதல், அவன் திருவடிகளை அடைய முயற்சித்தல்—இவை அனைத்தும் அவளுடைய மூதாதையர் வகுத்துத் தந்த வழிகளே; புதிதாக உருவாக்கிய நடைமுறை அல்ல.



பறை’யை வேண்டி நீ இடைவிடாது உரைக்கிறாய்; அதே வேளையில், உன் உண்மையான நோக்கம் என்னுடன் ஐக்கியம் பெறுதலே என்றும் சொல்கிறாயே—அப்படியானால், நான் உனக்குக் கொடுக்க வேண்டியது என்ன? எவ்வாறு கொடுக்க வேண்டும்?’ என்று கிருஷ்ணன் வினவினான்.



அதற்கு ஆண்டாள் தெளிவாக மறுமொழிகிறாள்: ‘மழை பொழிந்து உலகம் செழிக்கவேண்டும் என்பதற்காக, ஆயர்குல மூப்பர்கள் எங்களை ஒரு விரதம் அனுஷ்டிக்க ஆணையிட்டார்கள்; அதுவே வெளிப்படையான குறிக்கோள். ஆனால் உள்ளார்ந்த நோக்கம்—உமது திருவடிகளின் தரிசன இன்பம். இத்தகைய அரிய வாய்ப்பை எமக்குக் கொடுத்த மூப்பர்களின் நன்மைக்காகவும், அதே நேரத்தில் உமது திவ்ய ஸ்வரூபத்தை அனுபவிக்கவும், இந்த விரதத்தை அனுஷ்டிக்க நாங்கள் உறுதி கொண்டோம்.’



புராதன மரபுப்படி, இவ்விரதம் “மார்கழி நோன்பு” என அழைக்கப்படுகிறது. அதற்குத் தேவையானவை—திவ்ய சங்குகள், அகலமான பறை வாத்தியங்கள், பல்லாண்டு பாடும் கோஷ்டிகள், மங்கள தீபங்கள், கொடிகள், பனித்துளி தடுக்கும் விதானங்களும் குடைகளும். ‘இவையனைத்தையும் எமக்கு அருளிச் செய்ய வேண்டும்’ என்று, இவ்வாசுரத்தில் ஆண்டாள் பணிவுடன் விண்ணப்பிக்கின்றாள்.



அடியார்களை உன்மேல் மயக்கங்கொள்ளச் செய்த மாலனே! நீலமணி வண்ணம் கொண்ட கண்ணனே! எங்கள் குலப்பெரியோர் காலந்தோறும் கடைப்பிடித்து வந்த வழிமுறையின் பேரிலே, நாங்களும் இந்த மார்கழி நீராடலை மேற்கொள்கிறோம். எங்கள் நோன்பிற்குத் தேவையான—பால் போன்ற நிறமுடைய, உலகமெங்கும் அதிர்வை எழுப்பவல்ல, உன் இடக்கையில் திகழும் பாஞ்சஜன்யத்தை ஒத்த வெண்சங்குகளையும்; அகலமான பறை வாத்தியங்களையும்; பல்லாண்டு பாடுவாரையும்; அழகிய தீபங்களையும்; கொடியையும்; விதானத் துணியையும்—ஆலிலையில் துயில்பவனே! கருணை கூர்ந்து எங்களுக்கு அளிப்பாயாக!



நாராயணன், பரமன், தேவாதி தேவன், நெடுமால் என்று உயர்ந்த அடைமொழிகளால் அழைக்கப்பட்ட அவனையே, இங்கே “மாலே” என்று எளிமையுடன் அழைக்கிறார்கள். இது அவர்களுக்கும் அவனுக்கும் ஏற்பட்ட நெருக்கத்தைக் காட்டுகிறது. பகவான் சர்வசுலபன்—எளிதில் அணுகக்கூடியவன். “நீங்கள்” என்று இருந்த அழைப்பு, நெருக்கம் வந்தபின் “நீ” ஆக மாறுவது போல, “நெடுமால்” இங்கே “மால்” ஆகிறான். அதேசமயம், மால் என்ற சொல்லே அவனுடைய பரத்துவத்தையும் சுட்டுகிறது—அவனே பரம்பொருள்.



கோபியர், கிருஷ்ணனிடம் நோன்பிற்காக ஆறு பொருள்களை யாசிக்கின்றனர்: உன் பாஞ்சஜன்யத்தைப் போல ஒலிக்கும் சங்கைக் கொடு; இடி போல் முழங்கும் பறையைக் கொடு; உன் நாமத்தைப் பாடும் அரையரைப் கொடு; தீபத்தைக் கொடு; கொடியைக் கொடு; நிழல் தரும் விதானத்தையும் கொடு—என்று.


ஏன் இவ்வாறு ஆறு பொருள்களை யாசிக்கின்றனர்?

  1. சங்கநாதம், நோன்புக்குப் பகைவர்களை அச்சுறுத்தி விலகச் செய்யும்.

  2. நோன்புக்கான புறப்பாட்டை அறிவிக்க பறை அவசியம்.

  3. புறப்படும்போது எதிர் நின்று காப்பிட பல்லாண்டு பாடுபவர்கள் தேவை.

  4. அதிகாலை வேளை என்பதால், முகம் காண மங்கள தீபம் வேண்டும்.

  5. தொலைவில் இருப்பவர்களுக்கு அறிவிக்க உயர்த்திப் பிடிக்கும் கொடி வேண்டும்.

  6. தலையில் பனி விழாமல் தடுக்க விதானத் துணி வேண்டும்.



இவ்வாறாக, அவர்கள் கேட்டவை அனைத்தும் சிறியவையே—அவை அனைத்தும் கண்ணனுடன் சேர்வதற்காக மேற்கொண்ட நோன்பிற்கான துணைச் சாதனங்களே.



“இவையெல்லாம் தரவேண்டும் என்று எந்த சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது?” என்று கண்ணன் கேட்கிறானாம். அதற்கு, “நாஸ்திகரைப் போல பேசாதே; ஆளறிந்து வார்த்தை சொல்” என்று சிறுமிகள் பதிலளித்ததாக ஆறாயிரப்படி சொல்கிறது. “வியாசர் சொன்னார், மனு சொன்னார்” என்று ஞானிகள் உரைப்பதையே ஆதாரமாகக் கொள்வது உனக்குத் தெரியாததா? அதுபோல, நாங்கள் கேட்பவை அனைத்தும் எங்கள் பெரியவர்கள் எங்களுக்குச் சொல்லிக் கொடுத்தவையே” என்கிறார்கள்.



அதற்கு கண்ணன், “நீங்கள் கேட்பவற்றை கொடுக்கும் சக்தி எனக்கிருக்கிறதா என்பதே ஐயம்” என்றானாம். உடனே சிறுமிகள்—“உன்னால் முடியாதது எது? ஓர் ஆலிலையில் படுத்துக் கொண்டு, உலகங்களை வயிற்றில் வைத்துக் காத்தவன் நீ இல்லையா? உன்னால் முடியாதது ஒன்றுமில்லை. நீ அருள் செய்தால் எல்லாம் நடக்கும்; செய்யாவிட்டால், எங்கள் மேல் உனக்கு இரக்கம் இல்லை என்றே சொல்ல வேண்டியிருக்கும்” என்கிறார்கள்.



இதையே நாச்சியார் திருமொழி
“என்றும் உன்றனுக்கு எங்கள் மேல் இரக்கம் எழாதது”
என்று உரக்கச் சொல்லுகிறது.


இது 26வது பாசுரம். உபநிடதங்கள், சர்வேஸ்வரனை 26வது தத்வமாகக் கூறுகின்றன. முதல் 24 தத்வங்கள் சரீரம் சம்பந்தப்பட்டவை. 25வது தத்வம் ஜீவாத்மா. அதாவது, ஜீவாத்மாவானது, 24 படிகளைக் (மோட்ச சித்திக்கு தடையாக இருக்கின்ற 24 சரீரத் தத்வங்களை வென்று) கடந்து, பரமாத்மாவை அடைய வேண்டியிருப்பதை உட்கருத்தாகக் கொண்டுள்ளதாகப் பெரியோர் கூறுவர்.

"மார்கழி நீராடுவான்* மேலையார் செய்வனகள்" என்று கண்ணனிடம் கோபியர் கூறும்போது, தாங்கள் மார்கழி நோன்பிருப்பதற்குக் காரணம், தாங்கள் கற்றறிந்தது வாயிலாக அல்ல என்றும், தங்கள் முன்னோர்களின் பழக்க வழக்கங்களை கடைபிடிப்பதை கடமையாகவும், பெருமையாகவும் கருதுவதால் மட்டுமே என்றும் குறிப்பில் உணர்த்துகின்றனர். ஆண்டாள் பாரம்பரியப் பெருமைகளைக் கட்டிக் காப்பதுவும், சான்றோரின் பழக்க வழக்கங்களை கடைபிடிப்பதுவும் அவசியம் என்று வலியுறுத்துகிறார் !


இப்பாசுரத்தில், பெருமானிடம் கோபியர் ஆறு பொருட்களை வேண்டுகின்றனர். இவை, ஆராதனையில் வரும் ஆறு ஆசனங்களை குறிப்பில் உணர்த்துவதாக அபினவ தேசிகன் சுவாமிகள் கூறுவார்.

(i) சங்கு - பிரணவ நாதம் ஏற்படுத்துவதால் மந்த்ராஸானத்தைக் குறிக்கிறது
(ii) பறை - ஸ்நானாஸனம் (திருமஞ்சனம்) நடக்கும்போது வாத்திய கோஷம் சேர்வதால்
(iii) பல்லாண்டு பாடுவோர் - அலங்காராசனம் போது சொல்லப்படும் வேத மந்திரங்களையும், அருளிச் செயல்களையும் பல்லாண்டு பாடுவதாகக் கொள்ளலாம்
(iv) கோலவிளக்கு - தீபத்தை ஏற்றுவது, பெருமாளுக்கு நைவேத்யம் (போஜ்யாஸனம்) செய்வதற்கு ஒப்பானது
(v) கொடி - புனர் மந்த்ராஸனத்தின் போது, கருடன் (கொடி) மீது பவனி வர பெருமாளின் விருப்பம் கேட்கப்படுகிறது.
(vi) விதானம் - பர்யாங்காஸனத்தின் போது, விதானத்துணி, பெருமானின் (அவர் ஓய்வெடுக்க வேண்டி) திருப்படுக்கையின் மீது விரிக்கப்படுகிறது.
மார்கழி நீராடுவான் - சரணாகதி நிலையைக் குறிக்கிறது
போல்வன சங்கங்கள் - வெண்சங்கின் பிரணவ நாதம் தூய்மையான ஞானத்தைக் குறிக்கிறது.
கோல விளக்கே - பெருமானின் பேரில் உள்ள ஆழ்ந்த விசுவாசத்தைக் குறிக்கிறது
கொடியே -- "காற்றில் அலையும் கொடியைப் போன்று, கதியற்று இருக்கும் நாங்கள் (கோபியர்) உன் அருள் வேண்டி வந்துள்ளோம்" என்பதை உள்ளர்த்தமாகக் கொண்டுள்ளது !




No comments:

Post a Comment

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா...

  கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா... கோயில்களில் இப்பாசுரம் ஓதப்படும் திருநாளன்று, நெய் வளமுடன் இனிய சர்க்கரைப் பொங்கலைச் செய்து நிவேதித்து ப...