Wednesday, 24 December 2025

தூமணி மாடத்து!

 தூமணி மாடத்து!





உறக்கத்திலிருந்து எழுப்புதல், உறக்கத்திலிருந்து எழுதல் – இவை பற்றிய கவிதைகள் உலக இலக்கியத்தில் எண்ணற்றவை. மனித வாழ்வில் இன்பம்–துன்பம், பிறப்பு–மரணம் மாறிமாறி நிகழ்ந்தாலும், “இந்தக் கணமே இனிமையானது; இதை உணர்ந்து பேச வேண்டும்; வாழ்க்கையின் எளிய செயல்களே உயிரையும் உற்சாகத்தையும் தருகின்றன” என்று தொடர்ந்து நமக்கு நினைவூட்டிக் கொண்டிருப்பவள் ஆண்டாள்.


தூங்குபவர்களை எழுப்புவது நாள்தோறும் நடைபெறும் நிகழ்வே. ஆனால் அதன் முறைகள் விதவிதமாக இருக்கின்றன. உள்ளே தாளிட்டு உறங்கியவரை எழுப்ப முடியாமல் கதவை உடைத்து எழுப்பிய நிகழ்வுகளையும், மெதுவாக அழைத்தாலே அலறிக்கொண்டு எழுபவர்களையும் நாம் பார்த்திருக்கிறோம். ஆண்டாளின் பாசுரங்களில் எழுப்பப்படுபவர்கள் உண்மையில் தூங்கிக்கொண்டிருப்பவர்கள் என்று சொல்ல முடியாது. கண்ணனை நாள் முழுதும் நினைத்துக்கொண்டிருப்பவர்கள் எவ்வாறு உறங்க முடியும்? இருப்பினும், “எல்லா இடங்களிலும் நிறைந்திருப்பவனான இறைவன் எங்கேயாவது விலகிவிடுவானோ” என்ற அச்சம் பக்தர்களுக்கு இயல்பானதே. அந்த அச்சத்தைப் போக்குவதற்கே ஆண்டாளின் பாடல்கள் முயல்கின்றன.


இந்தப் பாசுரத்தில், ஆண்டாள் ஆத்மஸ்வரூப ஞானம் நிறைந்த ஒரு கோபிகையை எழுப்புகிறாள். அந்தக் கோபிகை, சீதாதேவியைப் போலவே, ஜீவாத்மாவெனும் தமது சொத்தைத் தேடி வந்து ஏற்றுக்கொள்ளுதல் என்பது ஸ்வாமியான பரமாத்மனின் கடமை என்ற உறுதியான நம்பிக்கையுடன் விளங்குகிறாள். "எல்லை நீத்த இவ்வுலகம் யாவையும் என் சொல்லினார்ச்சுடுவேன், அது தூயவன் வில்லனுக்கு மாசென்று வீசினேன்..." என்றும், ஜானகி என்று ஒரு தழல் நடுவண் தங்களால், அனகன் கையெனும் அளவில் ஊதையால், கனகம் நீடு இலங்கை நின்றுருக கண்டியால்..." என்ற கம்பனின் வரிகள் மூலம் சீதாதேவி, என்னால் இங்கிருந்து மீண்டு வர முடியும் ஆனாலும் ஸ்வாமியின் கடமை என்னை மீட்பது ஆகையால் காத்திருப்பேன் என்று சொன்ன மனோபாவமே இந்த சகியிடம் காணப்படுகிறது...


வெளியில் இருந்த கோபிகைகள், இலக்குவனைப் போல இடைவிடாத கைங்கர்யமே தம் ஸ்வரூபம் எனக் கருதி சேஷத்வ நிஷ்டையில் நிலைத்திருந்தனர். ஆனால் உள்ளே இருந்த இக்கோபிகை, பரமாத்மனுக்குத் தன்னை முழுமையாக ஒப்புவித்தல் என்பதே உத்தம நிலை என எண்ணி, பரதனைப் போல பரதந்திரிய நிஷ்டையில் திளைத்திருந்தாள். வெளியில் இருந்தவர்கள் புருஷார்த்தத்தின் இனிமையால் ஈர்க்கப்பட்டனர்; உள்ளே இருந்த கோபிகை, அந்தப் புருஷார்த்தத்தை அடையும் உபாயத்தின் மஹிமையிலேயே முழுமையாக மூழ்கியிருந்தாள். வெளியில் இருந்தவர்கள் எம்பெருமானை உடனடியாக அடைய வேண்டிய ஆவலுடன் இருந்தனர்; ஆனால் உள்ளே இருந்த கோபிகை, கபீரின், "மாலி சீன்சை சௌ கடா, ருது ஆயி பல் ஹோய்.. (ஆயிரும் குடம் நீரிறத்தாலும், நேரம் வந்தால் மட்டும் பூ பூக்கும்)" என்ற வரிகளுக்கேற்ப, காலம் கைகூடும் பொழுது நிச்சயமாகப் புருஷார்த்தம் கிட்டும் என்ற அமைதியான உறுதியுடன் இருந்தாள்.


முந்தைய பாசுரத்தில், ஆண்டாள் ஒருகாலத்தில் இச்சம்சார லீலா விபூதியில் வாழ்ந்து, பின்னர் விடுதலை பெற்று பரமபதம் அடைந்த முக்த ஜீவாத்மாவைப் போன்ற மனநிலையுடைய கோபிகையை எழுப்பினாள். இப்பாசுரத்தில் உள்ள கோபிகையோ, எப்போதும் எம்பெருமானின் திவ்ய தாமத்தில் கைங்கர்யத்தில் நிலைத்து நிற்கும் நித்ய ஜீவாத்மாவைப் போன்ற உயர்ந்த மனநிலையுடன் விளங்குகிறாள். அதனால், இப்பாசுரம் உபேயத்தைவிட உபாயத்தின் மஹிமையை முன்னிறுத்தி, பரமாத்மனின் கருணையிலும் ஜீவாத்மாவின் பரதந்திரியத்திலும் உறுதியான நம்பிக்கையை உபந்யாச நயத்துடன் வெளிப்படுத்துகிறது.


இந்தப் பாடலில், கண்ணனுக்கு மிகப் பிரியமான ஒரு கோபிகையை எழுப்புவதற்காக, அவளது தாயாரை துணை வேண்டுவதைப் போல், இதே சூழலில் நம்மாழ்வார் பத்து பாசுரங்கள் பாடியுள்ளார். பராங்குச நாயகியைப் பற்றி, அவளது தோழி அவளது தாயாரிடம் உரையாடுவதாக அமைந்துள்ள அந்தத் தொலைவில்லிமங்கல பாசுரங்கள் ஒப்புநோக்கத்தக்கவை. அவற்றின் முதல் பாசுரம் “துவளில் மாமணி மாடமோங்கு தொலைவில்லிமங்கலம்” என்று தொடங்குகிறது. இதனைப் பூர்வாசார்யர்கள் “தூமணி மாடத்து” என்ற பதத்துடன் இணைத்து அற்புதமான அர்த்த விசேஷங்களை அருளியுள்ளனர்.


‘தூமணி மாடம்’ என்பதை ‘துவளில் மாமணிமாடம்’ என்ற நம்மாழ்வார் வாக்கோடு அண்ணங்கராச்சாரியார் ஒப்பிடுகிறார். ‘துவள்’ என்றால் தோஷம்; ‘துவளில்’ என்றால் குற்றமற்ற தூய்மை. ஆண்டாளே ‘தூ’ என்ற சொல்லை ‘தூமலர்’, ‘தூ சாகும்’ என்பதுபோல் பயன்படுத்தியுள்ளார். தமிழில் ‘தூ’ என்பதற்கு தூய்மை, ஒளி, வெண்மை, தசை, இறைச்சி, இறகு எனப் பல பொருள்கள் உண்டு.


தேவாதிதேவனான பெருமானிடம் தேவர்கள் முத்து, பவளம், ரத்தினங்களை சமர்ப்பிக்கின்றனர். அவற்றில் தோஷமுள்ளவற்றைச் சுத்திகரித்து ‘துவளில் மாமணி’களாக மாற்றி பெருமான் தன் மாளிகையில் வைத்துக் கொள்கிறான் என்றும், தோஷமே இல்லாத ரத்தினங்களைக் கொண்டு ‘தூமணி மாடம்’ கட்டி தன் நாயகிக்கு அருள்கிறான் என்றும் ஆச்சார்யர்கள் விளக்குகின்றனர். அத்தகைய தூமணி மாடத்தில் விளக்குகள் சுற்றிலும் எரிந்து, தூபம் கமழ, துயிலணையில் ஆனந்தமாக அந்த கோபிகை உறங்குகிறாள்.


முந்தைய பாசுரத்தில் “கீழ்வானம் வெளுத்து விட்டது” என்று ஆண்டாள் அறிவித்துவிட்டாள். விடிந்த பிறகும் விளக்குகள் எரிகின்றன என்பதை உணராமலேயே உறங்கும் நிலையை இங்கு சுட்டுகிறார். காலை ஒளியில் புகை கண்ணுக்குத் தெரியாவிட்டாலும், அதன் மணம் உணரப்படுகிறது. பார்ப்பது விளக்குகளையே; நுகர்வது அவற்றின் புகை தரும் சுகந்தத்தை.


தூமணி மாடம் என்பது, அழிவில்லாத, ஞானத்தை உள்ளடக்கிய நான்மறையை (வேதம்) குறிப்பில் சொல்கிறது. "சுற்றும்" என்பது வேதத்தின் ஆறு அங்கங்களை (சிக்க்ஷை, கண்டம், நிருக்தம், வியாகரணம், கல்பம், ஜோதிஷம்) குறிக்கிறது. விளக்கு என்பது வேதசாரத்தை புரிந்து கொள்ள உதவும் ஸ்மிருதி, புராண, உபநிடதங்கள் சார்ந்த ஞானத்தை உள்ளர்த்தமாக கொண்டுள்ளது. இப்போது உறங்குபவளின் ஞானச் சூழல் புரிகிறதல்லவா ? "தூபம் கமழ" என்பது ஞானம், அனுஷ்டானம் மற்றும் வைராக்கியம் என்ற மூன்று விஷயங்களை குறிப்பில் உணர்த்துவதாக கூறுவார். "துயிலணை மேல் கண் வளரும்" என்பது வளர்ந்து கொண்டே இருக்கும் (அப்பெண்ணின்) பகவத் ஞானத் தன்மையைக் குறிக்கிறது!


இந்தப் பாசுரத்தில் ஆண்டாளுடன் கூடிய கோபிகைகள், கண்ணனுக்குப் பெரிதும் பிரியமானவளை எழுப்பச் செல்கின்றனர். ஆயர் குலத்தில் ஒருவருக்கொருவர் சொந்தக்காரர்கள்; அதுபோலவே பகவத் பக்தர்கள் அனைவரும் பாகவத பந்துக்கள். பரமாத்மா அனைவருக்கும் ஆத்ம பந்து. அந்த உரிமையில்தான் ஆண்டாள் “மாமன் மகளே!” என்று அன்புடன் அழைக்கிறாள்.


அந்தக் கோபிகை கண்ணனை மறந்தவள் போல் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதால், ஆண்டாள் அவளது தாயாரை நோக்கி “மாமீர்! அவளை எழுப்புங்களேன்” என்று வேண்டுகிறாள். இங்கு சொல்லப்படும் தத்துவம்: உயர்ந்த புருஷார்த்தமான மோக்ஷத்தை அடைய புருஷகாரம் தேவை; அதற்காக ஆசார்ய அனுக்ரஹம் அவசியம் என்பதே.


பரமன் இருக்குமிடமான தூமணிமாடத்தில் தன் ஞானத்தால் ப்ரஹ்மானந்தத்தை அனுபவித்தபடி அந்த கோபிகை இருக்கிறாள். அந்த தூமணி மாடத்தினுள் நுழைய வெளியே இருப்பவர்களுக்கு தெரியவில்லை. அதனால் உள்ளே இருக்கும் கோபிகையையே பார்த்து மணிக்கதவை திற! என்று கேட்கிறார்கள். “மாமன் மகளே! மணிக்கதவைத் திற!” என்ற அழைப்பு, எளிதில் உணர இயலாத பகவத் விஷயங்களை உபதேசிக்குமாறு சீடன் ஆசார்யனை உள்ளத் தூய்மையுடன் வேண்டுவதை குறிக்கிறது. ஆசார்யனே நமது தமோ குணங்களும் வினைப்பயன்களும் எனும் கதவுத் தாளை அகற்றி, மோட்ச சித்திக்கு வேண்டிய ஞானத்தை அருள வல்லவர்.


அவளோ வாய் திறந்து பேசவில்லை. ஒருவேளைஅவளுக்கு காதே கேட்கவில்லையோ? அல்லது நிஷ்காம்யமாக அப்படியே ப்ரஹ்ம நிஷ்டையில் உட்கார்ந்து விட்டாளோ? அல்லது அனந்தலோ? அனந்தல் என்பதற்கு கர்வம், இறுமாப்பு என்றும் பொருள் கொள்வர். க்ருஷ்ணனை விட்டால் வேறு யார் நம்மை ரக்ஷிக்க தக்கவர் இருக்கிறார்கள்என்ற இறுமாப்பில் இவள் இருக்கிறாளோ? அன்யபரையாக பிறரது கட்டுப்பாட்டில் சிக்கிக்கொண்டாளோ? சரி அவள்தான் பேச மறுக்கிறாள். மாமீர்..நீங்களாவது அவளை எழுப்பீரோ? அவள் எதாவது மந்திரத்தினால் கட்டப்பட்டு பெருந்துயிலில் ஆழ்ந்துவிட்டாளோ? என்று ஆண்டாள் கேட்கிறாள்.


அவ்வடியவளை எழுப்ப வைணவ ஆச்சார்யர்களிடம் (மாமீர்) வேண்டுகோள் வைக்கப்படுகிறது! பகவத் ஞானத்தால் உண்டான தண்ணொளி மிகு நிலையானது (state of enlightenment), "ஊமையோ? அன்றிச் செவிடோ ? அனந்தலோ?" என்பதன் உள்ளர்த்தமாம்! "உன் மகள்" என விளிக்கப்படுவதால், அவ்வடியவள் வைணவ ஆச்சார்ய சம்பந்தம் உடையவள் என்பது புலப்படுகிறது...


இங்கே மந்திரம் என்பது திருமந்திரம் எனப்படும் ஓம் நமோ நாராயணாய என்ற திருவஷ்டாக்ஷர மந்திரத்தை அனுசந்தித்து அதிலேயே தோய்ந்து போய்விட்டாளோ? அந்த பெண்ணின் தாயார் – நம்மாழ்வார் சொன்னபடி – கண்ணனின் நாமந்தவிர வேறெதுவும் அவள் காதுகளில் விழுவதில்லை – அவன் பெயரை சொல்லிப்பாருங்கள் என்று சொல்கிறாள். ‘மாமாயன் – மாதவன் – வைகுந்தன் என்றென்று ‘ எனும்போது ஒவ்வொரு நாமத்தையும் முதலில் வைத்து ஒவ்வொரு சகாஸ்ரனாமமே பாடுகிறோம் என்கிறாள் ஆண்டாள் .


இங்கே ‘மாமாயன்’ என்பது நமக்கு பிறப்பு கொடுத்து நமது முன் ஜென்ம நிலைகளையும் அவனுடனான சம்பந்தத்தையும் மறைத்தான்.
‘மாதவன்’ என்பது மா – லக்ஷ்மியின், தவ – கணவன், ஸ்ரீ:பதி என்று பொருள் – அப்படி பிராட்டியுடன் கூடி எங்களை ரக்ஷிக்கிறான்.
‘வைகுந்தன்’ என்ற திருநாமம், இங்கிருந்து நாம் சரணாகதி செய்து, பிரபத்தி மார்க்கத்தில் அவனை அடையப்போகிற இடம்.


ஆக நாம் வந்தது, இருந்தது, போக போவது ஆகிய எல்லா நிலைகளுக்கும் காரணன் அவனே என்பது தேறும். இவ்வாறு அவன் நாமங்களை பாட அந்த கோபிகையும் தன் துயில் விடுத்து இவர்களுடன் இணைந்தாள்.


‘மாமாயன்’ என்ற சொல்லுக்கு பல அர்த்தங்கள் உண்டு: ஆயர் குலத்தில் சிறந்தவன்; திருமகள் சம்பந்தம் உடையவன்; தர்மத்தை நிலைநாட்ட அவதரித்த மகாவிஷ்ணு. இவ்வாறு ‘மாமாயன்’ பற்றி மாய்ந்து மாய்ந்து சொல்ல வேண்டிய அளவுக்கு இந்தப் பாசுரம் ஆழமும் இனிமையும் கொண்டதாக விளங்குகிறது.


6 ம் பாடல் முதல் 15 ம் பாடல் வரை, பள்ளியெழுச்சி பாடல்கள். இவை ஆண்டாளை தவிர்த்து மற்ற ஆழவர்களை எழுப்புவதாக ஆச்சார்யர்கள் விளக்கமளித்துள்ளார். 6 ம் பாடல் பெரியாழவார், 7 - தொண்டரடிப்பொடி; 8 - நம்மாழவார்; 9 - திருமழிசை என்று விளக்குகின்றனர். எப்படி என்பதை நேரம் கிடைக்கும்போது நாம் பார்க்கலாம்.

ஆண்டாள் திருவடிகளே சரணம்

Tuesday, 23 December 2025

கீழ்வானம் வெள்ளென்று!

கீழ்வானம் வெள்ளென்று! 



காலை நேரத்தை ஆண்டாளைப் போல் பாடல்களால் மகிமைப்படுத்தியவர்கள் அரிது. திருப்பள்ளியெழுச்சியால் காலைச் சிறப்பித்த தொண்டரடிப்பொடி ஆழ்வாரும், திருவெம்பாவையால் காலையைப் பாடிய மாணிக்கவாசகரும் நினைவிற்கு வருவர். ஆயினும் அவை அனைத்தும் ஆண்களின் காலை; ஆண் ஆதிக்கம் மேலோங்கிய காலைகள். பெண்கள் அவற்றில் மிகக் குறைவு. ஆனால் ஆண்டாளின் காலை வேறு. அது பெண்களின் காலை. இளம்பெண்களின் காலை. ‘விருத்தைகள்’ — வயது முதிர்ந்த பெண்கள் — எழுந்து, “இது உங்களுக்கு உரிய நேரமல்ல” என்று தடுக்கும் முன், கண்ணனை அடைய அவசரப்படும் இளமைத் துடிப்புள்ள பெண்களின் காலை அது.


இந்த எட்டாவது பாசுரத்தின் உள்ளார்ந்த பொருளை விரித்து நோக்கும்போது, ஆண்டாள் தம் தோழியருடன் இணைந்து ஒரு விசேஷமான கோபியைத் துயிலெழுப்பச் செல்கிறாள். அந்தக் கோபி எத்துணை சிறப்புடையவள் என்றால், ஒருவரோ இருவரோ அல்ல; மிக்குள்ள பிள்ளைகளும் — எல்லா தோழியரும் ஒன்றுகூடி வந்து அவளை எழுப்ப வேண்டிய நிலை.
ஏன்? அவள் கண்ணனுக்கே மிகுந்த பிரியமானவள்; அலங்காரத்திலும், ஆனந்தத்திலும், உற்சாகத்திலும் பூரித்தவள்.


முந்தைய பாசுரங்களைப் போலவே, இப்பாசுரத்திலும் ஒரு நுட்பமான கற்பனை உரையாடல் அமைந்துள்ளது. வெளியே நின்று ஆண்டாள் பேசுகிறாள்; உள்ளே துயில்கின்ற கோதுகலமுடைய பாவாய் பதிலளிக்கிறாள். இந்த உரையாடலின் ஊடே தான் ஆழ்ந்த வைஷ்ணவ தத்துவங்கள் மெதுவாக வெளிப்படுகின்றன.


ஆண்டாள் கூறுகிறாள்: உலகியலில் மூழ்கிய சாம்சாரிகள் இரவில் உறங்கி, விடியற்காலத்தை எதிர்பார்த்து, மறுநாள் உலகச் செயல்களில் மூழ்க விரும்புகிறார்கள். ஆனால் நாங்கள் — பகவத் அனுபவத்தில் திளைக்கும் அடியார்கள் — கண்ணனுடன் கூடி இருப்பதற்குக் கிடைக்கும் சிறு வாய்ப்பையும் பெரும் பேறாகக் கருதி, அதை விடாது பற்றிக் கொள்கிறோம். பெரியோரின் அனுமதியோடு, கண்ணனுடன் தெய்வீக அனுபவம் பெறுவதற்கான இத்தகைய அரிய நேரத்தில், நீ மட்டும் இன்னும் துயிலில் இருப்பது எவ்வாறு பொருந்தும்? பாராயோ! எங்கள் ஆன்மிக அனுபவத்தைத் தடுக்கிறவர்களே எழுந்துவிட்டார்கள். ஆனால் நீ மட்டும் இன்னும் உறங்கிக் கொண்டிருக்கிறாய்!


அதற்கு கோதுகலமுடைய பாவாய் கேட்கிறாள்: “இப்போது எழுந்திருக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்று எப்படித் தீர்மானிக்கிறீர்கள்?


ஆண்டாள் பதிலளிக்கிறாள்: கீழ்வானம் வெள்ளென விளங்குகிறது. கிழக்குத் திசையில் வெண்மை தோன்றி, சூரிய உதயத்திற்கு முன்சூசனையாக நிற்கிறது — கீழ்வானம் வெள்ளென்று



அதிகாலையில் வானம் உடனே வெண்மையாகிவிடாது. இருளிலிருந்து சிவப்பு, மஞ்சள் எனப் பல நிறங்களைக் கடந்து, மெதுவாக முழு வெண்மையை அடையும். அதுபோலவே, அடியார்களும் ஆச்சார்ய சம்பந்தத்தின் துணையோடு பல அனுபவ நிலைகளைத் தாண்டி, இறுதியில் ஞானத் தெளிவை அடைகிறார்கள்.


ஒரு காலத்தில் “East is red” என்ற மேற்கத்திய சொல் பரவியது. ஆனால் இங்கே ஆண்டாள், “கிழக்கு வெளுத்தது” என்கிறாள். வெண்மை — சாத்வீகத்தின் சின்னம். சத்துவ குணம் ஓங்கும் காலம் அது. “அசேதனத்திற்கும் சைதன்யம் உண்டாகும் படி சத்த்வோத்தரமான காலமாயிற்று” என்று வியாக்யானம் கூறுகிறது. உயிரற்றவைகளுக்கும் உயிர் தரும் காலை. மீண்டும் இருள் சூழும் என்பதைக் ஆண்டாள் அறியாதவளா? அறிந்தவள்தான். ஆனால் இருளுக்குப் பின் மீண்டும் காலை வரும் என்பதையும் அவள் அறிந்திருக்கிறாள். “நாங்கள் காலைக்குக் காத்திருப்பவர்கள்; உங்களைப் போன்றவர்கள் இருளுக்குக் காத்திருப்பவர்கள்” என்ற நுட்பமான சுட்டுரை இங்கே மறைந்துள்ளது.


அதைச் சிரிப்புடன் மறுத்து கோதுகலமுடைய பாவாய் கூறுகிறாள்: நீங்கள் அனைவரும் கண்ணனைப் பிரிவில்லாமல் காண ஆவலுற்று, எப்போதும் கிழக்கையே நோக்கிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் — திங்கள் திருமுகத்து சேயிழையார். உங்கள் முக ஒளியே வானில் பிரதிபலித்து வெண்மையாகத் தோன்றியிருக்கலாம். மேலும், பால், தயிர், மோர் போன்ற வெண்மையானவற்றையே நீங்கள் எப்போதும் காண்பதால், வானமும் உங்களுக்கு வெண்மையாகத் தோன்றுகிறது. வேறு ஏதாவது உறுதியான அறிகுறி உண்டா?


அதற்கு ஆண்டாள் கூறுகிறாள்: பனித்துளிகள் படர்ந்த புல்லை மேய்வதற்காக எருமைகள் வயல்களில் பரவி விட்டன. இது விடியற்காலம் வந்ததற்கான அடையாளமல்லவா? இன்னும் கேட்டால் — இப்போது நீ எழவில்லை என்றால், பசுக்களின் பின்னே சென்று தன் தினசரி கடமையைச் செய்யக் கண்ணன் புறப்பட்டு விடுவான்.


‘சிறு வீடு’ என்ற சொல், வீட்டின் முன்புறத்தில் உள்ள புல்வெளி, தோட்டம் என்ற பொருளையும் தரும். காலையில் பனிப்புல் மேய விட்ட பிறகே ஆயர்கள் பாலைப் பறிப்பார்கள் என்பது ஆயர் மரபு. அக்னிஹோத்ரம், ஹோமம் முதலியவற்றில் வளர்ந்த ஸ்ரீவில்லிபுத்தூர் பிராமண கன்னி, இத்தகைய ஆயர் வழக்கங்களை எவ்வாறு அறிந்தாள்?
அதற்கு ஒரே விடை — ஆண்டாள் தன்னை முழுமையாக கோபியாகவே வரித்துக் கொண்டாள். பெரியாழ்வார் மகளாகிய அவள், வேத விதிகளைக் காட்டிலும், ஆய்ச்சியரின் வாழ்வியலோடு ஒன்றிப் போனாள்.



எருமை சிறுவீடு மேய்வான் பரந்தன காண் - பாகவத அனுபவத்தில் சதா சர்வகாலமும் திளைத்திருப்பதால், மோட்ச சித்தியை அடைய நிறைய சமயம் எடுத்துக் கொள்ளும் அடியவரை, பரபரப்பின்றி நிதானமாக மேயும் எருமை உருவகப்படுத்துகிறது. 'சிறுவீடு' என்பதை சிற்றின்பமாக அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்। தொடர்ச்சியாக 'பரந்தன காண்' எனும்போது தமோ குணங்கள் விலகிப் போவதைக் குறிப்பதாக எடுத்துக் கொள்ளலாம் !!!


இதையும் மறுத்து கோதுகலமுடைய பாவாய் கூறுகிறாள்: உங்கள் முக ஒளி வானில் பிரதிபலித்ததால் இருள் அகன்றது. அந்த இருளையே நீங்கள் எருமைகள் என்று தவறாக எண்ணிக் கொண்டீர்கள். 



ஆண்டாள் விடை தருகிறாள்:நாங்கள் அறியாமையால் மயங்கியவர்கள் என்று நீ கருதினாலும், இன்னும் இரவுதான் என்பதற்கான காரணத்தை நீயே சொல்ல வேண்டாமா?



அப்போது கோதுகலமுடைய பாவாய் கூறுகிறாள்: திருஆய்ப்பாடியில் ஐந்து இலட்சம் கோபிகள் உள்ளனர். அவர்களில் சில ஆயிரம் பேர் மட்டுமே இங்கு வந்திருக்கிறார்கள். மற்றவர்கள் இன்னும் உறங்குகிறார்கள் என்பதே விடியல் வரவில்லை என்பதற்குச் சான்று.



ஆண்டாள் பதிலளிக்கிறாள்:
மிக்குள்ள பிள்ளைகளும் — மற்றவர்கள் எல்லோரும் சென்றுவிட்டார்கள். 


மிக்குள்ள பிள்ளைகளும் - பக்தி யோகத்தை அனுசரிக்க தங்களின் தகுதியின்மையை உணர்ந்ததால், சரணாகதி மார்க்கத்தைத் தேர்ந்தெடுத்த அடியவரை குறிப்பில் உணர்த்துகிறது.



அதற்கு பாவாய்: அவர்கள் என்னை புறக்கணித்துவிட்டுச் சென்றார்களா?



ஆண்டாள்: அப்படியல்ல. கூட்டம் பெரிதாக இருந்ததால், நீ வரவில்லை என்பதை அவர்கள் உணரவில்லை. உன்னை விட்டுச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இல்லை.



பாவாய்: அவர்கள் எதற்குச் செல்கிறார்கள்?



ஆண்டாள்: போவான் போகின்றாரை — போக வேண்டும் என்பதற்காகவே போகிறார்கள்.
அது, ஜீவாத்மா அர்ச்சிராதி மார்க்கத்தில் சென்று பரமபதத்தை அடைவதைப் போல. கம்சனின் ஆணையால் கண்ணனைச் சந்திக்கச் சென்ற அக்ரூரனைப் போல. திருமலைக்குச் செல்லும் பக்தர்களைப் போல.


பாவாய்: அவர்கள் என்னை விட்டுச் சென்றிருந்தால், நான் ஏன் எழ வேண்டும்?



ஆண்டாள்: போகாமல் காத்து — அவர்கள் போகத் தொடங்கியபோது, நீ வரவில்லை என்று நான் சொன்னேன். உடனே அவர்கள் நின்றுவிட்டு, உன்னை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.



இதன் மூலம் ஒரு ஆழ்ந்த தத்துவம் விளங்குகிறது:
பிற பகவதர்களின் துணையின்றி பகவானை அணுகக் கூடாது. விபீஷணனும் வானரர்களின் உதவியோடு தான் ஸ்ரீ ராமனைச் சரணடைந்தான்.

“வேதம் அறிந்தவர்களினூடே
தேவர்களின் தலைவனை வழிபடுக”
— திருவாய்மொழி 4.6.8

அக்ரூரன், கம்சனின் ஆணையால் கண்ணனை அழைத்து வரச் சென்றபோது, ஆனந்தமும் வருத்தமும் கலந்து இருந்தான் — பகவானை காணும் பேரானந்தம்; அந்தச் சந்திப்பின் நோக்கம் கொடூரமானது என்ற துயரம்.


உன்னை கூவவான் வந்து நின்றோம்
அவர்களை அங்கே நிறுத்திவிட்டு, உன்னை அழைக்கவே இங்கு வந்தோம். அவர்கள் விரதஸ்தலத்திற்குச் செல்கிறார்கள்; நாங்கள் உன்னை எழுப்பவே வந்தோம்.



பாவாய்: என்னை எழுப்ப இவ்வளவு முயற்சி ஏன்?


‘கோதுகலமுடைய பாவாய்’ — கௌதுகலம் எனும் ஆனந்தமும் உற்சாகமும் நிறைந்தவள்; கண்ணனுக்கே மிக நெருக்கமானவள்.



பாவாய்’ — நீ பெண். பெண் படும் பாடு பெண்ணுக்கே தெரியும். எங்கள் விண்ணப்பங்களை கேட்க மறுக்கும் பகவானைப் போல நீயும் நடந்து கொள்வாயா?
எங்களுடன் வராவிட்டாலும், விழித்தெழும் போது உன் அழகையாவது காண விரும்புகிறோம். அல்லது உன் வாசலுக்கு வந்து உன்னை எழுப்பிய பேறாவது எங்களுக்கு கிடைக்கட்டும்.



பட்டர் வாக்கு இங்கே பொருந்தும்: “முலை எழுந்தார்படி மோவாயெழுந்தார்க்குத் தெரியாதிறே” — பெண் துன்பம் பெண்ணுக்கே தெரியும்.



உன்னைக் கூவுவான் வந்து நின்றோம் கோதுகலமுடைய பாவாய்! எழுந்திராய் - 'கோதுகலமுடைய பாவாய்' என்ற பதம் கண்ணனுக்கு மிக நெருக்கமான, அவனது பேரன்புக்குரிய கோபியர் குலப்பெண்ணை குறிப்பில் உணர்த்துகிறது. அதனால் தான், மற்ற கோபியர், இவளை தங்களுடன் அழைத்துச் செல்வதன் வாயிலாக, கண்ணனின் அருளுக்கு எளிதில் பாத்திரமாகி விடலாம் என்றெண்ணி இவளை துயிலெழுப்புகின்றனர்.



பாவாய்:  நான் எழுந்தால் எனக்கு என்ன பயன்?



பாடிப் பறை கொண்டு — நாம் இப்போது கண்ணனை மனதுக்குள் அல்ல; நேரில் அனுபவிக்கப் போகிறோம். அவன் புகழை வெளிப்படையாகப் பாடப் போகிறோம். அதற்குப் பலனாக கண்ணன் பறை தருவான். மற்றவர்களுக்கு அது விரதப் பலன்; கோபிகளுக்கு — கைங்கரியம்.

பாடிப் பறை கொண்டு - ஆச்சார்யனைப் போற்றி தனியன்கள் பாடுவதும், அவர் மேன்மையை பரப்புவதும்


பாவாய்:  அவன் நிச்சயம் பறை தருவானா?


மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய தேவாதி தேவனை
நித்யசூரிகள் சேவை செய்யும் தேவாதிதேவன் தான். ஆனால் நம் தடைகளை அகற்ற பூமிக்கு வந்தவன்.


கேசி — அகங்காரத்தின் உருவம்.
மல்லர்கள் — காமம், கோபம்.
இவை அனைத்தையும் வென்றவன் கண்ணன்.


சென்று நாம் சேவித்தால்
அவன் நம்மிடம் வருவதும் உண்டு; நாம் அவன் இடத்திற்குச் செல்வதும் உண்டு.
“பிரிவால் மெலிந்த நம் உடல்களை அவனுக்குக் காட்டச் செல்கிறோம்” என்று பெரியாச்சான் பிள்ளை விளக்குகிறார்.



ஆவாவென்று ஆராய்ந்து அருள் ஏலோர் எம்பாவாய்
நம் நிலையை ஆராய்ந்து, இரக்கம் கொண்டு, அவன் அருள் புரிவான்.



இறுதியாக, பக்தி தனிமையில் மட்டுமே அனுபவிக்க வேண்டுமென்ற எண்ணம் பிழை. பெரும்பாலும், ஒரே மனநிலையுள்ள பக்தர்களோடு கூடி அனுபவிப்பதே மனத்தை உறுதியாக வைத்திருக்கும்.
நண்பர்களையும் உறவினர்களையும் பகவத் அனுபவத்தில் சேர்த்துக் கொள்ள முயல்வதே, பகவானுக்குச் செய்யும் உயர்ந்த கைங்கரியம்.'


ஆண்டாள் கூறுவது போல:
“கோதுகலமுடைய பாவாய்!
மற்றவர்களை நிறுத்திவிட்டு,
உன்னையும் பகவத் அனுபவத்தில் சேர்க்கவே
நான் இங்கு வந்தேன்.”


எவ்விஷயம் கண்ணனால் ஆராயப்படுகிறது? கோபியரின் கர்ம,ஞான,பக்தி யோகங்களை அல்ல, தாஸ்ய பாவம் மட்டுமே, பரிபூர்ண சரணாகதி... இந்தப் பாசுரம், கோஷ்டியாக (கூட்டாக) ஆச்சார்ய உபதேசத்திற்குச் செல்லும் சீடர்களை குறிப்பில் உணர்த்துகிறது.


ஆவாவென்றாராய்ந் தருளேலோரெம்பாவாய் - ஆசார்யன், சீடர்களின் தகுதியை விருப்பு வெறுப்பின்றி சீர்தூக்கிப் பார்த்து, அவரவருக்கேற்ற பிரபத்திப் பலன் கிட்டுவதற்கு உபாயங்களை அருளுதலை உள்ளர்த்தமாக கொண்டுள்ளது!


ஆண்டாள் திருவடிகளே சரணம் 


Monday, 22 December 2025

கீசு கீசு என்று ....

 கீசு கீசு என்று ....




நகர வாழ்வில் இருப்பவர்களுக்கு இது சற்றே கடினமான அனுபவம்தான். விடியற்காலையில் “கீசு கீசு” என்று பறவைகள் பரஸ்பரம் உரையாடும் இனிய ஓசைகளை கேட்பது இன்று அரிதாகிவிட்டது. குருவிகளே காணாமற்போய்க் கொண்டிருக்கும் இக்காலத்தில், “ஆனைச்சாத்தன்” எனப்படும் கருங்குருவியை எத்தனை பேர் அறிவர்? ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பு, திருவல்லிக்கேணியில் நான் வாழ்ந்த காலத்தில், பறவைகளின் அரவம் என்கிற நினைவே இல்லை. அன்றைய காலையின் ஒலிகள் முற்றிலும் வேறுபட்டவை.


கனமான கரும்போர்வையைத் துளைத்துக்கொண்டு, திண்ணையில் படுத்திருந்த என்னை எழுப்பிய ஒலிகள் அவை. பெண்கள் கோலம் போடுவதற்காக வாசலைப் பெருக்கித் தண்ணீர் தெளிக்கும் சப்தம், எதிர் வீட்டின் முன் பால்காரர் பசுமாட்டைக் கொண்டு வந்து பால் கறக்கும் ஓசை, சிறிது தூரத்தில் உஷத்கால பஜனை பாடப்படும் ஒலி, கோவிலில் ஒலிபெருக்கியில் ஒலித்த எம்.எல். வசந்தகுமாரியின் திருப்பாவை – இவை அனைத்தும் கலந்த அந்த ஒலிச்சூழலே தூக்கத்தை விரட்டியதாக நினைவில் நிற்கிறது. ஆண்டாள் காலத்திலும், தூங்கிக் கிடந்தவர்களின் காதுகளில் இதுபோன்ற பல ஒலிகள் கலந்து விழுந்திருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது.


ஆனைச்சாத்தன் பறவையை கிராமங்களில் “செம்போத்து” என்றும் அழைப்பார்கள்; குருவியிலேயே குட்டியான குருவி அது. அவை “கலந்து பேசின பேச்சு” என்றால், அது என்ன உரையாடல்?


பண்டையோர் இதற்கு நயமான விளக்கமொன்றைக் கூறுவர்.
ஒரு பறவை, “கீசு = க் ஏஷு? – யார் ஈசன்?” என்று கேட்கிறதாம்.
அதற்கு இன்னொரு பறவை, “கீசு = கிம் ஏஷு – அவனே ஈசன்” என்று பதில் சொல்கிறதாம்.

இப்படித்தான் “கீசு கீசு” என்று அவை கலந்துரையாடியதாக நாம் பொருள் கொள்ள வேண்டும்.


ஆனைச்சாத்தன் பறவையை பரத்வாஜப் பறவை என்றும், ஆங்கிலத்தில் Greater Coucal என்றும் கூறுவர். சிவப்பு, ஊதா, கருப்பு நிறங்கள் கலந்து மின்னும் பறவை அது. சிலர் “ஆனைச்சாத்தன்” என்பது வலிமைமிக்க பறவையைக் குறிக்கும் என்பார்கள். வாலில் இருக்கும் இறகுகள் ஆங்கில ‘V’ எழுத்தைத் தலைகீழாகப் புரட்டியது போல் இரட்டைவால் தோற்றமுடையது. மற்றொரு வகை கரிய பறவையான Drongo என்றும் நினைக்கலாம். இது அதிகாலையில் “கீச் கீச்” என்று கூர்மையான குரல் எழுப்பும். அந்தக் குரல் சாதாரணமல்ல; அது மற்ற உயிர்களுக்கு விடுக்கும் எச்சரிக்கை. அதிகாலை வேளையில் வனவிலங்குகள் வேட்டைக்கு நகரும் போது, அவற்றின் வரவை உணர்த்தி, மற்ற ஜீவராசிகளுக்கு எச்சரிக்கை அளிக்கும் ஓசையே அது.


இந்தப் பாசுரத்தில், பகவானையே சிந்தித்துக் கொண்டு மெய்மறந்து கிடப்பவளை, அவள் தோழிகள் அவள் இல்லத்தின் வாசலில் திரண்டு வந்து எழுப்ப முயல்வதாக வர்ணிக்கப்படுகிறது. பகவத் சிந்தனையில் ஆழ்ந்திருப்பவர்கள் எப்போதும் சத்சங்கத்தையே நாடுவார்கள். இதை அறிந்தே ஆண்டாள், பாகவதர்களை ஒன்றுகூடச் செய்து தோழியை எழுப்புகிறாள். ஆனாலும் அவள் எழுந்து வராததால், “பேய்ப்பெண்ணே” என்று செல்லமாகக் கடிந்துகொள்கிறாள்.


“காசும் பிறப்பும்” என்பது சங்கச் சின்னங்களான சங்கு, சக்கரம் பொறித்த தாலிகளைக் குறிக்கும் என்று சிலர் கூறுவர். மற்றொரு விளக்கமாக, பெரியாழ்வார் குறிப்பிட்ட “அக்குவடம் உடுத்து ஆமைத்தாலி பூண்ட அனந்தசயனன்” என்ற ஆபரணத்தையும் நினைவூட்டலாம். கண்ணனுக்கு உகந்த ஆபரணங்களை ஆய்ச்சியர்கள் அணிவது இயல்பே. அவர்கள் தாலிகள் உரசி கலகல என்று ஒலிக்க, தயிர் கடையும் வேகத்தில் கூந்தல் அவிழ, தயிரின் மணத்தையும் மீறி பரிமளம் பரவுகிறது. அதனுடன் மத்தினின் ஒலியும் கலந்து எழுகிறது. இதுபோன்ற காட்சியை அன்னமாச்சாரியார் தமது ஒரு கீர்த்தனையில், அலர்மேல் மங்கை வீணை வாசிக்கும் போது அவளுடைய வளையல்கள் வீணையில் இடித்து ஒலித்ததும், குங்குமம் வியர்வையில் கரைந்து மணம் பரவியதையும் அழகாக வர்ணித்துள்ளார்.


“நாயகப் பெண் பிள்ளாய்” என்ற அழைப்பின் பின்னால், “எல்லோருக்கும் முன்னணியில் நிற்க வேண்டிய நீ, இவ்வாறு படுத்துக் கிடப்பது நியாயமா?” என்ற மறைமுகக் கேள்வி அடங்கியுள்ளது.


“கேசவன்” என்ற சொல்லுக்கு, கேசி என்ற குதிரை வடிவ அரக்கனை அழித்தவன் என்ற பொருளும் உண்டு; அடர்ந்த கூந்தல் உடையவன் என்ற பொருளும் உண்டு. இங்கு, ஆய்ச்சியர்களின் அவிழ்ந்த கூந்தலுக்கு ஒப்பாக அடர்ந்த கேசம் உடையவன் என்று பொருள் கொள்ளுதலே பொருத்தமானதாகத் தோன்றுகிறது.


“தேசம், தேசு, தேஜஸ்” என்பவை அனைத்தும் பளிச்சென்று ஒளிவீசுதலைக் குறிக்கும். “திருமா மணிவண்ணன் தேசு” என்பது பேயாழ்வார் வாக்கு. இங்கே, “பேய்ப்பெண்” தேசமுடையவளாக – தெய்வீக ஒளி கொண்டவளாக – மாறியிருப்பதை கவனிக்க வேண்டும். எப்படியாவது அவளை எழுப்ப வேண்டும் என்ற உந்துதலைக் கவிதை மிக நுட்பமாக வெளிப்படுத்துகிறது.


“கீசுகீசென்று எங்கும் கலந்து பேசின பேச்சு” என்பது, பரமனுக்கும் திருமகளுக்கும் இடையே, அடியவர்களுக்கு அருள் வழங்கும் நோக்கில் நடைபெறும் தெய்வீக சம்பாஷணையைச் சுட்டிக்காட்டுகிறது.


“வாச நறுங்குழல் ஆய்ச்சியர்” என்ற சொல்லில், “வாச நறுங்குழல்” என்பது உபநிடதங்களையும் சாஸ்திரங்களையும் கற்றறிந்த அறிவைப் புலப்படுத்துகிறது; “ஆய்ச்சியர்” என்பது ஆச்சார்யர்களைக் குறிக்கும் உள்பொருளைக் கொண்டது.


“காசும் பிறப்பும்” என்ற ஆபரணங்கள், வேதங்களையும், அவற்றிலிருந்து தோன்றிய ஸ்மிருதிகளையும் குறிக்கின்றன.


“மத்தினால் ஓசைப்படுத்த தயிரரவம் கேட்டிலையோ” என்பது, ஆழ்ந்த தேடலின் பின் மலர்ந்த ஞானத்தின் பயனாக, “நாராயணனே பரதேவதா” என்ற தெளிவை ஆச்சார்யர்கள் உரக்க அறிவிக்கும் நிலையைக் குறிப்பதாகும்.


ஆண்டாள் திருவடிகளே சரணம்.

Sunday, 21 December 2025

புள்ளும் சிலம்பினகாண்!

 புள்ளும் சிலம்பினகாண்!


நமது சனாதன மரபில் உறங்கும் இறைவனை எழுப்பும் பாடல்கள் எண்ணற்றவை. பகவான் உறங்குவானா என்ற கேள்வி எழலாம். நாம் பகவானை, நமது மனோபாவத்திற்கேற்ப அவனை பாவிக்கிறோம். ஆகையால், அவன் உறங்க முடியும், அவனை, துயிலெழுப்ப முடியும், அவனை குளிப்பாட்ட முடியும், அவனுக்கும் வித வித மாய் அலங்காரம் செய்து பார்க்க முடியும், என், அவனுக்கும் கலியாணம் கூட செய்து பார்க்க முடியும்.



திருப்பாவையிலும் பகவான் எழுப்பப்படுகிறான். அடுத்த பத்து பாடல்கள் தோழியரை எழுப்பும் விதமாக அமைகின்றன. ஆனால் அவன் எழுந்திருப்பதற்கு முன்னால் தோழியரை, நந்தகோபனை, யசோதையை, பலராமனை மற்றும் நப்பின்னையை ஆண்டாள் எழுப்புகிறாள். கிருஷ்ணானுபவத்தை தனியாகவன்றோ அனுபவிக்க வேண்டும்? தோழிகளோடு சேர்ந்து அனுபவிக்க வேண்டிய அவசியம் என்ன? பக்தா சங்கம்ச்ச அன்யோன்யஹம்.. என்கிறது பாகவதம். பாகவதர்கள் அன்யோன்யமாய் ஒன்று கூடி சத்சங்கமாய் பகவானை அனுசரித்தல் வேண்டும்.


கண்ணன் பெருங்காற்று. பெருங்காற்றில் “காலாழும், நெஞ்சழியும், கண்சுழலும்” (பெரிய திருவந்தாதி- நம்மாழ்வார்). எனவே தனியாகச் செல்ல முடியாது. பெருந்துணை அவசியம். இன்னொருவிதமாகச் சொல்லப்போனால் ஆண்டாள் ‘இன்கனி தனியருந்தான்’ என்ற கோட்பாட்டில் பிடிவாதமாக இருப்பவர். கூடி இருந்து குளிர விரும்புபவர். அவர் எல்லோரையும் எழுப்புவதில் வியப்பில்லை.


இப்பாசுரத்தில் பஞ்சமூர்த்திகளும் பாடப்பட்டுள்ளனர்.
"வித்தினை" எனும்போது பரம்பொருளான வைகுண்டநாதனையும்,
"வெள்ளத்தரவில் துயிலமர்ந்த" எனும்போது பாற்கடல் வியூஹ மூர்த்தியையும்,
"சகடம் கலக்கழியக் காலோச்சி" எனும்போது விபவ அவதார கண்ணனையும்,
"புள்ளரையன் கோயில்" எனும்போது அர்ச்சவதார ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமானையும்,
"உள்ளத்துக் கொண்டு" எனும்போதுஅந்தர்யாமியான பரமனையும்


மார்கழி மாதக் குளிரில் அதிகாலையில் இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்கத் தோன்றுவது இயற்கை. ஆண்டாள் தன் தோழியிடம் ‘உலகம் விழித்துக் கொண்டு விட்டது, நீ உறங்காதே என்கிறார்’. ‘நீ கண்ணனையே நினைத்துக் கொண்டு உறங்காதிருக்கிறாய். உனக்கு இரவே கிடையாது. காலை வந்து விட்டது என்று எப்படி நம்புவது’ என்று தோழி கேட்க ஆண்டாள் யார் யாரெல்லாம் விழித்து கொண்டு விட்டார்கள் என்று சொல்கிறாராம்.


புள்ளரையன் கோவில என்றால் பக்ஷிராஜன், கருடனின் திருக்கோவில். புள் என்றால் கருடன் என்று பொருள் கொண்டு, கருடனுக்குத் அரையனான -தலைவனான- விஷ்ணுவின் கோவில் என்றும் பொருள் கொள்ளலாம். சங்கு என்றாலே வெள்ளை தானே? அது ஏன் வெள்ளை விளி சங்கு என்றால் விடிந்து விட்டதால் அதன் வெள்ளை நிறம் பளீரென்று தெரிகிறதாம். பூதனை உயிரை உறிஞ்சியும் வண்டியைக் காலால் உதைத்து முறித்த கண்ணன் தான் பாம்பின் மேல் அறிதுயில் கொண்டிருக்கும் வித்து. சகடத்தை, வண்டியை ஏன் கண்ணான் காலால் உதைக்கிறான்?


மூவாரியப்படி கூறுகிறது: முலை வரவு தாழ்த்ததென்று மூரி நிமிர்த்த திருவடிகள் பட்டு முறிந்தது. அதாவது தாய்ப்பால் வருவதற்கு தாமதமானதால் கால்களை உதைத்து கண்ணன் வீறிடுகிறானாம். அவன் ‘வித்து’. உழவர்கள் விதைக்கும் வித்து பயிராக மாறி பலன் தருவது போல, திரும்பத் திரும்ப அவதாரம் செய்து உலகிற்கு பலனளிக்கும் வித்து பகவான். இதைத்தான் துக்காராம் மஹராஜ் "ஆதி பீஜ ஏகளீம், பீஜ அங்குராலே ரூப வாடேலேம்.. என்கிறார்.


தானே தன்னை விதைத்துக் கொள்பவன். அவனை உள்ளத்தில் கொண்டவர்கள் முனிவர்களும் யோகிகளும். முனிவர்கள் இறைவன் பெயரை என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள். யோகிகள் இறைவனை நினைத்துக் கொண்டு பக்தர்களுக்கும் தேவையானவற்றை தயராது செய்து கொண்டிருப்பவர்கள். ராமனுக்கு பணிவிடை செய்து கொண்டிருந்த இலக்குவனையும் அவன் நினைவாகவே இருந்து ஆட்சி செய்துக் கொண்டிருந்த பரதனையும் போன்றவர்கள்.


அவர்கள் ஏன் மேல்ல எழுந்திருக்கிறார்கள்? பிள்ளைத்தாய்ச்சியாக இருப்பவர் குழந்தைக்கு ஊறு ஏற்பட்டு விடக் கூடாதே என்று மெல்ல எழுவது போல, இவர்கள் உள்ளத்தில் எம்பெருமான் இருப்பதால் அவன் ‘தளும்பாதபடி’ எழுந்திருப்பார்களாம். "மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்" என்பதற்கு இன்னொரு ரசமான விளக்கமிருக்கிறது! முனிவர்கள் யோகிகளின் உள்ளத்தில் பரமன் உறைந்திருப்பதால் ("உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்"), அவர்கள் தங்கள் தியானத்தைக் கலைக்கையில், பரமனின் யோக நித்திரை கலைந்து விடாத வண்ணம் கவனமாக "மெள்ள" எழுகின்றனர்!


அடியவரான முனிவர்களும் யோகிகளும், ஹரி மந்திரத்தை ஒரு தினசரி கடனாக, வாய் வார்த்தையாக உச்சரிக்கவில்லை, பரமனை "உள்ளத்துக் கொண்டு" ஆத்மார்த்தமாக அவன் பேர் பாடுகிறார்கள்! "மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம்" என்பது சிறிய அளவில் ஆரம்பித்து பின்னர் பெரும் கோஷமாகும் crescendo-வை குறிக்கிறது! அப்பேரரவம் கேட்ட மாத்திரத்தில் எல்லா சங்கடங்களும் மறந்து போய், மனதில் மந்தகாசமான அமைதி ஏற்படுகிறது! (உள்ளம் குளிர்ந்தேலோர்) இங்கு பேரரவம் அமைதியைத் தருகிறது (oxymoron). பெருமானின் வெண்சங்கு 'பேரரவம்' செய்தாலும், அது செவிக்கு இனிமையான சப்தம் தான்.


ஆய்ப்பாடியில் முனிவர்களும் யோகிகளும் எங்கு வந்தார்கள்? கண்ணன் பிறந்த இடமானதால் அவர்கள் மாட்டுக் கொட்டில்களில் பாடு கிடக்கின்றார்களாம். கண்ணனின் தரிசனத்தை வேண்டி.


ரம்யமான அதிகாலைப் பொழுதில் பெருமாள் கோயில் கோபுர அழகும், மேலே பறக்கின்ற பறவைகள் சப்தமும், சங்கொலியும், அடியவர் ஹரிநாம சங்கீர்த்தனம் செய்தபடி கோயிலுக்கு விரைவதும், பாற்கடலில் பள்ளி கொண்ட பரம்பொருள் வடிவும் என்று ஒரு அழகான காட்சி மனக்கண்முன் விரிகிறதல்லவா?


சக்கர வடிவில் அசுரன் வந்ததால் அது "கள்ளச்சகடம்" ஆயிற்று! 'கள்ளச் சகடம், கலக்கழிய, காலோச்சி' என்று அப்பாசுரவரியில் எதுகையில் ஒலிக்கும் 3 அழகான வார்த்தைப் பிரயோகங்களை கவனியுங்கள்! பாற்கடல் ஆதிசேஷன் வெள்ளத்து அரவாம். அங்கு வித்தான பரம்பொருள் பள்ளி கொண்டிருப்பதை ரசமாக "துயிலமர்ந்து" என்கிறார் கோதை நாச்சியார். இங்கு "அமர்ந்து" என்பதற்கு ரட்சிப்பது என்று பொருள் கொள்ள வேண்டும்! அதெப்படி உறக்கத்தில் இருந்தவாறு அடியவரைக் காப்பது? யோக நித்திரையில் இருக்கும் அம்மாயனுக்கு அது சாத்தியம், அவ்வளவு தான்!


இப்பாசுரத்தை தத்துவார்த்தமாக நோக்கும் பெரியோர், அடியாரின் சத்வ குணம் 'வெள்ளை விளிசங்காகவும்', அகங்காரமும் (கர்வம்) மமகாரமும் (உலகப்பற்று) 'பேய் முலையாகவும்', அவற்றால் விளையும் பாவங்கள் 'நஞ்சாகவும்', புலன்கள் நாடும் சிற்றின்பங்களுக்கு வேண்டி அலை பாயும் உள்ளத்து உணர்வுகள் 'கள்ளச் சகடமாகவும்', சம்சார பந்தம் 'வெள்ளத்தரவாகவும்' உருவகப்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறுவர். ஆகவே, நற்குணம் கொண்ட அடியார்கள் மற்றும் ஆச்சார்யனின் துணையோடு, அரி நாமத்தை விடாமல் ஓதுவதன் மூலம், ஆகாதவற்றை விலக்கும் வைராக்கியம் பெற்று (கலக்கழியக் காலோச்சி !) பரமனை பற்ற முடியும்.

ஆண்டாள் திருவடிகளே சரணம்

Saturday, 20 December 2025

திருப்பாவை பாசுரம் 5 – மாயனை மன்னு…

 திருப்பாவை பாசுரம் 5 – மாயனை மன்னு…







“வாசித்தும், கேட்டும், வணங்கியும், வழிபட்டும், பூசித்தும் காலத்தை கழித்தேன்” என்று ஆழ்வார் உரைப்பது வெறும் வார்த்தையல்ல. அது மனித வாழ்வின் தவிர்க்க முடியாத யதார்த்தத்தைச் சுட்டிக் காட்டும் உண்மை. நாம் அனைவரும் காலத்தின் போக்கில் முதிர்ச்சியடைவோம். முதுமை வந்தபோது கண்கள் மங்கும்; வாசிப்பது கடினமாகும். காதுகள் செவிடாகும்; கேட்டுணர்வது சிரமமாகும். சாஷ்டாங்கமாக பெருமாளைச் சேவிக்க உடலும், காலும், முட்டிகளும் ஒத்துழைக்காது. இதைத்தான் திருமங்கை ஆழ்வார் ஆழமான வேதனையுடன்,

“ஏய்ப்பென்னை வந்து நலியும் போது, அங்கேதும் நான் உன்னை நினைக்க மாட்டேன்...; அப்போதைக்குப்போதே சொல்லி வைத்தேன்...…”

என்று உரைக்கிறார்.


அதேபோல், (நேற்றைய தினம் திருநக்ஷத்திரம் கொண்ட) குலசேகர ஆழ்வாரும், முகுந்தமாலையில்,

“பிராணப் பிரயாண சமயே கப-வாத-பித்தைஹி கண்டா அவரோதன விதௌ ஸ்மரணம் குதஸ்தே”

என்று சொல்லி, உயிர் பிரியும் அந்த இறுதி நொடியில் கூட எம்பெருமானை நினைக்க முடியுமா என்ற அச்சத்தை வெளிப்படுத்துகிறார்.



அதனால்தான் ஆண்டாள், “அந்த நேரத்திற்காக காத்திருக்க வேண்டாம்; இப்போதே வாயினால் பாடி, மனதினால் சிந்தித்து, பெருமாளை வேண்டுங்கள்” என்கிறாள். குறைந்தபட்சமாக இதையாவது செய்யக்கூடிய பாக்கியத்தை பகவான் நமக்குத் தரவேண்டும் என்பதே அவளின் வேண்டுகோள். ஆனால் இந்த அளவுக்கான பக்தி நிலை கூட எல்லாப் பக்தர்களுக்கும் ஒரே மாதிரியாக வாய்ப்பதில்லை.



திருவாய்மொழியில் நம்மாழ்வார், “உணர்ந்து உணர்ந்து, உரைத்து உரைத்து, இறைஞ்சுமின்” என்று அறிவுறுத்துகிறார். ஆனால் ஆண்டாள், “வாயினால் பாடி, மனதினால் சிந்திக்க” என்று சொல்கிறாள். கவனித்தால், முதலில் ‘பாடு’ என்கிறாள்; அதன் பின் தான் ‘சிந்தி’ என்கிறாள். ஏன் இந்த வரிசை? ஆழ்வார் வாழ்க்கை முழுவதும் அனுபவத்தில் ஊறியவர். ஆழமாக யோசித்து, ஆராய்ந்து, அனுபவத்தை வடித்து, அதன் பின் பாடல் வடிவில் பெருமாளைச் சேவித்தவர். ஆனால் ஆண்டாள் ஒரு சிறுமி. குழந்தைகளுக்கும் இளையோருக்கும் இயல்பாக இருக்கும் தன்மை – யோசனையை விட முன் வரும் இயல்பான உந்துதல் (spontaneity). அவர்கள் முதலில் உரக்கப் பாடுவார்கள்; பின்னர் தான் மனம் அதைச் சிந்திக்கத் தொடங்கும். ஆண்டாளின் வழிமுறை அதுதான்.



இந்தப் பாசுரத்தில் வழக்கில் இப்போது அதிகம் பயன்படுத்தப்படாத சில சொற்கள் வருகின்றன. உதாரணமாக, ‘செப்பு’ என்ற சொல் இன்றைய தமிழில் அரிது; அது தெலுங்கு வழக்கில் அதிகம் காணப்படுகிறது. அதுபோலவே, வைணவர்கள் பொதுவாக “பெருமாளைச் சேவிக்கிறோம்” என்பார்களே தவிர, “தொழுகிறோம்” என்று சொல்லமாட்டார்கள். ‘தொழுகை’ என்பது இன்று பெரும்பாலும் இஸ்லாமிய வழக்கிலும், சில பாலக்காட்டு பிராமணர்களிடமும் மட்டுமே பயன்படுகிறது.



முதல், இரண்டாம், மூன்றாம் பாசுரங்களில், ஆண்டாள் பர, வ்யூஹ, விபவ ரூபங்களாகிய திருமான் நாராயணன், பாற்கடலுள் பள்ளியுள்ள பரமன், வாமனன் ஆகிய தெய்வ வடிவங்களைப் போற்றிப் பாடுகிறாள். நான்காம் பாசுரத்தில் விபவ அவதாரங்களைத் தொடர்ந்து, இப்பாசுரத்தில் கிருஷ்ணனுடைய விபவ அவதாரத்தை மிக விரிவாகவும் ஆழமாகவும் புகழ்கிறாள்.



இந்தப் பாடலின் உள்ளடக்கம் மிக உயர்ந்த தத்துவ விசாரத்தைக் கொண்டது. ஒரு இடைப்பெண், இன்னொரு இடைப்பெண்ணிடம் கேட்பதாக அமைந்த கேள்வி மிக ஆழமானது:

“நாம் எல்லாம் கர்மவசப்பட்டவர்கள். விதியும் கர்மமும் தீர்மானிக்கும் உலகத்தில் வாழ்கிறோம். அப்படியானால் நாம் எப்படி பரமனை அடைய முடியும்? நம் பிழைகள் நம்மைத் தடுத்து நிறுத்தாதா? இத்தகைய விரதங்களால் என்ன பயன்? இதுவரை செய்த கர்மங்களின் பலன் நம்மை விட்டுப் போகுமா? கர்ம வாசனை நம்மை எங்கோ இழுத்துச் செல்கிறதே; இதிலிருந்து விடுபட வழி உண்டா?”

இந்தக் கேள்விக்கே ஆண்டாள் பதில் சொல்கிறாள்.



புரந்தரதாசரும் தம் ஒரு கீர்த்தனையில், “நா மாடித கர்மா, பலவந்த வாதரே, நீ மாடுவதேனோ ரங்கா…” என்று இதே வேதனையை வெளிப்படுத்துகிறார்; அதன் விடையையும் கடைசி சரணத்தில் தருகிறார்.



மகரிஷி வஸிஷ்டர் நன்னாளைக் கணித்திருந்தும், மன்னன் தசரதன் ஆவலுடன் விரும்பியிருந்தும், ஸ்ரீ ராமன் சீதையுடன் பெருமாளை வணங்கியிருந்தும், பட்டாபிஷேகம் தடைபட்டது. இதை எடுத்துக்காட்டிய தோழி, “இப்படிப் பெரியோருக்கே இப்படியென்றால், நமக்கெப்படி நிச்சயம்?” என்று அஞ்சுகிறாள்.



அதற்கு ஆண்டாள் கூறுவது: “ராமனை அரசனாக்க விரும்பியவர்கள் ‘நாம் அவனை அரசனாக்குகிறோம்’ என்ற அகந்தையுடன் இருந்தனர். ஆனால் ஆய்ச்சியர்களான நாம் எந்த அகந்தையுமின்றி, கண்ணனுடன் இருப்பதே நமது ஆசை. எதற்கும் தகுதியற்றவர்கள் என்று நம்மையே எண்ணிக்கொண்டு, உலகியலான எந்தப் பலனையும் நாடாமல் இருப்பதே ‘அயோக்யானுசந்தானம்’.”



கர்ம, ஞான, பக்தி யோகங்களைச் சுய முயற்சியால் செய்து வசிஷ்டர், வாமதேவர் போல் முக்தி அடையக் கூடியவர்கள் நாம் அல்ல. வேதம் தெரியாது; வேதாந்தம் தெரியாது; சாஸ்திரம், சம்பிரதாயம் தெரியாது. ஆனால் நம்மால் செய்யக்கூடிய சில எளிய வழிகள் இருக்கின்றன.



பாசுர விசேஷம்: இந்தப் பாசுரத்தில் உபாயம், உபேயம், புருஷார்த்தம் – மூன்றும் தெளிவாக சொல்லப்பட்டுள்ளன.

உபாயம் – மலர் தூவி தொழுதல், வாயினால் பாடுதல், மனத்தினால் சிந்தித்தல்

உபேயம் – மாயன், வடமதுரை மைந்தன், யமுனைத் துறைவன், ஆயர் குலத்து அணிவிளக்கு, தாயை குடல் விளக்கம் செய்த தாமோதரன்

புருஷார்த்தம் – போய பிழையும், புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகுதல்



இந்த வழியில் நடந்தால், பல ஜன்மங்களில் சேர்த்த பாவங்களும், இனி அறியாமல் சேரப்போகும் பாவங்களும் தீயில் போடப்பட்ட பஞ்சுபோல் முற்றிலும் அழியும் என ஆண்டாள் உறுதியாகச் சொல்கிறாள்.



“நாம் அசுத்தர்கள்; நமக்கு தகுதி இல்லை” என்ற எண்ணமே தேவையில்லை. உள்ள நிலையில், உள்ளபடியே அவனை அணுகலாம். அவன் வருவானா, நாம் போக வேண்டுமா என்ற குழப்பமும் வேண்டாம். உபேயமாக அவனை நினைக்கும் போது, அவனை அடைய வேண்டுமென்ற தணியாத ஆவலே மற்ற எல்லா பயங்களையும் கரைத்துவிடும்.



இந்தப் பாசுரம் முழுவதும் ப்ரபத்தி மார்க்கத்தின் சாரத்தை மிக அழகாக எடுத்துரைக்கிறது. மனம், வாக்கு, காயம் என்ற த்ரிகரணங்களால் – கைகளால் மலர் தூவி, வாயினால் பாடி, மனத்தினால் அனுசந்தித்தால் – கர்ம கட்டு அவிழும். புண்யமும் பாவமும் இரண்டுமே மோக்ஷத்திற்கு தடையாக இருப்பதால், அவற்றை இரண்டையும் பகவதர்ப்பணமாக, க்ருஷ்ணார்ப்பணமாக மாற்ற வேண்டும் என்ற உபதேசமும் இதில் அடங்கியுள்ளது.



“மாயன்” லீலாவிபூதி நாதனையும், “மன்னு” பரத்துவ மூர்த்தியான வாசுதேவனையும், “வடமதுரை மைந்தன்” பரமபத நாதனையும் குறிப்பதாக உள்ளுரைப் பொருள் கூறப்படுகிறது. “யமுனைத் துறைவன்” என்பது வைகுண்டத்தில் பாயும் விராஜ நதிக்கரையில் எழுந்தருளியவனையும் குறிக்கும். இன்னொரு வகையில், யமுனை சம்சார பந்தத்தின் உருவகம்; அதை கடக்க உதவும் படகுத் தலைவனாக கண்ணன் துணையாக நிற்கிறான் என்பதே அதன் உள்ளர்த்தம்.



பகவத் ஞானம் வருவதற்கு முன் செய்த பிழைகளும், பக்தியான பின் அறியாமல் செய்த பாவங்களும், அவன் நாமத்தைச் செப்பினாலே தீயில் எரியும் பஞ்சுபோல் உடனடியாக அழிந்து விடும் என ஆண்டாள் அறிவுறுத்துகிறாள்.



“தூமலர்” என்பது வெளிப்புற மலரல்ல; அடியவரின் உள்ளத்திலிருந்து மலரும் எட்டு நற்குணங்களை உணர்த்துகிறது:

1.⁠ ⁠அகிம்சை

2.⁠ ⁠புலனடக்கம்

3.⁠ ⁠எல்லா உயிர்களிடத்திலும் நேசம்

4.⁠ ⁠பொறுமை, சமத்துவம்

5.⁠ ⁠ஞானம்

6.⁠ ⁠தியானம்

7.⁠ ⁠ஆன்மீக தவம்

8.⁠ ⁠சத்தியம்



எளிமையாகச் சொன்னால், பரமனை அடைய பெரிய அளவில் கர்ம, ஞான, பக்தி யோகங்கள் அவசியமில்லை. மலர் தூவி வணங்கி, போற்றிப் பாடி, முடிந்த பொழுதெல்லாம் அவனைச் சிந்தித்துக் கொண்டிருப்பதே போதும். இந்த ப்ரபத்தி மார்க்கமே மோட்ச சித்தியை அளிக்கும் என்பது இப்பாசுரத்தின் சாரம்.



மோக்ஷம் அடைவதற்கான மூன்று வழிகள்:

1.⁠ ⁠கர்ம பாரதந்த்ரியம் – சுய முயற்சியால்

2.⁠ ⁠க்ருபா பாரதந்த்ரியம் – ப்ரபத்தி / சரணாகதி மூலம்

3.⁠ ⁠இச்சா பாரதந்த்ரியம் – எம்பெருமானின் சுய விருப்பத்தால்

திருவாய்ப்பாடியில் உள்ளவர்கள் மூன்றாம் வகை. நாம் அனைவரும் இரண்டாம் வகையைச் சார்ந்தவர்கள்.

பகவானே சரணம். ஆகையால், எம்பெருமானின் புகழைப் பாடுங்கள்.

ஆண்டாள் திருவடிகளே சரணம்.

அடியேன் தாசன்

Friday, 19 December 2025

திருப்பாவை பாசுரம் 4: ஆழி மழைக்கண்ணா...

 திருப்பாவை பாசுரம் 4: ஆழி மழைக்கண்ணா...


தமிழ் இலக்கியத்தின் அரிய மணிமகுடங்களில் ஒன்றாக விளங்குவது ஆண்டாளின் இப்பாடல். பதினொன்று முறை "ழ"கரம் இந்த பாசுரத்தில் உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது. கவிஞர்கள் பொதுவாக கண்களுக்கு எளிதில் புலப்படும் இயற்கை வடிவங்களையும் நிகழ்வுகளையும் உவமைகளாகக் கொண்டு, அவற்றின் வழியே இறையிருப்பின் பரிமாணங்களை நமக்கு உணர்த்த முயல்வார்கள். ஹிந்தி இலக்கிய மரபில் இவ்வகை அணுகுமுறை “சாயவாதம்” என அழைக்கப்படுகிறது. இயற்கையின் வாயிலாக இறைவனை அனுபவிப்பதே அதன் சாரம்.


“கார்மேகம் போன்றவன்”, “கடலினும் விரிந்த கண்கள்”, “பவளச் செவ்வாய்” போன்ற உவமைகள் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள். ஆனால் ஆண்டாள் இப்பாடலில் இதற்கு நேர்மாறான பாதையைத் தேர்ந்தெடுக்கிறாள். இங்கு மேகத்தின் நிறமே ஊழி முதல்வனின் உருவமாகிறது; மின்னலின் ஒளி, இறைவன் தன் கரத்தில் தாங்கியிருக்கும் ஆழியின் (சக்கரத்தின்) ஒளியாக மாறுகிறது; இடிமுழக்கம், அவன் இன்னொரு கையிலிருக்கும் வெண்சங்கமான பாஞ்சஜன்யத்தின் அதிர்வாக ஒலிக்கிறது; மழை பொழிவது, சார்ங்கம் என்னும் அவனது வில்லிலிருந்து புறப்படும் அம்புகளின் பெருக்காகக் காணப்படுகிறது.



முதல் மூன்று பாசுரங்களில் பரம், வியூகம், வைபவம் ஆகிய நிலைகளை நாம் கண்டோம். இப்பாசுரத்தில் அந்தர்யாமித்துவம் வெளிப்படையாகக் காட்டப்படுகிறது. பகவான் ஸர்வவ்யாபி; எங்கும் நிறைந்திருப்பவன். எம்பெருமான் இவ்வுலகை படைத்ததோடு நிற்காமல், அனைத்து ஜீவராசிகளின் உள்ளத்தின் உள்ளேயும் குடிகொண்டிருக்கிறான். சாந்தோக்கிய உபநிஷத்தில் சொல்லப்படும் “தத் தவம் அஸி” என்ற மகாவாக்கியம் உணர்த்தும் பரம்பொருள் நிலை இதுவே. இயற்கை எவ்வாறு எல்லா இடங்களிலும் பரவி இருக்கிறதோ, அதுபோலவே பகவானும் ஸர்வவ்யாபியாய் எங்கும் வியாபித்துள்ளான்.



முந்தைய பாசுரத்தில் “தீங்கின்றி மும்மாரி பெய்ய…” என்று ஆண்டாள் வேண்டினாள். இயற்கை நம்மை வாழ்விக்கவும் செய்யும்; அதே சமயம் வீழ்த்தவும் செய்யும். பகவான் ஆயுதபாணியாக இருப்பதன் உட்பொருளும் இதுவே. ஆகவே இங்கு “வாழ” என்ற சொல்லே முக்கியமானது. ஆண்டாள் இப்பாசுரத்தில் தெளிவாக வாழ்க்கைக்காகவும், மகிழ்ச்சிக்காகவும் பாடுகிறாள். மக்களை வாழ வைக்க மழை பெய்தால்தான் மகிழ்ச்சி ஏற்படும் என்று அவள் உரைக்கிறாள். உலகமெங்கும் மழை பொழிய வேண்டும் என்ற அவளது பிரார்த்தனை இதன் வெளிப்பாடு.



மாதவன், கேசவன், தாமோதரன், பத்மநாபன், நாராயணன், கோவிந்தன் போன்ற திருநாமங்கள் திருப்பாவையில் பல பாசுரங்களில் பாடப்பட்டிருந்தாலும், கிருஷ்ணாவதாரச் சம்பவங்கள் பல இடங்களில் சுட்டப்பட்டிருந்தாலும், இப்பாசுரத்தில்தான் கிருஷ்ணாவதாரப் பெயரான “கண்ணா” என்ற சொல்லை ஆண்டாள் நேரடியாக உச்சரிக்கிறாள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவள் இங்கு கோகுலக் கிருஷ்ணனை மட்டுமா “கண்ணா” என்று அழைக்கிறாள்? கோகுலத்தில் பகவான் கிருஷ்ணன் “கானா” (காந்ஹா) என்ற செல்லப்பெயரால் அழைக்கப்படுவான். ஆனால் ஆண்டாளின் பாவனையில் அது மட்டும் அல்ல. இங்கு “மழைக்கண்ணா” என்று அவள் கூறுவது வருணதேவனை நோக்கியே எனலாம்.

அந்தர்யாமித்துவத்தை வெளிப்படுத்தும் விதத்தில், இயற்கையான மழையையும், வருணனையும், பகவானின் உருவமாக ஆண்டாள் கண்டிருப்பாள் போலும். அதனால் வருணனை “கண்ணா” என்று அவள் அழைத்திருக்கலாம். அல்லது, வாஞ்சையோடு அவனை கொஞ்சி, கெஞ்சி, மக்கள் வாழ மழை பெய்ய வேண்டும் என்று யாசித்திருக்கலாம்.



அதனால்தான் “கைகரவேல்” என்ற சொல்லையும் ஆண்டாள் பயன்படுத்துகிறாள். கொடுக்க வேண்டியதை தாராளமாகக் கொடு; குறைத்துக் கொடுத்து விடாதே என்ற அவளது வேண்டுகோள், பகவானின் வள்ளல்தன்மையையும் கருணைப் பெருக்கையும் எடுத்துக் காட்டுகிறது.



மழை தேவனே, நீ எவ்வாறு மழை பொழிய வேண்டும் என்பதை நாங்கள் ஆய்ச்சியர்கள் உனக்குச் சொல்கிறோம். நீ முதலில் சமுத்திரத்துக்குச் செல். கரையோரத்தில் கால் நனைப்பதுபோல் அல்ல; ஆழமாகச் செல். முழுமையாக மூழ்கி வேண்டிய அளவு நீரைப் பருகி, கறுத்த உடலுடன் எழுந்து வா. எந்தக் கறுப்பு என்றால், ஊழிக்காலம் முதலே இருக்கும் அந்தக் கார்மேக வண்ணனைப் போல. அவனின் திருமேனி போன்ற கருமை மட்டும் போதாது; அவனின் பராக்கிரமமும் வேண்டும். பத்மநாபனின் கையில் திகழும் இணையற்ற சக்கராயுதத்தைப் போல மின்ன வேண்டும். அதனால் உண்டாகும் இடிமுழக்கம் சாதாரணமாக இருக்கக் கூடாது; பாரதப் போரில் பகைவர்களை நடுங்கச் செய்த பாஞ்சஜன்யம் போல முழங்க வேண்டும். கோதண்ட ராமனின் தாழாத சாரங்கத்திலிருந்து இடைவிடாது பொழியும் சரமழைபோல், நீ பொழியும் மழையும் இடைவிடாது இருக்க வேண்டும்—என்று கோபியர்கள், ஆண்டாளின் தோழியர்கள், வேண்டிக்கொண்டனர்.



•⁠  ⁠மேகம் – ஆசாரியர்கள்

•⁠  ⁠கடல் – வேதம், உபநிஷத்துகள்

•⁠  ⁠மழை நீர் – எம்பெருமான்


“ஆழி மழைக் கண்ணா” எனும் தொடரின் உட்பொருள் இதுவே. மழை எல்லாருக்கும், எல்லா இடங்களிலும் பாரபட்சமின்றி பொழிவதுபோல், ஆசாரியர்களும் ஞான அர்த்தங்களை அனைவருக்கும் சமமாக வழங்குவார்கள். கடல் நீரை மேகம் பருகி, அதைத் தூய்மையான மழை நீராக மாற்றி நமக்குப் பொழிவது போலவே அவர்களின் செயல்பாடும் அமைகிறது.

“ஆழியுள் புக்கு” என்பது, வேதங்கள், உபநிஷத்துகள், தர்ம சாஸ்திரங்கள், தமிழ் வேதமாகிய திவ்ய பிரபந்தம் ஆகிய ஞானப் பெருங்கடலில் ஆழ்ந்து புகுதல்.

“முகந்து கொடு” என்பது, அவற்றின் தேர்ந்த பொருளையும் ஆழ்ந்த அர்த்தங்களையும் உணர்ந்து பெறுதல்.

“ஆர்த்தேறி” என்பது, கம்பீரமாகவும் உறுதியுடனும் எழுந்து, பெருமானின் பகவத் குணங்களை இடையறாது சிந்தித்தல்.

“ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கருத்து” என்பது, பரமனை எப்போதும் சிந்தையில் நிறுத்தியதால், ஆசாரியர்களும் அவனைப் போலவே கருநிறமும் தயாள குணமும் பெற்றவர்களாக விளங்குதல்.



எல்லையற்ற இறைவனின் குணக்கடலில் ஆழ்ந்து, அதனை அனுபவித்து, உள்ளத்தில் அடக்கிக் கொண்டு, உலகமெங்கும் சென்று பிறருக்கு வழங்குவோர் அறிஞர்களே மேகமாக உவமிக்கப்படுகிறார்கள். “திருமாலின் திருமேனி ஒக்கும்” பேற்றைப் பெற்று எங்கும் சஞ்சரிப்பவர்கள் அவர்கள். கடல் நீரை மேகம் பருகி, தூய்மையான மழை நீராக மாற்றி நமக்குப் பொழிவதுபோல, அவர்கள் ஞானத்தைச் சுத்தமாக்கி உலகிற்கு வழங்குகின்றனர்.



இவ்வாறு தேர்ந்த ஞானத்தை அருளவல்ல ஆசாரியர்களின் திருவடிகளை நாம் சரணடைவோம்.



ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்!!!

தூமணி மாடத்து!

  தூமணி மாடத்து! உறக்கத்திலிருந்து எழுப்புதல், உறக்கத்திலிருந்து எழுதல் – இவை பற்றிய கவிதைகள் உலக இலக்கியத்தில் எண்ணற்றவை. மனித வாழ்வில் இன்...