Tuesday, 30 December 2025

எல்லே! இளங்கிளியே!....

 எல்லே! இளங்கிளியே!....



இப்பாசுரமே, திருப்பாவையில் பக்தர்களை எழுப்பும் அதிகாரத்தின் நிறைவுப் பாசுரமாக அமைந்துள்ளது. இங்கு எழுப்பப்படுகின்ற கோபி, சாதாரண பக்தி நிலையில் இல்லாமல், பரிபக்வமான பக்தி நிலையை அடைந்தவளாக இருப்பதால், தனித்திருந்து அனுபவிப்பதை விரும்பாது, தன்னுடன் எல்லாரையும் கூட்டிக்கொண்டு பரமபுருஷனை அடைய வேண்டும் என்ற பரந்த உள்ளத்துடன் விளங்குகிறாள். தனக்கான ஆனந்தத்தைப் பகிர்ந்து கொள்ளாமல் அடக்கி வைத்துக் கொள்ளாத பகவத்ஸ்வபாவமே இவளின் இயல்பு.



இதுவரை வந்த பாசுரங்களில், ஒவ்வொரு பெண்ணையும் எழுப்பும் போது, வெளியில் நின்று கூப்பிடுவோரின் சொற்களே வெளிப்படையாக இடம்பெறுகின்றன; உள்ளே இருக்கும் பெண் என்ன பதில் கூறுகிறாள் என்பதை வாசகன் ஊகித்துக்கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. ஆனால் இப்பாசுரத்தில் மட்டும், உள்ளே இருப்பவளும் பேசுகிறாள்; வெளியே இருப்பவர்களும் பேசுகிறார்கள். இவ்வாறு இருபுறத்தாரின் சொற்களும் வெளிப்படையாகப் பதிவாகி, பரஸ்பர சம்வாத ரூபமாக அமைவது இதன் விசேஷம். திருப்பாவை முழுவதிலும் ஆண்டாளுக்கும் உறங்கும் கோபிக்கும் இடையே நேரடியான உரையாடல் தெளிவாக நிகழும் ஒரே பாசுரம் இதுவே. அதனாலேயே, இதனை ஆங்கிலத்தில் “dialogue poem” என்று குறிப்பிடுவார்கள்.



உண்மையில், இப்பாசுரத்தில் வெளிப்படையாகத் தோன்றும் இந்த உரையாடல் அமைப்பே, அதற்கு முந்தைய பாசுரங்களையும் ஆசார்யர்கள் “உள்ளுரையாடல்” (கற்பித சம்வாதம்) முறையில் விளக்கத் தூண்டிய அடிப்படைக் காரணமாக அமைந்தது. அதாவது, இப்பாசுரத்தில் வெளிப்படையாகத் தெரியும் உரையாடல் பாங்கையே ஆதாரமாகக் கொண்டு, முந்தைய பாசுரங்களிலும் கோபியரும் தோழியரும் பரஸ்பரம் பேசிக்கொள்வதுபோல வியாக்யானம் செய்யலாயினர்.



அழகிய மணவாளப் பெருமாள் நாயனார், “திருப்பாவையாவது இப்பாட்டிறே” என்று இந்தப் பாசுரத்தை விசேஷமாகப் புகழ்ந்து கூறுவார். மேலும், பதினைந்தாம் பாசுரமான இதனையும், இருபத்தொன்பதாம் பாசுரமான “சிற்றம் சிறுகாலே” என்பதையும் சுட்டிக் காட்டி, “இதுவே உண்மையான திருப்பாவை” என பரவசத்துடன் கூறுவார். காரணம், இப்பாசுரம் பாகவத தாஸ்யத்தை வெளிப்படுத்துவதாகவும், இருபத்தொன்பதாம் பாசுரம் பகவத் தாஸ்யத்தை வெளிப்படுத்துவதாகவும் அமைந்திருப்பதே. அதனால் இவ்விரண்டையும் அவர் தனித்துப் போற்றி உரைக்கிறார்.



முந்தைய பாசுரத்தில், “சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணானைப் பாடு” என்று தோழியர் கூற, அந்தச் சொற்களை இப்பாசுரத்தில் உள்ள பெண்ணும் மீண்டும் உச்சரிக்கிறாள். “சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணன்” என்று சொல்லிப் பார்த்தவுடனே, அந்தத் திருநாமங்களில் மனம் கரைந்து, அவற்றிலேயே லயித்துப் போய் அமர்ந்து விடுகிறாள். ஆண்டாள் மற்ற பெண்களுடன் அவள் இல்லத்தின் வாசலுக்கு வந்து, “எல்லே! இளங்கிளியே! இன்னும் உறங்குகிறாயோ?” என்று அழைக்க, இவள் உண்மையில் உறங்கவில்லை; அவர்களுக்காகவே காத்திருக்கிறாள் என்பது அவர்களுக்குத் தெரியாமல் போகிறது.



“எல்லே” என்ற சொல்லே ஆச்சரியச் சுட்டு. “என்ன இது! இளங்கிளியே, இன்னும் உறங்குகிறாயா?” என்ற வியப்பின் வெளிப்பாடு அது. இங்கு “இளங்கிளி” எனப்படுவது, பகவத புராணத்தை பரீக்ஷித் மன்னனுக்கு உபதேசித்த சுகபிரம்மரின் கிளிப்போன்ற மொழிநடை நினைவூட்டுவதாகவும் வியாக்யானம் கூறும். இவள் இளங்கிளியென்றால் பாகவத புராணத்தை பரீக்ஷித் அரசனுக்குச் சொல்லும் சுகர் கிழக்கிளி.



அந்தக் கோபி, உள்ளே பகவந்நாம அனுசந்தானத்தில் ஆழ்ந்திருப்பதால், வெளியில் அவர்கள் பேசுவது அவளுக்கு இடையூறாகத் தோன்றுகிறது. ஆகவே, “சில்லென்று அழையாதீர்கள்; இதோ வந்து விடுகிறேன்” என்கிறாள். அதற்கு தோழியர், “உன்னுடைய சொல்வன்மையும் நுட்பமான பேச்சுத் திறனும் எங்களுக்கு தெரியாததா?” என்று சிரித்துப் பேசுகிறார்கள். அவள் பதிலுக்கு, “நீங்கள்தாம் சாமர்த்தியசாலிகள்; நானும் அப்படியே இருக்கட்டும்” என்று சொல்லி, குற்றத்தைத் தன் மேல் ஏற்றுக் கொள்கிறாள். இதையே வியாக்யானங்கள் “வைஷ்ணவ லக்ஷணம்” என்று கூறுகின்றன.



“இல்லாத குற்றத்தை ஒருவர் நம் மீது சுமத்தினாலும், மறுக்காமல் ஏற்றுக்கொள்வதே வைஷ்ணவ லக்ஷணம்” என்று ஆறாயிரப்படி விளக்குகிறது.



ஆனால் தோழியர் அவளது அந்த உயர்ந்த பண்பை உணராது, “சீக்கிரம் வா; நீ என்ன விசேஷமா?” என்று சொல்லி, “எல்லோரும் வந்துவிட்டார்கள்; சந்தேகம் இருந்தால் நீயே வந்து எண்ணிப் பார்; கண்ணன் புகழ் பாட நேரமாகிவிட்டது” என்று அவளைத் தூண்டுகின்றனர்.



இவ்வாறு, இளம் பெண்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும் இயல்பான உரையாடலை, பரமார்த்த தத்துவத்தோடு இணைத்து, மிகச் சுவையாகக் கவிதையாக வடித்திருக்கிறாள் ஆண்டாள். இது அவளுடைய கவித்திறனின் உச்சம்.



அப்போது அந்தக் கோபி, “இப்படி என் அனுபவத்தின் நடுவே சில்லென்று அழைக்கிறீர்களே! சில்லென்று அழையாதீர்கள். பூரணத்துவம் பெற்ற நங்கைமீரே! நான் வந்து கொண்டிருக்கிறேன்; காத்திருங்கள்” என்று கூறுகிறாள்.



இதற்கு பூர்வாசார்யர்கள் ஒரு அழகிய உவமையைக் கூறுகிறார்கள்: ஒருவர் திருவாய்மொழி பாராயணம் செய்ய ஏற்பாடு செய்து, அதில் ஆழ்ந்து அனுபவிக்கும்போது, அதே ஏற்பாடு செய்தவரே இடையில் வந்து தடை செய்வது எவ்வளவு அசங்கதமோ, அதுபோல இந்தக் கோபி அனுபவத்தில் ஆழ்ந்திருக்க, மற்ற கோபியர் அவளை அழைப்பது அவளுக்கு இடையூறாகத் தோன்றுகிறது. இதனால், ஒரு பாகவதனுக்கே இன்னொரு பாகவதன் இடையூறாக ஆகிவிடும் நிலையும் உண்டு என்பதை உணர்த்துகிறது.



பெரியோர் இப்பாசுரத்தை “திருப்பாவையிலும் திருப்பாவை” என்று போற்றுவர். அதற்குக் காரணம், “நானே தான் ஆயிடுக” என்ற வாக்கியத்தின் ஆழம். இந்த ஒரு வாக்கியமே, வைஷ்ணவ ஒழுக்கத்தின் மையத்தைக் காட்டிவிடுகிறது. இல்லாத குற்றத்தை ஒருவர் நம்மீது சுமத்தினாலும், அதை மறுக்காமல், “அப்படியே ஆகட்டும்” என்று ஏற்றுக்கொள்வதே ஒரு வைஷ்ணவனின் உச்ச குணம் என்பதைக் குறிக்கிறது.



இப்பாசுரம் உரையாடல் வடிவில் அமைந்து, பாகவத கைங்கர்யம் பகவத் கைங்கர்யத்திற்கும் மேலானது என்பதை மிகவும் இனிமையாக வலியுறுத்துகிறது. பகவானைச் சேவிப்பது “சிற்றம் சிறுகாலே வந்துன்னை சேவித்து” என இருபத்தொன்பதாம் பாசுரத்தில் உச்சமாகப் பேசப்படுகிறது. ஆனால் அதற்கு முன்னரே, இந்தப் பதினைந்தாம் பாசுரத்தில், கோதை நாச்சியார் பாகவத சேவையின் உன்னதத்தைக் குறிப்பாக நிறுவிவிடுகிறாள். அடியாருக்குச் சேவை செய்வதே பகவானுக்கு மிக உகந்த வழி என்பதே இதன் மையம்.



திருப்பாணாழ்வார், “அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன்” என்று அரங்கனைப் போற்றிப் பாடியதும் இதே கருத்தையே. நம்மாழ்வாரும், அடியார்க்கு அடியாராக இருப்பதில் உள்ள மேன்மையைத் தனது திருவாய்மொழியில் உச்சமாக எடுத்துரைக்கிறார்:


“அடியார்ந்த வையமுண்டு.........அடியார் அடியார் தம் அடியார்…” என்ற பாசுரத்தில், ஏழு முறை “அடியார்” என்ற சொல்லைப் பயன்படுத்துவது, சப்தபர்வ தாஸ்யம் எனப்படும் – ஏழு பிறப்புகளிலும் அடியார்க்கு அடியாராக இருக்க வேண்டும் என்ற பேரவா.



குலசேகர ஆழ்வாரும் பிருதியஸ்ய பிருத்திய... என்கிறார் (தாசனுக்கு தாசன்...)



அடியார் சேவை என்பது சொல்லால் மட்டும் விளக்க இயலாதது; அனுபவத்தாலேயே அறியப்பட வேண்டியது. அதனால்தான் ஆண்டாள், இதனை நேரடி உபதேசமாகச் சொல்லாமல், உரையாடல் வடிவில் அமைத்து, சுவையாகவும் ஆழமாகவும் உணரச் செய்கிறாள்.



அடியார் சூழ்ந்து நிற்க, அவர்களுடன் கூடி பரமனின் திருவடிகளைச் சேவிப்பதே ஸ்ரீவைஷ்ணவத்தின் உயரிய லட்சியம். இதையே இப்பாசுரம் மறைமுகமாக வெளிப்படுத்துகிறது. பெரியாழ்வாரும், “எங்கள் குழாம் புகுந்து கூடு மனமுடையீர்” என்று அடியார்களை அழைத்ததையும் இங்கு நினைவு கொள்ளலாம்.



மேலும், ஒரு உத்தம ஸ்ரீவைஷ்ணவனின் பத்து குணாதிசயங்களும் இப்பாசுரத்தில் நுட்பமாகச் சுட்டப்படுகின்றன:


  • “எல்லே இளங்கிளியே” – இனிய வாக்கும் நற்பேச்சும்
  • “இன்னும் உறங்குதியோ” – அடியார் அருகில் இருக்கையில் பிற விஷயங்களில் ஈடுபடாமை
  • “சில்லென்றழையேன் மின்” – கடுஞ்சொல் தவிர்த்தல்
  • “நங்கைமீர்” – பணிவுடனும் மரியாதையுடனும் அணுகுதல்
  • “வல்லை உன் கட்டுரைகள்” – அடியார் கூறும் குற்றச்சாட்டுகளை மனமுவந்து ஏற்றல்
  • “வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக” – இல்லாத குற்றத்தையும் ஏற்றுக் கொள்ளும் தன்மை
  • “ஒல்லை நீ போதாய்” – அடியாரை காத்திருக்க விடாதல்
  • “உனக்கென்ன வேறுடைய” – சாஸ்த்ரவழிக்கு மாறாக நடக்காமை
  • “எல்லாரும் போந்தாரோ” – அடியார் கூட்டமே உபாயம் என உணர்தல்
  • “வல்லானைக் கொன்றானை…” – பரமனின் கல்யாண குணங்களைப் பாடி அடியாரை மகிழ்வித்தல்



மேலும், இதற்கு இன்னொரு உள்ளார்ந்த பொருளும் உண்டு.

  1. இளங்கிளியே – சம்சாரத்தில் சிக்கிய ஜீவன்
  2. இன்னும் உறங்குதியோ – பல பிறவிகளாக ஞானம் பெற இயலாத நிலை
  3. எல்லே – அத்தகைய ஜீவனுக்கும் சத்சங்கம் கிடைப்பது ஒரு அதிசயம் என்பதைக் குறித்தல்
  4. நங்கைமீர் – ஞானம் பெற்ற அடியவர்கள்
  5. சில்லென்றழையேன் மின் – அஞ்ஞானத்தால் நிகழும் தவறுகளுக்காக கடிந்துகொள்ள வேண்டாம்
  6. போதருகின்றேன் – பகவத், பாகவத, ஆசார்ய சேவைகளில் நுழையத் தயாராகிறேன்
  7. வல்லை உன் கட்டுரைகள் – ஆசார்ய உபதேசங்களை நினைவில் கொள்ளுதல்
  8. வல்லீர்கள் நீங்களே – அந்த உபதேசங்களை அடியார்கள் பகிர்வது
  9. நானேதான் ஆயிடுக – விஷய சுகங்களில் மனம் செல்லும் என் குறை
  10. ஒல்லை நீ போதாய் – உலகப் பற்றை விட்டு விரைந்து வருக
  11. எல்லாரும் போந்தாரோ – எல்லா அடியாரும் இதே மார்க்கத்தை ஏற்றார்களா?
  12. போந்தார் போந்தெண்ணிக் கொள் – ஆம், அடியார்கள் அனைவரும் இதையே உபாயமாகக் கொண்டுள்ளனர்
  13. வல்லானைக் கொன்றானை… – நம் பாபங்களை அழித்து, மாயையை நீக்கி, பகவத்–பாகவத சேவையில் ஈடுபடுத்தும் பரமனைப் பாடுவோம்


இவ்வாறு, இந்தப் பாசுரம் திருவெம்பாவையில் வரும் “ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ…” என்ற பாடலின் பொருள்நடையை ஒத்ததாக உள்ளது என்று அண்ணங்கராச்சாரியர் குறிப்பிடுகிறார்.


No comments:

Post a Comment

எல்லே! இளங்கிளியே!....

  எல்லே! இளங்கிளியே!.... இப்பாசுரமே, திருப்பாவையில் பக்தர்களை எழுப்பும் அதிகாரத்தின் நிறைவுப் பாசுரமாக அமைந்துள்ளது. இங்கு எழுப்பப்படுகின்ற ...