Monday, 29 December 2025

“உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்…”

 

“உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்…” 



திருப்பாவையில் ஐந்தாம் பாசுரத்திலிருந்து பதினைந்தாம் பாசுரம் வரையிலான பத்து பாசுரங்களில், ஆண்டாள் பத்து கோபியரை எழுப்புகிறாள். இவற்றுள் சில பாசுரங்களில் விடியற்காலத்தின் லக்ஷணங்களை வெளிப்படையாகக் கூறியும், சிலவற்றில் அவற்றைச் சொல்லாமலேயே உட்கருத்தாக உணர்த்தியும் பாடியிருப்பது விசேஷம். இவ்வகையில், “உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்” எனத் தொடங்கும் இப்பதினான்காம் பாசுரம், புறவுலக நிகழ்வுகளையும் அகநிலை உண்மைகளையும் ஒருங்கே விளக்கும் ஆழ்ந்த தத்துவப் பொருளை உடையதாகும்.



ஸ்ரீவைஷ்ணவ ஆசார்ய பரம்பரையில் மகத்தான ஆசார்யராக விளங்கிய ஸ்ரீ மணவாள மாமுனிகள், தமது உபதேச ரத்னமாலையில், ஓர் ஆசார்யனுக்குத் தேவையான முதன்மை லக்ஷணம் யாதெனில் — ஞானமும் அனுஷ்டானமும் சம்யக்ப்ரகாரமாக ஒருங்கிணைந்து நிற்றல் என அருளிச் செய்கிறார். வெறும் ஞானம் மட்டும் போதாது; அதனை வாழ்க்கையிலே நடைமுறையாக்கிக் காட்டும் அனுஷ்டானமும் அவசியம். ஞானம் அனுஷ்டானமின்றி இருந்தால் அது பிறருக்குப் பயனளிக்காது.



இவ்வாறு இருக்க, இக்காலச் சூழ்நிலையில் இதனுடன் இன்னொரு அம்சமும் மிக முக்கியமாகத் தோன்றுகிறது. அதாவது, ஞானத்தை வெளிப்படுத்தும் முறை — விவரிக்கும் பாங்கு. ஒருவன் பரிபூரணமான ஞானத்தையும், அதனை அனுஷ்டிக்க வல்ல ஆற்றலையும் பெற்றிருந்தாலும், அதனை உரிய முறையில் எடுத்துரைக்கும்போதுதான் அது பிறருக்குப் பயன்படும். உரிய வடிவிலும் முறையிலும் வெளிப்படாத ஞானம், பரலோகோபகாரமாயினும், லோகோபகாரமாக விளங்காது.



இப்பாசுரத்தில், “உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்” என்று சொல்லப்படுவது, அந்த கோபியின் இல்லப்புறத்திலுள்ள சிறு குளத்தைச் சுட்டுகிறது. அங்கு செங்கழுநீர் மலர்கள் இதழ் விரிந்து மலர்ந்து, ஆம்பல் மலர்கள் இதழ் குவிந்து மூடிக்கொண்டிருப்பதைத் தோழியர் காண்கிறார்கள். இது தினசரி அனுபவத்தின் அடிப்படையிலான வர்ணனை. செங்கழுநீர் பகலில் மலரும்; ஆம்பல் இரவில் மலரும். சூரியன் உதயிக்கத் தொடங்கியதைக் மலர்களே உணர்ந்து விட்டன. அதனால், “நாங்கள் வெளியிலிருந்து உணர்கிறோம்; நீ மட்டும் உள்ளே இருப்பதால் உணராமல் உறங்குகிறாய்” என்ற நுண்ணிய சுட்டுரை இதில் அடங்கியுள்ளது.



“செங்கல் பொடிக் கூரை வெண்பல் தவத்தவர்” என்ற தொடரில் வரும் தவத்தவர் யார் என்பதைக் குறித்து வியாக்யானங்களில் பலவித விளக்கங்கள் உள்ளன. சிலர் இவர்களை சிவபக்தர்கள் எனக் கூறுவர். காலை பொழுது வந்துவிட்டது என்பதை உணர்ந்து, சிவாலயங்களில் சங்கொலி எழுப்பச் செல்லும் சிவபக்தர்களையும் குறிக்கலாம். சில வியாக்யானங்கள் இதனைச் சற்றே நகைச்சுவை கலந்த முறையில் எடுத்துக் கொண்டு, “சோம்பலுற்றவர்களாகக் கருதப்படும் சிவபக்தர்களுக்கே இப்போது விடியல் தெரிந்துவிட்டது” என்று தோழியர் சொல்லுவதாகக் கூறுகின்றன.



ஆனால், திருமலை நம்பி முதலிய ஆசார்யர்கள், இதனைச் சத்த்வநிஷ்டர்களான வைஷ்ணவ சந்நியாசிகளையே குறிப்பதாக எடுத்துரைக்கின்றனர். “வெண்பல்” என்பது அவர்களது உள்ளத் தூய்மையையும், “காவியுடை” என்பது வைராக்யத்தையும் சுட்டுவதாக விளக்கப்படுகிறது. அண்ணங்கராச்சாரியர், “வம்பற்ற அத்தவர்” என்ற பாடாந்தரத்தையும் எடுத்துக் காட்டி, சம்சார வம்புகளற்ற தவத்தவரையே இது குறிக்கிறது என்கிறார். “சங்கிடுவான்” என்பது சங்கை ஊதுதல் என்றும், திருக்கோயிலைத் திறத்தல் என்றும் இருவகைப் பொருள் பெறும்.



இப்பாசுரத்தின் இன்னொரு நுட்பமான பொருள் என்னவென்றால் — குற்றம் செய்தவர்களாக இருந்தாலும், கண்ணனைச் சரணடைந்து அவனிடம் முகம் திருப்பினால், அவன் அருளுக்குப் பாத்திரமாக முடியும் என்பதே. மற்ற கோபியரை எழுப்புவதாக வாக்குறுதி அளித்துவிட்டு, அதை நிறைவேற்றாமல் உறங்கிக்கொண்டிருக்கும் பெண்ணையுமே ஆண்டாள், “கண்ணன் புகழைப் பாட வருவாயாக” என்று அழைப்பதிலிருந்து இந்தக் கருணைத் தத்துவம் வெளிப்படுகிறது.



மேலும், அந்தப் பெண் உண்மையில் உறங்கவில்லை; கிருஷ்ணானுபவத்தில் திளைத்து, தியான நிலையில் இருக்கிறாள் என்றும் வியாக்யானம் கூறும். இரவு–பகல் என்ற வேறுபாடே அவளுக்கு மறந்துவிட்டது. பரமானந்தத்தில் ஆழ்ந்திருப்பவளுக்கு காலபேதம் எங்கே?



அத்துடன், எழுப்பப்படுகின்ற அந்த கோபி, துடுக்குடன் பேசினாலும், அதே நேரத்தில் இனிமையும் நுட்பமும் நிறைந்த வாக்காற்றல் உடையவள். “செங்கழுநீர் மலர, ஆம்பல் மூட” எனத் தோழியர் சொல்வதைக் கேட்டு, “நான் பேசாததை ஆம்பலோடு ஒப்பிட்டு, நீங்கள் பேசுவதை செங்கழுநீரோடு ஒப்பிடுகிறீர்களா?” என்று நகைச்சுவையோடு கேட்கிறாள். இவ்வாறு, இனிய சொற்களால் பிறரை வசப்படுத்தும் சாதுர்யம் அவளிடம் இருப்பதாக மற்ற கோபியர் நம்புகிறார்கள். அதனால் தான், அவள் தங்களை ஏமாற்றினாலும், “நாணாதாய், நாவுடையாய்” என்று சிறு சினத்தோடும் அன்போடும் அழைத்துக் கொண்டு, தங்களுடன் அழைத்துச் செல்ல ஆவலுறுகின்றனர்.



இதனூடே, “நாவுடையாய்” என்ற சொல்லின் ஆழ்ந்த பொருளை ஆண்டாள் உணர்த்துகிறாள். நாவு என்பது வெறும் உண்பதற்கோ, வீண் பேச்சுக்கோ அல்ல; பரமனின் திருநாமங்களைப் பாடவும், நல்விஷயங்களைப் பிறருக்குச் சொல்லவும் உரிய கருவி. ஆகவே, நல்வாக்கு உடையவளாக இருப்பதே உயர்ந்த பண்பாகும்.



கர்மபலன் என்பது மனம்–வாக்கு–காயம் என்ற மூன்றின் சார்புடையது. இப்பாசுரத்தில் உறங்கும் கோபி, “நாவுடையாள்” எனப் போற்றப்படுவதால், அவளிடம் வாக்குத் தூய்மை நிலைபெற்றுள்ளது என்றும், அதற்குக் காரணமான மனத் தூய்மையும் பெற்றுவிட்டாள் என்றும் அறியலாம். இனி அவளுக்குக் குறைவாக இருப்பது, பூரண சரணாகதிக்கான செயல் மட்டுமே.



“நங்காய்” என்ற சொல்லும் இங்கே அவளது மேன்மையைச் சுட்டுகிறது. உயர்ந்த ஞானமும் குணமும் உடைய ஆண்களை “நம்பி” என அழைப்பது போல, அரிய குணச் செல்வம் பெற்ற மகளிரை “நங்கை” என்று அழைப்பது மரபு. ஆகவே, இவள் சாதாரண பெண் அல்ல; ஞானநிலை பெற்ற சிறப்புமிக்கவள் என்பதே கருத்து.



மேலும், இப்பாசுரத்தில் மூன்று பிரமாணங்களும் நுட்பமாக சுட்டப்படுகின்றன:
  • பிரத்யட்சம், 
  • அனுமானம், 
  • சப்தம்.


பிரமாணம் என்பது ஞானம் பெறும் வழி. பிரமேயம் என்பது அந்தப் பிரமாணங்களால் அறியப்படும் பொருள். சப்தப் பிரமாணம் என்பது வேதம் போன்ற அபௌருஷேய சாஸ்திரத்தைச் சார்ந்தது. வேதத்திற்குச் செயற்படுத்தியவர் எவரும் இல்லை; வியாசர் அவற்றைத் தொகுத்தளித்தார் மட்டுமே. ஆகையால் அதுவே குறையற்ற பிரமாணம்.


பிரத்யட்சமும் அனுமானமும் குறைபாடுகளுக்குட்பட்டவை.
“உங்கள் புழைக்கடை” — அனுமானப் பிரமாணம்.
“தவத்தவர் தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போகின்றார்” — பிரத்யட்சப் பிரமாணம்.
“எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும் நங்காய்” — ஆப்தவாக்கியம்; அதாவது சப்தப் பிரமாணம்.


மேலும், உள் பொருளாக:

  • “செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து” — உலக விஷயங்களில் மூழ்கியவர்க்கு ஞானம் முளைக்கத் தொடங்குதல்.

  • “ஆம்பல் வாய் கூம்பின” — காம, க்ரோதாதி அஞ்ஞான விருத்திகள் ஒடுங்குதல்.

  • “செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்” — உத்தம ஆசார்ய சம்பந்தம் ஏற்படுதல்.

  • “எங்களை முன்னம் எழுப்புவாய்” — சம்சார நித்திரையிலிருந்து எங்களை எழுப்ப உத்தம அதிகாரியான நீயே அருள் புரிய வேண்டும் என்பதாம்.


“நாணாதாய்” என்பது வெட்கமின்மையை அல்ல; அகங்கார–மமகார ரஹிதத்துவத்தைக் குறிக்கிறது. தன்னைச் சார்ந்த பெருமிதம் அற்றவள் என்பதாலேயே அந்தச் சொல் பொருத்தமாகிறது.



“நாவுடையாய்” என்பது சகல சாஸ்திரங்களிலும் நிபுணத்துவம் பெற்ற, நல்வாக்கு வழங்க வல்ல சான்றோரைச் சுட்டும். ஹனுமான் முதலியோர் “நாவுடையார்” என அழைக்கப்படுவது இதனால் தான். ஆகவே, இது உறங்கும் கோபியின் சிறப்பையே வெளிப்படுத்துகிறது என்று அண்ணங்கராச்சாரியர் முதலியோர் விளக்குவர்.



“சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்” — சங்கமும் சக்கரமும் பரமனின் பரத்துவத்தையும், அவனே உபாயமும் உபேயமும் என்பதையும் அறிவிக்கின்றன. அவனை உபாசிக்கும் மார்க்கத்தை எடுத்துரைப்பதே இச்சொற்றொடரின் உள்நிலை.



இவ்வாறு, ஆண்டாள் தமது பதினான்காம் பாசுரத்தின் மூலம் வாக்கின் மகிமையை விசேஷமாக வெளிப்படுத்துகிறாள். “நாவுடையாய்” என்ற ஒரே சொல்லின் வழியே, பேசுவதில் விவேகம், மரியாதை, இனிமை, பொறுப்பு ஆகிய அனைத்தும் இருக்க வேண்டுமென்று உபதேசிக்கிறாள். தனிநலத்திற்காக அல்ல; உலக நலனைக் கருத்தில் கொண்டு, சாஸ்த்ரப்ரமாணமுள்ள சத்கிரந்தங்களில் இருந்து பெற்ற ஞானத்தைப் பிறருக்குப் பகிர வேண்டுமென்பதே அவள் கருத்து. புகழ் அல்லது பிரதிஷ்டை பெறுவதற்காக இனிய சொற்களைப் பயன்படுத்துவது பாபமே ஆகும்.



ஆகையால், ஆண்டாள் அருளிய “நாவுடையாய்” என்ற உபதேசத்தை மனத்தில் உறுதியாக நிலைநிறுத்திக் கொண்டு, யாரிடம், எதனை, எவ்வாறு பேச வேண்டுமோ — அதனைச் சரியான முறையில் பேசும் பயிற்சியில் நாம் அனைவரும் ஈடுபடுவோமாக.

No comments:

Post a Comment

India’s Recent PSLV Setbacks: What They Mean—and What Needs to Happen Next

  India’s Recent PSLV Setbacks: What They Mean—and What Needs to Happen Next India’s space programme has long been admired for its engineer...