திருப்பாவை 3 – ஓங்கி உலகளந்த…
ஒரு கவிஞனின் படைப்பை வாசிக்கும் போது, ஒரு அடிப்படை உண்மையை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அவன் படைக்கும் உலகம், அவன் மனத்தில் உருவான உலகமே. அவன் வாழ்ந்த சமூகம், காலம், சூழல் ஆகியன அவன் பாடல்களில் நிழலாகப் பிரதிபலிக்கலாம்; ஆயினும், அவன் உள்ளத்தில் உருவான உலகமே முதன்மை பெறுகிறது. ஆண்டாள் தனக்காகப் பாடியவள் அல்ல; வையத்து வாழும் உயிர்களுக்காகவே அவள் பாடினாள். அவர்களுக்கெல்லாம் இறையருள் நிச்சயம் கிடைக்கும் என்ற உறுதியோடு அவள் பாடல்கள் பிறந்தன.
ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தம் எவ்வளவு நுட்பமாக, அழகாக, திருப்பாவை பாசுரங்களின் கட்டமைப்பில் செதுக்கப்பட்டுள்ளது என்பதை, இப்பாசுரங்களை ஆழ்ந்து நோக்கினால் விளங்கும். இந்த சித்தாந்தம், கர்ம யோகம், ஞான யோகம், பக்தி யோகம் ஆகியவற்றை மோக்ஷத்திற்கான நேரடி சாதனங்களாக ஏற்கவில்லை. ‘ப்ரபத்தி’ எனப்படும் முழு சரணாகதியையே மோக்ஷ சாதனமாகக் கூறுகிறது. அந்த சரணாகதியும், அர்ச்சிராதி மார்க்கம் வழியாகவே ப்ரஹ்மத்தை அடையச் செய்யும் என்று விளக்குகிறது.
வைஷ்ணவ மரபில், இறைவனின் நிலைகள் ஐந்தாகக் கருதப்படுகின்றன. அவை: பரம், வியூகம், விபவம், அந்தர்யாமி, அர்ச்சை. இதனை நம்மாழ்வார்,
“விண்மீதிருப்பாய், மலைமேல் நிற்பாய்,
கடல்சேர்ப்பாய், மண்மீதுழல்வாய்,
இவற்றுளெங்கும் மறைந்துறைவாய்”
என்று அருமையாக எடுத்துரைக்கிறார்.
விண்மீது, பரமபதத்தில் நாராயணனாக இருப்பது ‘பரம்’.
கடல்சேர்ப்பாய் – பாற்கடலில் பள்ளிகொண்ட நிலை ‘வியூகம்’.
மண்மீது உழல்வாய் – அவதாரங்களை எடுத்து உலகில் உலாவுவது ‘விபவம்’.
மறைந்துறைவாய் – அனைத்திலும் அந்தர்யாமியாக இருப்பது ‘அந்தர்யாமி’.
மலைமேல் நிற்பாய் – அர்ச்சாவதாரமாக கோவில்களில் நிலைபெறுவது ‘அர்ச்சை’.
இதனை ராஜாஜி,
“கல்லினார்க்கு இறங்கி, கல்லிலே இறங்கி,
நிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா”
என்று பாடுகிறார். இங்கு ‘சிலை’ அல்ல, ‘நிலை’ என்பதே பொருத்தமான சொல்; ஏனெனில் பகவான் சிலையாக இல்லை, நிரந்தர நிலையாக நிற்கின்றான்.
திருப்பாவையின் முதல் பாசுரத்தில் ஆண்டாள், ‘நாராயணன்’ என்று பரமபத நாதனைச் சுட்டினாள். இரண்டாம் பாசுரத்தில், ‘பாற்கடலில் பையத்துயின்ற பரமன்’ என்று வியூக மூர்த்தியைப் பாடினாள். இம்மூன்றாம் பாசுரத்தில், ‘ஓங்கி உலகளந்த உத்தமன்’ என்று விபவ அவதார மூர்த்தியை எடுத்துரைக்கிறாள்.
உத்தமன் யார்?
பிறரைத் துன்புறுத்தி தன் வாழ்வை அமைத்துக் கொள்பவன் ‘அதமன்’.
தானும் பிறரும் வாழ வேண்டும் என்று எண்ணுபவன் ‘மத்தியமன்’.
தன்னை வருத்திக் கொண்டு பிறர் வாழ வேண்டும் என்று விரும்புபவன் ‘உத்தமன்’.
இங்கே ஆண்டாள் ‘உத்தமன்’ என்று வாமனனையா குறிப்பிடுகிறாள்? தீவிரமான கிருஷ்ண பக்தையான ஆண்டாள், வாமனனை ஏன் பாட வேண்டும்? ‘ஓங்கி உலகளந்த உத்தமன்’ என்று அவள் குறிப்பிட்டது பகவான் கிருஷ்ணரைத்தான் என்பதை நாம் ஆராய்ந்து பார்க்கலாம்.
வாமன அவதாரத்தில், மகாபலியிடம் மூன்றடி நிலம் யாசகமாகக் கேட்கப்பட்டது சூழ்ச்சியால்தான். மேலும், தானம் தடுக்க முயன்ற சுக்ராச்சாரியரின் கண், தர்ப்பைப் புல்லால் சேதப்படுத்தப்பட்டது. இவ்வாறு யாசகமாகப் பெற்ற அவதாரத்தை ஆண்டாள் ‘உத்தமன்’ என்று புகழ்ந்திருப்பாளா என்பது கேள்வியாகிறது.
அப்படியெனில், கிருஷ்ணன் எவ்வாறு ‘ஓங்கி உலகளந்தவன்’ ஆனான்? ‘ஓங்கி உலகளந்த’ என்பதற்கு, உடல் பெரிதாகி உலகத்தை அளந்தது என்ற ஒரே பொருள் இல்லை. பிரபஞ்சமெங்கும் வியாபித்து நிற்பதும், அதாவது விசுவரூபம் காட்டுவதும், உலகத்தை அளந்ததற்குச் சமமானதே.
குழந்தையாக மண்ணுண்டபோது, யசோதை அவன் வாயைத் திறக்கச் சொல்லி கண்ட காட்சி—அந்தச் சிறு வாயினுள் முழுப் பிரபஞ்சமும் தோன்றியது. கௌரவர்களின் சபையில், திருதராஷ்டிரனுக்கு விசுவரூபம் காட்டியது. குருக்ஷேத்திரப் போர்க்களத்தில், அர்ஜுனனுக்குக் கீதோபதேசம் செய்யும் முன், விசுவரூப தரிசனம் அளித்தது—இவையெல்லாம் கிருஷ்ணன் உலகத்தைத் தன்னுள் அளந்தவன் என்பதை உறுதிப்படுத்துகின்றன. ஆகவே, ஆண்டாள் ‘ஓங்கி உலகளந்த உத்தமன்’ என்று கூறியது கிருஷ்ணரைத்தான் என்பதில் ஐயமில்லை.
எனினும், த்ரிவிக்ரம அவதாரத்தைக் குறிப்பதற்கும் ஒரு ஆழ்ந்த பொருள் உண்டு. அசுரனான மகாபலியை கொல்லாமல் வாழ்வளித்த அவதாரம் அது. நல்லவன்–கெட்டவன், ஆஸ்திகன்–நாஸ்திகன் என்ற வேறுபாடின்றி, எல்லோரின் தலையிலும் தன் திருவடியை வைத்த அவதாரம். ஆகவே, சர்வவ்யாபகத்துவம், சர்வஞ்ஞத்துவம் ஆகிய பண்புகள் வெளிப்பட, ஆண்டாள் அவனை ‘புருஷோத்தமன்’ என்று அழைத்திருக்கலாம்.
பகவான் நாமத்தை இடையறாது அனுசந்திப்பதால் விளையும் நன்மைகளை ஆண்டாள் இப்பாசுரத்தில் எடுத்துரைக்கிறாள். அந்த வகையில், இது ஒரு மங்களாசாசனப் பாசுரமாகும். பகவந்நாமம் சொல்லிக்கொண்டே நீராட வேண்டும் என்று அவள் வலியுறுத்துகிறாள். ‘திங்கள் மும்மாரி’ என்பது அளவோடு பெய்யும் மழை. மிகுதியான மழையும் தீங்கு; மழையின்மையும் தீங்கு. எவருக்கும் தொல்லை இல்லாத மாரி வேண்டும் என்பதற்காகவே, உத்தமனின் நாமத்தை ஆண்டாள் ஏந்துகிறாள்.
பகவான் ஓங்கி வளர்ந்ததுபோல், நெற்பயிர்கள் வயல் முழுவதும் செழித்து வளர்கின்றன. அந்த வயல்களில் ஓடும் நீரோடைகளில் மீன்கள் துள்ளி விளையாடுகின்றன. குவளை மலர்களின் தளிர்களில் வண்டுகள் துயில்கின்றன. இவ்வுருவகங்கள், பரமனின் அருளால் ப்ரபன்னர்களிடையே ஞானம் பயிர்போல் செழித்து வளர்வதை உணர்த்துகின்றன. ஆசார்யர்களை அண்டிய சிஷ்யர்கள், அந்த ஞான இன்பத்தில் துள்ளும் கயல்களைப்போல் களிப்படைகின்றனர். பாகவதர்களின் இதயக் கமலத்தில், அந்த பரமன் வண்டுபோல் துயில்கிறான்.
அத்தகைய செழிப்பில், பெரிய பசுக்கள் குடம் குடமாக பாலைச் சொரிகின்றன. அவற்றின் மடி பெருத்திருப்பதால், இரு கைகளாலும் பற்றியே பாலை கறக்க முடிகிறது. தயக்கமின்றி பாலை கறக்க ஆய்பாடி இடையர்கள் தயாராக நிற்கிறார்கள்.
இங்கே பசுக்கள் ஒரு உருவகம்—பகவானுக்கே உரிய உருவகம். வள்ளன்மை அவன் இயல்பு. எவ்வளவு கொடுத்தாலும் குறையாத வள்ளல் அவன். கன்றுகளும் இடையர்களும் பாலை வாங்காவிடில் பசு தவிப்பதுபோல், ஜீவாத்மாக்கள் அவனை ஏற்றுக்கொள்ளாவிடில், பரமனும் தவிக்கிறான். ஜீவாத்மாக்கள் அவனை எவ்வளவு அனுபவிக்கிறார்களோ, அவ்வளவே அவனும் அவர்களால் இன்புறுகிறான் என்பது இதன் சாரம்.
‘வாங்கக் குடல் நிறைக்கும் வள்ளல் பெருபசுக்கள்’—கையில்பட்டவுடன் பாற்குடத்தை நிரப்பும் பசுக்கள். அவற்றின் வள்ளன்மைக்கு காரணம் என்ன? கண்ணனின் அருளும், அவன் குழலோசையும் என்று உரையாசிரியர்கள் கூறுகின்றனர்.
சிறுவிரல்கள் தடவிப் பரிமாறச் செங்கண் கோடச் செய்ய வாய் கொப்பளிப்பக
குறுவெயர்ப் புருவம் குடிலிப்பக் கோவிந்தன் குழல்கொடு ஊதின போது
பறவையின் கணங்கள் கூடு துறந்து வந்து சூழ்ந்து படுகாடு கிடப்பக்
கறவையின் கணங்கள் கால் பரப்பிட்டுக் கவிழ்ந்து இறங்கிச் செவி ஆட்டகில்லாவே
பெரியாழ்வாரின் திருமொழியில், கண்ணன் குழலூதும் போது, மயங்கிய பசுக்களின் பால் பெருகும் காட்சி விரிவாகப் பாடப்படுகிறது. “புல்லால் வளருகிறவை என்றே, தீங்குழலோசை அசையிட்டிறே வளருவது” என்று வியாக்கியானம் உரைக்கிறது.
இவ்வாறு, ‘ஓங்கி உலகளந்த உத்தமன்’ என்ற நாமத்தைச் சொல்லி, பாடி, நீராடி, நோன்பிருந்து, இத்தகைய செல்வங்கள் எந்நாளும் விட்டு நீங்காமல் கிடைக்க வேண்டும் என்று ஆண்டாள் இந்தப் பாசுரத்தில் மங்களாசாசனம் செய்கிறாள்.
.jpeg)
.jpeg)
.jpeg)
No comments:
Post a Comment