Tuesday, 23 December 2025

கீழ்வானம் வெள்ளென்று!

கீழ்வானம் வெள்ளென்று! 



காலை நேரத்தை ஆண்டாளைப் போல் பாடல்களால் மகிமைப்படுத்தியவர்கள் அரிது. திருப்பள்ளியெழுச்சியால் காலைச் சிறப்பித்த தொண்டரடிப்பொடி ஆழ்வாரும், திருவெம்பாவையால் காலையைப் பாடிய மாணிக்கவாசகரும் நினைவிற்கு வருவர். ஆயினும் அவை அனைத்தும் ஆண்களின் காலை; ஆண் ஆதிக்கம் மேலோங்கிய காலைகள். பெண்கள் அவற்றில் மிகக் குறைவு. ஆனால் ஆண்டாளின் காலை வேறு. அது பெண்களின் காலை. இளம்பெண்களின் காலை. ‘விருத்தைகள்’ — வயது முதிர்ந்த பெண்கள் — எழுந்து, “இது உங்களுக்கு உரிய நேரமல்ல” என்று தடுக்கும் முன், கண்ணனை அடைய அவசரப்படும் இளமைத் துடிப்புள்ள பெண்களின் காலை அது.


இந்த எட்டாவது பாசுரத்தின் உள்ளார்ந்த பொருளை விரித்து நோக்கும்போது, ஆண்டாள் தம் தோழியருடன் இணைந்து ஒரு விசேஷமான கோபியைத் துயிலெழுப்பச் செல்கிறாள். அந்தக் கோபி எத்துணை சிறப்புடையவள் என்றால், ஒருவரோ இருவரோ அல்ல; மிக்குள்ள பிள்ளைகளும் — எல்லா தோழியரும் ஒன்றுகூடி வந்து அவளை எழுப்ப வேண்டிய நிலை.
ஏன்? அவள் கண்ணனுக்கே மிகுந்த பிரியமானவள்; அலங்காரத்திலும், ஆனந்தத்திலும், உற்சாகத்திலும் பூரித்தவள்.


முந்தைய பாசுரங்களைப் போலவே, இப்பாசுரத்திலும் ஒரு நுட்பமான கற்பனை உரையாடல் அமைந்துள்ளது. வெளியே நின்று ஆண்டாள் பேசுகிறாள்; உள்ளே துயில்கின்ற கோதுகலமுடைய பாவாய் பதிலளிக்கிறாள். இந்த உரையாடலின் ஊடே தான் ஆழ்ந்த வைஷ்ணவ தத்துவங்கள் மெதுவாக வெளிப்படுகின்றன.


ஆண்டாள் கூறுகிறாள்: உலகியலில் மூழ்கிய சாம்சாரிகள் இரவில் உறங்கி, விடியற்காலத்தை எதிர்பார்த்து, மறுநாள் உலகச் செயல்களில் மூழ்க விரும்புகிறார்கள். ஆனால் நாங்கள் — பகவத் அனுபவத்தில் திளைக்கும் அடியார்கள் — கண்ணனுடன் கூடி இருப்பதற்குக் கிடைக்கும் சிறு வாய்ப்பையும் பெரும் பேறாகக் கருதி, அதை விடாது பற்றிக் கொள்கிறோம். பெரியோரின் அனுமதியோடு, கண்ணனுடன் தெய்வீக அனுபவம் பெறுவதற்கான இத்தகைய அரிய நேரத்தில், நீ மட்டும் இன்னும் துயிலில் இருப்பது எவ்வாறு பொருந்தும்? பாராயோ! எங்கள் ஆன்மிக அனுபவத்தைத் தடுக்கிறவர்களே எழுந்துவிட்டார்கள். ஆனால் நீ மட்டும் இன்னும் உறங்கிக் கொண்டிருக்கிறாய்!


அதற்கு கோதுகலமுடைய பாவாய் கேட்கிறாள்: “இப்போது எழுந்திருக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்று எப்படித் தீர்மானிக்கிறீர்கள்?


ஆண்டாள் பதிலளிக்கிறாள்: கீழ்வானம் வெள்ளென விளங்குகிறது. கிழக்குத் திசையில் வெண்மை தோன்றி, சூரிய உதயத்திற்கு முன்சூசனையாக நிற்கிறது — கீழ்வானம் வெள்ளென்று



அதிகாலையில் வானம் உடனே வெண்மையாகிவிடாது. இருளிலிருந்து சிவப்பு, மஞ்சள் எனப் பல நிறங்களைக் கடந்து, மெதுவாக முழு வெண்மையை அடையும். அதுபோலவே, அடியார்களும் ஆச்சார்ய சம்பந்தத்தின் துணையோடு பல அனுபவ நிலைகளைத் தாண்டி, இறுதியில் ஞானத் தெளிவை அடைகிறார்கள்.


ஒரு காலத்தில் “East is red” என்ற மேற்கத்திய சொல் பரவியது. ஆனால் இங்கே ஆண்டாள், “கிழக்கு வெளுத்தது” என்கிறாள். வெண்மை — சாத்வீகத்தின் சின்னம். சத்துவ குணம் ஓங்கும் காலம் அது. “அசேதனத்திற்கும் சைதன்யம் உண்டாகும் படி சத்த்வோத்தரமான காலமாயிற்று” என்று வியாக்யானம் கூறுகிறது. உயிரற்றவைகளுக்கும் உயிர் தரும் காலை. மீண்டும் இருள் சூழும் என்பதைக் ஆண்டாள் அறியாதவளா? அறிந்தவள்தான். ஆனால் இருளுக்குப் பின் மீண்டும் காலை வரும் என்பதையும் அவள் அறிந்திருக்கிறாள். “நாங்கள் காலைக்குக் காத்திருப்பவர்கள்; உங்களைப் போன்றவர்கள் இருளுக்குக் காத்திருப்பவர்கள்” என்ற நுட்பமான சுட்டுரை இங்கே மறைந்துள்ளது.


அதைச் சிரிப்புடன் மறுத்து கோதுகலமுடைய பாவாய் கூறுகிறாள்: நீங்கள் அனைவரும் கண்ணனைப் பிரிவில்லாமல் காண ஆவலுற்று, எப்போதும் கிழக்கையே நோக்கிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் — திங்கள் திருமுகத்து சேயிழையார். உங்கள் முக ஒளியே வானில் பிரதிபலித்து வெண்மையாகத் தோன்றியிருக்கலாம். மேலும், பால், தயிர், மோர் போன்ற வெண்மையானவற்றையே நீங்கள் எப்போதும் காண்பதால், வானமும் உங்களுக்கு வெண்மையாகத் தோன்றுகிறது. வேறு ஏதாவது உறுதியான அறிகுறி உண்டா?


அதற்கு ஆண்டாள் கூறுகிறாள்: பனித்துளிகள் படர்ந்த புல்லை மேய்வதற்காக எருமைகள் வயல்களில் பரவி விட்டன. இது விடியற்காலம் வந்ததற்கான அடையாளமல்லவா? இன்னும் கேட்டால் — இப்போது நீ எழவில்லை என்றால், பசுக்களின் பின்னே சென்று தன் தினசரி கடமையைச் செய்யக் கண்ணன் புறப்பட்டு விடுவான்.


‘சிறு வீடு’ என்ற சொல், வீட்டின் முன்புறத்தில் உள்ள புல்வெளி, தோட்டம் என்ற பொருளையும் தரும். காலையில் பனிப்புல் மேய விட்ட பிறகே ஆயர்கள் பாலைப் பறிப்பார்கள் என்பது ஆயர் மரபு. அக்னிஹோத்ரம், ஹோமம் முதலியவற்றில் வளர்ந்த ஸ்ரீவில்லிபுத்தூர் பிராமண கன்னி, இத்தகைய ஆயர் வழக்கங்களை எவ்வாறு அறிந்தாள்?
அதற்கு ஒரே விடை — ஆண்டாள் தன்னை முழுமையாக கோபியாகவே வரித்துக் கொண்டாள். பெரியாழ்வார் மகளாகிய அவள், வேத விதிகளைக் காட்டிலும், ஆய்ச்சியரின் வாழ்வியலோடு ஒன்றிப் போனாள்.



எருமை சிறுவீடு மேய்வான் பரந்தன காண் - பாகவத அனுபவத்தில் சதா சர்வகாலமும் திளைத்திருப்பதால், மோட்ச சித்தியை அடைய நிறைய சமயம் எடுத்துக் கொள்ளும் அடியவரை, பரபரப்பின்றி நிதானமாக மேயும் எருமை உருவகப்படுத்துகிறது. 'சிறுவீடு' என்பதை சிற்றின்பமாக அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்। தொடர்ச்சியாக 'பரந்தன காண்' எனும்போது தமோ குணங்கள் விலகிப் போவதைக் குறிப்பதாக எடுத்துக் கொள்ளலாம் !!!


இதையும் மறுத்து கோதுகலமுடைய பாவாய் கூறுகிறாள்: உங்கள் முக ஒளி வானில் பிரதிபலித்ததால் இருள் அகன்றது. அந்த இருளையே நீங்கள் எருமைகள் என்று தவறாக எண்ணிக் கொண்டீர்கள். 



ஆண்டாள் விடை தருகிறாள்:நாங்கள் அறியாமையால் மயங்கியவர்கள் என்று நீ கருதினாலும், இன்னும் இரவுதான் என்பதற்கான காரணத்தை நீயே சொல்ல வேண்டாமா?



அப்போது கோதுகலமுடைய பாவாய் கூறுகிறாள்: திருஆய்ப்பாடியில் ஐந்து இலட்சம் கோபிகள் உள்ளனர். அவர்களில் சில ஆயிரம் பேர் மட்டுமே இங்கு வந்திருக்கிறார்கள். மற்றவர்கள் இன்னும் உறங்குகிறார்கள் என்பதே விடியல் வரவில்லை என்பதற்குச் சான்று.



ஆண்டாள் பதிலளிக்கிறாள்:
மிக்குள்ள பிள்ளைகளும் — மற்றவர்கள் எல்லோரும் சென்றுவிட்டார்கள். 


மிக்குள்ள பிள்ளைகளும் - பக்தி யோகத்தை அனுசரிக்க தங்களின் தகுதியின்மையை உணர்ந்ததால், சரணாகதி மார்க்கத்தைத் தேர்ந்தெடுத்த அடியவரை குறிப்பில் உணர்த்துகிறது.



அதற்கு பாவாய்: அவர்கள் என்னை புறக்கணித்துவிட்டுச் சென்றார்களா?



ஆண்டாள்: அப்படியல்ல. கூட்டம் பெரிதாக இருந்ததால், நீ வரவில்லை என்பதை அவர்கள் உணரவில்லை. உன்னை விட்டுச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இல்லை.



பாவாய்: அவர்கள் எதற்குச் செல்கிறார்கள்?



ஆண்டாள்: போவான் போகின்றாரை — போக வேண்டும் என்பதற்காகவே போகிறார்கள்.
அது, ஜீவாத்மா அர்ச்சிராதி மார்க்கத்தில் சென்று பரமபதத்தை அடைவதைப் போல. கம்சனின் ஆணையால் கண்ணனைச் சந்திக்கச் சென்ற அக்ரூரனைப் போல. திருமலைக்குச் செல்லும் பக்தர்களைப் போல.


பாவாய்: அவர்கள் என்னை விட்டுச் சென்றிருந்தால், நான் ஏன் எழ வேண்டும்?



ஆண்டாள்: போகாமல் காத்து — அவர்கள் போகத் தொடங்கியபோது, நீ வரவில்லை என்று நான் சொன்னேன். உடனே அவர்கள் நின்றுவிட்டு, உன்னை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.



இதன் மூலம் ஒரு ஆழ்ந்த தத்துவம் விளங்குகிறது:
பிற பகவதர்களின் துணையின்றி பகவானை அணுகக் கூடாது. விபீஷணனும் வானரர்களின் உதவியோடு தான் ஸ்ரீ ராமனைச் சரணடைந்தான்.

“வேதம் அறிந்தவர்களினூடே
தேவர்களின் தலைவனை வழிபடுக”
— திருவாய்மொழி 4.6.8

அக்ரூரன், கம்சனின் ஆணையால் கண்ணனை அழைத்து வரச் சென்றபோது, ஆனந்தமும் வருத்தமும் கலந்து இருந்தான் — பகவானை காணும் பேரானந்தம்; அந்தச் சந்திப்பின் நோக்கம் கொடூரமானது என்ற துயரம்.


உன்னை கூவவான் வந்து நின்றோம்
அவர்களை அங்கே நிறுத்திவிட்டு, உன்னை அழைக்கவே இங்கு வந்தோம். அவர்கள் விரதஸ்தலத்திற்குச் செல்கிறார்கள்; நாங்கள் உன்னை எழுப்பவே வந்தோம்.



பாவாய்: என்னை எழுப்ப இவ்வளவு முயற்சி ஏன்?


‘கோதுகலமுடைய பாவாய்’ — கௌதுகலம் எனும் ஆனந்தமும் உற்சாகமும் நிறைந்தவள்; கண்ணனுக்கே மிக நெருக்கமானவள்.



பாவாய்’ — நீ பெண். பெண் படும் பாடு பெண்ணுக்கே தெரியும். எங்கள் விண்ணப்பங்களை கேட்க மறுக்கும் பகவானைப் போல நீயும் நடந்து கொள்வாயா?
எங்களுடன் வராவிட்டாலும், விழித்தெழும் போது உன் அழகையாவது காண விரும்புகிறோம். அல்லது உன் வாசலுக்கு வந்து உன்னை எழுப்பிய பேறாவது எங்களுக்கு கிடைக்கட்டும்.



பட்டர் வாக்கு இங்கே பொருந்தும்: “முலை எழுந்தார்படி மோவாயெழுந்தார்க்குத் தெரியாதிறே” — பெண் துன்பம் பெண்ணுக்கே தெரியும்.



உன்னைக் கூவுவான் வந்து நின்றோம் கோதுகலமுடைய பாவாய்! எழுந்திராய் - 'கோதுகலமுடைய பாவாய்' என்ற பதம் கண்ணனுக்கு மிக நெருக்கமான, அவனது பேரன்புக்குரிய கோபியர் குலப்பெண்ணை குறிப்பில் உணர்த்துகிறது. அதனால் தான், மற்ற கோபியர், இவளை தங்களுடன் அழைத்துச் செல்வதன் வாயிலாக, கண்ணனின் அருளுக்கு எளிதில் பாத்திரமாகி விடலாம் என்றெண்ணி இவளை துயிலெழுப்புகின்றனர்.



பாவாய்:  நான் எழுந்தால் எனக்கு என்ன பயன்?



பாடிப் பறை கொண்டு — நாம் இப்போது கண்ணனை மனதுக்குள் அல்ல; நேரில் அனுபவிக்கப் போகிறோம். அவன் புகழை வெளிப்படையாகப் பாடப் போகிறோம். அதற்குப் பலனாக கண்ணன் பறை தருவான். மற்றவர்களுக்கு அது விரதப் பலன்; கோபிகளுக்கு — கைங்கரியம்.

பாடிப் பறை கொண்டு - ஆச்சார்யனைப் போற்றி தனியன்கள் பாடுவதும், அவர் மேன்மையை பரப்புவதும்


பாவாய்:  அவன் நிச்சயம் பறை தருவானா?


மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய தேவாதி தேவனை
நித்யசூரிகள் சேவை செய்யும் தேவாதிதேவன் தான். ஆனால் நம் தடைகளை அகற்ற பூமிக்கு வந்தவன்.


கேசி — அகங்காரத்தின் உருவம்.
மல்லர்கள் — காமம், கோபம்.
இவை அனைத்தையும் வென்றவன் கண்ணன்.


சென்று நாம் சேவித்தால்
அவன் நம்மிடம் வருவதும் உண்டு; நாம் அவன் இடத்திற்குச் செல்வதும் உண்டு.
“பிரிவால் மெலிந்த நம் உடல்களை அவனுக்குக் காட்டச் செல்கிறோம்” என்று பெரியாச்சான் பிள்ளை விளக்குகிறார்.



ஆவாவென்று ஆராய்ந்து அருள் ஏலோர் எம்பாவாய்
நம் நிலையை ஆராய்ந்து, இரக்கம் கொண்டு, அவன் அருள் புரிவான்.



இறுதியாக, பக்தி தனிமையில் மட்டுமே அனுபவிக்க வேண்டுமென்ற எண்ணம் பிழை. பெரும்பாலும், ஒரே மனநிலையுள்ள பக்தர்களோடு கூடி அனுபவிப்பதே மனத்தை உறுதியாக வைத்திருக்கும்.
நண்பர்களையும் உறவினர்களையும் பகவத் அனுபவத்தில் சேர்த்துக் கொள்ள முயல்வதே, பகவானுக்குச் செய்யும் உயர்ந்த கைங்கரியம்.'


ஆண்டாள் கூறுவது போல:
“கோதுகலமுடைய பாவாய்!
மற்றவர்களை நிறுத்திவிட்டு,
உன்னையும் பகவத் அனுபவத்தில் சேர்க்கவே
நான் இங்கு வந்தேன்.”


எவ்விஷயம் கண்ணனால் ஆராயப்படுகிறது? கோபியரின் கர்ம,ஞான,பக்தி யோகங்களை அல்ல, தாஸ்ய பாவம் மட்டுமே, பரிபூர்ண சரணாகதி... இந்தப் பாசுரம், கோஷ்டியாக (கூட்டாக) ஆச்சார்ய உபதேசத்திற்குச் செல்லும் சீடர்களை குறிப்பில் உணர்த்துகிறது.


ஆவாவென்றாராய்ந் தருளேலோரெம்பாவாய் - ஆசார்யன், சீடர்களின் தகுதியை விருப்பு வெறுப்பின்றி சீர்தூக்கிப் பார்த்து, அவரவருக்கேற்ற பிரபத்திப் பலன் கிட்டுவதற்கு உபாயங்களை அருளுதலை உள்ளர்த்தமாக கொண்டுள்ளது!


ஆண்டாள் திருவடிகளே சரணம் 


No comments:

Post a Comment

கீழ்வானம் வெள்ளென்று!

கீழ்வானம் வெள்ளென்று!  காலை நேரத்தை ஆண்டாளைப் போல் பாடல்களால் மகிமைப்படுத்தியவர்கள் அரிது. திருப்பள்ளியெழுச்சியால் காலைச் சிறப்பித்த தொண்டரட...