நோற்றுச் சுவர்க்கம்!
இந்தப் பாசுரத்தில் துயிலெழுப்பப்படும் இக் கோபிகை, கண்ணனை ஒருமுறை கண்டதாலேயே தம்மை மறந்து மயங்கும் இளங்கன்னியர் போல் அல்ல. மாறாக, தன்னை ஒருகணம் நோக்கியவுடனே கண்ணனையே தன்னுள் மறக்கச் செய்ய வல்ல ஆற்றல் பெற்றவள். அவளது இந்த அரிய தன்மையினாலேயே ஆண்டாள் அவளை “அருங்கலமே!” — அரிதாகக் கிடைக்கும், அருமைமிகு மணியே — என்று பெருமையுடன் அழைக்கிறாள்.
இவள் கண்ணனுடைய வாசஸ்தலத்திற்கே நெருக்கமானவள். ஆகையால், அவள் விரும்பும் வேளையிலெல்லாம், எந்த முயற்சியும் இன்றி, கண்ணனின் திவ்யானுபவத்தை அடையும் பெரும்பாக்கியம் பெற்றவள். அதனால்தான் ஆண்டாள், “நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!” என்று அவளைக் குறிப்பிடுகிறாள்.
இந்தக் கோபிகை, “ஜீவாத்மாவின் ஆனந்தத்திற்குக் காரணம் பரமாத்மாவே” என்று உபநிஷத்துகள் போதிக்கும் சத்தியத்தைத் தன் உயிர்சாரமாகக் கொண்டவள். கர்மம், ஞானம், பக்தி முதலியவற்றை உபாயமாகக் கொள்ளும் சாதன பக்தியை அவள் சாரவில்லை; பகவானே உபாயம் எனும் சாத்ய பக்தியையே தன் நிலையான நம்பிக்கையாகக் கொண்டவள்.
“மண்ணில் தெரியுது வானம்
அது நம் வசப்படலாகாதோ?
எண்ணி எண்ணி பல நாள் முயன்று இங்கு
இறுதியில் சேர்வோமோ – அட!
விண்ணிலும் மண்ணிலும் கண்ணிலும் எண்ணிலும்
மேவு பராசக்தியே!”
இது பாரதியின் வரிகள். இறையனுபவம் மண்ணிலேயே வானத்தை வெளிப்படுத்துகிறது. மண்ணில் வானம் வசப்படுவது வறுமை முற்றிலும் ஒழிந்த பின்னர்தான் என்பது தான் உண்மை. பாரதியின் பராசக்தியே ஆண்டாளின் கண்ணன். அவனும் விண்ணிலும் மண்ணிலும், கண்ணிலும் எண்ணிலும் கலந்திருக்கிறான். அந்தர்யாத்மீகம்! பாரதி “நான்” எனும் அகந்தையை வெல்ல வேண்டும் என்று பாடுகிறார்; ஆண்டாள் அதற்கான வழியைக் காட்டுகிறாள். அது எளிய வழி. மண்ணிலேயே கிடைக்கும் சொர்க்கம். பல ஆண்டுகள் தவமிருந்து, நோன்பு நூற்றி அடைய வேண்டிய சுவர்க்கத்தின் அனுபவம், கண்ணனை நினைத்துக் கொண்டே வாழும் ஒரு ஆய்ச்சிக்கு மிக எளிதாகக் கிடைத்து விடுகிறது.
முன்னரே கூறியபடி, ஆண்டாளின் உலகம் பக்தர்களின் கனவுலகம். கவிதைகளில் வர்ணிக்கப்படும் மாளிகைகள் உண்மையில் ஏழைகளின் கூரை வீடுகளே. அவற்றில் வாழ்பவர்களுக்குக் கிடைத்த ஒரே செல்வம் கண்ணன். அவனைப் பெறுவதில் ஒருவருக்கொருவர் போட்டி இருக்கிறது. ஆயினும், “கிருஷ்ணானுபவம் நமக்கெல்லாம் நிச்சயம்” என்ற உறுதி அவர்கள் உள்ளங்களில் வேரூன்றியுள்ளது.
“வாசல் செம்மினால் வாயும் செம்ம வேணுமோ? ஐஸ்வரியம் மிக்கால் பந்துக்களை ஏன் எண்ணலாகாதோ?” என்று வியாக்கியானம் பேசுகிறது. “உனக்குச் சொர்க்கம் கிடைத்து விட்டது. கதவைத் திறக்க மாட்டேன் என்கிறாய் — சரி. ஆனால் பேசுவதற்கு என்ன தடையிருக்கிறது? கண்ணன் என்ற பெருஞ்செல்வம் கிடைத்தவுடன், ஏழைச் சுற்றத்தாரை மறந்து விட்டாயா?” என்று தோழியர் கேட்கிறார்கள். “எங்கள் கண்களைத்தான் பட்டினி போட்டு விட்டாய்; எங்கள் செவிகளையும் பட்டினி போடுகிறாயா? ஒன்றாக நோற்போம், ஒன்றாக நீராடுவோம், ஒன்றாக கிருஷ்ணானுபவம் பெறுவோம் என்று சொன்னதெல்லாம் பொய்யா, என் அம்மனாய்?” என்று வலியுடன் உரைக்கிறார்கள்.
அதற்கு அவள், “கண்ணன் இங்கு இல்லை; வீணாகப் பழி சுமத்துகிறீர்கள்” என்று மறுக்கிறாள்.
“அப்படியென்றால் இந்தத் துளசியின் வாசனை எங்கிருந்து?” என்று தோழியர் கேட்கிறார்கள்.
“அட! அவனுடைய பரிமளம் அவ்வளவு எளிதில் மறையுமா? என்றோ வந்தவனின் மணம் இன்றுவரை நிலைத்திருக்கிறது” என்று பதில் வருகிறது.
அப்போது தோழியர், “சரி, சரி! கும்பகர்ணனிடமிருந்து தூக்கத்தை வாங்கிக் கொண்டவள் போலச் சோம்பேறியாக இருக்காதே. அவனிடம் சீக்கிரம் செல்ல வேண்டும்” என்று சொல்லி, அவளை “அருங்கலமே!” என்று அழைக்கிறார்கள்.
அவள் ஏன் பேசவில்லை என்பதற்கு அண்ணங்கராச்சாரியார் அழகாக விளக்கம் தருகிறார். அனுமானைக் கண்ட பேருவகையில் சீதாபிராட்டி சில நிமிடங்கள் பேசாமல் நின்றதுபோல், தோழியர் கண்ணன் நாமம் சொல்லி இனிமையாகப் பாடும் குரலைக் கேட்ட பேரானந்தத்தில் இவளும் மௌனமாக நின்றாள். மேலும், “என்னை அம்மா என்று அழைக்கிறார்களே” என்ற மென்மையான மனஉறுத்தலும் அதில் கலந்து கொண்டதாம்.
“நேற்று பாவை நோன்பிருந்து கிருஷ்ணானுபவத்தில் திளைப்போம் என்று சொல்லி, இன்று அதிகாலை நாங்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உன் வாசலில் காத்திருக்க, நீயோ கதவையும் திறக்காமல் தனியாகச் சொர்க்கம் போகத் திட்டமிட்டவள் போல உறங்கிக் கொண்டிருக்கிறாயே!” என்று ஆண்டாள் விசனப்படுவதிலும் ஓர் இனிய நயம் வெளிப்படுகிறது.
பூரண சரணாகதியை அனுசரிக்கும் பட்சத்தில், கர்மயோகத்தைச் செயற்படுத்தாவிடினும், எவ்விதத் தடங்கலுமின்றி அந்த அடியவர்க்கு மோட்ச சித்தி வாய்க்கிறது — இதுவே
“நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்” என்பதன் உள்பொருள்.
இங்கு “பெருந்துயில்” என்பது அறியாமையையும், “கூற்றம்” என்பது புலன்சார் இன்பங்களையும் குறிப்பதாகும். இவையே பரமனைப் பற்றுவதற்கு பெரும் தடைகளாக நிற்கின்றன.
இந்தப் பாசுரத்தில் துயிலெழுப்பப்படும் கோபியர் குலப்பெண், தன்னை முழுமையாக பகவத் பக்தியில் மூழ்கித் திளைத்தவளாக எண்ணிக் கொண்டவள். அவள் ஓர் உத்தம அதிகாரி. கண்ணனுக்கே ஆனந்தம் தரும் அடியவள்; அவளுக்கே உரிய ஆனந்தத்தில் நிறைந்தவள். அவள் தன் ஆத்ம அனுபவத்திலிருந்து வெளிவந்து, தோழியரின் அகங்காரத்தையும் அஞ்ஞானத்தையும் விலக்கி, அவர்களை நல்வழிப்படுத்தி, அவர்களது உய்வுக்குத் துணை நிற்க வேண்டும் என்று வேண்டுவதாக இப்பாசுரம் அமைகிறது.
இங்கு “சுவர்க்கம்” என்பது பகவானுடன் ஐக்கியமாவதையே — மோட்சத்தைச் சார்ந்த பகவதானுபவத்தையே — குறிக்கிறது. இந்த அடியவள், பூரண சரணாகதிக்குரிய சடங்குகளை நிறைவேற்றிய திருப்தியுடன், பரமனின் நெருக்கம் அளித்த ஆனந்த நிலையில் உறைகிறாள்.
மேலும், சுவர்க்கம் = சு + வர்க்கம் என்பதாகப் பொருள் கொண்டால், “நல்ல சுற்றம்” என அர்த்தம் பெறுகிறது. அதாவது, இவ்வடியவள் சிறப்புமிக்க வைணவ அடியார்களின் நற்சுற்றத்தைச் சேர்ந்த பெருமை பெற்றவள் என்பதும் இங்கே வெளிப்படுகிறது.
“அருங்கலமே” என்ற சொல்லுக்கு இரண்டு அர்த்தங்கள் உள்ளன: 1 - கிடைத்தற்கரிய பாத்திரம், 2 - அணிகலன்; அதாவது, ஒரு வைணவ அடியார், இறையருளைத் தாங்கி நிற்கும் பாத்திரமாகவும், மனத்தூய்மை, பக்தி, தர்மசிந்தனை, எளிமை, கர்வமின்மை போன்ற சத்த்வ குணங்களாகிய அணிகலன்களால் அலங்கரிக்கப்பட்டவராகவும் உருவகப்படுத்தப்படுகிறார்.
நமது நற்பலன்களால் மட்டும் மோட்சம் சித்திக்காது; நம்மை ரட்சிப்பதும், தடுத்தாட்கொள்வதும் அந்த புண்ணியனின் பெருங்கருணையே என்பதைக் கோதை நாச்சியார் நுணுக்கமாக உணர்த்துகிறார். அதனால்தான், வெளியில் நிற்கும் கோபியர் “பரமனை எப்படிப் பற்றுவது?” என்று துடிக்கையில், உள்ளிருப்பவள் எல்லாவற்றையும் கண்ணனிடம் ஒப்படைத்து விட்டு நிச்சிந்தையாக உறங்க முடிகிறது.
பூரண சரணாகதி ஒன்றே மோட்சத்திற்கான ஒரே மார்க்கம் என்பதையும், புத்திகூர்மையும் ஞானமும் அகங்காரத்தை உருவாக்கி மனிதனைத் திசைதிருப்பும் அபாயம் உள்ளதையும், இறை சேவையும் சமூக சேவையும் இணைந்து செல்ல வேண்டிய அவசியத்தையும் கோதை நாச்சியார் கற்றறிந்த வைணவ அடியார்களுக்கு இப்பாசுரம் வழியாக எடுத்துரைக்கிறார்.
பரமனை அடைவதே மோட்சம் என்றாலும், அதுவும் பரமானாலேயே வாய்க்கப்பெறும் — இதுவே இப்பாசுரத்தின் அடிநாதமாக ஒலிக்கும் பரமசத்தியம்.
ஆண்டாள் திருவடிகளே சரணம். ஆழவார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம். தாசன்.

No comments:
Post a Comment