Saturday, 20 December 2025

திருப்பாவை பாசுரம் 5 – மாயனை மன்னு…

 திருப்பாவை பாசுரம் 5 – மாயனை மன்னு…







“வாசித்தும், கேட்டும், வணங்கியும், வழிபட்டும், பூசித்தும் காலத்தை கழித்தேன்” என்று ஆழ்வார் உரைப்பது வெறும் வார்த்தையல்ல. அது மனித வாழ்வின் தவிர்க்க முடியாத யதார்த்தத்தைச் சுட்டிக் காட்டும் உண்மை. நாம் அனைவரும் காலத்தின் போக்கில் முதிர்ச்சியடைவோம். முதுமை வந்தபோது கண்கள் மங்கும்; வாசிப்பது கடினமாகும். காதுகள் செவிடாகும்; கேட்டுணர்வது சிரமமாகும். சாஷ்டாங்கமாக பெருமாளைச் சேவிக்க உடலும், காலும், முட்டிகளும் ஒத்துழைக்காது. இதைத்தான் திருமங்கை ஆழ்வார் ஆழமான வேதனையுடன்,

“ஏய்ப்பென்னை வந்து நலியும் போது, அங்கேதும் நான் உன்னை நினைக்க மாட்டேன்...; அப்போதைக்குப்போதே சொல்லி வைத்தேன்...…”

என்று உரைக்கிறார்.


அதேபோல், (நேற்றைய தினம் திருநக்ஷத்திரம் கொண்ட) குலசேகர ஆழ்வாரும், முகுந்தமாலையில்,

“பிராணப் பிரயாண சமயே கப-வாத-பித்தைஹி கண்டா அவரோதன விதௌ ஸ்மரணம் குதஸ்தே”

என்று சொல்லி, உயிர் பிரியும் அந்த இறுதி நொடியில் கூட எம்பெருமானை நினைக்க முடியுமா என்ற அச்சத்தை வெளிப்படுத்துகிறார்.



அதனால்தான் ஆண்டாள், “அந்த நேரத்திற்காக காத்திருக்க வேண்டாம்; இப்போதே வாயினால் பாடி, மனதினால் சிந்தித்து, பெருமாளை வேண்டுங்கள்” என்கிறாள். குறைந்தபட்சமாக இதையாவது செய்யக்கூடிய பாக்கியத்தை பகவான் நமக்குத் தரவேண்டும் என்பதே அவளின் வேண்டுகோள். ஆனால் இந்த அளவுக்கான பக்தி நிலை கூட எல்லாப் பக்தர்களுக்கும் ஒரே மாதிரியாக வாய்ப்பதில்லை.



திருவாய்மொழியில் நம்மாழ்வார், “உணர்ந்து உணர்ந்து, உரைத்து உரைத்து, இறைஞ்சுமின்” என்று அறிவுறுத்துகிறார். ஆனால் ஆண்டாள், “வாயினால் பாடி, மனதினால் சிந்திக்க” என்று சொல்கிறாள். கவனித்தால், முதலில் ‘பாடு’ என்கிறாள்; அதன் பின் தான் ‘சிந்தி’ என்கிறாள். ஏன் இந்த வரிசை? ஆழ்வார் வாழ்க்கை முழுவதும் அனுபவத்தில் ஊறியவர். ஆழமாக யோசித்து, ஆராய்ந்து, அனுபவத்தை வடித்து, அதன் பின் பாடல் வடிவில் பெருமாளைச் சேவித்தவர். ஆனால் ஆண்டாள் ஒரு சிறுமி. குழந்தைகளுக்கும் இளையோருக்கும் இயல்பாக இருக்கும் தன்மை – யோசனையை விட முன் வரும் இயல்பான உந்துதல் (spontaneity). அவர்கள் முதலில் உரக்கப் பாடுவார்கள்; பின்னர் தான் மனம் அதைச் சிந்திக்கத் தொடங்கும். ஆண்டாளின் வழிமுறை அதுதான்.



இந்தப் பாசுரத்தில் வழக்கில் இப்போது அதிகம் பயன்படுத்தப்படாத சில சொற்கள் வருகின்றன. உதாரணமாக, ‘செப்பு’ என்ற சொல் இன்றைய தமிழில் அரிது; அது தெலுங்கு வழக்கில் அதிகம் காணப்படுகிறது. அதுபோலவே, வைணவர்கள் பொதுவாக “பெருமாளைச் சேவிக்கிறோம்” என்பார்களே தவிர, “தொழுகிறோம்” என்று சொல்லமாட்டார்கள். ‘தொழுகை’ என்பது இன்று பெரும்பாலும் இஸ்லாமிய வழக்கிலும், சில பாலக்காட்டு பிராமணர்களிடமும் மட்டுமே பயன்படுகிறது.



முதல், இரண்டாம், மூன்றாம் பாசுரங்களில், ஆண்டாள் பர, வ்யூஹ, விபவ ரூபங்களாகிய திருமான் நாராயணன், பாற்கடலுள் பள்ளியுள்ள பரமன், வாமனன் ஆகிய தெய்வ வடிவங்களைப் போற்றிப் பாடுகிறாள். நான்காம் பாசுரத்தில் விபவ அவதாரங்களைத் தொடர்ந்து, இப்பாசுரத்தில் கிருஷ்ணனுடைய விபவ அவதாரத்தை மிக விரிவாகவும் ஆழமாகவும் புகழ்கிறாள்.



இந்தப் பாடலின் உள்ளடக்கம் மிக உயர்ந்த தத்துவ விசாரத்தைக் கொண்டது. ஒரு இடைப்பெண், இன்னொரு இடைப்பெண்ணிடம் கேட்பதாக அமைந்த கேள்வி மிக ஆழமானது:

“நாம் எல்லாம் கர்மவசப்பட்டவர்கள். விதியும் கர்மமும் தீர்மானிக்கும் உலகத்தில் வாழ்கிறோம். அப்படியானால் நாம் எப்படி பரமனை அடைய முடியும்? நம் பிழைகள் நம்மைத் தடுத்து நிறுத்தாதா? இத்தகைய விரதங்களால் என்ன பயன்? இதுவரை செய்த கர்மங்களின் பலன் நம்மை விட்டுப் போகுமா? கர்ம வாசனை நம்மை எங்கோ இழுத்துச் செல்கிறதே; இதிலிருந்து விடுபட வழி உண்டா?”

இந்தக் கேள்விக்கே ஆண்டாள் பதில் சொல்கிறாள்.



புரந்தரதாசரும் தம் ஒரு கீர்த்தனையில், “நா மாடித கர்மா, பலவந்த வாதரே, நீ மாடுவதேனோ ரங்கா…” என்று இதே வேதனையை வெளிப்படுத்துகிறார்; அதன் விடையையும் கடைசி சரணத்தில் தருகிறார்.



மகரிஷி வஸிஷ்டர் நன்னாளைக் கணித்திருந்தும், மன்னன் தசரதன் ஆவலுடன் விரும்பியிருந்தும், ஸ்ரீ ராமன் சீதையுடன் பெருமாளை வணங்கியிருந்தும், பட்டாபிஷேகம் தடைபட்டது. இதை எடுத்துக்காட்டிய தோழி, “இப்படிப் பெரியோருக்கே இப்படியென்றால், நமக்கெப்படி நிச்சயம்?” என்று அஞ்சுகிறாள்.



அதற்கு ஆண்டாள் கூறுவது: “ராமனை அரசனாக்க விரும்பியவர்கள் ‘நாம் அவனை அரசனாக்குகிறோம்’ என்ற அகந்தையுடன் இருந்தனர். ஆனால் ஆய்ச்சியர்களான நாம் எந்த அகந்தையுமின்றி, கண்ணனுடன் இருப்பதே நமது ஆசை. எதற்கும் தகுதியற்றவர்கள் என்று நம்மையே எண்ணிக்கொண்டு, உலகியலான எந்தப் பலனையும் நாடாமல் இருப்பதே ‘அயோக்யானுசந்தானம்’.”



கர்ம, ஞான, பக்தி யோகங்களைச் சுய முயற்சியால் செய்து வசிஷ்டர், வாமதேவர் போல் முக்தி அடையக் கூடியவர்கள் நாம் அல்ல. வேதம் தெரியாது; வேதாந்தம் தெரியாது; சாஸ்திரம், சம்பிரதாயம் தெரியாது. ஆனால் நம்மால் செய்யக்கூடிய சில எளிய வழிகள் இருக்கின்றன.



பாசுர விசேஷம்: இந்தப் பாசுரத்தில் உபாயம், உபேயம், புருஷார்த்தம் – மூன்றும் தெளிவாக சொல்லப்பட்டுள்ளன.

உபாயம் – மலர் தூவி தொழுதல், வாயினால் பாடுதல், மனத்தினால் சிந்தித்தல்

உபேயம் – மாயன், வடமதுரை மைந்தன், யமுனைத் துறைவன், ஆயர் குலத்து அணிவிளக்கு, தாயை குடல் விளக்கம் செய்த தாமோதரன்

புருஷார்த்தம் – போய பிழையும், புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகுதல்



இந்த வழியில் நடந்தால், பல ஜன்மங்களில் சேர்த்த பாவங்களும், இனி அறியாமல் சேரப்போகும் பாவங்களும் தீயில் போடப்பட்ட பஞ்சுபோல் முற்றிலும் அழியும் என ஆண்டாள் உறுதியாகச் சொல்கிறாள்.



“நாம் அசுத்தர்கள்; நமக்கு தகுதி இல்லை” என்ற எண்ணமே தேவையில்லை. உள்ள நிலையில், உள்ளபடியே அவனை அணுகலாம். அவன் வருவானா, நாம் போக வேண்டுமா என்ற குழப்பமும் வேண்டாம். உபேயமாக அவனை நினைக்கும் போது, அவனை அடைய வேண்டுமென்ற தணியாத ஆவலே மற்ற எல்லா பயங்களையும் கரைத்துவிடும்.



இந்தப் பாசுரம் முழுவதும் ப்ரபத்தி மார்க்கத்தின் சாரத்தை மிக அழகாக எடுத்துரைக்கிறது. மனம், வாக்கு, காயம் என்ற த்ரிகரணங்களால் – கைகளால் மலர் தூவி, வாயினால் பாடி, மனத்தினால் அனுசந்தித்தால் – கர்ம கட்டு அவிழும். புண்யமும் பாவமும் இரண்டுமே மோக்ஷத்திற்கு தடையாக இருப்பதால், அவற்றை இரண்டையும் பகவதர்ப்பணமாக, க்ருஷ்ணார்ப்பணமாக மாற்ற வேண்டும் என்ற உபதேசமும் இதில் அடங்கியுள்ளது.



“மாயன்” லீலாவிபூதி நாதனையும், “மன்னு” பரத்துவ மூர்த்தியான வாசுதேவனையும், “வடமதுரை மைந்தன்” பரமபத நாதனையும் குறிப்பதாக உள்ளுரைப் பொருள் கூறப்படுகிறது. “யமுனைத் துறைவன்” என்பது வைகுண்டத்தில் பாயும் விராஜ நதிக்கரையில் எழுந்தருளியவனையும் குறிக்கும். இன்னொரு வகையில், யமுனை சம்சார பந்தத்தின் உருவகம்; அதை கடக்க உதவும் படகுத் தலைவனாக கண்ணன் துணையாக நிற்கிறான் என்பதே அதன் உள்ளர்த்தம்.



பகவத் ஞானம் வருவதற்கு முன் செய்த பிழைகளும், பக்தியான பின் அறியாமல் செய்த பாவங்களும், அவன் நாமத்தைச் செப்பினாலே தீயில் எரியும் பஞ்சுபோல் உடனடியாக அழிந்து விடும் என ஆண்டாள் அறிவுறுத்துகிறாள்.



“தூமலர்” என்பது வெளிப்புற மலரல்ல; அடியவரின் உள்ளத்திலிருந்து மலரும் எட்டு நற்குணங்களை உணர்த்துகிறது:

1.⁠ ⁠அகிம்சை

2.⁠ ⁠புலனடக்கம்

3.⁠ ⁠எல்லா உயிர்களிடத்திலும் நேசம்

4.⁠ ⁠பொறுமை, சமத்துவம்

5.⁠ ⁠ஞானம்

6.⁠ ⁠தியானம்

7.⁠ ⁠ஆன்மீக தவம்

8.⁠ ⁠சத்தியம்



எளிமையாகச் சொன்னால், பரமனை அடைய பெரிய அளவில் கர்ம, ஞான, பக்தி யோகங்கள் அவசியமில்லை. மலர் தூவி வணங்கி, போற்றிப் பாடி, முடிந்த பொழுதெல்லாம் அவனைச் சிந்தித்துக் கொண்டிருப்பதே போதும். இந்த ப்ரபத்தி மார்க்கமே மோட்ச சித்தியை அளிக்கும் என்பது இப்பாசுரத்தின் சாரம்.



மோக்ஷம் அடைவதற்கான மூன்று வழிகள்:

1.⁠ ⁠கர்ம பாரதந்த்ரியம் – சுய முயற்சியால்

2.⁠ ⁠க்ருபா பாரதந்த்ரியம் – ப்ரபத்தி / சரணாகதி மூலம்

3.⁠ ⁠இச்சா பாரதந்த்ரியம் – எம்பெருமானின் சுய விருப்பத்தால்

திருவாய்ப்பாடியில் உள்ளவர்கள் மூன்றாம் வகை. நாம் அனைவரும் இரண்டாம் வகையைச் சார்ந்தவர்கள்.

பகவானே சரணம். ஆகையால், எம்பெருமானின் புகழைப் பாடுங்கள்.

ஆண்டாள் திருவடிகளே சரணம்.

அடியேன் தாசன்

No comments:

Post a Comment

திருப்பாவை பாசுரம் 5 – மாயனை மன்னு…

 திருப்பாவை பாசுரம் 5 – மாயனை மன்னு… “வாசித்தும், கேட்டும், வணங்கியும், வழிபட்டும், பூசித்தும் காலத்தை கழித்தேன்” என்று ஆழ்வார் உரைப்பது வெற...