Wednesday, 17 December 2025

ஆண்டாள்





ஜீவாத்மா பரமாத்மாவை அடையும் ஆன்மீகப் பயணத்தைத் திருப்பாவைப் பாசுரங்கள் சின்னமாக எடுத்துரைக்கின்றன.

பாசுரங்களில் வெளிப்படையாகத் தோன்றும் பொருளைத் தாண்டி, அவற்றின் ஆழத்தில் உள்ளார்ந்த அர்த்தம்—ஸ்வாபதேசம்—ஒளிந்திருக்கிறது என்பதை வியாக்கியானங்கள் வழியாக அறிகிறோம்.


பக்தி நோக்கில் அணுகாவிட்டாலும், திருப்பாவைப் பாசுரங்களில் காலத்தையும் சூழலையும் உணர்த்தும் நுண்ணிய சித்திரம் தெளிவாக வெளிப்படுகிறது. அந்தக் காலத்தில் நாம் வாழவில்லை என்ற ஏக்கம் கூட இப்பாடல்களை அனுபவிக்கும்போது மனத்தில் எழுகிறது.


ஆனால் மார்கழியின் கடைசி சில நாட்கள் ஒரு வித சோகத்தைத் தருகின்றன. திருப்பாவையும் அதன் வியாக்கியானங்களையும் அனுபவித்த முப்பது நாள் ஆன்மீகப் பயணம் நிறைவடையும் போது, மனத்தில் பெரும் வெறுமை தோன்றுவது ஒவ்வொரு மார்கழியிலும் தவிர்க்க முடியாத அனுபவமாகிறது. ஆண்டாளுடன் அந்தப் பயணத்தை மேற்கொண்டு பாருங்கள்—உணர்வீர்கள்.


வேதங்களைப் படிக்க இயலவில்லையா? கவலை வேண்டாம். கீதையைப் படியுங்கள். அதுவும் சாத்தியமில்லையா? ஒன்றும் வருத்தம் கொள்ள வேண்டாம். திருப்பாவையைப் படியுங்கள். அதுவே போதும். ஏனெனில், திருப்பாவை “பாதகங்களை நீக்கும், பரமனின் திருவடியை காட்டும், அனைத்துவேதங்களுக்கும் வித்தாக விளங்கும்” என்று சொல்லப்படுகிறது. ஆனால் திருப்பாவையை எவ்வாறு “அனைத்துவேதங்களுக்கும் வித்து” என்று கூற முடியும்?


அதற்கான விடை, “மார்கழித் திங்கள்” என்று தொடங்கும் முதல் பாசுரத்திலேயே உள்ளது.


“நாராயணனே நமக்கே பறை தருவான்” என்று ஆண்டாள் கூறுகிறாள்.


இங்கே “நாராயணன் பறை தருவான்” என்று இல்லாமல், “நாராயணனே” என்று ‘ஏ’காரத்துடன் வலியுறுத்தப்படுவதைக் கவனிக்க வேண்டும்.

அதன் பொருள்—நாராயணன் ஒருவனே மோட்சத்தை அளிப்பவன்.


இது, கீதையில் வரும் “மாம் ஏகம் சரணம் வ்ரஜ” என்ற வாக்கியத்துடன் முழுமையாக ஒத்துப் போகிறது. கீதை வேதத்தின் சாரம். ஆகவே, கீதையில் கண்ணன் எடுத்துரைக்கும் “மாம் ஏகம் சரணம் வ்ரஜ” என்ற உண்மையை, ஆண்டாள் “நாராயணனே நமக்கே பறை தருவான்” என்று எளிமையாகவும் ஆழமாகவும் உணர்த்துகிறாள்.


இதையெல்லாம் ஏற்றுக்கொண்டாலும், “திருப்பாவை தெரியாதவர்களுக்கு என்ன?” என்ற கேள்வி எழலாம். அதற்கும் பதில் உள்ளது.


“ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை வையம் சுமப்பதுவும் வம்பு”


அதாவது, திருப்பாவையின் மகிமையை அறியாத மனிதரை இந்த உலகம் சுமப்பதே வீண் என்பதே அதன் கருத்து.


நாம் வீணானவர்களா என்பதைத் தீர்மானிக்க வேண்டியது நாமே. ஆகையால், வாரீர்— கூடியிருந்து திருப்பாவையைப் பாடுவோம்.


ஆண்டாள் “பறை” என்ற சொல்லை பலமுறை பயன்படுத்துகிறார். வியாக்கியானக்காரர்கள் இதனை “வ்யாஜம்” என விளக்குகிறார்கள். அதாவது ஒரு காரணம், ஒரு முன்னோக்குப் போக்கு (pretense) என்று கொள்ளலாம். இறைவன் அருள் புரிவதற்கான ஒரு வாய்ப்பை உருவாக்கும் காரணம் எனவும் இதை பார்க்கலாம். ஆனால் தென்கலை மரபில் அதுபோன்ற காரணங்களே தேவையில்லை என்பதே கருத்து. நாம் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்து கொண்டிருந்தாலே, இறைவன் தானாகவே பறையையும் அருளையும் அளிப்பான் என்று ஆண்டாள் சொல்லுவதாகவும் புரிந்து கொள்ளலாம். இதையே நம்மாழ்வார் அருளிச்செய்த “வைகுண்டம் புகுவது மண்ணவர் விதியே” என்ற வாக்கியமும் உறுதிப்படுத்துகிறது.


அந்த வகையில் பார்க்கும்போது, பாவை நோன்பும் ஒரு வகையான வ்யாஜம்தான். With this, she gives lead to the second poem….


வையத்து வாழ்வீர்காள்....


ஆண்டாள் திருப்பாவை முழுவதும், வையத்தில் வாழ்பவர்கள் எல்லோரையும், கருத்தில் கொண்டுதான் பேசுகிறார். அவருடைய தந்தை  “தொண்டக்குலம்” (வைணவ அடியார்கள் கூட்டம்) என்று சொன்னால், இவர் ஒருபடி மேலே சென்று வையம் முழுவதையும் சேர்த்துக் கொள்கிறார்.


 எல்லோராலும் வேதம் ஓதமுடியாது, எல்லோராலும் நித்தியானுசந்தானம் (தினப்படிச் சொல்லும் பாடல்கள்) செய்ய முடியாது. ஆனால் எல்லோராலும் இறைவனைத் தொழ முடியும், காலையில் நீராட முடியும். சங்கீர்த்தனம் எனும் பகவானின் புகழ் பாட/ படிக்க முடியும். ஆந்தனையும் என்றால் முடிந்த அளவு. முடிந்த அளவு தானம் செய்ய முடியும்.


ஆண்டாள் ப்ரவிருத்தி, நிவிருத்தி என்பதைப் பற்றி சொல்கிறார் என்று வியாக்கியானக்காரர்கள் கருதுகிறார்கள். 


பிரவித்தி என்றால் பற்றிக் கொள்ள் வேண்டியவை. பரமன் அடி பாடுதல். காலையில் நீராடுதல். ஐயம், பிச்சையிடுதல். 


நிவிருத்தி என்றால் விட வேண்டியவை. “நெய், பாலுண்ணாமை. கண்மையிடாமை. பூச்சுடாமை. செய்யத்தகாதவை என்று கருதுப்படுபவற்றைச் செய்யாமை. தீய சொற்களைப் பேசாமை. “இன்னுரைதான். தீக்குறள் அன்று, கடுஞ்சொற்களைச் சொல்ல மாட்டோம்.” என்று ஆண்டாள் சொல்கிறார்.


ஏன் மையிடக் கூடாது? கண்ணனைக் காணாமல் கண்கள் அழகு பெறக் கூடாது. கண்ணனை காணாத கண்ணென்ன கண்ணே...ஆதலால், கண்ணனைக் காணாத கண்ணிற்கு அழகெதற்கு செய்ய வேண்டும்? சரி, கண்ட பின்? கண்ணனை கண்ட பின் அந்த கண்களுக்கு அழகெதற்கு செய்ய வேண்டும்? தேவையே இல்லையே....


ஏன் மலர் சூடக் கூடாது? இயற்கை தந்த வரம் மலர்கள், அன்றலர்ந்த மலர்கள். அதன் மீது முதலுரிமை பகவானுக்கே! அவனுக்கு சமர்பித்தபின் நாம் அணியலாம். அவன் காலடியில் கிடந்த மலரைத்தான் முதலில் சூடிக் கொள்ள வேண்டும். ஆண்டாள் மட்டும்தான் சூடிக் கொடுத்த சுடர்க்கொடி. இங்கு அவர் தன்னைப் பற்றிப் பேசவில்லை. வையத்தில் வாழ்பவர்கள் அனைவரையும் பற்றிப் பேசுகிறார் என்பதை மீண்டும் நினைவில் கொள்ள வேண்டும்


ஐய்யமிட்டு உண் என்றாள் தமிழ் மூதாட்டி.. ஐயம் என்றால் தகுதியுடைய பெரியவர்களுக்கு வேண்டும் காலத்தில் உதவுவது. பிச்சை என்றால் வேண்டி வருபவர்களுக்கு கொடுப்பது என்று பெரியவர்கள் சொல்கிறார்கள். மேலும் ‘ஆந்தனையும் கைகாட்டி’ என்பதற்கு பொருள் பெறுபவர்கள் மனநிறைவு பெறும் வரையில் கொடுக்க வேண்டும் என்பது மட்டுமல்ல, நாம் நிறையக் கொடுத்து விட்டோம் என்ற நிறைவு நமக்கு வந்து விடக்கூடாது என்பதும்தான்.


ஐயம் என்றால் பெருமானின் புகழ் பாடுதல் என்றும் பொருள். பிச்சை என்றால் பாகவதர்களின், அதாவது அடியார்களின் புகழ் பாடுதல். இரண்டையும் முடிந்த அளவிற்குச் செய்ய வேண்டும் என்றும் அறிஞர்கள் சொல்கிறார்கள்


“ஆயர் குலத்தவர் என்று தங்களை எண்ணிக் கொண்டிருப்பவரை பாலும் நெய்யும் உண்ணாதே என்று சொல்வது, ஐயங்கார்களை புளியோதரை, சர்க்கரைப் பொங்கல் பக்கம் போகாதே என்று சொல்வதைப் போன்றது. அது நடக்கக் கூடியதா?”


இவையெல்லாம் நிச்சயம் செய்ய வேண்டுமா? கட்டாயம் என்று ஆண்டாள் சொல்லவில்லை என்றுதான் நினைக்கிறேன். முடிந்த அளவு – ஆந்தனையும் – என்று தான் சொல்கிறார். விரத நாட்களில் குழந்தைகள் விரதம் இருந்தாலும், பசி தாங்காதே என்று அம்மா ரகசியமாக அப்பாவுக்குத் தெரியாமல் குழந்தைகளுக்கு தின்பண்டங்கள் கொடுப்பதில்லையா? அதே போலத்தான் ஆண்டாள் சொல்பவையும். முடியாவிட்டால் இறைவன் அளிப்பான் என்பது உட்பொருள். 


ஆண்டாள் திருவடிகளே சரணம்

No comments:

Post a Comment

ஆண்டாள்

ஜீவாத்மா பரமாத்மாவை அடையும் ஆன்மீகப் பயணத்தைத் திருப்பாவைப் பாசுரங்கள் சின்னமாக எடுத்துரைக்கின்றன. பாசுரங்களில் வெளிப்படையாகத் தோன்றும் பொரு...