புள்ளின்வாய் கீண்டானை...
இந்தப் பாசுரத்தில் ஆண்டாள், தன் கண்களின் சௌந்தர்யத்தினால் உரிமை உணர்ச்சியுடன் உறங்கிக் கொண்டிருக்கும் ஒரு கோபியை எழுப்புகிறாள். பகவத் சம்பந்தத்தால் தோன்றும் அகங்காரம், செருக்கு, வாதம் முதலியன லௌகிக தோஷங்களாகக் கொள்ளப்படாது; அவை அனைத்தும் தெய்வீகத்தோடு கலந்தவையாகவே ஆகின்றன. கண்ணனோடு தொடர்புபட்ட யாவும் சுத்த சத்த்வமயமாகவே விளங்கும் என்பது ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தம்.
அந்தக் கோபி தன்னுள்ளே இவ்வாறு எண்ணுகிறாள்: “என் கண்கள் இவ்வளவு அழகாக இருந்தால், கண்ணனே வந்து என்னோடு நட்பு கொள்ள வேண்டாமா? நான் ஏன் அதிகாலையில் எழுந்து நோன்பு முதலிய அனுஷ்டானங்களைச் செய்ய வேண்டும்?” என்று. இவ்வகையான உரிமைச் சிந்தனையோடு கூடிய பெருமையினால் விளங்கும் அவளை ஆண்டாள் “போதாரிக் கண்ணினாய்” என்று சாலப்போற்றிக் கூறி எழுப்புகிறாள்.
“போதாரிக் கண்ணினாய்” என்னும் சொல்லை ஆசார்யர்கள் பலவாறு பிரித்து அனுபவிக்கின்றனர். போது என்றால் பூ; அரி என்றால் வண்டு — பூவின்மேல் வண்டு மொய்ப்பதுபோல அலைபாயும் கண்களையுடையவளே என ஒரு பொருள். அல்லது போது பூ, அரி மான் எனக் கொண்டு, மான்போன்ற மெல்லிய விழிகளை உடையவளே என்றும் கொள்ளலாம். மேலும், போது என்றால் பூ, அரி என்றால் அழிப்பது — பூவின் அழகையும் மிஞ்சும் கண்களை உடையவள் என்ற அர்த்தமும் கூறப்படுகிறது.
இன்னொரு நுட்பமான விளக்கமாக, வடமொழி “போத” (bodha) என்னும் சொல்லிலிருந்து ஞானத்தை உணர்த்துவதாகக் கொண்டு, அறிவில் நாட்டமுடைய, ஞான விசாரத்தில் ஈடுபடும் பாகவதர்களையே “போதரி” எனக் குறிப்பதாகவும் வியாக்யானம் செய்கின்றனர்.
இப்பாசுரப் பகுதியில் கோபிகளுக்கிடையே சிறு வாக்குவாதம் எழுகிறது. “இராமனையே பாடலாமா, அல்லது கண்ணனைப் பாடலாமா?” என்பதே அதன் காரணம். முந்தைய பாசுரங்களிலிருந்தே ஒருபுறம் இராமனையும், மறுபுறம் கண்ணனையும் கலந்து பாடி வருகின்றனர். அதைக் கேட்டு இந்தக் கோபி, “நீங்கள் எல்லோரும் ஸ்ரீ ராமனைத்தானே பாடுகிறீர்கள்?” என்று கேட்கிறாள். அதற்கு ஆண்டாள், “ஸ்ரீ ராமனை மட்டும் அல்ல; இதுவரை நாம் ஸ்ரீ ராமனையும் ஸ்ரீ க்ருஷ்ணனையும் பாடியே வந்தோம். இது ராமாயண–மகாபாரத மரபின்படியும், க்ஷீராப்தியில் ஆதிசேஷன் மீது சயனித்திருக்கும் பரமாத்மனின் வ்யூஹ அவதாரங்களை விரிவாக எடுத்துரைக்கும் பாஞ்சராத்திர ஆகம மரபின்படியும் அமைந்ததே” என்று விளக்குகிறாள்.
பகாசுரன் கொக்கு வடிவம் கொண்டு வந்து வதைக்கப்பட்டதை நினைவூட்டியும், முன் அவதாரத்தில் பத்துத் தலை கொண்ட ராவணனை “இலைகளைப் பறிப்பது போல” எளிதில் அழித்த பெருமையையும் ஆண்டாள் சுட்டிக்காட்டுகிறாள். ‘பொல்லா அரக்கன்’ என்று ராவணனைச் சொல்லுவதற்குக் காரணம், தந்தையையும் தாயையும் பிரித்த கொடிய குணம் அவனிடத்தில் இருந்ததாலே என்று உரையாசிரியர்கள் கூறுவர்.
“புள்ளின் வாய் கீண்டான்” என்பது க்ருஷ்ணாவதாரத்தில் பகாசுரனை வதைத்ததையும், “பொல்லா அரக்கனை” என்றது ராமாவதாரத்தில் ராவணனை அழித்ததையும் குறிக்கும் என்பது ஒரு வகை விளக்கம். மற்றொரு வகையில், ‘புள்’ எனப்படும் ஜடாயுவை கொன்ற ராவணனையே “புள்ளின் வாய் கீண்டான்” என எடுத்துக்கொண்டு, முழுவதுமாக ராமாவதாரத்தையே இந்த இடத்தில் ஆண்டாள் சுட்டுகிறாள் என்றும் பெரியோர் உரை வழங்குகின்றனர். அரக்கன் என்றாலே தீயவன் என்றாலும், விபீஷணன், பிரகலாதன், மாவலி போன்றோர் அரக்க குலத்தில் பிறந்திருந்தும் பகவத் பக்தர்களாக விளங்கியதை நினைவூட்டி, “பொல்லா” என்ற விசேஷணத்தின் அவசியத்தை உரையாசிரியர்கள் விளக்குகின்றனர்.
“வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று” என்ற சொல்லால் காலநிலையும் தத்துவமும் இரண்டுமே சுட்டப்படுகின்றன. வெள்ளி தோன்றும் நேரத்தைப் புறநானூறும் குறிப்பிடுகிறது. தமிழர் வழக்கில் வெள்ளி எழுந்ததும் நீராடுதல் மரபு. ஆனால் இங்கு ஆண்டாள், வியாழம் உறங்கிற்று என்றும் கூறுகிறாள். அறிஞர்கள் (லூயிஸ் டொமினிக் சுவாமிக்கண்ணுப் பிள்ளை முதலியோர்) கணக்கின்படி, வெள்ளி உதயமும் வியாழன் அஸ்தமனமும் ஒரே நாளில் நிகழ்ந்த காலம் கி.பி. 731 டிசம்பர் 18 எனக் கூறப்படுகிறது. இதன்மூலம் ஆண்டாளின் காலமும் எட்டாம் நூற்றாண்டு என்பதற்குச் சான்று கிடைக்கிறது.
மேலும், வியாழன் என்பது ப்ரஹஸ்பதியை குறிக்கும். சார்வாகம் போன்ற நாஸ்திக மதங்களுக்கு ப்ரஹஸ்பதியே ஆசார்யன் எனக் கூறப்படுவதால், “வியாழம் உறங்கிற்று” என்பது நாஸ்திகப் போக்கு ஒழிந்து, சாஸ்த்ரபூர்வமான ஞானம் எழுந்ததைக் குறிப்பதாகவும் வியாக்யானம் செய்யப்படுகிறது.
“பாவைக்கலம்” என்பது பெண்கள் கூடும் இடம் என்பதோடு, கண்ணனுக்காகப் போட்டியிடும் களமாகவும் பொருள் தரும். மேலும், அது சிஷ்யர்கள் கூடும் காலக்ஷேப மண்டபத்தையும் குறிக்கும். “பிள்ளைகள்” என்று ஆண்டாள் அழைப்பது, பருவம் அடைந்தும் குழந்தைத்தன்மை நீங்காத நிர்மலமான பக்த நிலையையே சுட்டுகிறது. பெரியாழ்வார் “செங்கண்மால் தான் கொண்டு போனான்” என்று கூறுவதும் ஆண்டாள் இளமையிலேயே பரமபதம் அடைந்ததை உணர்த்துகிறது.
“புள்ளும் சிலம்பின காண்” என்று ஆறாம் பாசுரத்தில் சொன்னது கூண்டிலிருந்த பறவைகளின் ஒலியைக் குறித்தால், இங்கு இரை தேடச் செல்லும் பறவைகளின் ஓசையைக் குறிக்கிறது.
“குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே” என்ற சொற்றொடர் மிக நுண்ணிய அனுபவத்தை வெளிப்படுத்துகிறது. நீரில் இறங்கியவுடன் உடல் சுருங்கும் குளிரை “குள்ளக் குளிர” என்றும், பழகியபின் நீருக்குள் முழுகித் திளைப்பதை “குடைந்து” என்றும் ஆண்டாள் சொல்கிறாள். ஆனால் இங்கு அது வெறும் உடல் நீராட்டை மட்டும் குறிக்கவில்லை; கண்ணனைப் பிரிந்த விரக்தியின் தாபம் இன்னும் தணியாத நிலையில், காலம் கடந்து விடுவதற்கு முன், பாசாங்கான உறக்கத்தை விட்டுவிட்டு, நோன்பின் முதற்கரியமான நீராட்டிற்கு வருமாறு அழைக்கும் உருக்கமான வேண்டுகோளாகும்.
“கள்ளம் தவிர்த்து கலந்து” என்றால், பகவத் விஷயத்தைத் தனிப்பட்ட அனுபவமாக மட்டுமே வைத்துக் கொள்ளாமல், சஹபாகவதர்களுடன் சேர்ந்து அனுபவிக்க வேண்டும் என்பதே. காலக்ஷேபத்தில் கலந்து, எம்பெருமானுடைய குணாநுபவங்களை ஒன்றாகச் சுவைப்பதே ஸம்பிரதாய மரபு.
ஒரு பக்தனுக்குத் தலைசிறந்த அடிப்படை ஸ்ரத்தையே. அந்த ஸ்ரத்தையை வளர்க்கவே ஸ்ரீமத் ராமாயணமும் ஸ்ரீமத் பாகவதமும், ஸ்ரீமன் நாராயணனின் பிரதான அவதாரங்களான ஸ்ரீ ராமன், ஸ்ரீ க்ருஷ்ணன் ஆகியோரின் சரிதங்களை விரிவாக எடுத்துரைக்கின்றன. அவற்றைச் செவியுறக் கேட்போரின் உள்ளத்தில் பகவத் விஷயத்தில் நிலையான நம்பிக்கை உறுதிப்பட வேண்டும் என்பதே அவற்றின் பரம நோக்கம்.
திருப்பாவையின் பதின்மூன்றாம் பாசுரத்தில், பகாசுர வதமும் ராவண வதமும் எடுத்துக்காட்டப்பட்டு, நம் சாதனப் பாதையில் எதிர்கொள்ளும் எல்லா இடையூறுகளையும் அகற்றுவது எம்பெருமானுக்கு எளிதான காரியம் என்பதைக் காட்டுகிறது. ஆனால் அந்த அகற்றல் நிகழ்வதற்கு, நாம் அதனை ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்குடன் இருக்க வேண்டும். அந்த ஏற்றுக்கொள்ளுதல் உபாயமல்ல; ஆனால் பகவான் எவரிடமும் பாகுபாடு இன்றிப் கருணை புரிவதற்கான அவசியமான நிபந்தனையாகும். ஆகவே, எத்தனை தடைகள் இருந்தாலும், அவற்றை ஒரே நொடியில் நீக்கி, பரமபதத்துக்குச் செல்லும் தெளிந்த பாதையை நமக்கு அனுபவிக்கச் செய்ய வல்ல பரமகருணாளன் ஒருவன் நமக்கு சரணாகதி ரூபமாக இருக்கிறான் என்பதை ஒவ்வொரு பக்தனும் உறுதியாக உணர வேண்டும்.
“வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று” என்ற சொல்லாட்சி, அவித்தை ஒழிந்து ஞானம் உதித்த நிலையையும் குறிக்கிறது. ஆத்மாவை மட்டும் அறியும் உலர்ந்த ஞானத்தை விட, க்ருஷ்ணனை அனுபவிக்கும் பிரேமையோடு கூடிய ஞானமே மேலோங்குகிறது என்பதையும் அது சுட்டுகிறது. “கண்” என்ற சொல்லால் ஞானமே குறிக்கப்படுகிறது என்பது பூர்வாசார்யர்களின் வாக்கு. உடலழகு ஒருநாள் மங்கிவிடும்; ஆனால் ஞானத்தால் உண்டாகும் அழகு மட்டுமே நம்மை இலக்கான பரமபதத்துக்குக் கொண்டு சேர்க்கும். ஆகையால் தெய்வ விஷயங்களில் ஞானத்தை வளர்த்துக் கொள்வதே ஒவ்வொரு சாதகனுக்கும் முதன்மையான கடமையாகும்.
.jpeg)
No comments:
Post a Comment