Friday, 19 December 2025

திருப்பாவை பாசுரம் 4: ஆழி மழைக்கண்ணா...

 திருப்பாவை பாசுரம் 4: ஆழி மழைக்கண்ணா...


தமிழ் இலக்கியத்தின் அரிய மணிமகுடங்களில் ஒன்றாக விளங்குவது ஆண்டாளின் இப்பாடல். பதினொன்று முறை "ழ"கரம் இந்த பாசுரத்தில் உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது. கவிஞர்கள் பொதுவாக கண்களுக்கு எளிதில் புலப்படும் இயற்கை வடிவங்களையும் நிகழ்வுகளையும் உவமைகளாகக் கொண்டு, அவற்றின் வழியே இறையிருப்பின் பரிமாணங்களை நமக்கு உணர்த்த முயல்வார்கள். ஹிந்தி இலக்கிய மரபில் இவ்வகை அணுகுமுறை “சாயவாதம்” என அழைக்கப்படுகிறது. இயற்கையின் வாயிலாக இறைவனை அனுபவிப்பதே அதன் சாரம்.


“கார்மேகம் போன்றவன்”, “கடலினும் விரிந்த கண்கள்”, “பவளச் செவ்வாய்” போன்ற உவமைகள் இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டுகள். ஆனால் ஆண்டாள் இப்பாடலில் இதற்கு நேர்மாறான பாதையைத் தேர்ந்தெடுக்கிறாள். இங்கு மேகத்தின் நிறமே ஊழி முதல்வனின் உருவமாகிறது; மின்னலின் ஒளி, இறைவன் தன் கரத்தில் தாங்கியிருக்கும் ஆழியின் (சக்கரத்தின்) ஒளியாக மாறுகிறது; இடிமுழக்கம், அவன் இன்னொரு கையிலிருக்கும் வெண்சங்கமான பாஞ்சஜன்யத்தின் அதிர்வாக ஒலிக்கிறது; மழை பொழிவது, சார்ங்கம் என்னும் அவனது வில்லிலிருந்து புறப்படும் அம்புகளின் பெருக்காகக் காணப்படுகிறது.



முதல் மூன்று பாசுரங்களில் பரம், வியூகம், வைபவம் ஆகிய நிலைகளை நாம் கண்டோம். இப்பாசுரத்தில் அந்தர்யாமித்துவம் வெளிப்படையாகக் காட்டப்படுகிறது. பகவான் ஸர்வவ்யாபி; எங்கும் நிறைந்திருப்பவன். எம்பெருமான் இவ்வுலகை படைத்ததோடு நிற்காமல், அனைத்து ஜீவராசிகளின் உள்ளத்தின் உள்ளேயும் குடிகொண்டிருக்கிறான். சாந்தோக்கிய உபநிஷத்தில் சொல்லப்படும் “தத் தவம் அஸி” என்ற மகாவாக்கியம் உணர்த்தும் பரம்பொருள் நிலை இதுவே. இயற்கை எவ்வாறு எல்லா இடங்களிலும் பரவி இருக்கிறதோ, அதுபோலவே பகவானும் ஸர்வவ்யாபியாய் எங்கும் வியாபித்துள்ளான்.



முந்தைய பாசுரத்தில் “தீங்கின்றி மும்மாரி பெய்ய…” என்று ஆண்டாள் வேண்டினாள். இயற்கை நம்மை வாழ்விக்கவும் செய்யும்; அதே சமயம் வீழ்த்தவும் செய்யும். பகவான் ஆயுதபாணியாக இருப்பதன் உட்பொருளும் இதுவே. ஆகவே இங்கு “வாழ” என்ற சொல்லே முக்கியமானது. ஆண்டாள் இப்பாசுரத்தில் தெளிவாக வாழ்க்கைக்காகவும், மகிழ்ச்சிக்காகவும் பாடுகிறாள். மக்களை வாழ வைக்க மழை பெய்தால்தான் மகிழ்ச்சி ஏற்படும் என்று அவள் உரைக்கிறாள். உலகமெங்கும் மழை பொழிய வேண்டும் என்ற அவளது பிரார்த்தனை இதன் வெளிப்பாடு.



மாதவன், கேசவன், தாமோதரன், பத்மநாபன், நாராயணன், கோவிந்தன் போன்ற திருநாமங்கள் திருப்பாவையில் பல பாசுரங்களில் பாடப்பட்டிருந்தாலும், கிருஷ்ணாவதாரச் சம்பவங்கள் பல இடங்களில் சுட்டப்பட்டிருந்தாலும், இப்பாசுரத்தில்தான் கிருஷ்ணாவதாரப் பெயரான “கண்ணா” என்ற சொல்லை ஆண்டாள் நேரடியாக உச்சரிக்கிறாள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவள் இங்கு கோகுலக் கிருஷ்ணனை மட்டுமா “கண்ணா” என்று அழைக்கிறாள்? கோகுலத்தில் பகவான் கிருஷ்ணன் “கானா” (காந்ஹா) என்ற செல்லப்பெயரால் அழைக்கப்படுவான். ஆனால் ஆண்டாளின் பாவனையில் அது மட்டும் அல்ல. இங்கு “மழைக்கண்ணா” என்று அவள் கூறுவது வருணதேவனை நோக்கியே எனலாம்.

அந்தர்யாமித்துவத்தை வெளிப்படுத்தும் விதத்தில், இயற்கையான மழையையும், வருணனையும், பகவானின் உருவமாக ஆண்டாள் கண்டிருப்பாள் போலும். அதனால் வருணனை “கண்ணா” என்று அவள் அழைத்திருக்கலாம். அல்லது, வாஞ்சையோடு அவனை கொஞ்சி, கெஞ்சி, மக்கள் வாழ மழை பெய்ய வேண்டும் என்று யாசித்திருக்கலாம்.



அதனால்தான் “கைகரவேல்” என்ற சொல்லையும் ஆண்டாள் பயன்படுத்துகிறாள். கொடுக்க வேண்டியதை தாராளமாகக் கொடு; குறைத்துக் கொடுத்து விடாதே என்ற அவளது வேண்டுகோள், பகவானின் வள்ளல்தன்மையையும் கருணைப் பெருக்கையும் எடுத்துக் காட்டுகிறது.



மழை தேவனே, நீ எவ்வாறு மழை பொழிய வேண்டும் என்பதை நாங்கள் ஆய்ச்சியர்கள் உனக்குச் சொல்கிறோம். நீ முதலில் சமுத்திரத்துக்குச் செல். கரையோரத்தில் கால் நனைப்பதுபோல் அல்ல; ஆழமாகச் செல். முழுமையாக மூழ்கி வேண்டிய அளவு நீரைப் பருகி, கறுத்த உடலுடன் எழுந்து வா. எந்தக் கறுப்பு என்றால், ஊழிக்காலம் முதலே இருக்கும் அந்தக் கார்மேக வண்ணனைப் போல. அவனின் திருமேனி போன்ற கருமை மட்டும் போதாது; அவனின் பராக்கிரமமும் வேண்டும். பத்மநாபனின் கையில் திகழும் இணையற்ற சக்கராயுதத்தைப் போல மின்ன வேண்டும். அதனால் உண்டாகும் இடிமுழக்கம் சாதாரணமாக இருக்கக் கூடாது; பாரதப் போரில் பகைவர்களை நடுங்கச் செய்த பாஞ்சஜன்யம் போல முழங்க வேண்டும். கோதண்ட ராமனின் தாழாத சாரங்கத்திலிருந்து இடைவிடாது பொழியும் சரமழைபோல், நீ பொழியும் மழையும் இடைவிடாது இருக்க வேண்டும்—என்று கோபியர்கள், ஆண்டாளின் தோழியர்கள், வேண்டிக்கொண்டனர்.



•⁠  ⁠மேகம் – ஆசாரியர்கள்

•⁠  ⁠கடல் – வேதம், உபநிஷத்துகள்

•⁠  ⁠மழை நீர் – எம்பெருமான்


“ஆழி மழைக் கண்ணா” எனும் தொடரின் உட்பொருள் இதுவே. மழை எல்லாருக்கும், எல்லா இடங்களிலும் பாரபட்சமின்றி பொழிவதுபோல், ஆசாரியர்களும் ஞான அர்த்தங்களை அனைவருக்கும் சமமாக வழங்குவார்கள். கடல் நீரை மேகம் பருகி, அதைத் தூய்மையான மழை நீராக மாற்றி நமக்குப் பொழிவது போலவே அவர்களின் செயல்பாடும் அமைகிறது.

“ஆழியுள் புக்கு” என்பது, வேதங்கள், உபநிஷத்துகள், தர்ம சாஸ்திரங்கள், தமிழ் வேதமாகிய திவ்ய பிரபந்தம் ஆகிய ஞானப் பெருங்கடலில் ஆழ்ந்து புகுதல்.

“முகந்து கொடு” என்பது, அவற்றின் தேர்ந்த பொருளையும் ஆழ்ந்த அர்த்தங்களையும் உணர்ந்து பெறுதல்.

“ஆர்த்தேறி” என்பது, கம்பீரமாகவும் உறுதியுடனும் எழுந்து, பெருமானின் பகவத் குணங்களை இடையறாது சிந்தித்தல்.

“ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கருத்து” என்பது, பரமனை எப்போதும் சிந்தையில் நிறுத்தியதால், ஆசாரியர்களும் அவனைப் போலவே கருநிறமும் தயாள குணமும் பெற்றவர்களாக விளங்குதல்.



எல்லையற்ற இறைவனின் குணக்கடலில் ஆழ்ந்து, அதனை அனுபவித்து, உள்ளத்தில் அடக்கிக் கொண்டு, உலகமெங்கும் சென்று பிறருக்கு வழங்குவோர் அறிஞர்களே மேகமாக உவமிக்கப்படுகிறார்கள். “திருமாலின் திருமேனி ஒக்கும்” பேற்றைப் பெற்று எங்கும் சஞ்சரிப்பவர்கள் அவர்கள். கடல் நீரை மேகம் பருகி, தூய்மையான மழை நீராக மாற்றி நமக்குப் பொழிவதுபோல, அவர்கள் ஞானத்தைச் சுத்தமாக்கி உலகிற்கு வழங்குகின்றனர்.



இவ்வாறு தேர்ந்த ஞானத்தை அருளவல்ல ஆசாரியர்களின் திருவடிகளை நாம் சரணடைவோம்.



ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்!!!

No comments:

Post a Comment

அன்றிவ் வுலகம் அளந்தாய்!

  அன்றிவ் வுலகம் அளந்தாய்! பழந்தமிழ் இலக்கியங்கள், எம்பெருமானின் திருவிளையாடல்களையும் அவதார ரகசியங்களையும் இயல்பாகவே தம்முள் ஏந்திக் கொண்டுள...