கனைத்திளங் கற்றெருமை!
இந்த பன்னிரண்டாம் பாசுரத்தில், ஆண்டாள், ஸ்ரீகிருஷ்ணனுடைய திருவடிகளில் இடையறாது நின்று கைங்கர்யம் செய்யும் ஒருவனை — ஸ்ரீஇராமபிரானிடத்து லக்ஷ்மணன் எவ்வாறு அனன்ய சேஷனாய், நித்திய சேவகனாய் விளங்கினானோ, அதுபோலவே கிருஷ்ணனிடத்து தன்னை முழுவதுமாக அர்ப்பணித்திருக்கும் ஒரு இடையனின் தங்கையை எழுப்புகிறாள்.
முந்தைய பாசுரத்தில், ஆண்டாள், தன் ஸ்வதர்மமான இடையர்தொழிலைத் தவறாது அனுஷ்டித்து, பசுக்களை மேய்த்தல், பால் கறத்தல் முதலான தினசரி கர்மங்களைச் சுறுசுறுப்பாகச் செய்து, அவற்றையே பகவதார்ப்பணமாகக் கருதி நிற்கும் ஒரு கோபாலனை எடுத்துக் கூறினாள். அவன் கர்மத்தில் நிலைபெற்று, கர்மத்தின் வாயிலாக பகவானை ஆராதிக்கும் கர்மயோக நிஷ்டை உடையவன்.
ஆனால் இப்பாசுரத்தில், அதற்கு முற்றிலும் மாறான நிலையை ஆண்டாள் வெளிப்படுத்துகிறாள். இங்கு சொல்லப்படுகிற கோபாலன், பசுக்களைப் பால் கறப்பதையும் செய்யாமல், தன் இடையர்தர்மத்தையே ஒருபுறம் விட்டு, எந்நேரமும் ஸ்ரீகிருஷ்ணனுடைய கைங்கர்யத்திலேயே முழுமையாக ஈடுபட்டிருப்பவன். அவனுடைய இந்த நிலையைக் காணும்போது, இது அலட்சியமோ சோம்பலோ அல்ல; மாறாக, கர்மத்தையும் கடந்து, பகவத் கைங்கர்யத்தையே பரமபுருஷார்த்தமாகக் கொண்ட பரமபக்தி நிஷ்டை என்பதை வ்யாக்யானகாரர்கள் விளக்குகின்றனர்.
ஆக, இங்கு இரண்டு அதிகார நிலைகள் சுட்டிக்காட்டப்படுகின்றன:
ஒருவன் — கர்மத்தின் வாயிலாக பகவானை அடைவான்;
மற்றொருவன் — கர்மத்தையே விட்டு, பகவானையே தன் கர்மமாகக் கொண்டிருப்பான்.
முதல் நிலை கர்மயோக நிஷ்டை; இரண்டாவது நிலை பகவத் கைங்கர்ய பரநிஷ்டை.
ஆண்டாள் தன்னை ஒரு ஆய்ச்சியாகவே வரித்துக்கொண்டவள். அதனால் திருப்பாவையில் பால், தயிர், வெண்ணெய் முதலிய இடையர்குலச் சின்னங்கள் இடையறாது ஒலிக்கின்றன. முப்பது பாசுரங்களில், விவசாய வளம் பற்றிய குறிப்புகள் மிகக் குறைவு; “ஓங்கு பெருஞ்செந்நெல்” என்று ஒரே இடத்தில் மட்டுமே நெல் சொல்லப்படுகிறது. அதற்கு மாறாக, தம் குலத்தின் பெருமையையும், அதன் செழிப்பையும், அதன் இயல்பான வளத்தையும் காட்டுவதிலேயே ஆண்டாள் உறுதியாக நிற்கிறாள்.
“ஒரு எருமை சொரிந்த பாலே வீட்டு வாசலைச் சேறாக்கிவிட்டது” என்று கூறும்போது, “எங்கள் குலத்தின் வளத்தைப் பாரீர்” என்று ஆண்டாள் நம்மை நோக்கி அழைக்கிறாள். பால் கறப்பார் இல்லாமலே, இளங்கன்றுகளை நினைத்த மாத்திரத்தில், எருமைகளின் முலைக்காம்புகள் கடுத்துப் பால் இடைவிடாது சுரந்து, தரையில் ஓடி, மண்ணோடு கலந்து வீடெங்கும் சேறாகி நிற்கும் அந்த இல்லத்தின் தலைவனே “நற்செல்வன்”. அத்தகைய செல்வனின் தங்கையையே ஆண்டாள் எழுப்புகிறாள்.
“பனி எங்கள் தலையில் விழுந்துகொண்டிருக்க, உன் மாளிகை வாசலில் நின்று, ராவணனை வதைத்த ராமபிரானின் திருப்புகழைப் பாடிக் கொண்டிருக்கிறோம்; அதைக் கேட்டும் நீ பேசாமல் இருக்கலாமா?” என்று ஆண்டாள் வினவுகிறாள். ஊரெல்லாம் எழுந்த பிறகும் நீ மட்டும் ஆழ்ந்த நித்திரையில் கிடப்பதற்குக் காரணம் என்ன? என்ற கேள்வி இங்கே தொனிக்கிறது.
“கன்றுக்கு இரங்கி நினைத்து முலைவழியே நின்று பால் சோர” என்ற சொற்றொடர், தாய்மையின் உச்சத்தை வெளிப்படுத்துகிறது. முந்தைய பாசுரத்தில் பெண்ணின் அழகையும் இளமைச் சிறப்பையும் எடுத்துரைத்த ஆண்டாள், இப்பாசுரத்தில் தாய்மையின் கருணைத் தன்மையை முன்வைக்கிறாள். கன்று அழுவதற்குமுன், “பசிக்குமே” என்ற எண்ணமே எழ, பால் சுரக்கும் தாயின் மனநிலை இங்கே சித்தரிக்கப்படுகிறது. “சாப்பிட்டு விட்டு வேலை பாரு” என்று சொல்லும் தாயின் குரல் இல்லாத வீடு உண்டோ?
வ்யாக்யானகாரர்கள் இதனை ஆழமாக எடுத்துரைக்கிறார்கள். இங்கு எருமை என்பது கருணை வடிவான ஆச்சார்யனைச் சுட்டுகிறது; கன்றுகள் ஞானப்பாலால் உய்வு பெறும் சீடர்களைக் குறிக்கின்றன. அர்ஜுனன் கேட்டா கண்ணன் கீதையைப் பெருக வைத்தான்?’ என்கிறார்கள் ஆச்சார்யர்கள். சீடனின் ஆவலுக்காக ஆச்சார்யன் தன் ஞானத்தை வாரி வழங்குகிறான்.
கன்றுகள் குடித்த பின்னரும் பால் சுரந்துகொண்டே இருக்கிறது; அது தரையில் ஓடி, மண்ணோடு கலந்து வீடெங்கும் சேறாகிறது. இதன் உட்பொருள் — வேத, வேதாந்த ஞானம் அளவில்லாதது; சீடர்கள் பெற்ற பின்னும் அது பெருகிக்கொண்டே இருக்கும் என்பதே.
முந்தைய பாசுரத்தில், உறங்கும் பெண்ணின் தந்தையை முன்னிறுத்தி (“கோவலர் தம் பொற்கொடியே”) ஆண்டாள் எழுப்பினாள். இப்பாசுரத்தில், அந்தப் பெண்ணின் அண்ணனை முன்னிறுத்தி — “நற்செல்வன் தங்காய்” — என்று அழைக்கிறாள். ஆனால் அந்த அண்ணன் தன் தினசரி கடமையான பால் கறப்பதைச் செய்யாததால்தானே வீடு முழுதும் சேறாகியது? அப்படியிருக்க அவன் எவ்வாறு “நற்செல்வன்”?
இதற்கு வ்யாக்யானம் கூறுவது: நற்செல்வம் என்பது பொன்னோ, பசுவோ அல்ல; ஞானம், பிரம்மானுபவம், பகவத் கைங்கர்யம் ஆகியவையே உண்மையான செல்வங்கள். அவற்றை உடையவனே நற்செல்வன். அவன் அன்று கண்ணனுக்கு சேவை செய்யச் சென்றதால், தன் நித்ய கர்மத்தைச் செய்ய இயலவில்லை. அதனால் பால் சுரந்து வீடெங்கும் ஈரமாயிற்று. இவ்வாறு பகவத் கைங்கர்யத்திற்காக உலகிய கடமை தள்ளப்படுவது குற்றமாகாது என்பதே இதன் உள்பொருள்.
இதையே லக்ஷ்மணன் விஷயத்திலும் காண்கிறோம். தாய் சுமித்ரையின் ஆணைப்படி, ராமனுடன் வனத்துக்குச் சென்று சேவை செய்ததால், அவன் தன் இல்லறக் கடமையைச் செய்ததாகத் தோன்றாவிட்டாலும், அது குற்றமல்ல. ஏனெனில் பகவத்–பாகவத கைங்கர்யம், சாதாரண நித்ய கர்மங்களைவிட உயர்ந்தது. சில வேளைகளில், அசாதாரணமான சேவை, சாதாரண சேவைகளை மீறிச் சிறக்கும்.
சில பூர்வாசார்யர்கள், “கன்றுக்காக இரங்கி பால் சுரக்கும் எருமை” என்பதை திருமகளாகவே பொருள் கொள்கிறார்கள். கருணை வடிவான திருமகள், தன் கடாட்சத்தால் ஞானம், செல்வம், மோக்ஷம் ஆகியவற்றை அளிப்பவள். அவளைக் கொண்டிருப்பதால், எம்பெருமான் “நற்செல்வன்” எனப்படுகிறார். ஆகவே, இப்பாசுரத்தில் எம்பெருமானும், திருமகளும் குறிப்பாக உணர்த்தப்படுவதால், இது த்வய மந்திரார்த்தத்தை — “ஸ்ரீமன் நாராயண சரணௌ சரணம் பிரபத்யே” — சுட்டிக் காட்டுவதாக ஆச்சார்யர்கள் கூறுவர்.
“நற்செல்வன் தங்காய்” என்ற சொல்லில் வரும் “தங்கை” என்பதைக், “ஹிரண்மயி” என்ற திருமகளின் பெயர்பொருளால் “தங்கம்” என எடுத்துக் கொள்ளலாம் என்றும் விளக்கமளிக்கப்படுகிறது.
எருமையின் நான்கு முலைக்காம்புகளில் இருந்து வெளிப்படும் பால், நான்கு வேதங்களின் சாரத்தைச் சுட்டுவதாகவும், அல்லது சுருதி, ஸ்மிருதி, பாஞ்சராத்திரம், திவ்யப் பிரபந்தம் என்ற நான்கு பிரமாணங்களின் ஞானமாகவும் கொள்ளப்படுகிறது. அந்த ஞானம் அஞ்ஞானம் என்னும் பனியை அகற்றுகிறது.
“தண்ணீரைப் போல் குளிர்ந்த குணம் கொண்ட சக்ரவர்த்தித் திருமகனுக்கு கோபமுண்டா?” என்ற கேள்விக்கு ஆச்சார்யர்கள் தரும் விடை: தன் மேல் அம்பு பட்டபோது அவன் சினப்படவில்லை; ஆனால் சிறிய திருவடி அனுமன் மீது அம்பு பட்டபோது மட்டும் சினம் கொண்டான். ஆகவே அவன் “உள்ளத்துக்கினியவன்”. இராவணனுக்கே கூட, “நாசம் வந்த போதும் நல்ல பகை கிடைத்தது” என்று எண்ணத் தோன்றியது.
ஆண்டாளுக்கு, அவன் ஏகபத்நி விரதன் என்பதால் இன்னும் மனத்துக்கினியவன். கண்ணனைப் போல பலருடன் விளையாடாதவன். “வேம்பேயாக வளர்த்தாள்” என்று ஆண்டாளே நாச்சியார் திருமொழியில் கூறினாலும், அது யசோதையின் வளர்ப்பின் தன்மையைச் சுட்டுமே தவிர குற்றமல்ல. கோசலை அவனை ஒழுங்காக வளர்த்ததால், அவன் மனத்திற்கு இனியவனாக விளங்கினான்.
கோகுலத்து கோபியர் கண்ணனை நேரில் காணும் பேறு பெற்றவர்கள்; அதனால் அவர்களுக்கு அவன் “கண்ணுக்கினியவன்”. ஆனால் ராமாவதாரம் முடிந்த பின் வாழும் இவர்களுக்கு, ஸ்ரீராமன் நினைவினால் மட்டுமே அனுபவிக்கப்படுவதால், அவர் “மனத்துக்கினியவன்”.
“அனைத்தில்லத்தாரும் அறிந்து” என்பதற்கு இரண்டு விதமாகப் பொருள் கூறப்படுகிறது என அண்ணங்கராச்சாரியார் விளக்குகிறார். ஒன்று — கண்ணனின் பெருமையை எல்லா ஆய்ச்சியரும் அறிந்து, உன் வீட்டுவாசலில் வந்து காத்திருக்கின்றனர்; நீ மட்டும் உறங்கலாமா? என்பது. மற்றொன்று — உன் பெருமை ஊரெங்கும் பரவி விட்டது; எல்லோரும் அறிந்த பிறகும், நீ பேசாமல் இருப்பது ஏன்? என்பதாகும்.
“அனைத்தில்லத்தாரும் அறிந்து” என்ற சொல்லால், ஆய்ப்பாடி முழுவதும் இந்தப் பெண்ணை எழுப்பக் கூடி நின்று காத்திருப்பது குறிப்பாக உணர்த்தப்படுகிறது.
நற்செல்வனின் தங்கையான உனக்கு அஞ்ஞானம் இருக்க முடியுமா? பகவத் அனுபவம் அனைவரும் பெறவேண்டும்; அதைப் பற்றிப் பேசப்படவும் வேண்டும் — என்பதே இதன் உள்ளார்ந்த போதனை.
ஆண்டாள் திருவடிகளே சரணம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
.jpeg)
No comments:
Post a Comment